ஒரு வலம்புரி விநாயக தரிசனம்.
நங்கநல்லூர் J K SIVAN
நான் அதிகம் கேள்விப்பட்ட, படித்து அறிந்த, ஒரு கோவில் அது. 83 வருஷங்களில் நேரில் பார்க்காத ஒரு கோவில். இவ்வளவு பிரபலமான, புகழ்பெற்ற பிள்ளையாரைப் பார்த்தபோது பிரமித்தேன். ரொம்ப சின்ன உருவம் தான். நம் ஊர் முக்குறுணி பிள்ளையார் போல் பெரியவர் இல்லை. மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்தி பெரிது. நான் சீக்கிரமே நான் தங்கி இருந்த மரோல் பகுதியிலிருந்து விடிகாலை 15-20 நிமிஷத்தில் ப்ரபாதேவி பகுதிக்கு செல்ல முடிந்தது. போக்குவரத்து இன்னும் தூக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை.
சித்தி விநாயகர் பம்பாயில் ப்ரபாதேவி என்ற ஊரில் இருக்கிறார். ஒரே கல்லால் உருவம் பெற்றவர். சுமார் 750 மி.மீ. அல்லது 2 அடி 6 அங்குலம் உயரமும், 2 அடி (600 மி.மீ.) அகலமும் உடையது. இவர் வலம்புரி சதுர் புஜ சிவப்பு நிற விநாயகர். வலது கையில் தாமரை,, இடது கையில் கோடரி, கீழ் வலது கையில் ஜப மாலை, இடது கையில் ஒரு கிண்ணம். அதில் ஒன்றுக்குமேல் சில "மோதகங்கள். நம் ஊரில் ஒரே ஒரு பெரிய மோதகத்தில் உள்ளங்கையில் ஏந்திக் கொண்டிருப்பார். இங்கே கிண்ணத்தில். வலது தோளிலிருந்து இடது வயிறு வரை ஸர்ப்ப பூணல். நாக உபவீதம்.
ரொம்ப விசித்திரம் என்பதா, விசேஷம் என்பதா என்று இன்னும் கூட புரியவில்லை . இந்த சித்தி விநாயகருக்கு அப்பாவைப்போலவே நெற்றியில் மூன்றாவது கண்.
நம் ஊர் விநாயகர்கள் ஒத்தைப் பூணல் பிரம்மச்சாரிகள், தனிக்கட்டைகள். ஆற்றங்கரையிலோ, தெரு முக்கிலோ, அரசமரத்தடியிலோ குளக்கரையிலோ இல்லாதவர். ஐந்தடுக்கு மாளிகை கொண்டவர் மட்டும் இல்லை. ரெண்டு பக்கமும் ரித்தி, சித்தி என்ற இரண்டு பெண்தெய்வங்களைக் கொண்டவர். நம் ஊரில் சித்தி புத்தி என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்கே ரித்தி சித்தி. சித்தி விநாயகர் பின்னாலே இருந்து எழுந்து வருவது போல் இருக்கிறார்கள். ஒரு ஆணின் பிரபலம் பெருமைக்கு பின்னால் ஒரு பெண் இல்லை, இங்கே ரெண்டு பெண் போல் இருக்கிறது.
சர்வ சக்தி வாய்ந்த விநாயகர் இந்த சித்தி விநாயகர். வெற்றி, வளமை , செழிப்பு, காரிய சித்தி, அளவற்ற செல்வம், இதெல்லாம் தரும் தெய்வங்கள் தான் இந்த ரித்தியும் சித்தியும் என்று அறிந்தேன்.
இருநூறு வருஷங்களுக்கு முன்பே இருந்தவர் இந்த பிள்ளையார். 1801 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 3.60க்கு 3.60 சதுர மீட்டர் பரப்பளவில் தரையில் ஒரு தளத்தில் இருந்த ஆலயம்.
பிரபாதேவி ரொம்ப பிஸியான ஊர் அதில் காகா சாஹேப் தெரு. இன்னொன்று எஸ்.கே. போலே தெரு. ரெண்டும் சந்திக்கும் மூலையில் இந்த சித்தி விநாயகர் அமர்ந்திருக்கிறார். அடேயப்பா என்ன கும்ப, என்ன போக்குவரத்து நெரிசல். வண்டி நகரவே தடுமாறும்போது எங்கே நிறுத்த இடம். நான் ஏற்கனவே சொன்னபடி, பம்பாயில் தாராள தான தர்ம மனம் படைத்தவர்கள் அதிகம். அவர்களில் குறிப்பாக மாதுங்காவில் உள்ள ஒரு பணக்கார பெண்மணி ருமதி தியூபாய் பாட்டில் பணத்தை வாரி வழங்க, ஒரு நல்ல கட்டிட காண்ட்ராக்டர் திரு. லக்ஷ்மண் விது பாட்டில் இந்த ஆலயத்தை சிறப்பாக கட்டினார். பாவம் தியூபாய் பாட்டில் அம்மாவுக்கு செல்வம் நிறைய இருந்தும் மழலைச் செல்வம் இல்லையே. அவருக்கு இந்த சித்தி விநாயகர் மேல் அளவு கடந்த பக்தி. அந்த அம்மாவிடம் ஒரு காலண்டர் இருந்தது. அதில் ஒரு விநாயகர் படம். அதே மாதிரி பிள்ளையார் விக் ரஹம் பண்ணி கோயில் அமைக்க விருப்பப்பட்டார். காலண்டரில் இருந்த பிள்ளையார்
பாங்கங்கா வாக்லேஷ்வரில் உள்ள விக்ரகம் மாதிரியே இருந்தது. 500 வருஷ புராதனமான விக்ரஹம். இப்போது ஐந்தடுக்கு மாளிகை மாடிக் கோவில்.
கையெடுத்துக் கும்பிடுவோம் . என்ன நல்ல மனசு பாருங்கள் அந்த பெண்மணி தியூபாய் பாட்டில் அம்மாவிற்கு. இந்த கோயிலை கட்டும் நோக்கம் தியூபாய் பாட்டிலுக்கு ஒரு நாள் விநாயகர் வழிபாட்டின் போது உதயமானது.
"எனக்கு குழந்தை இல்லாவிட்டாலும், குழந்தை பாக்கியம் இல்லாத மற்ற பெண்மணிகள் இந்த கோயிலுக்கு வந்து வேண்டிக்கொண்டால் புத்திர பாக்கியம் அருள வேண்டும். பிள்ளாயாரப்பா, எல்லோரும் திருப்தியாக வாழ அருள்வாய் " என்று மனமார சித்தி விநாயகரை வேண்டிக்கொண்டாள். அவள் வேண்டுகோளை இன்றளவும் அமோகமாக சித்தி விநாயகர் ரித்தி சித்தியோடு நிறைவேற்றி வருகிறாரே .
மராத்தி தாய் மொழி அநேகருக்கு பம்பாயில். ஆகவே அந்த மொழியில் "நவசச்சா கணபதி" "நவசால பவனார கணபதி" எல்லோராலும் போற்றப்படுகிறார் சித்தி விநாயகர். கணபதி பப்பா மோரியா என்கிற சப்தம் காதைப் பிளந்தது. நானும் உரக்க முதல் முறையாக விடாமல் சொல்லிக்கொண்டே நீளமான க்யூவில் நகர்ந்தேன். ஒரு புது அனுபவம் இது எனக்கு.
இன்னும் ஒரு சந்தோஷமான சமாச்சாரம். ஸ்பெஷல் தரிசனம் என்றோ உள்ளே நுழையவோ எங்குமே எந்தக்கோவிலிலுமே டிக்கெட் விற்கவில்லை. போட்டோ பிடிக்க கூடாதுஎன்று பல இடத்தில் எழுதி இருந்தாலும் நிறைய மொபைல் போன்கள் படம் பிடித்துத் தள்ளிக் கொண்டே இருந்தன. அழகான க்யூ வரிசை அரேஞ்ஜ்மென்ட்.
"நவசால பவனார கணபதி என்றால் ரொம்ப எளிமையானவர் சத்யமானவர், நம்பக்கூடியவர் என்று புகழ் பெற்றவர் இந்த சித்தி விநாயகர். இல்லாவிட்டால் அவ்வளவு கும்பல் எப்போதும் காலை ஐந்து மணியிலிருந்தே சேருமா? நான் கோவிலுக்கு சென்றபோது பல வண்டிகளிருந்து சாரி சாரியாக பக்தர்கள் குடும்பத்தோடு வந்துகொண்டே இருந்தார்கள். செருப்பு நான் வாசலில் எங்கோ ஒரு மூலையில் விட்டிருந்தேன். அது அப்படியே காணாமல் போகாமல் இருந்தது. புதிது தான். என்னால் இது பற்றி நம் ஊரில் காரண்டீ கொடுக்க முடியாது. பார்த்தசாரதி ஆலய வாசலில் வைத்த ஒரு புது செருப்பு அரைமணியில் அந்தர்தானம் ஆகி விட்டது. அது என்னோடு ஆலயத்துக்குள் வந்த ஒரு பிரபல இன்கம்டாக்ஸ் கமிஷனரின் புதிய செருப்பு. ரொம்ப மனசு கஷ்டமாக இருந்தது. வெறும் காலோடு நடந்து காருக்கு சென்று வீடு திரும்பினார் அவர்.
சித்தி விநாயகர் கர்ப்ப க்ரஹம் மேலே சுமார் 12 அடி உயர தங்க முலாம் பூசப்பட்ட கலசம் உள்ளது.
பழைய காலத்தில் இந்த சித்தி விநாயகர் ஆலயம் அருகே ஒரு பெரிய ஏரி இருந்தது. எல்லாம் இப்போது காங்க்ரீட் அசுரனால் விழுங்கப்பட்டு வானளாவிய உயர கட்டிடங்கள் தான் தெரிகிறது.
1952ஆம் ஆண்டில் பம்பாயில் எல்பின்ஸ்டன் தெரு பக்கம் சயானி தெருவை விசாலமாக்கி னார்கள். அப்போது ஒரு ஹனுமார் புதைந்திருந்தவர் கண்டெடுக்கப்பட்டார். அவரையும் இங்கே சித்தி விநாயகர் ஆலயத்தை தரிசித்தேன். மஹராஷ்டிர தேசத்தில் பிள்ளையார் சதுர்த்தி ரொம்ப விசேஷம். அப்போது போவதற்கு பதிலாக நங்கநல்லூரில் என் வீட்டு வாசலில் நின்றாலே போதும். க்யூ நீளமாக மும்பை வரை கொண்டு சேர்க்கும் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment