கீத கோவிந்தம் - நங்கநல்லூர் J K SIVAN
அஷ்டபதியாருக்குமே ஜெயதேவர் என்றால் தெரியாது. அவர் எழுதிய கீத கோவிந்தமும் தெரியாது. அஷ்டபதி என்றால் பிடிக்கும். ஜெயதேவர் ஒரு அற்புதமான ஸம்ஸ்க்ரித வித்வான். ஒரிசாவில் பூரியில் வாழ்ந்த இணையற்ற கிருஷ்ண பக்தர். அவர் பாடல்களுக்கு பூரி ஜெகன்னாதனே ஒரு விசிறி. கீத கோவிந்தத்தில் 24 அஷ்டபதி ( எட்டு பதங்கள் கொண்டது)
ராதா கல்யாண பஜனையில் அஷ்டபதி உயிர்நாடி. பல வித்வான்கள் பல வித ராகங்களில் கற்பனையுடன் செவிக்கு விருந்தாக ராதா கல்யாண மஹோத்சவங்களிலும் சங்கீத நிகழ்ச்சிகளிலும் ஜனரஞ்சக மாக பாடுகிறார் கள். அதில் பக்தி பாவம் இருந்தால் தான் இசை ரசிக்கும். சினிமாக்களும் தமது பங்குக்கு சில அஷ்டபதிகளை நல்ல மெட்டுக்களில் அமைத்து நடுவே சேர்த்துக் கொள்கிறது. காசு பார்க்கிறது.
ஜெயதேவர் வாழ்வில் மூச்சாக விட்டது ராதா கிருஷ்ணன் பெயர்களை தான். ராதை, கிருஷ்ணன், ராதையின் ஒரு தோழி, (சகி,) அப்புறம் மறைவாக ஜெயதேவர் இது நிரம்பியது தான் பிருந்தாவனத்தில் உருவான கீத கோவிந்தம்.
பிருந்தாவனத்தில் நடந்ததை அப்படியே ஒவ்வொரு ஓவராக கிரிக்கெட் விளையாட்டு ரன்னிங் கமென்டரி மாதிரி ஜெயதேவர் ராதா கிருஷ்ணன் சகி , சந்திப்பு, பேச்சு, அவர்களது உணர்வுகள் ஆகியவற்றை கீத கோவிந்தம் (அஷ்டபதி) பாடல்களில் கண்ணெதிரே கொண்டுவருகிறார். ஸூர்தாஸிடம் பாடம் படித்தவரோ என்று தோன்றுகிறது!
கண்ணனை, ராதையைப் பார்க்காதவர்கள், அறியாதவர்கள், உணராதவர்கள், ஜெயதேவரின் கீத் கோவிந்தம் அஷ்டபதி பாடல்களை படிக்கலாம், கேட்கலாம், ரசிக்கலாம் உணரலாம்.
கீத கோவிந்தத்தை அப்படி ரசிக்கும்போது நான் சென்னையில் வெயிலில் உட்கார்ந்திருந்தாலும், அமெரிக்காவில் இருந்தாலும், குளிர்ந்த பிருந்தாவன சோலைகளுக்குள் கிருஷ்ணனோடு நாமும் இருப்பது நிச்சயம். காரண்டீ. ஒரே ஒரு எச்சரிக்கை. கண்டிஷன். ராதா-- கிருஷ்ணன் ப்ரேமையை மனிதனின் காதலாக, மிருக இச்சையாக நினைத்து ருசிக்க வேண்டாம். அது கீழ்த்தர மனித உணர்வு. தெய்வங்களுக்கு தெரியாதது.
மூடிய கண் இமைக்குள் கிருஷ்ணன் புல்லாங்குழல் இசைப்பதை செவி குளிர கேட்டவர் ஜெயதேவர். அவனது ஆனந்த நேரம் 15 வயதுக்குள் ப்ருந்தாவனத்தில் ராதையோடு ஓடி ஆடி விளையாட செலவானது. இதை நேரில் ஞானக்கண்ணால் கண்டு ரசித்தவர் ஜெயதேவர். அவர் கண்ட காட்சிகளைப் பாடுவார். அவர் மனைவி பத்மாவதி என்ற நாட்யராணி அஷ்டபதி பதங்களுக்கு தக்கவாறும் பாதங்களை அசைத்து தாளம் பிசகாமல் ஆடுவாள். அப்படிப் பிறந்தது கீதகோவிந்தம். 24 பாடல்கள்.
பகவானுக்கு செய்யும் ஷோடச உபசாரத்தில் நாட்யம் கீதமும் உண்டு. பிருந்தாவனம் கிருஷ்ணனின் அந்தரங்கமான ஆநந்த பீடம். பிரேம தத்துவம் நிறைந்தது. பகவான் நாத வடிவினன். நாதம் காற்றுடன் கலப்பதே நாட்டியக் கலை.
நாத வடிவம் பரமாத்மா. ஒலிக்கு அனுகூலமான காற்று வடிவமானவள் பராசக்தி. இந்த தத்துவமே ராதாகிருஷ்ண ஸ்வரூபமாகத் தோன்றி பக்தரின் உள்ளம் பக்குவமாவதற்காகப் பல லீலைகளச் செய்தது. ராச லீலை பொதுவாக எல்லோர் உள்ளத்தையும் கவரும். அதனுள் பதிந்து கிடக்கும் பரதத்வம் உத்தம பக்தரான ஒரு சிலர் உள்ளத்தையே கவரும். அத்தகையவரே பரம ஏகாங்கி , ஜீவன் முக்தர். உதாரணம் வேதவ்யாஸர். அவர் 18 புராணங்களின் மூலமாகப் பற்பல அரிய பெரிய தத்துவங்களை நமக்கு அளித்தவர். வேதவியாசர் தான் ஜெயதேவராக பூமியில் அவதரித்தவர் என்பார்கள்.
வேதவியாசர் இயற்றிய பதினெட்டு புராணங்களில் பத்தாவது ப்ரம்ம வைவர்த்த புராணம் . 18000 ஸ்லோகங்கள் கொண்டது. தீவிரமான வைணவ புராணம் . ஸ்ரீ கிருஷ்ணன் ராதையின் தெய்வீக திருவிளையாடல்களைக் குறிப்பது. - சக்தியாகிய ராதையோடு கூடிய ஸ்ரீ கிருஷ்ணன் அண்டங்கள் அனைத்திற்கும் தலைவன் , எங்கும் நிறைந்தவன் என்று உணர்த்துவது. ஜெயதேவரின் கீத கோவிந்த அஷ்டபதிகள் இதை ஒட்டியே அமைந்துள்ளது.
No comments:
Post a Comment