Monday, May 9, 2022

LIFE LESSONS

 


மனதில் பதியட்டும்  - 16  -  நங்கநல்லூர்  J  K  SIVAN



நம்மிடம் ஆயிரம் ரூபாய்   ஒத்தை  ரூபாய் ரெண்டுரூபாய்,  ஐந்து ரூபாய்  நாணயங்களாக    பெட்டி நிறைய கனமாக  இருக்கிறது.  அதை  சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமம்.   இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்  பணம், ரூபாய் நோட்டாக இருந்தால்   மடித்து  இடுப்பில் செருகிக் கொண்டு நடப்பது  எவ்வளவு சுலபமாக இருக்கும்?  ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில்  செல்லுபடியாவதாக இருக்க வேண்டும்.    அது போல தான்,   நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்பவர்களாக இருக்க  வேண்டும்.

நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் ஜப்பானில் ஜெர்மனியில்  செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக   தான தர்மம்' இருக்கிறது. ஆகவே, தான தர்மம் செய்யவேண்டும்.  

கல்யாணம் என்பது இக்காலத்தில் அக்ரமமாக மாறிவிட்டது. அப்பப்பா இப்போதெல்லாம் கல்யாணத்துக்கு பெண் வீட்டார்  பிள்ளை வீட்டார்கள்  போடும்  கண்டிஷன்கள் தலையை சுற்றுகிறது.  நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே! அப்படி இருக்கும் போது  ஒரு காலத்தில்  பிள்ளை வீட்டார் வரதக்ஷணையை  எந்த ரூபத்திலாவது   கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்ணின் குலம், குணம் அறிந்து நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். நம்மைப் போல் மருமகளும் பெண் தானே என்று அபிமானமும் அனுதாபமும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும். ஊரில் எல்லோரும் வரதட்சணை வாங்குகிறார்கள். நாமும் வாங்கினால் தப்பில்லை என்று தாங்களாக நியாயம் கற்பித்துக்  கொள்ளக் கூடாது. வெறுமனே சவுந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால் போதாது. அம்பாளுடைய பிரீதியைப் பெற வேண்டுமானால் வரதட்சணை கேட்டு பெண்வீட்டாரை நிர்பந்தம் செய்யக்கூடாது. நாங்கள் கேட்காமலே பெண் வீட்டில் கொடுத்ததால் வாங்கிக்கொண்டோம் என்று சொல்வதும் தப்பு தான். ஒருத்தர் செய்யும் செயல் செயின் ரியாக்ஷன் போல் பலரையும் பாதிப்பதாக அமைந்து விடுகிறது. வரதக்ஷணையே வேண்டாம் என்று சொல்வதே உயர்ந்த மனோபாவம். முடிவாக வரதக்ஷணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி திருட்டுச் சொத்து மாதிரி பயம் வேண்டும்.  இப்போது வரதக்ஷணை  மறைந்து போனதற்கு காரணம் பெண்கள் கிடைக்கவில்லை என்ற நிலை.  இதை அறிந்த பெண்கள் வீட்டாரும்  இப்போதெல்லாம்  குதிரையேறுவதை  நிறுத்தி,  கண்டிஷன்கள்  போடுவதையும்  குறைத்துக்  கொள்ள வேண்டும். ஆணில்லாமல் பெண் வாழ்க்கை முழுமையடையாது. வம்ச விருத்திக்கு  இல்வாழ்க்கை அவசியம் என்பதை உணரவேண்டும்.  நமது சமுதாயத்தை நாமே  அழிக்க காரணமாக கூடாது.  பெண் கிடைக்காமல் எத்தனையோ வரன்கள் ப்ரம்மச்சாரியாகவே இருந்து கிழவராகும் நிலை ,மாறவேண்டும்.  பணம் பெரிதல்ல, மனம் தான் விசாலமாக வேண்டும்.   ஒருவருக்கு ஒருவர்  விட்டுக் கொடுத்து அனுசரித்து ஆணும் பெண்ணும்  நடத்துவது தான் சுகமான வாழ்க்கை. இதை பணம் தரவே தராது. 

நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர் கள் வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதே நேரம், ஆசையை வளர்த்துக் கொண்டே போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல் போய்விடும். ஸௌ
க்யம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி. எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய   விஷயம். வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும். இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம். கிணற்றில் நீருக்குள் மூழ்கி இருக்கும்போது  நீர்  நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை நம்மால் உணரமுடிகிறது. எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை தண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதே  போல, நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும். அப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத் தொடுவதே இல்லை. நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரமலேசாகி விடும்.


 நம்முடைய இந்த உடம்பை மட்டுமே "நான்' என்று நினைத்துக் கொண்டிருப்பதனால் தான், இதை பாதுகாக்க வேண்டு மென்ற அக்கறையில் நம் உயிருக்கான நல்ல செயல்களைச் செய்வதைக் கோட்டை விட்டு விடுகிறோம். நம்முடைய இந்த உடம்பினைப் பற்றிய புத்தி போக வேண்டும். இதைத் தான்  தேஹாத்ம புத்தி என்பது.   ஆகவே தான் உடம்பிற்கு சிரமம் தருகின்ற உபவாசங்களை சாஸ்திரங்கள் விதித்திருக்கின்றன.

தினமும் தூங்குவதற்கு முன்பு இன்று ஏதாவது நல்ல செயல் செய்திருக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும். அப்படி ஏதும் செய்யாத நாளாக இருந்தால் மனம் வருந்த வேண்டும். அடாடா  ஒரு அற்புதமான, மீண்டும் கிடைக்காத, பெறமுடியாத  அருமையான நாளை  வீணாக  பாழாக்கிவிட்டோமே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...