திருமகள் ஆலயம் கண்டேன் - நங்கநல்லூர் J K SIVAN
இதற்கு முன் நான் பார்த்திராத ஒரு அற்புத கோவிலை பம்பாயில் கண்டேன்.
நமது பாரத தேசத்தின் லக்ஷ்மிகரமான நகரம் பம்பாய் என்று முன்பு அழைக்கப்பட்ட இப்போதைய மும்பை. செல்வச் செழிப்போடு வந்தவரை வாழவைக்கும் சுபிக்ஷ நகரம் மும்பை. நமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக மும்பை வளரக் காரணம் செல்வத்துக்கு அதிபதியான ''திரு ''மகள் மஹாலக்ஷ்மி அங்கே உறைந்து அருள்பாலிப்பது தான். ஆமாம். வாஸ்தவம். மும்பை மஹாலக்ஷ்மி ஆலயம் மிகவும் புராதனமான ஒரு ஆலயம்.
பம்பாய் செல்பவர்கள் அவசியம் தரிசிக்க வேண்டிய ஆலயம் மஹாலக்ஷ்மி உறையும் இந்த திருக்கோயில். கட்டிட இன்ஜினீயர் ஒருவர் கனவில் தான் ஒர்லி அருகே கடலில் மூழ்கி இருப்பதை மஹாலக்ஷ்மி தெரியப் படுத்தி அவர் தேடி இந்த சிலை கண்டு பிடிக்கப்பட்டது. விவரங்கள் கீழே தருகிறேன்.
மஹாலக்ஷ்மி கோயில் கட்டப்பட்டதும் அதை ஒட்டி இதுவரை கட்டப்பட்டு சரிந்து விழுந்த கடலரிப்பு தடுப்பு சுவர்கள் அப்புறம் விழவே இல்லை. இது ஒரு ஆச்சர்யம். மஹாலக்ஷ்மியில் அஸ்வங்கள் ஓடும் குதிரைப் பந்தய மைதானம் உள்ளது. RACE COURSE.
மும்பையில் பல செல்வந்தர்கள் தனவந்தர்கள், பிரபலங்கள் வாழும் ஒரு பகுதி பெட்டர் ரோடு. அதனருகில் ஒரு தெரு தான் புலாபாய் தேசாய் சாலை. அதை ஒட்டி கடற்கரை. அங்கே ஒரு பாறைக் குன்று தான் தான் மஹாலக்ஷ்மி ஆலய பீடம்.. 1830 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஆலயம் என அறிந்தேன். அதற்கு முன் இருந்த ஆலயம் சிதிலமாகி மறைந்து விட்டது.
கோவிலுக்குச் செல்லும் குறுகலான பாதை நெரிசல் மிக்கது. ஒரு வழிப்பாதை என்பதால் வண்டிகள் சற்று தூரத்திலேயே நிற்க வைக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும் உணவு சிற்றுண்டி கடைகள். நீளமாக ஐந்து ஆறு பேர் சேர்ந்து சாப்பிடும் குடும்ப தோசை கடைகள் மொறு மொறுவென்று நீளமான தோசையை விளம்பரமாக வைத்திருந்து வியாபாரம் செய்கி றார்கள்.
சில்லறை பொருள் பிளாஸ்டிக் சாமான்கள் வியாபார கடைகள் நெருக்கமாக உள்ளன. ஜனங்கள் எறும்பு மாதிரி சாரி சாரியாக வந்து கொண்டே இருக்கிறார்கள்.
இக்கோயிலின் முகப்பு மண்டபத்தில் தீபமாலா ஸ்தம்பங்கள். நுழைவு மண்டபத்தில் நடுவே ஒரு உலோக சிங்கம் சிலையாக ஜம்மென்று அமர்ந் திருக்கிறது. கர்ப்பக்ரஹத்தையம் நுழை வாயிலையும் பிரிக்கும் சுவரின் ரெண்டு பக்கமும் இடுப்பில் கையோடு பாண்டுரங்கன் அருகே ருக்மா பாயுடன் நிற்க, இன்னொரு பக்கம் கணபதி கோஷ்ட விக்ரஹமாக அமர்ந்திருக்கிறார். ஆலயத்தின் பின்பக்கம் அரபிக்கடல்.
சமுத்திரத்தை நோக்கி படிகளில் செல்ல வழி இருக்கிறது. அங்கே கணபதிக்கும் ஹநுமானுக்கும் சந்நிதிகள் தனித்தனியே இருக்கின்றன. கோயிலின் பின் பக்கத்திலுள்ள கற்பாறைகளில் உட்கார்ந்து சுற்றிலும் உள்ள இயற்கையை ரசிப்பதே காசில்லாமல் மும்பைக்காரர்கள் அனுபவிக்கும் சுகமான கடலோர இயற்கை காற்று . ரொம்ப சுகமான அனுபவம் தான்.நான் சென்றபோது சரியான வெயில், நடுப்பகல் நேரம். ஆகவே கடற்கரை பக்கம் போக மனதில்லை.
கர்ப்ப க்ரஹத்தில் இடுப்பளவில் மஹாலக்ஷ்மி இருபக்கமும் மஹா காளி மஹா ஸரஸ்வதி புடைசூழ காட்சி தருகிறாள். மூன்று விக்ரஹங்களும் சுமார் இரண்டரை அடி உயரம் இருப்பவை. மூன்று தேவிகளின் முகங்களும் தங்க கவசம் பூணப்பட்டுள்ளான். அவர்களின் திருமுகங்கள் தங்கக் கவசம் பொருத்தப்பட்டு பளபளக்கின்றார்கள். தீபாலங்காரத்தில் ஜக ஜோதியாக மின்னுகிறார்கள். செல்வச் சீமாட்டி மஹாலக்ஷ்மி மற்றும் இரு தேவியர்களின் கிரீடங்களில் மிக மிக விலையுயர்ந்த கற்கள் பதித்திருக்கிறார். க்ரீடங்களின் வேலைப்பாடுகள் கை தேர்ந்த ஆச்சாரிகளின் கைவண்ணத்தில் அருமையிலும் அருமை. ஒவ்வொன்றும் வித்யாசமான சிற்ப வேலைப்பாட்டில் வேறு பட்டவை.
ரொம்ப குறுகிய பர
ப்பளவுள்ள மஹா லக்ஷ்மி கர்ப்ப க்ரஹத்திற்குள் பக்தர்கள் சென்று தேவியர்களைப் பூஜிக்கலாம். மாலைகள் தேங்காய்கள் பழங்கள் இனிப்பு வகைகள் தேவியர்களுக்குக் காணிக்கைகளாக சேர்ந்து கொண்டே இருக்கிறது. செந்தூரமும் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகிறது. எனக்கு ஒரு தாமரை மலர்க் கொத்து கிடைத்தது.
இக்கோயிலில் தினமும் ஆறுகால பூஜைகள் நடைபெறுகின்றன. செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக் கிழமைகளில் விசேஷ பூஜைகள் உண்டு. தசரா என்கிற நவராத்ரி சமயம் பத்து நாளும் பக்தர்கள் இங்கே நிற்க இடம் கிடைக்குமா என்பது ரொம்ப சந்தேகம்.
நான் சொல்லாமல் விடக்கூடாது என்பதால் சொல்கிறேன். செல்வச் சீமாட்டி மஹாலக்ஷ்மி ஆலயத்தின் வருவாய் மும்பை மாநகரில் மிக மிக அதிகமானது.
இதை நிர்வகிப்பவர்கள் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஆலய டிரஸ்ட். நல்லவேளை அறநிலையத்துறை அல்ல.மஹாலக்ஷ்மி ஆதி சக்தி, ஆதி சரஸ்வதி எல்லாம் ஒன்றேயானவள். த்ரிகுணாத்மிகா. முக்குணங்கள் கொண்டவள். சரஸ்வதி சாத்வீகம், லட்சுமி ரஜோகுணம், அம்பாள் தமோகுணம் கொண்டவர்கள். முகலாய மதவெறி கொண்டவர்கள் ஆட்சியின் போது மூன்று தேவியர்களும் கடலில் மறைக்கப்பட்டனர். வெள்ளைக்காரன் ஆட்சியில் லார்ட் ஹார்ன்பி HORNNEBY கடல் ஊடுருவாமல் தடுப்புச்சுவர் எழுப்பினான். காரணம் எதுவுமில்லாமல் அந்த சுவர்கள் விழுந்தன. மஹா லக்ஷ்மியை மும்பை நகரத்திலிருந்து தடுத்துப் பிரிக்க முடியுமா? ஒர்லி பக்கம் இருந்த இந்த பாறைத் திட்டையும் இன்னொன்றையும் சேர்த்து இணைக்க திட்டமிட்டார் கவர்னர்.ராம்ஜி ஷிவ்ஜி பிரபு என்கிற இன்ஜினீயர் ரெண்டு கடல் தீவுகளையும் இணைக்கும் வேளையில் ஈடுபட்டார். எவ்வளவோ பாடு பட்டும் தீவுகளை இணைக்கமுடியாமல் கடல் அலைகள் தடுத்தன. ஒருநாள் இன்ஜினீயர் கனவில் மஹாலக்ஷ்மி தோன்றினாள். இணைப்பதற்கு முன் நான் கடலில் பாறையின் அடியில் இருக்கிறேனே என்னை எடுத்து ஆலயம் நிர்மாணித்துவிட்டு மீதி வேலையைப் பார் என்று கட்டளையிட்டாள் . ஒர்லி பாறைத்தி ட்டின் அடியிலிருந்து மூன்று தேவியர்களையும் கண்டு எடுத்த பின் இணைப்பு வேலை சுமுகமாக முடிந்தது. அந்த பாறைக் குன்றின் மீது மஹா லக்ஷ்மிக்கு கோயில் அமைந்து அந்த விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. கோவில் பிராஹாரத்தில் பெண்கள் உயரத்தில் அமர்ந்து கொண்டு குட்டி குட்டி கடைகளில் புஷ்பம் அர்ச்சனை திரவியங்கள் விற்கிறார்கள்.
தெற்கை விட வடக்கே பக்தி துல்லியமாக உள்ளும் புறமும் புரிபடுகிறது. அவசியம் சென்று தரிசித்து அருள்பெற வேண்டிய ஒரு அம்பாள் ஆலயம்.
No comments:
Post a Comment