மாணிக்க வாசகர் - நங்கநல்லூர் J K SIVAN
ஒளியுடன் ஐக்கியம்
மணிவாசகர் அழுது புரண்டார். என் சிவனே எனக்கு ''குருவாய் வருவாய்'' என்று வேண்டினார், கெஞ்சினார், பெருந்துறையில் குரு கிடைத்தார். மீண்டும் வேண்டுமே என்று கெஞ்சினார். ''சிதம்பரத்துக்குப் போ '' என்று கட்டளை பிறந்தது. வழியில் பல சிவாலயங்களுக்கு சென்று பரமனை தரிசித்தார். ஒவ்வொரு ஆலயத்திலும் ''குருவாக வா' என்றே வேண்டினார். உத்தரகோச மங்கை ஆலயத்தில் அவ்வாறே வேண்டி கண்ணீர் சிந்தினார். கடைசியில் சிதம்பரத்துக்கு நடந்தார். நடராஜன் பவனி வரும் தெருக்களில் உருண்டு புரண்டார். ஆலய நந்தவனத்திலேயே தங்கினார் .அங்கே தான் திருவாசகம் உருகிப்போன அவர் உள்ளத்திலிருந்து உருவாகியது. தில்லையிலிருந்த பாக்கியசாலிகள் அவற்றை அவர் பாடக் கேட்டு மகிழ்ந்தார்கள்.
அரசனின் வேண்டுகோளுக்கிணங்கி அங்கே பௌத்த பிக்ஷுவோடு வாதம் புரிந்தார். வென்றார். ஊமை ராஜகுமாரி பேசினாள் . அவள் பேசியவை தான் திருச்சாழல் பாடல்கள். அவற்றை அடுத்து பதிவிடுகிறேன்.
சிதம்பரேசன் மணிவாசகர் வாயால் திருவாசகம் கேட்க விரும்பினான். அவருக்கு மோக்ஷம் தர இச்சை கொண்டான்.
ஒரு வயதான பிராமணர் மணிவாசகர் முன் நின்றார்.
'வரவேண்டும் வரவேண்டும் சுவாமி, அமருங்கள். தங்களுக்கு சேவை செய்ய பாக்யம் அருளவேண்டும், என்ன வேண்டும் உங்களுக்கு சொல்லுங்கள்'' என்கிறார் மணி வாசகர்.
''அப்பனே நீ நன்றாக இருக்கவேண்டும். எனக்கு ஒன்றுமே வேண்டாம். நீ நன்றாக என் சிவன் மேல் பாடுகிறாயாமே, எனக்கு பாடிக் காட்டு, காதார கேட்கிறேன் ''
''அடியேன் பாக்யம் சுவாமி. இதோ உங்கள் எதிரில் கைகட்டி மனமுருகி என் சிவனைப் பாடுகிறேன். திருவாசகம் பாட துவங்கினார் மணிவாசகர்.''
''ஐயா, உங்கள் பாடல்களை மணி வாசகர் என்று பரமேஸ்வரனால் புகழப்பட்ட உங்கள் வாக்கியங்களை வெறுமே கேட்டல் மட்டும் போதாது ஐயனே. நான் அதை ஓலைச்சுவடியில் எழுதிக் கொள்ளலாமா?' உங்கள் வாயால் கேட்ட தோடல்லாமல் அடிக்கடி படித்து என் சம்சார தளைகளில் இருந்து விடுபட உதவுமே'' என்கிறார் வயதான பிராமணர்.
''ஆஹா இறைவன் மேல் பாடியதை எழுதிக் கொள்ளும்'' என்கிறார் மணிவாசகர். திருவாசகம் ஒலித்தது. பனை ஓலைச் சுவடிகள் நிரம்பின. திருவாசகம் எழுத்துருவம் பெற்றது. எழுதிய பிராமணர் மறைந்தார். வந்தது சிவபெருமானே என்று புரிந்து கொண்டார். முதியவர் தான் எழுதிய திருவாசக சுவடிகளோடு காணாமல் போய்விட்டார்.
மறுநாள் காலை நடராஜன் சந்நிதியில் தில்லை மூவாயிர தீட்சிதர்கள் நடராஜன் சித்சபையின் பஞ்சாக்ஷர படிகள் மேல் வைக்கப்பட்டிருந்த திருவாசக சுவடிகளை கண்டு அதிசயித்தார்கள். யார் இங்கே கொண்டு இவற்றை வைத்தது?
சுவடிகளை பிரித்து பார்த்தார்கள்.
அழகிய தமிழில் பக்தி ரசம் தோய்ந்து ஊனும் உள்ளமும் உருக்கும் மணிவாசகரின் திருவாசகம் நெஞ்சை அள்ளியது. முழுதும் உரக்க படித்தார்கள் ஆஹா ஆஹா என்று எல்லோரும் கரைக்கம்பம் சிரக்கம்பம் செய்ய கடைசியில் முடிவில் அந்த ஓலைச் சுவட்டில் ''மணி வாசகர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து'' என்று இருந்தது.
இது மாதிரி எந்த கவிஞனுக்கு பக்தனுக்கு பேரருள் கிடைக்கும்?
கூட்டத்தில் நின்றிருந்த மணிவாசகர் தனது திருவாசகம் பாடுவதை தனது காதால் கேட்டு கண்ணீர் உகுத்தார். மெய் சிலிர்த்தது. உடல் நடுங்க உள்ளே ஒரே ஒரு குரல் அழுத்தமாக கேட்டது. ''என்னிடம் வா'' அவரை அறியாமல் கால்கள் முன்னே சென்றன. பஞ்சாக்ஷரப்படிகள் கடந்து நடராஜனை அடைந்தார். திரை தானே மூடியது. டாண் டாண் என்று சிதம்பரேசன் ஆலய மணி விடாமல் ஒலித்தது. கேளுங்கள் இணைத்திருக்கிறேன்
https://youtu.be/q-0eSbex-HQ திரை விலகியது.
தீட்சிதர்கள் மற்ற பக்தர்கள் எல்லோரும் வியந்தனர். எதற்கு உள்ளே சென்றார் மணிவாசகர்.... ஏன் ? எப்படி உள்ளே செல்லலாம்? இந்த கேள்விகளுக்கு எல்லாம் திரை விலகி பதில் கிடைத்தது. ஆலய மணி ஒலிக்கிணையாக நடராஜன் முகத்தில் புன்சிரிப்பு தெரிய அவன் சந்நிதியில் தீபம் பிரகாசமாக ஒளி வீசியது? உள்ளே சென்ற மணிவாசகர் எங்கே????
தீபம் முன்னிலும் பிரகாசமாக எரிந்து என்னுள் ஐக்யமானான் என்று நடராஜன் உணர்த்தியதை பறைசாற்றியது.
No comments:
Post a Comment