அர்ஜூனன் சோகம் - நங்கநல்லூர் J K SIVAN
அர்ஜுனன் வெகு வேகமாக த்வாரகைக்கு வந்தான், வழியெல்லாம் எவரும் எதிரே தெரியவில்லை. எங்கே செல்கிறேன்? ஏதோ ஒரு கனவு லோகத்தில் சஞ்சரிப்பது போல் இருந்தது. வெறிச்சோடி இருக்கிறதே இந்த அழகிய துவாரகை,
வேக வேகமாக கிருஷ்ணன் அரண்மனைக்கு சென்றான். அனைத்து பெண்களையும் காப்பாற்றி வண்டிகளில் அனுப்பிவிட்டான். கிருஷ்ணன் கட்டளை நிறைவேறி விட்டது. வண்டிகள் துவாரகைவிட்டு ஹஸ்தினாபுரம் நோக்கி சென்றுவிட்டன. காலியாக எவருமில்லாத துவாரகை அரண்மனையை ஒரு முறை கண்களில் நீரோடு சுற்றிப்பார்த்துவிட்டு வெளியே வந்துவிட்டான். துவாரகை எல்லையை கடந்து ஹஸ்தினாபுரம் நோக்கி செல்கிறான். அவன் மனம் துவாரகையிலேயே இருக்கிறது.. ஒரு பெருமூச்சு உஷ்ணமாக அவனிடமிருந்து வெளிப்படுகிறது.
சொன்னதை செய்தாகி விட்டது...
வெகு தூரத்திலிருந்து துவாரகை கண்ணை விட்டு மறையும் முன் திரும்பிப் பார்த்தான். கிருஷ்ணன் சொன்னபடியே எல்லாம் நடக்கிறது''.
''ஹோ என்று எதிரே பேரிரைச்சலுடன் கடல் பொங்கி அலை ஆகாசத்தை நோக்கி எழும்புகிறது. கரையை விழுங்க ஆக்ரோஷத்தோடு ஓடி வந்து கொண்டிருக்கிறது. கரையை உடைத்து விட்டது. த்வாரகை நகரத்துள் நுழைந்துவிட்டது.
அழகிய த்வாரகை நகர தெருக்கள் எங்கே காணோம்? நீலவண்ண உப்பு நீரின் அடியில் அவற்றை எப்படி தேடுவது? பார்த்ததை எல்லாம் கடலலைகள் விழுங்குகிறதே. மாட மாளிகை கோபுரங்கள் இதோ கடல் நீரடியில் மறைந்து கொண்டிருக்கிறதே. அர்ஜுனன் கண்கள் கிருஷ்ணனின் மாளிகையை தேடின. கடைசியாக ஒரு தடவை பார்க்கலாமா? அதோ அந்த அழகிய மாளிகையில் எவ்வளவு தடவை கிருஷ்ணனை சந்தித்திருக்கிறேன். எப்படியெல்லாம் சிரித்து மகிழ்ந்து பேசி உணவருந்தி அவனோடு உலவி உறங்கி இருக்கிறேன்.... அவனும் இல்லை, அவன் மாளிகையும் இல்லை, அவன் நகரமும் இல்லை. எல்லாமே இல்லை ....
நன்றாக சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுப்பது போல கடல் துவாரகையை பக்ஷணம் பண்ணிவிட்டு ஒரு நீளமான நீல நிற விரிப்பு போல காட்சி அளிக்கிறதே. எல்லாமே சில மணித்துளிகளில் தானா?
''கிருஷ்ணா, பாண்டவர்கள் என்றால் ரொம்ப மகிழ்வாயே , இனி எந்த பாண்டவன் எந்த துவாரகைக்கு செல்லமுடியும்?, எந்த கிருஷ்ணனை எந்த மாளிகையில் இனி சந்திக்க முடியும்,?இனி எனக்கு த்வாரகை என்பது எத்தனையோ பெயர்களில் ஒன்று, ஒரு இனிய பழைய நினைவு.. அவ்வளவு தானா?''
அர்ஜுனன் தேரை கண்ணீர் மல்க ஒட்டிக்கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்பினான்.
இன்று காலை துவாரகை நீருக்குள் இருப்பதை ஒரு வீடியோவில் பார்க்க நேர்ந்தததால் மேலே என் மனதில் தோன்றியதை எழுதினேன். இது தான் அந்த வீடியோ https://youtu.be/8SJN3oYrOWU
No comments:
Post a Comment