Sunday, May 29, 2022

LIFE LESSON

 வாழ்க்கை பயணம்.  -   நங்கநல்லூர்  J K   SIVAN 



எண்ணங்கள் தான் மனசு. மனசு தான் மனிஷன். உலகமே  எண்ணத்தின் வெளிப்பாடு தான். சிலந்தி தனது எச்சிலால் வலை பின்னுவதைப் போல  இந்த உலகம் நமது எண்ணத்திற்கேற்ப அமைந்தது தான்.  மனசை தான் சூக்ஷ்ம சரீரம், ஜீவன், அகம்பாவம், ஆத்மா என்றெல்லாம் கூட  பேர் சொல்லி அறிகிறோம்.  உடம்பு வேறு  மனசு வேறு. மனசு சொன்னபடி ஆடுவது தான் உடம்பு என்கிற  மண் பொம்மை.  மனசின் முக்கிய எண்ணம்  ''நான்''.  அது தான் எல்லாவற்றிற்கும் காரணம்.  ''ஹ்ரித்''  ''அயம்''   --( நான் தான் இதயம்)  என்ற ரெண்டு வார்த்தைகள் தான் ஹ்ரிதயம்.   மனசு பூரா பூரா  ''நான்'' எனும் ஹ்ருதயத்தை சுற்றியே  அலைகிறது.  நான்  எனும் ஹ்ருதயம் தான் ஆத்மா என்றேன். அது ஒன்று தான் சாஸ்வதம். மற்றதெல்லாம் அழிவது.

பிராணாயாமத்தால்  ''நான்'' கட்டுப்படுகிறது.   அதாவது எண்ணங்களின் ஓட்டம்  குறைகிறது. அதன் விளைவாக  உடலின் அசைவும், செயல்பாடும்  நிற்கிறது.  ஆத்மா  உடம்பை விட்டு பிரிவது வரை, உடம்பின் புலன்கள்  எண்ணங்களை  விடாமல்  ஈர்க்கிறது. தியானம், மந்த்ர உச்சாடனம்  ஆகியவை  மனதை ஓடாமல் நிறுத்தி வைப்பவை. ஆடிக்கொண்டே இருக்கும் யானையின் தும்பிக்கையில் கொடுத்த கோல், யானையின் காலில் கட்டிய சிறு  சங்கிலி,  அதை அசையாமல் பிடித்துக் கொண்டு நிற்க செய்யுமல்லவா?    
தியானம்  மனதை ஒரே ஒரு விஷயத்தில்  மட்டும்  ஒருமுகப்படுத்த உதவுகிறது. 
உண்ணும் உணவும்  மனதை கட்டுப்படுத்தும். மஹான்கள் ருசி தேடாமல்  சாத்வீக உணவை நாடுவது இதற்கு தான். 
இப்படி மனசு சுத்தமாகிவிட்டால்  மனது ஒரு நல்ல மனிதனாக  உருவெடுக்கிறது.

எண்ண ஓட்டத்துக்கு  ஆசைகள், புலன்  உணர்ச்சிகள் தான்  ஊட்ட சத்து.
வைராக்கியம் மனதை திடப்படுத்தி கட்டுக்குள் வைப்பது.  இப்படி இருப்பவர்கள் தான் குருவாக திகழ முடியும்.அப்படிப்பட்ட  குருவும்  பகவானும் ஒன்றே தான். 
அப்படிப்பட்ட  குருவையும்,  பகவானையும் கெட்டியாக பிடித்துக்கொள்வதை தான் மாணிக்கவாசகர்  ''சிக்''கென  பிடித்தேன் என்கிறார்.

''நான்;;  அகன்றால் எல்லாம்  ''அவன்''  ஆகிவிடுகிறது.  தன்னை இழப்பது தான் உயர்ந்த சரணாகதி தத்வம். எல்லாம் அவனே, அவனுடையதே என்று வாழ்க்கை பிரயாணம் தொடர்ந்தால்  ரயில், பெட்டியில் உட்கார்ந்த நம்மையும், நம்முடைய கனமான  50 கிலோ  பெட்டியையும் தானே  சுமந்து  கொண்டு ஓடும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...