பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN
123. ஸாக்ஷி கோபாலன்
எங்கு சென்றாலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்வதும், விஜய யாத்திரையை குறித்த காலத்திற்குள் முடிப்பதும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாத விஷயங்கள். இருந்த போதிலும் மஹா பெரியவா கூடுமானவரை ஆங்காங்கே பக்தர்கள் விருப்பப்படி ஒன்றிரண்டு நாட்கள் கூடுதலாக வாசம் செய்தாலும் யாத்திரை தொடர்ந்து கொண்டு தான் வந்தது.
1936ம் வருஷம் ஏப்ரல் 8 அன்று ராத்திரி, மஹா பெரியவா ஜெய்ப்பூரிலிருந்து புறப்பட்டார். மூன்று நாளில் ஹரிப்பூர் அடைந்தார். பிராம்மணி ஆற்றில் ஜலம் இல்லாததால், மணலில் நடந்து கடந்து, தர்மசாலாவுக்கு 10ம் தேதி சென்றார். ஒரிஸ்ஸாவில் நிறைய நதிகள் உண்டு. பிராமணி ஆறு இரண்டாவது பெரிய நதி. சோடா நாக்பூரிலிருந்து ரூர்கேலா வரை ஓடும் 800 கி.மீ. நீளமானது பிராமணி நதி.
அக்கரையில் தர்மசாலா எனும் இடத்தை மஹா பெரியவா அடைந்து அங்கே மூன்று நாள் முகாம் .
மணல் பிரதேசம், மணல் திட்டுகளைக் கடந்து சிரமத்தோடு, தான்கி, எனும் இடத்தை அடைந்தார். அங்கே ரெண்டு நாள் வாசம். ஏப்ரல் 15 அன்று கட்டாக் என்ற பெரிய ஊரை அடைந்தார். மாயூர் பாஞ்ச் அரண்மனையில் அவர் தங்க ஏற்பாடு செய்திருந்தார்கள். புவனேஸ்வரத்தில் இருந்த ஆலயங்களை தரிசித்தார். ஸ்ரீ L. கிருஷ்ணய்யர் என்ற ஒரு இன்ஜினீயர் அரசாங்க உத்யோகத்தில் இருந்தவர் இல்லத்தில் தக்க வசதிகளோடு மஹா பெரியவா தங்கி இருந்தபோது அந்த வீட்டுக்கு எதிரே ஒரு பந்தல் போட்டு சங்கர ஜெயந்தி கொண்டாடினார். வழக்கம்போல் பல வித்துவான்கள் எங்கிருந்தெல்லாமோ வந்து கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
ஆதிசங்கரர் படம், பாதுகை எல்லாம் யானைமேல் அலங்கரிக்கப்பட்டு மஹாநதி வரை சென்ற ஊர்வலத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு பெரியவா தரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். இதைத் தொடர்ந்து அன்று மாலை ஒரு பெரிய ஊர்வலம், அதில் நாதஸ்வர கோஷ்டி, இங்கிலிஷ் பேண்ட் BAND வாத்யம், தீபாலங்காரம், பின்னால் மஹா பெரியவா நடந்து ஊர்வலம் வந்தார். ஆயிரக் கணக்கானோர் கூடி ''ஜயஜய சங்கர ஹரஹர சங்கர'' கோஷம், பட்டாசு வாண வேடிக்கைகள் கோலாகலமாக கண்கொள்ளாக் காட்சி.
பத்து நாட்கள் கட்டாக்கில் இருந்து பக்தர்களை மகிழ்ச்சியுறச் செய்துவிட்டு பல சிற்றூர்களைக் கடந்து கடைசியில் பைல நாத் என்கிற ஊருக்கு 30ம் தேதி வந்து சேர்ந்தார். அங்கிருந்து பால்கட்டி, முகுந்தபூர் என்கிற ஊர்களுக்கு சென்றார். பூரி ஜெகன்னாத் முக்தி மண்டப சபா மஹா பெரியவாளை பூரிக்கு அழைத்தது. மே மாதம் 3ம் தேதி அங்கே சென்றார். அங்கே ஸாக்ஷி கோபாலர் ஆலயத்துக்கு சென்று தரிசனம் செய்தார்.
சாக்ஷி கோபாலர் பற்றி தெரியுமா? சுருக்கமாக சொல்கிறேன்.
சாக்ஷி கோபாலர் ஸ்ரீ கிருஷ்ணன் தான். அவர் பெயரிலேயே ஊரும் சாக்ஷி கோபால் என்று இருக்கிறது.காஞ்சீபுரத்திலிருந்து ரெண்டு பிராமணர்கள், ஒருவர் கிழவர், மற்றவர் வாலிபர் காசிக்கு நடந்து போனார்கள். போகும் வழியில் கிழவர் நோய்வாய்ப்பட்டார், அவருக்கு மருந்துகள் கொடுத்து, சிஷ்ருஷை செயது மேற்கொண்டு நடக்க முடியாததால் அவரைத் தனது தோளில் தூக்கிக்கொண்டு பிரம்மச்சாரி வாலிபர் காசிக்குப் போனார். காசியில் தரிசனம் செய்துவிட்டு அப்படியே பிருந்தாவனம், மதுராவுக்கு சென்றார்கள். பிருந்தாவனத்தில் கிருஷ்ண தரிசனம் செய்தார்கள். கிழவருக்கு பரம ஆனந்தம். பெற்ற பிள்ளையைவிட அந்த வாலிபர் தன்னை அவ்வளவு ஜாக்கிரதையாக கவனித்துக்கொண்டு இஷ்ட மூர்த்தி தரிசனம் செயது வைத்தநன்றிக் கடனாக தனது பெண்ணை, அவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து தனது சொத்து பூரா அந்த வாலிபனுக்கே எழுதிக் கொடுக்க மனதில் எண்ணம் பிறந்தது. இதை அந்த வாலிப பிராமணனிடம் தெரிவித்தும் விட்டார். வாலிப பிராமணன் ஏழை, அவனால் முதியவர் சொன்னதை நம்ப முடியவில்லை. ரொம்ப சந்தோஷம்.
''ஆஹா, எனக்கா? உங்கள் புத்திரியையா கல்யாணம் பண்ணித்தரப்போகிறீர்கள், நான் எதையும் எதிர்பார்த்து இதெல்லாம் செய்யவில்லையே உங்களுக்கு?'' இவ்வளவு பெரிய பாக்யமா? இது நிறைவேற இந்த கிருஷ்ண பரமாத்மா உதவட்டும்'' என்று வேண்டிக்கொண்டான்.
''இதோ பாருடா, நீ என் மாப்பிள்ளை. இது நிச்சயம் நடக்கும். இதோ இந்த கிருஷ்ணன் சன்னிதானத் தில் அவன் எதிரிலேயே சத்யம் பண்றேன்.'' என்றார் கிழ பிராமணர். கையடித்து சத்தியமும் செய்தார். சில மாதங்கள் கழிந்தது. ரெண்டு பேரும் ஜாக்கிரதையாக காஞ்சிபுரம் திரும்பினார்கள்.
வீட்டுக்கு வந்த பிறகு கிழவர் கொடுத்த வாக்கை மறந்து விட்டார். அழகான ரூபவதி அவர் பெண். பெரிய இடத்தில் சொத்து ஐவேஜி இருக்கிற இடத்தில் பிள்ளை தேடினார். வாலிப பிராமணன் ஒருநாள் அவர் வீட்டுக்கு வந்து அவர் பிருந்தாவனம் மதுராவில் கொடுத்த வாக்கு சத்யம் எல்லாம் ஞாபகப்படுத்தினான்.
கடுங்கோபம் வந்துவிட்டது கிழவருக்கு. ''ஏண்டா பிச்சைக்கார நாயே, அவ்வளவு திமிரா உனக்கு? உன் புத்தி பிசகிவிட்டதா, உன் நிலை என்ன என் நிலை என்ன, என் பெண்ணை கேக்கற அளவுக்கு உன் அந்தஸ்து உசந்து விட்டதா? போடா வெளியே '' என்று விரட்டினார். பிரம்மச்சாரி பிராமணன் அதிச்சியடைந்து காஞ்சிபுரம் ராஜாவிடம் போய் விஷயத்தை சொன்னான். ராஜாவுக்கு இதைக் கேட்டு சிரிப்பு வந்தது.
''என்ன பேராசை உனக்கு, புத்தி கெட்டவனே , உன் யோக்யதை என்ன, அவர் குலப்பெருமை அந்தஸ்து என்ன, மலைக்கும் மடுவுக்கும் வித்யாசமா இருக்கு. வேறே எங்காவது போய் ஒரு ஏழைப் பெண்ணைத் தேடு.'' என்ற ராஜாவிடம் பிரம்மச்சாரி அழுது கொண்டே, '' ராஜா, நான் அவருக்கு உதவியது எல்லாம் மனிதாபிமானத்தினால் தான், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், என் தந்தையாக நினைத்து மனப்பூர்வமாக சிச்ருஷை செய்தேன் . அவருக்கு ஒரு பெண் இருப்பதே எனக்கு தெரியாது, அவர் சொத்து மதிப்பும் அறியேன். அவராகச் சொன்னதை, அதுவும் கிருஷ்ணன் சந்நிதியில் சொன்னதை நம்பினேன், அவர் செய்த சத்தியத்தை நம்பி தான் அவரிடம் போய் பெண் கேட்டேன்' என்றான். கண்களில் கண்ணீர் பிரவாகம்.
ராஜா கிழவரை அழைத்து விசாரணை செய்தான். அவர் அது பொய் என்றார் . அவர் அப்படி சத்யம் செய்ததற்கு என்ன முகாந்திரம்? யார் சாக்ஷி? ஆகவே ப்ரம்மச்சாரியின் கூற்று எடுபடாது என்று ராஜா தீர்ப்பு கூறினான்.
பிரம்மச்சாரி விடவில்லை. ''ராஜா, நான் சொல்வது சத்யம், இந்த பெரியவர் கொடுத்த வாக்குக்கு, செய்த சத்தியத்துக்கு சாக்ஷி அந்த கிருஷ்ணன் ஒருவன் தான். மதுரா நகரத்துக் கோயில் ஸ்வாமி கிருஷ்ணன் ஒருத்தன் நடந்ததற்கு ஸாக்ஷி. நான் ஏழை, என் வாக்கு அம்பலமேறாது. ஆனால் க்ருஷ்ண பரமாத்மா நிச்சயம் சாக்ஷி சொல்ல வருவான்'' என்று சொன்னான்.
''ஓஹோ கிருஷ்ணன் சாக்ஷியா, போய் அவனை அழைத்துக் கொண்டு வா'' என்று கட்டளையிட்டான் ராஜா. பிரம்மச்சாரி மறுபடியும் மதுரா போனான்.
''நந்தலாலா வா என்னோடு, நீ தான் நடந்ததற்கு ஒரே சாக்ஷி, அதை காஞ்சிபுரம் ராஜாவிடம் சொல்ல நீ உடனே என்னோடு வா'' என்று உரிமையோடு கூப்பிட்டான்.
“நான் வரேன் கவலைப்படாதே நீ முன்னாலே போ, நான் பின்னாலேயே நடந்து வருவேன். என் மீது சந்தேகப்பட்டு ஒரு தடவை கூட நீ திரும்பிப் பார்க்கக்கூடாது . அப்படிப் பார்த்தால், எந்த இடத்தில் என்னைப் பார்த்தாயோ நான் அங்கேயே விக்ரஹமாக நின்றுவிடுவேன் . கவனத்தில் வை. இது என நிபந்தனை ' என்றான் பரந்தாமன்.''
எங்கும் நிறைந்தவனாக இருந்தாலும், பூலோக மக்களுக்கு புரியவேண்டும், சத்தியத்தின் மதிப்பு தெரியவேண்டும் என்பதற்காகவே அந்த தீன தயாளன், கருணாமூர்த்தி, ஆயிரக்கணக்கான மைல்கள் நடந்து காஞ்சிபுரம் ப்ராமணனோடு நடந்து வந்தார்... என்று தான் நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதே மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிஷன் போட்டு ஆதி சங்கரருக்கு பின்னாலேயே நடந்த ஸரஸ்வதி தேவி, அவர் திரும்பி பார்த்த இடத்திலேயே சிலையாக நின்றுவிட்டாள் . அது தான் சிருங்கேரி, அவள் தான் சாரதா தேவி. நாம் இன்றும் தரிசிக்கும் அம்பாள்.
கோபாலன் சொன்னதை பிரம்மச்சாரி ஏற்றுக்கொண்டு விடுவிடென்று நடந்தான். பின்னால் கிருஷ்ணனின் கால் சிலம்பு ஜல் ஜல் என்று ஒலித்துக் கொண்டே வந்தது. காஞ்சிபுரம் கிட்டே வந்துவிட்டார்கள். இன்னும் ரெண்டு மைல் தான்.
திடீரென்று ப்ரம்மச்சாரிக்கு ஒரு எண்ணம் தோன்றியது. ''இந்த பரமாத்மா கிருஷ்ணனையா நாம் கேவலம் ஒரு மனுஷ ராஜாவின் அரண்மனையில் சாக்ஷி கூண்டில் ஏறி நின்று சாக்ஷி சொல்ல வைப்பது. எவ்வளவு பெரிய தப்பு அது''.
நன்றிப் பெருக்கோடு அவன் திரும்பி பகவானைப் பார்த்தான். அங்கேயே சிலை கொண்டு விட்டார் கோபாலன். காஞ்சிபுரம் எல்லைக்குள் வந்தாயிற்றே.
''ஆஹா என்ன ஆச்சர்யம், நமது ஊரில் திடீரென்று ஒரு கிருஷ்ணன் விக்ரஹம் தானாகவே தோன்றி இருக்கிறதே'' என்று அதிசயித்து ஊர்மக்கள் ஓடிவந்து தரிசனம் செய்தார்கள். ராஜாவுக்கும் விஷயம் தெரிந்து ஓடி வந்தான்.
அங்கேயே ராஜாவுக்கு நடந்ததை சாக்ஷி சொன்னான் கோபாலன். கிழவருக்கு தான் செய்த பாதகம், புரிந்தது, மன்னிப்பு கேட்டார்.
ராஜா, கிருஷ்ணன் முன்னிலையில் கிழவர் தனது பெண்ணை ப்ரம்மச்சாரிக்கு கன்யாதானம் பண்ணிக் கொடுத்தார். இந்த விஷயம் ஒரிஸ்ஸாவுக்கும் பரவியது. ஒரிஸ்ஸா ராஜா புருஷோத்தமன் கிருஷ்ண பக்தன். அந்த ராஜா காஞ்சிபுரம் வந்தான். காஞ்சி ராஜாவின் பெண் பத்மாவதியை மணந்து கொண்டான். மாமனாரான காஞ்சி ராஜா மாப்பிள்ளை கேட்டதால், இந்த கிருஷ்ண விக்ரஹத்தை அவர் கையோடு எடுத்துக்கொண்டு ஒரிஸ்ஸாவுக்கு போக ஏற்பாடு செய்தான். பூரியில் ஏற்கெனவே பிரஸித்தமான ஜகந்நாத ஸ்வாமி இருந்ததால் அவருக்குப் போட்டியாக ஸாக்ஷி கோபால் அங்கே இருக்க வேண்டாம் என்று கிருஷ்ணன் முகுந்தபுர் என்று ஒரு க்ஷேத்ரத்தில் கோயில் கொண்டார் அங்கே அவர் பெயர் சாக்ஷி கோபாலன். அந்த ஊர் பெயரும் சாக்ஷி கோபால்.
No comments:
Post a Comment