Tuesday, May 31, 2022

GEETHA GOVINDHAM


 கீத கோவிந்தம் -  நங்கநல்லூர்  J  K  SIVAN ஜெயதேவர் 


''ஜெயதேவரா?  யார் அது?'' 


ஆதியில் பிரபஞ்சம், தோன்றி, பூமி உருவாகி அதில் மனிதர்களும்   தோன்றி  பகவான் பல அவதாரங்கள் எடுத்து அதில்  கிருஷ்ணாவதாரம் மறக்கவே முடியாமல் போய், கலியுகம் பிறக்க, அதில் நமக்கு  பக்தியை பெருக்க, சுகபிரம்ம ரிஷியை கபீர் தாசராகவும், உத்தவ ரிஷியை நாமதேவராகவும், வால்மீகியை துளசிதாசராகவும், வியாசரை ஜெயதேவராகவும், சிவபெருமானை ஜூனகாத்தில் நார்சி மேத்தவாவும், தானே ஞானதேவராகவும்  அந்த நாராயணன்  அனுப்பினான் என்று  ஸ்ரீமத் பக்த விஜயம் சொல்கிறது.

எனக்கு ஆறு ஏழு வயது.  என் தாய் ஜம்பாவதி அம்மாள் சமையல் கட்டில் ஒரு பழைய  புத்தகம் வைத்திருப்பாள் .அதன் மேல் நிறைய சந்தன குங்குமம். பழுப்பான நிறத்தில் அதன் பக்கங்கள் கொஞ்சம் மடக்கினால் அப்பளம் மாதிரி நொறுங்கும் கிழ புஸ்தகம்.  எங்கள் கைக்கெட்டாமல் அலமாரியில்  உயரே மறைத்து வைத்திருப்பாள்.   அலமாரி மேல் ஏறி, அவள் இல்லாதபோது, புளி ஜாடி பின்னாலிருந்து  எடுத்து  அந்த புத்தகத்தின் பக்கங்களை மடக்கி அது 'படக்  படக்''   என்று ஓமப்பொடி  மாதிரி   ஒடிவதை பார்ப்பதில்   எனக்கு ஒரு சந்தோஷம். (சிறுவயதில் தப்பு செயது விட்டேன் அம்மா. என்னை மன்னித்து விடு) நிறைய பேர் வீடுகளில் இது போன்ற பழம் புத்தகங்கள் இன்னும் இருக்கிறது. சிலர்  அவற்றில் சிலவற்றை என்னிடம் தள்ளி விடுகிறார்கள்.  அவை இனி கிடைக்கதவை.  அவற்றைன் விஷயங்களை ஜாக்கிரதையாக போற்றி பாதுகாக்க வேண்டும்.
ஜெயதேவர் ஒரு ஒரிஸ்ஸா தேச பிராமணர். கல்வி கேள்விகளில் சிறந்து கிருஷ்ணனின் மீது அலாதி ப்ரியம் கொண்டு ராதையும் கிருஷ்ணனும் ஒருவர் மேல் மற்றொருவர் கொண்ட அதி உன்னத பிரேமையை அருமையான மனம் கவரும் ஸ்லோகங்களாக எழுதினார். அதுவே  ''கீத கோவிந்தம்''.ஒரு காரண்டீ விஷயம் சொல்கிறேன். அதைப் படித்து அனுபவித்தவர்கள் பிருந்தாவனத்தில் கண்ணன் இருந்த காலத்துக்கே கொண்டு  காசு கொடுக்காமல் பிரயாணம் செய்யலாம்.  அந்த ஸ்லோகங்கல் காந்த சக்தி கொண்டவை.

பூரியை  அப்போது சாத்விக்  என்கிற ராஜா  ஆண்டுவந்தான்.  பூரி ஜகன்னாதர் மீது அபார பக்தி.. அவன் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்தை படித்து விட்டு தானும் ஒரு புத்தகம் அதேபோல் எழுதினால் என்ன என்று யோசித்து கஷ்டப்பட்டு ஒரு புத்தகம் எழுதினான். அதற்கு நிறைய பிரதிகள் எடுத்தான். எல்லோரும் இதை படியுங்கள் என்று கொடுத்தான். ராஜாவின் புத்தகமாச்சே. படிக்காவிட்டால் தலையை வாங்கிவிடுவானே. எனவே தலையை காப்பாற்றிக்கொள்ள படிக்க  வேண்டும். ஊரில் இருந்த அனைத்து பக்திமான்களும் விசனம் அடைந்தார்கள். இது எப்படி கீத கோவிந்தத்துக்கு சமமாகும்? கழுதையும் குதிரையும் ஒன்றாகுமா?  வெளியே சொல்ல முடியுமா. தலை தப்பாதே.

ராஜாவோ விடாமல் தனது புத்தகத்திற்கு முதல் மரியாதையும் மதிப்பும் தேடினான்.   சாதாரண ஆள் நான் புத்தகம் எழுதி அதனால் உண்டாகும் தொந்தரவே படிக்கும் உங்களுக்கு பொறுக்க முடியவில்லையே. அதிகாரத்தையும் கூர்மையான வாளையும் கையில் வைத்துக்கொண்டு ராஜா புத்தகம் எழுதி, எல்லோரும் படியுங்கள் என்றால் .!  தாங்கமுடியாமல் போய் அனைத்து பண்டிதர்களும் பக்தர்களும் ஒருநாள் ராஜாவின் சபையில் நுழைந்தனர்.

'' ராஜா.  நீங்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் ஜெயதேவர் எழுதிய கீத கோவிந்தத்துடன் உங்கள் புத்தகம் போட்டி போட முடியாது..''என்று மெதுவாக சொன்னார்கள்.  அவர்களுடைய நல்ல நேரம். ராஜாவுக்கு கொஞ்சம் நல்ல புத்தி இருந்த வேளை அது.

"ஏன் நானும் தானே அந்த ஜகந்நாதனை பணிந்து புகழ்ந்து எழுதியுள்ளேன் எந்த விதத்தில் என் புத்தகம் கீத கோவிந்தத் துக்கு சமம் ஆகாது?" என்றான் சாத்விக். எல்லோரும் நிறைய பேசி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். ''இந்த விஷயத்தில் ஜகன்னாதனே முடிவெடுக்கட்டும்''

"ஜெகந்நாதா, நீயே முடிவு செய். ஜெயதேவர், ராஜா, ஆகிய ரெண்டு பேர் எழுதிய புத்தகங்களையும் உன் சந்நிதியில் இன்று இரவு வைத்து கர்ப்ப கிரகம் பூட்டி விடுகிறோம். நாளை காலையில் எந்த புத்தகம் உயர்ந்ததோ அது உள்ளே இருக்கும். மற்றதை ஜகந்நாதா,  நீயே கர்பக்கிரஹத்துக்கு வெளியே எறிந்து விடு" என்று வேண்டினார்கள். 
இரவு அவ்வாறே ஜெயதேவரின் கீதகோவிந்தமும் ராஜா எழுதிய புத்தகமும் ஜெகந்நாதன்  முன் வைக்கப்பட்டு,பூஜை எல்லாம் முடிந்து கர்பகிரகத்தை பூட்டினார்கள். 
மறுநாள் காலையில் ராஜா உட்பட அனைவரும் ஆவலாக கோவிலில் நின்றனர். கர்பக்ரஹத்தின் வாசலுக்கு வெளியே ராஜாவின் புத்தகம் கிடந்தது . பூட்டைத்  திறந்ததும் ஜகந்நாதன் கையில் கீதகோவிந்தம் இருந்தது. ராஜா சாத்விக் ஜெகந்நாதனிடம் முறையிட்டான்.

"ஜெகன்னாதா, நானும் உன் பக்தன். நானும் உன்னைத் தானே பாடினேன். எப்போது என் பக்தியை நீ ஏற்கவில்லை என்று தெரிந்துவிட்டதோ, நான் இனி உயிர் வாழ்ந்து பயனில்லை'' என்று தனது உடைவாளை உருவினான்.

''சாத்விக் , என்ன அவசரம் உனக்கு? நிதானமாக கேள். உன் பாடலில் எனக்கு பிடித்ததை ( 24 ஸ்லோகங்க ளை ) நான் ஏற்கனவே ஜெயதேவரின் கீத கோவிந்தத்தில் சேர்த்து விட்டேனே" என்று சிரித்தான் கிருஷ்ணன் . ராஜா மகிழ்ந்தான். ஜெயதேவரின் பெருமையை உணர்ந்து அடி பணிந்தான் அவருடைய சிஷ்யனானான்
பூரியில்  வசித்த  ஒரு பிராமணனுக்கு பத்மாவதி என்ற அழகிய பெண் இருந்தாள். பிராமணர்  ஜெகநாத பக்தர்.  தன் பெண் ஜெகந்நாதனையே  அடைய  வேண்டும் என்ற வெறி அவருக்கு.    எத்தனையோ பேர்  தந்த  ஜாதகங்களை  நிராகரித்தார் நிறைய பணம் கொடுக்கிறேன் என்று பெண் கேட்ட வர்களை  விரட்டினார்.
ஜெகந்நாதன்   ஒருநாள் அவர் கனவில் வந்து "ஓய், பிராமணரே இந்த கலியுகத்தில் எனக்கு விருப்பமான ஒருவருக்கு உமது பெண்ணை மணமுடியும்" என்று கட்டளையிட்டபோது  விழித்து கொண்டார். ஜெகந்நாதன் அடையாளம் சொன்ன  ஜெயதேவரைத்  தேடி கண்டுபிடித்தார்.பார்த்ததுமே ஒரு கணம்  ஜெகன்னாதானே  தனக்கு  முன் நிற்பதாக  தோன்றவே  யோசனை பண்ணாமல் ஜெயதேவருக்கு சம்பந்தம் பேசி பத்மாவதி ஜெயதேவர் மனைவியானாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...