Monday, January 31, 2022

SURDAS & TULSIDAS

 


துளசி தாசர் -   நங்கநல்லூர்  J K  SIVAN

2  துளசிதாஸும்   ஸூர் தாஸும் !
                                                                                                                           
சில கதைகள்,  சரித்திரங்கள் படிக்கும்போது  அதில் வரும்  பாத்திரங்கள், அவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள்,  பாத்திரங்கள்  நடந்து கொள்ளும் விதம், எல்லாமே  நமது மனதில் பதிந்து விடுகிறது. அதே கதையை  வேறு ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் இன்னொருவருடைய  அனுபவமாக படிக்கும்  போதோ, கேட்கும் போதோ, அடடே, இப்படியுமா?  என்று தோன்றி   எது சரியானது என்று கேள்விக்குறி  மண்டையில் நுழைகிறது.  ரெண்டு பேர் எங்கெங்கோ ஒரே மாதிரி அனுபவத்தை கொஞ்சமும் மாறாமல் பெற முடியாதே.  ஒரே சம்பவத்தை பலர்  பலவித ரூபங்களில் அல்லவோ வெளிப்படுத்துகிறார்கள்.  நமக்கு  அதனால் தான்  ராமாயணம் , மஹா பாரதம், பாகவதம்,  பக்த விஜயம்  போன்றவை எத்தனை முறை, யார் யார் வாய் கேட்பினும் அலுப்பு  தட்டுவதே இல்லை.  மேலும் மேலும் கேட்க  துடிக்கிறோம்.
   
பெண்ணின்பமே பேரின்பம் என வாழ்ந்து கொண்டிருந்தார் ஒருவர். ஒருநாள் இரவு வேளை...
மனைவியின் நினைவுடன் வீட்டுக்குச் செல்லும் போது பெருமழை பிடித்துக் கொண்டது. அதைப் பொருட்படுத்தாமல் வீடு நோக்கி நடந்தார். மனம் முழுவதும் அவளது நினைப்பு!  மழை காலம்.  வீட்டுக்குப் போக வேண்டுமானால், இடையிலுள்ள நதியை கடக்க வேண்டும். ஆற்றில் வெள்ளம் வந்ததால், ஓடக்காரன் வீட்டுக்கு போய் விட்டான். இவருக்கோ, எப்படியும் ஆற்றைக் கடந்து வீடு போய் சேர மனம் துடித்தது.  அந்த காலத்தில் எல்லோருக்குமே  நீச்சல் நன்றாக  தெரியும். 

ஆற்றில் பாய்ந்தார். ஏதோ ஒன்று கையில் சிக்கியது.  நல்லவேளை ஒரு மரக் கட்டை  கிடைத்ததே.  அதைப் பற்றிக் கொண்டு அக்கரை  போய்  சேர்ந்து விட்டார். வீடு இருளில் மூழ்கிக் கிடந்தது. விளக்கை அணைத்து விட்டு மனைவி உறங்கி விட்டாள் போலும்! மழையின் சப்தத்தில், அவர் கதவைத் தட்டிய ஒலி அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே மாடிக்கு ஏறுவதற்காக, மாடியில் இருந்து தொங்கிய கயிறைப் பிடித்து ஏறினார்.  ஒரு வழியாக மனைவி தூங்கும் அறைக்குள் நுழைந்தார். தொட்டு எழுப்பினார்.

திடுக்கிட்டு எழுந்த மனைவி, கணவன் அங்கே நிற்பது கண்டு, ""நீங்களா! இந்தக் கடும் மழையில் ஆற்றைக் கடந்து எப்படி வந்தீர்கள்? வீடு வேறு பூட்டியிருந்ததே!'' என்றாள்.
நடந்ததைச் சொன்ன கணவர், அவளது ஸ்பரிசத்திற்காக கடலையும் கடப்பேன் என்று மோக வெறியில் ஆசைமொழி பேசினார்.

மறுநாள் விடிந்தது.  மனைவி எழுந்தாள்.  மாடிப்படியில் தொங்கிய கயிறைப் பார்த்தாள், அது கயிறல்ல, பாம்பு என்பது தெரியவந்தது. அவரை அழைத்து வந்து காட்டினாள். ஆற்றுக்கு நீராட இருவரும் சென்றார்கள். கரையில் அவர் பிடித்து வந்த கட்டை கிடந்தது. அருகே சென்று பார்த்தபோது, அது கட்டை இல்லை, ஆற்றில் அடித்து வரப்பட்ட பிணம் என்று தெரிந்தது.

''பார்த்தீரா! அழியும் என் உடல் மீது கொண்ட ஆசையில் என்னவெல்லாம் செய்திருக்கிறீர் நீர்  என்று! இந்த உடல் தரும் சுகம் தற்காலிகமானது தான்.   இதன்  மீது பற்றுக் கொண்டிருப்பதை விட, ராமநாமத்தின் மீது பற்றுக் கொண்டால், என்றும் நிரந்தர சுகம் தரும் வைகுண்டமே கிடைக்கும்! பிணத்தையும், பாம்பையும் கட்டிக் கொண்டு சுகம் பெற வந்த உம் நிலையை நீரே ஆராய்ந்து பாரும்!'' என்றாள்.  அவருக்குள் ஏதோ பொறி தட்டியது.

''சே,   என்ன காரியம் செய்தேன். ஒரு பெண்ணுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டுமா? அவள் சொன்னது சரிதான்.  மனைவியென்றும் பாராமல் அவள் காலில் விழுந்தார்.
"நீயே என் குரு' என்றார். 
உடனேயே எழுதுகோலை எடுத்தார். ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்தார். "ஸ்ரீராமசரிதமானஸ்' என்று பெயர் சூட்டினார்.  அவர் தான் துளசி தாசர் என்று இப்போது அறிமுகப்படுத்துகிறேன்.   ஆனால் இதே கதை ஈயடிச்சான் காப்பியாக   ஏற்கனவே  படித்துவிட்டு உங்களுக்கும் சொல்லி இருக்கிறேன்.   பில்வ மங்கள்  என்ற  ஹரிதாஸ் ... அங்கே மனைவிக்கு பதிலாக  ஒரு  நாட்டிய மாது. பொதுமகள் . மற்றபடி பாம்பு, பிணம், இரவு, ஆற்றில் நீச்சல், பெண் மோகம் எல்லாம் டிட்டோ டிட்டோ டிட்டோ...
ஹும் .  அப்படிப்பட்ட வீர சாகச  ஆசாமி துளசிதாசர் என்றே  எடுத்துக்கொண்டு  மேலே தொடர்வோம்.  துளசிதாசர் எழுதிய அந்த நூல் தான் "துளசி ராமாயணம்' என  உலகம் இப்போது பாராயணம் செய்கிறோம் .

இப்போது நமக்கு  ஏற்கனவே அறிமுகமான இன்னொரு மஹானை பற்றி சொல்லியாகவேண்டும். அவர் பெயர் நீங்கள் அறிந்த  ஸூர்தாஸ். பிறவியிலே கண்பார்வை  அற்றவர்.  கண்ணற்ற குழந்தையை  குடும்பம் ஒதுக்கி வைத்தது.

ஒருநாள்  யாரோ தெருவில் கிருஷ்ண பஜனை பாடிக்  கொண்டு  சென்றது சிறுவன்  ஸூர்தாஸ் காதில் நுழைந்து  மனதுக்கு பிடித்தது.

சிறுவன் ஸூர் தாஸ் உரக்க குரல் கொடுத்தான்.
'ஐயா நீங்கள் யார்  இவ்வளவு நன்றாக பாடுகிறீர்கள்?  நீங்கள் பாடியது எனக்கு ரொம்ப பிடிக்கி
 றதே. யாரைப்  பற்றி இந்த பாட்டு  பாடுகிறீர்கள்  ?''
''அடே பையா, இது  பாட்டு இல்லை.   கிருஷ்ண பகவான்  மேலே  பஜனை?''
''யார் கிருஷ்ணன், அவனை பற்றி கொஞ்சம்  சொல்லுங்களேன்?''
பஜனை செய்தவர் இந்த  கண்ணற்ற சிறுவன் மேல் இரக்கத்தோடு  கிருஷ்ண சரித்திரம் சுருக்கமாக சொல்லக் கேட்டு  மனம் பரவசமாகிறது. 

''ஐயா. கிருஷ்ணன் எப்படி இருப்பான்?
''அவன் பால கிருஷ்ணன், குழந்தை, புல்லாங்குழல், பசுக்கள், பிருந்தாவனம், கோப கோபியர்கள், வெண்ணை திருடன், நீல வர்ணன், பீதாம்பர வஸ்திரம், யமுனை நதி விளையாட்டு, மயில்தோகை அணிந்தவன், என்றும் புண்ணை தவழும் முகம், அவன் இசையால் புவியே மயங்கும்'''  என்று அவனை வர்ணிக்கிறார்  பாகவதர்.  பிறகு  தெருவோடு  போய்விட்டார்.

அன்று முதல் ஸூர்தாஸ் மனதில்  கண்ணன் உறைந்தான். பாடல்களாகினான். எண்ணற்ற பக்தர்கள் கேட்டு மயங்கினார்கள், இன்றுவரை   நாமும் அந்த கூட்டத்தில் உண்டு.

ஆற்றங்கரையில் கண்ணனை தன்  மனதில் நினைத்து பாடினார். பக்தர்கள் அவர் பசியாற உணவு அளிக்க  ஆயிரக்கணக்கான பாடல்களாக  ஸூர் சாகரமாக  கிருஷ்ணன் மாறினான்.

SRI LALITHA SAHASRANAMAM

 ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN

ஸ்லோகங்கள்   167-168     நாமங்கள் 898-911

वीरगोष्ठीप्रिया वीरा नैष्कर्म्या नादरूपिणी ।
विज्ञानकलना कल्या विदग्धा बैन्दवासना ॥ १६७॥

 Viragoshtipriya vira naishkarmya nadarupini
vigynanakalana kalyavidagdha vhaindavasana – 167

வீரகோஷ்டீப்ரியா வீரா நைஷ்கர்ம்யா நாதரூபிணீ
விஜ்ஞாநகலநா கல்யா விதக்தா பைந்தவாஸநா 167

तत्त्वाधिका तत्त्वमयी तत्त्वमर्थ-स्वरूपिणी ।
सामगानप्रिया सौम्या सदाशिव-कुटुम्बिनी ॥ १६८॥

Tatvadhika tatvamaei tatvamardha svarupini
samagana priya saomya sadashiva kutunbini – 168

தத்வாதிகா தத்வமயி தத்வமர்த்த ஸ்வரூபிணீ
ஸாமகாநப்ரியா ஸௌம்யா ஸதாசிகுடும்பிநீ 168

*898* वीरगोष्टि-प्रिया   வீரகோஷ்டீப்ரியா  
அம்பாள் லலிதை  ஒரு வீரம்மாள்.  அதனால் தான் அவளைச்சுற்றி  ஒரு வீரர்கள் கோஷ்டி இருந்து கொண்டே இருக்கும். வீரர்கள் என்றால் கத்தி கபடா  தூக்கியவர்கள் இல்லை.  புலன்களை ஜெயித்தவர்கள். அதல்லவோ வீரம், வைராக்கியத்திலிருந்து வந்த வீரம்.  வீர மாதா அல்லவா?

*899*  वीरा   வீரா
லலிதாம்பாள் வீராங்கனை.  அவள் குடும்பமே  வீரர்கள் நிறைந்தது தானே.  கணவன் பரமசிவன் திரிபுரம் எரித்தவன்.  மகன் கணேசன்  சிவகணங்களுக்கு  தளபதி  கணபதி.   ஆறுமுகன்  சூரர்களை வென்ற  தேவ சேனாபதி.   அம்பாளே  பல ராக்ஷஸர்களை அழித்தவள்.   ராக்ஷஸன் என்பவன் ஏமாற்று பேர்வழி,   (கீதை  XVI.4) , அஹம்காரம் கொண்டவன்,  கர்வி , கோபி,  அறியாமையில் உழல்பவன், இரக்கமற்றவன்.இத்தகையக குணங்களை கொண்டவன்  ராக்ஷஸன் என்கிறது.

*900*     नैष्कर्म्या  நைஷ்கர்ம்யா
அம்பாள் கர்மா தன்னை  அணுகாதவள்.  அழியக்கூடிய ஜீவர்களுக்கு தான் கர்மா. கர்மாவை  உணர்த்தியவளே அம்பாள்.  ப்ரம்மத்துக்கு கர்மம் சம்பந்தமே இல்லாதது. கிருஷ்ணன்  கீதையில்  (V.10) எவன்  தன் செயல்கள் எண்ணங்களை  ப்ரம்மத்திடம் அர்பணித்துவிட்டவனோ, அவனை   மாயை,  பற்று, பாபங்கள் எதுவும்  அணுகாது'' என்கிறான்

*901*   नाद-रूपिणी நாதரூபிணீ
ஸப்த (ஒலி )சுஷும்னா நாடியில் குண்டலினி பிரவேசிக்கும்போது உண்டாவது தான்  ஓம் எனும் பிரணவ சப்தம். நாதம்.  வள்ளலார் அருட் ஜோதி  தெய்வத்தை ''நாதாந்த''தெய்வம் என்பாரே   அது இது தான்.  அருணகிரி நாதர் சொல்லும்   ''நாத பிந்து  கலா''  வும் இதுவே.

*902*   विज्ञान-कलना    விஜ்ஞாநகலநா
விஞ்ஞானம் என்றால்  நாம்  புரிந்து கொள்ளும்   சயின்ஸ் பாடம்  அல்ல.  பிரம்மத்தை அறிந்து கொள்ளும்  ஞானம்.  அறிவு.   கலனா   என்றால் அறியும்,    காரணமாகும்  செயல் பாடு.  *727* வது  நாமத்தில்  சிவஞான ப்ரதாயினி என்று வந்ததல்லவா. அம்பாள்  ஞான காரணி .  ஞானதா. 
அவளே  மிக உயர்ந்த  பிரம்மத்தை அறியும் ஞானத்தை தருபவள்.அதுவே  ஆனவள்.  வித்யை எனப்படுவது 14 வகை.   நான்கு வேதங்கள்,  ஆறு வேதாங்கங்கள் (சிக்ஷா, சந்தஸ், வ்யாகரணம், ந்ருக்தம் , ஜ்யோதிஷம், கல்பம்)  மீமாம்சம், நியாயம்,  புராணம்  போன்றவை..இதெல்லாம்  அறிவது தான் விஞ்ஞானம். போதுமா?

*903*  कल्या கல்யா
கல்யா  எத்தனையோ  விஷயங்களை குறிக்கும்  சுப  வார்த்தை.   புண்யமானது, ஆரோக்கியமானது, நேர்மை நியாயமானது, பரிசுத்தமானது, தயாரான  நிலையில் இருப்பது,   பிறருக்கு அறிவை புகட்டுவது, விடியற்காலை,  சகல கலா வல்லி அம்பாள். 

*904*   विदग्धा  விதக்தா
அம்பாள் அதி புத்திசாலி.   இல்லாவிட்டால்  அவளால்  ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம்  எனும் முத்தொழில்களை   வெற்றிகரமாக  நடத்த முடியுமா? 

*905*  बैन्दवासना   பைந்தவாஸநா
பிந்து என்ற நுண்ணிய  வஸ்துவை  ஆசனமாக, பீடமாக,  கொண்டவள் அம்பாள்.  ஸ்ரீ சக்ரத்தின் மத்திய பாகம் பிந்து.  த்ரிகோண மத்யம் எனும் புள்ளி அது தான்.  சர்வானந்த  மய  சக்ரம். பைந்தவஸ்தானம்  என்றும் அதற்கு பெயர்.   நவாவரணத்தில்  ஒன்பதாவது  ஆவரணத்தில் உள்ளது.
இங்கே  வீற்றிருக்கும் அம்பிகையை  தான் மஹா திரிபுர சுந்தரி என்றும் வணங்குவது.

*906*  तत्त्वादिका   தத்வாதிகா
தத்வங்கள்   பொதுவாக  24  அல்லது  36 எனப்படும்.  அம்பாள் அதற்கு அப்பாற்பட்டவள் .  

*907*   तत्त्वमयी   தத்வமயி
தத்வங்களின்  சாரம் அம்பாள் எனலாம்.  ஆத்மஞான எல்லைக்கு எல்லை.  தத்துவத்தை அறிவது தர்சனம் எனப்படும்.   தத்துவங்களை பாஹ்ய காரணம் என்பார்கள்.  பஞ்சபூதங்களின் ஆதி காரணம். பஞ்ச  பூதங்களிலிருந்து  24 காரணங்கள்  தோற்றம்.  இதில் அந்தக்கரணம் 4 தத்துவங்களும் சேர்ந்தது தான்.  இதோடு  6  தத்துவங்கள் ஆத்ம தத்வம்.  இன்னொரு ஆறு  வித்யா தத்வம். மொத்தம் 36 ஆகிறது அல்லவா?  அம்பாள்  இதெல்லாவற்றின் ஒட்டுமொத்தம்,. அதற்கப்பாலும் கூட. 

*908*  तत्त्वमर्थ-स्वरूपिणी   தத்வமர்த்த ஸ்வரூபிணீ
''தத்''  என்பது ப்ரம்மத்தை .  ''த்வம்''  என்பது ஆத்மாவை. இந்த ரெண்டையும் அறிவது தான் ஆத்மஞான தத்வம்.   அம்பாள் தான்  உபநிஷத் மஹா வாக்கியத்தில் வரும்  ''தத் த்வம்  அஸி''     நீதான் அது  என்பது.  பெரியதில் மஹா பெரியது. சின்னதில்  எல்லாவற்றிலும் நுண்ணிய அணு தான் அம்பாள் ஸ்ரீ லலிதை.

*909*  सामगान-प्रिया  ஸாமகானப்ரியா
சாமம் என்றால் சாம வேதம். அதற்கென்று ஒரு  தனி சந்தஸ், ராகம் உண்டு. அதை சாமகானம் என்பார்கள்.  பரமேஸ்வரனைப் போலவே  அம்பாளும்  அதை விரும்பி கேட்பவள்.    சாம கானத்தை வாசித்து தான்  ராவணன்  சிவன் அருளால், வரத்தால், ராவணேஸ்வரன் ஆனான்.  வால்மீகி  ராமாயண உத்தர காண்ட  ஸ்லோகம்  (
XVI.34): “தஸானனன்  சிவனை சாம வேத  ஸ்லோகங்களைப் பாடி  வரங்கள்  பெற்றான்''  என்கிறது.  கிருஷ்ணனும் கீதையில்   (X.22) “ வேதங்களில் நான் சாமவேதம்'' என்கிறான்.

*910*  सोम्या ஸௌம்யா
சோமன் என்றால் சிவன்.  உமாவுடன் சேர்ந்தவன் என்று ஒரு பொருள்.   சோமன் என்றால் சந்திரன்அவனை  சைகையில் சூடிய பிறை சூடி தான் சோமசேகரன்.  சோமநாதன். அம்பாள் தான் சிவஸ்வரூபம்.  அவளை ஸௌம்யா என்று  வணங்குகிறோம். 

*911*  सदाशिव-कुटुम्बिनी  ஸதாசிவ குடும்பினி
சதாசிவன்  தேவி அல்லவா?  அவளை சதாசிவ குடும்பஸ்திரீ என்று சொல்லாமல் எப்படி அடையாளம் காட்டுவது?   சதாசிவம் என்பது அதி உன்னத  தத்வம்.   பிரபஞ்சத்தை தன்னுடைய  அங்கமாக  உணர்வது.  ஆத்ம   ஸ்வரூபமாக எதையும்  நோக்குவது.   ஆத்ம ஞானம் பெறுவதில்  ஐந்து  விஷயங்கள்  மூல ஸ்தானங்கள்.  சுத்த வித்யை,  ஈஸ்வரன்,  சதாசிவன்,  சக்தி, சிவம்.

சக்தி பீடம்:   ஜ்வாலாமுகி   ஆலயம்.  

பாரத தேசத்தின்   ஹிமாசலப் பிரதேசத்தில் காங்ரா என்று ஒரு ஜில்லா. கிராமத்தின் பெயரும்  காங்க்ரா. தரம்சாலாவிலிருந்து  55 கி.மீ. தூரம்.  இமயமலை  அடிவாரத்தில்  உள்ளது இந்த  புகழ் பெற்ற ஜ்வாலாமுகி அம்மன் கோயில். 51 சக்தி பீடங்களில்  ஜ்வாலாமுகியும் ஒன்று மட்டுமல்ல. இதுவே  நவ சக்தி பீடங்களிலும்  ஒன்றாகவும் கருதப்படுகிறது.   கடல் மட்டத்திலிருந்து 2,001 அடி உயரத்தில் அமைந்ததாக  சொல்கிறார்கள். இங்குள்ள பாறைகளிலிருந்து நெருப்பு உமிழ்ந்து கொண்டே உள்ளது. இங்கு உமிழும் நெருப்பே ஜுவாலாமுகி தேவியின் உருவமாகவும், கருவறையாகவும் பூஜிக்கப்படுகிறது.  சதி தேவியின் நாக்கு விழுந்த ஸ்தலமாக  நம்புகிறார்கள்.
இங்கே தேவி அக்னி ஸ்வரூபம்.  பாறைகளுக்கு நடுவே, ஆங்காங்கு, 11  இடத்தில்  விடாது அக்னி. ஜ்வாலை  விட்டு  எரிகிறது.   ஒவ்வொரு ஜ்வாலைக்கும் ஒரு பெயர்.  மஹாகாளி, அன்னபூர்ணி, சண்டிதேவி, சரஸ்வதி, துர்க்கா தேவி, லக்ஷ்மி என  உபாசித்து  வழிபடுகிறார்கள். 
 பாறைகளுக்கு வெளியே வெள்ளியில் கவசம் போட்டு   அதனுள் நீல வர்ணத்தில்  எரிந்து கொண்டிருப்பது  தான்    ஜ்வாலா முகி  அம்மன். மஹாகாளியின் ரூபம். அதன் கீழே ஜோதிஸ்வரூபமாய் அன்னபூர்ணி. பக்கத்தில் இன்னொரு ஜ்வாலா, சண்டி தேவி. பக்கத்தில் மா ஹிங்க்லாஜ் தேவி [சர்வ வ்யாதிகளுக்கும் நிவாரணம் தருபவள்], விந்த்யாவாசினி, மஹாலக்ஷ்மி, சரஸ்வதி, நவதுர்க்கா என ஒவ்வொரு ஜ்வாலையிலும் தேவி ப்ரத்யக்ஷமாக குடியிருப்பதாக ஐதீகம்.
எல்லா தேவிகளுமே ஜோதி ரூபமாக இங்கே  அருள்பாலிக்கிறார்கள்.  பாறைகளுக்கு நடுவிலிருந்து எப்படி  அக்னி?  எங்கேயிருந்து பல வருஷங்களாக அணையாமல்  ஜ்வாலை வருகிறது?  என்ன காரணம்?   இதற்கெல்லாம் விஞ்ஞானம் இன்னும் பதில் சொல்லவில்லை.

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜுவாலாமுகி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 5,361 ஆகும். அதில் 2,782 ஆண்கள் ஆகவும்; 2,579 பெண்கள் ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 559 (10.43%) ஆக உள்ளனர். சராசரி எழுத்தறிவு 92.19% ஆக உள்ளது. அதில் ஆண்களின் எழுத்தறிவு 94.33% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.94%. ஆகவும் உள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 927 பெண்கள் வீதம் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இந்துக்கள் 95.24% ஆகவும்; இசுலாமியர்கள் 3.71% ஆகவும்; சீக்கியர்கள் 0.86% ஆகவும்; பௌத்தர்கள் 0.09% ஆகவும்; சமயம் குறிப்பிடாதவர்கள் 0.09% ஆகவும் உள்ளனர்.  இந்த கணக்கெல்லாம் நம்மை  பகவதி   அம்பாளிடமிருந்து தேவையில்லாத விஷயங்களில் கவனத்தை கொண்டு சேர்க்குமென்பதால் மேற்கொண்டு இது மாதிரி தகவலை சேகரிக்க மனம் இடம் கொடுக்கவில்லை.

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களிலும் நவராத்திரி விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.


Sunday, January 30, 2022

WHERE IS THE OTHER BANGLE

 ரை தாஸ்  -  நங்கநல்லூர் J K   SIVAN 


எங்கே இன்னொன்று?

ब्राह्मण मत पुजिये जो होवे गुणहीन !
पुजिये चरण चंडाल के जो होने गुण प्रवीण !!

 தனது  செய்கையால், குணத்தால்,  சொல்லால்,  மனதால், அனுப்பு செலுத்தி பொதுநலம் கருதி சேவை செய்பவன், சுயநலமில்லாமல் உழைப்பவன்  தான் உயர்ந்தவன்.  
ஜாதியால்,  குடும்பத்தால்   எவனும் சுலபத்தில்  கீர்த்தி பெற முடியாது. உயர்குலத்தில் பிறந்தவன் என்று சொல்லிக்கொண்டாலும் நல்லவனாக இல்லாதவன்  மதிக்கப் படமாட்டான்.  தாழ்ந்த, இழி குலத்தவன் என்று பிறர்  தூற்றியபோதும்  மேற்கண்ட நற் குணங்கள் உடையவனே  சிறந்தவன், உயர்ந்தவன்.  ஒளவையார்   சொன்ன ''சாதி இரண்டொழிய  வேறில்லை, .. இட்டாதார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்''  சமாச்சாரத்தை தான் ரை தாஸ் ஹிந்தியில்  ஒளவையைத் தெரியா மலேயே, தமிழ் அறியாமலேயே  சொல்கிறார்.

कह रैदास तेरी भगति दूरि है , भाग बड़े सो पावे !
तजि अभिमान मेटी आपा पर , पिपिलक हवे चुनि खावै !!

தம்பி,  பகவானிடம் பக்தி என்பது எல்லோருக்கும் கிடைக்கும்  அருமையான  வாய்ப்பு இல்லை யப்பா.  அவனருளால் தான் அவன் தாள் வணங்க முடியும். அதிர்ஷ்டம் வேண்டும் அதற்கு. கொஞ்சம் கூட கர்வம் இல்லாதவன், அகம்பாவம் இல்லாதவன், எளிமையானவன் இந்த அதிர்ஷ்டம் பெற     வாய்ப்புண்டு.   ஒரு பெரிய பலம் மிகுந்த  யானையாக இருந்தாலும்  தரையில் சிந்தியிருக்கும்  சர்க்கரை தூள்களை முழுதுமாக அள்ளவோ , எடுக்கவோ முடியாது.  ஆனால் ஒரு குட்டியூண்டு  எறும்பு  லாகவமாக சர்க்கரை தூள்களை  மூக்கிலும்  முதுகிலுமாக   பொறுக்கி எடுத்து, சுமந்து தூக்கிக்கொண்டு போய்விடும்.

जा देखे घिन उपजे , नरक कुंड में बांस !
प्रेम भगति सो उधरे  , प्रगटत जन रैदास !!

''என்னை எடுத்துக்கொள்ளுங்கள், இந்த ரவி தாஸ் என்கிற ரை தாஸ்,  நான்  பக்தியற்றவனாக இருந்தபோது,  என் வீடு  நரகத்தைகாட்டிலும் மோசமானது என்று எவரும்  என்னை நெருங்குவ தில்லை,   என் வீட்டுப்பக்கம் கூட யாரும்   திரும்புவதில்லை,  கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணன் மேல் பக்திகொண்டு ஒரு க்ரிஷ்ணப்ரியனாக   நான்  மாறியதும் அடேயப்பா நான்  புத்துயிர் பெற்றவனாக, புதுப்பிறவி எடுத்தவனாக மாறி விட்டேனோ?  எல்லோரும் என்னை அவனைத் தேடுகிறார்கள், அவன் வீட்டை மொய்க்கிறார்களே!  இதற்கு அவனா காரணம்?  கிருஷ்ணன் மேல் பக்தி அல்லவோ?

मन चंगा तो कठौती में गंगा !

ஒரு செருப்பு தைப்பவன்  கதை ஏற்கனவே எழுதி இருக்கிறேனே  ஞாபகம் இருக்கிறதா?  அந்த மனிதனின் பக்தியை பற்றி இந்த  ஒரு வரிப்பாடலில்  ரை  தாஸ் சொல்கிறார்:
''எவன் மனது பரிசுத்தமானதோ, அவன் அழைத்தால்  கங்காதேவி  ஓடோடி  அவனிடம் வந்துவிடுவாள்.  அவன் வைத்திருக்கும்  செருப்பு நனைக்கும்  பாத்திரத்திலும் நிரம்பியிருப்பாள்''
அந்த  செருப்பு தைப்பவர் கதை மீண்டும் இதோ சொல்கிறேன்:

''இன்னொன்றையும்  கொண்டு  வா  J K SIVAN''

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன்.  தினமும் கங்கா மாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி.   அவன் தண்ணீரைத்  தொட்டால் தீட்டு பட்டு  விடுமாம். அடித்தே கொன்று  விடுவார்கள் . அப்படி ஒரு காலம் அப்போது.   சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில்.

ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ''எவ்வளவு பாக்கியசாலி அவர்'' என்று அவரை தூர இருந்தே இரு கரம் கூப்பி கிழவன்  கும்பிடுவான்.   அவனைப் பார்த்தாலே தூர நகர்வார் அவர். 

ஒருநாள்  பண்டிதருடைய  செருப்பு  காது அறுந்து விட்டது.   தூரத்திலிருந்து அதை அந்த கிழவன் அருகே  தூக்கிப்போட்டு  ரிப்பேர் செய்ய உரக்க கத்தினார்.  அவனும் அதை நன்றாக தைத்து  ரிப்பேர் செய்து கொடுத்தான். அவனருகே ஒரு அணா காசு விட்டெறிந் தார். அருகே வந்து தர  முடியாதே.  கிழவன் பண்டிதரை வணங்கி
''சுவாமி நான் உங்களிடம் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்யம்''.

''அப்படி இல்லை  யப்பா,  உன் காசு எனக்கு வேண்டாம்.  இலவசமாக  எனக்கு எதுவும் நீ செய்ய வேண்டாம்.   உனது  இலவச  சேவையை நான் ஏற்க முடியாது'' -  பண்டிதர்.

''ஐயா, இந்த ஏழைக்கு ஒரு  பதில் உதவியாக  ஒன்றை   நீங்கள் செய்வீர்களா? இதோ இந்த கங்கா  மாதாவை அனு தினமும்  தூர இருந்தே  வணங்குகிறேன்.   என்னால்  அருகே செல்லமுடியாது.   ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அந்த ஓரணா காசை  என் சார்பாக  அவளிடம்  சேர்ப்பீர்களா,   என்  காணிக்கையாக  செலுத்துவீர்களா?''

''என்ன சொல்கிறாய் நீ.   இந்த ஓரணாவை கங்கையில் நீ அளித்ததாக சொல்லி   நான்  ஜலத்தில்  தூக்கி  எறிய வேண்டும் அவ்வளவு தானே? சரி''  

பண்டிதர் கங்கையில் இறங்கி வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார்.  ''அம்மா கங்கா தேவி, இந்த ஓரணா காசு  உன் கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் கிழவன் உன்னிடம் சமர்ப்பிக்கச் சொன்னது. ஏற்றுக்கொள்''  என்று சொல்லி அந்த  ஓரணா காசை வீசி கங்கையில்  எறிந்தார். 
 என்ன ஆச்சர்யம் நுங்கும் நுரையுமாக ப்ரவாஹமாக ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து கண்ணைப்பறிக்கும்  வைர வைடூர்ய  ஆபரணங்கள் அணிந்த  ஒரு பெண்ணின்  அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கா மாதாவின்  முகம்  நீரின் மேல் தோன்றியது.  பேசியது.
''பண்டிதரே, எனக்கு மிக்க மகிழ்ச்சி, இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த கிழவரிடம் கொடுங்கள்''  
கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர, நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலைக்  கொடுத்தாள். பண்டிதன் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான்.அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டான்.   கரை ஏறியவன்  கிழவனிடம் ஒன்றுமே அது பற்றி சொல்லவில்லை. வீட்டிற்கு போய் மனைவியிடம்  

 ''கமலா, இதோ பார்த்தாயா, நான் எதற்குமே பிரயோஜனம் இல்லை, ஏட்டுச் சுரைக்காய், தேங்காய் மூடி பாகவதர் ''  என்று என்னை கரித்துக்  கொட்டுவாயே  இன்று என்ன நடந்தது தெரியுமா உனக்கு?''

''என்ன பெரிதாக சாதித்து விட்டீர்கள்? உங்களைப்  போல் உதவாக்கரைகளுடன் பேசிவிட்டு தேங்காய் மூடி  ஒன்றை  வாங்கி கொண்டு வந்திருப்பீர்கள். சீக்கிரம் கொடுங்கள்.  நமக்கு வழக்கமாக  தேங்காய் துவையகள், தேங்காய் பொடி , தேங்காய் துருவல் தானே  ஆகாரம் , இன்றைய பொழுது துவையலிலாவது கழியட்டும். ''

''அசடே,   அவசர குடுக்கை,  இதைப் பார். என் வேதத்தை மதித்து கவுரவித்து அதால்   நான் பெற்ற பரிசு. உனக்காக நான் சம்பாதித்தது'' 
கங்காதேவி தந்த வளையலை  அவளிடம்  தந்தான் பண்டிதன். கமலாவுக்கு தன்னையோ, தன் கண்களையோ நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது.
''என்ன ஒருவளையல் தானா? இன்னொன்று எங்கே வழியில் தொலைத்து விட்டீர்களா?  அதை  ஜாக்கிரதையாகக் கொண்டு வர கூட  யோக்கியதை இல்லையா?
''அப்படி எல்லாம் இல்லை, ஒன்று தான் கிடைத்தது. அடுத்த முறை கங்கையை கேட்டு வாங்கி தருகிறேன்'' -  சமாளித்தான் பண்டிதன்.
''இந்த ஒன்று எதற்கும் உதவாதே . நாமோ ஏழைகள். திருடர்கள் கொள்ளையர்களுக்கு  இவ்வளவு விலை உயர்ந்த வஸ்து நிமிடம் இருப்பது தெரிந்தால்  நமது உயிர் போனாலும் போகலாம் . இதோ பாருங்கோ, இந்த ஒண்ணை வச்சிண்டு  என்ன பிரயோஜனம்? அடுத்த வேளை சாப்பாட் டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை   வைர வளையலை  கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் ஊரில்  எல்லாரும் சிரிப்பார்கள். பேசாமல் இதை  நம்மூர் ராஜாவிடம் கொடுத்து விட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்ச காலம் நிம்மதியாக சௌகர்யமாக  பசியில்லாமல்  வித காய்கறிகள் வாங்கி சமைத்து சாப்பிடலாம் தேங்காய்க்கு முழுக்கு போடுவோம்.''

பண்டிதன் ராஜாவிடம் சென்று  வளையலைக் கொடுத்த போது  ராஜா வாங்கி பார்த்து மகிழ்ந்தான். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தான். ராணியிடம் ஆசையோடு அந்த வளையலைக்  கொடுத்தான்.  பரம சந்தோஷம் அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு பொறி தட்டியது.  இன்னொரு வளையல் எங்கே?.   ராஜா விடம்  கேட்டாள் . ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதனை அழைத்து வரச் செய்தான்.
''ஹே, ப்ராமணா. இன்னொரு வளையல் எங்கே? ஏன் அதை தரவில்லை? வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடு. ராணி கேட்கிறாள்''
பிராமணன் தயங்குவதைப்  பார்த்த ராஜாவுக்கு கோபம் வந்தது.''என்ன விளையாடுகிறாயா என்னிடம். இன்னும் ரெண்டு மணி  நேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் தலை  உனதல்ல .ஜாக்கிரதை ''  அதில்லாமல் நான் ராணியைப் பார்க்க முடியாது. போ சீக்ரம்''

ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்தது.  தலை தப்ப ஓடினான். எங்கே? கங்கைக்கரைக்கு.
அந்த கிழவன் வழக்கம் போல் அதிகாலையில் கங்கைக் கரைக்கு தூர நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கிவிட்டு  அவன் அருகிலே தேங்கி நின்ற மழை  நீரில் கொஞ்சம் எடுத்து தலையில் ப்ரோக்ஷணம் பண்ணிக்கொண்டான். அது தான் அவனுக்கு கங்காஜலம். செருப்பு தைக்க தேவையான ஜலத்தை ஒரு   தோல்  குடுவையில் வைத்துக்கொண்டு அமர்ந்தான்.
திடீரென்று தன் முன்னே பண்டிதன் ஓடிவந்து நின்றதும் வணங்குவதும் அவனுக்கு ஏதோ ஒரு அதிர்ச்சியை தந்தது.
''சாமி,  நீங்க என்ன செய்றீங்க?  என் கிட்ட வந்து நிக்கறீங்க.  என்னை வணங்குறீங்க. என்ன ஆச்சு உங்களுக்கு? நான் தானே உங்களை எப்போவும் வணங்கறது?''

''என்னை மன்னிச்சுடுப்பா. நான் துரோகி. கங்கா மாதா உனக்கு கொடுத்த பரிசை திருடி வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனவன் அதை வித்து ராஜாகிட்ட நிறைய பணம் வாங்கினேன். இப்போ என் உயிரே காற்றிலே ஊசல் ஆடுது'' . 
நடந்த   விஷயத்தை சொன்னான் பண்டிதன்.
''ஆஹா அப்படியா. நமக்கு யார் உதவி செய்வாங்க இப்போ? எப்படி இன்னொரு வளையல் கிடைக்கும்? கங்கா  மாதாவையே கெஞ்சி  கேட்போம்''

கிழவன் கண்ணை மூடினான். தனக்கு எதிரே இருந்த அழுக்கு   தோல் பாத்திரத்தில்  செருப்பு தோல் நனைத்து  தைக்க  வைத்திருந்த  அழுக்கு படிந்த  மழை நீரை வேண்டினான்.
''அம்மா,  கங்கா,  நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா. அவர் பிழைக்கட்டும்'' என்று தனது கையை அந்த ஜலத்தில் விட்டான்.  மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த   அதே மாதிரி டிசைன் கொண்ட  இன்னொரு வளையல் அந்த கிழவனின் அழுக்கு பாத்திரத்திலிருந்து அவன் கையில் கிடைத்தது. 
அப்புறம் என்ன நடந்தது என்றா கேட்கிறீர்கள்?
பண்டிதன் ராஜாவிடம் அதை எடுத்துப்  போகவில்லை.  கமலாவைத் தேடி  வீட்டுக்கும் போகவில்லை. தனது தலை, உயிரைப் பற்றியும் கவலைப் படவில்லை. வீடு, கமலா ராஜா  வளையல்   எல்லாவற் றையும் மறந்தானா , துறந்தானா எதுவோ ஒன்று.   
தொடாமல் இத்தனை  காலம்  தூரவே  நின்று கொண்டிருந்த  அந்த  கிழவனின் கால்களை கெட்டியாகப்  பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தான். விஷயம் பரவியது. ராஜாவும் அவன் மனைவியும் ஓடி வந்தார்கள். கிழவனை வணங்கினார்கள். அரண்மனைக்கு கூப்பிட்டார்கள்.
''இங்கே  உட்கார்ந்து  என் கங்காமாதா தரிசனம்  செய்யறது ஒன்றே போதும் ''.   
எல்லோரையும்  வணங்கி  அனுப்பி விட்டு  மீண்டும் செருப்பு   தைப்பதில்  மும்முரமானான்  கிழவன்

PESUM DHEIVAM



 பேசும் தெய்வம்  -   நங்கநல்லூர்   J K   SIVAN


10   காசியில் நேரமே  போதவில்லை.

நமக்கு தெரியாததால்  சரித்திரத்தில்  மிக முக்கியமான ஒரு சம்பவம் மறைந்து போய்விடாது.  மஹா பெரியவாளின்  முதல் காசி  விஜயம்  அப்படி பெருமை வாய்ந்தது.  நேரில் கண்டு அனுபவித்தார்கள் இப்போது ஒரு சிலர் மட்டுமே  இருக்கலாம்.  

காசியில்  சங்க வேத வித்யாலயா  என்ற  ஒரு வேத பாடசாலை  ராம்காட் டில் இருந்தது.  காசியை அடைந்த அன்று  இரவே மஹா பெரியவா  அதற்கு விஜயம் செய்தார்.   அதன் தலைவர்  மஹா பெரியவாளை அழைத்து பாத பூஜை  செய்து மகிழ்ந்தார்.   தவிர  காஞ்சி பெரியவாளிடம்  அந்த பள்ளியின் சார்பாக   501 ரூபாய் காணிக்கை அளித்தார்.  88 வருஷங்களுக்கு முன்பு  501 ரூபாய் என்பது ஐந்து லக்ஷத்துக்கு சமானம்  என்று தான் தோன்றுகிறது.  

ஒரு சின்ன டயரி மாதிரி காசியில் தொடர்ந்து மஹா பெரியவா  பங்கேற்ற  சம்பவங்கள் நிகழ்ச்சிகள் பற்றி சொல்கிறேன்:  பக்தர்களுக்கு படிக்க ஸ்வராஸ்யமாக இருக்கும் 
அல்லவா?

1934  அக்டோபர்  7ம் தேதி 
காசியில் சாரத நவராத்ரி ஆரம்பமாயிற்று. மணிகர்ணிகா கட்டத்தில்  மஹா பெரியவா ஸ்னானம் செய்து விட்டு சந்திரமௌலீஸ்வரர் பூஜையை  காசி விஸ்வநாதர்  ஆலயத்தில் துவங்கினார்.   ஹனுமான் காட் எனுமிடத்திற்கு  அருகே  காஞ்சி  சங்கரமடம் ஒன்று உள்ளது. அதில் ஆதி சங்கரர் விக்ரஹம்   பிரதிஷ்டை பண்ணி இருக்கிறது. அங்கே  சென்று ஆதி சங்கரரை  தரிசனம் செய்தார்.   
அக்டோபர்  8ம் தேதி.
இன்று  சாரதா மடம் , மற்றும் பஞ்ச கங்கா மடத்திலும்  பூஜைகளை ஏற்றார் . கேதாரேஸ்வரர் ஆலயம்,  மற்றும்  பிந்து  மாதவர் ஆலயம்  இரண்டுக்கும்  சென்று தரிசனம் செய்து மகிழ்ந்தார்.   

 அக்டோபர்  9ம் தேதி 
நவராத்ரி பூஜை ஆரம்பமாயிற்று.    மஹா பெரியவா  தங்கியிருந்த  மாதவ ராம்  சாந்த்   வீட்டிலேயே  நவராத்ரி பூஜைகளை ஆரம்பித்தார்.  ரிக்வேத  ஸம்ஹிதா  ஹோமம், ஸ்ரீ வித்யா ஹோமம்,  சண்டி  ஹோமம்,  மஹா ருத்ர ஹோமம்,  சகலமும் சாஸ்த்ரோக்தமாக நடந்தது.   நான்கு வேதங்களும்.   உபநிஷத்துக்களும், துர்கா சப்தசதியும்    பாராயணம் பண்ணினார்கள். இதைப்போன்ற  ரொம்ப விமரிசையான  நவராத்ரி வைபவம்  அந்த ஊரில் அதுவரை யாரும் பார்த்ததில்லை. 

அக்டோபர்  16ம் தேதி.
இன்று  சரஸ்வதி பூஜையோடு கன்யா பூஜை  மஹாநவமி அன்று  நடை பெற்றது.  கன்யா பெண்  குழந்தைகள் நிறைய பேர், திருமணமான  ஸ்த்ரீகள் அனைவருமே  பங்கேற்றார்கள்.  எல்லோருக்கும்   போஜனம் ,  வஸ்திரம் , ஸ்வர்ண  தானம் செய்யப்பட்டது.  ஹோமங்கள்
 பூர்த்தியாகி, பூர்ணாஹுதி  நிறைவேறியது.   காசி மஹாராஜா மற்றும் உயர்  அதிகாரிகள் முக்கிய மனிதர்கள் அனைவருமே  வந்திருந்து  தரிசனம்  பெறறார்கள். அன்று  காசி விஸ்வநாதருக்கு விசேஷ  அபிஷேகம் ஏற்பாடாகி இருந்தது.

அக்டோபர்  17ம் தேதி 
 விஜயதசமி.  கங்கையில்  மஹா பெரியவா   யாகத்தின் முடிவில் செய்யும்  அவப்ருத ஸ்னானம் செய்தார்.   வேத உபநிஷத்  சாஸ்த்ர  பாராயணங்களை   ஹோமங்கள் நடந்த போது  நிகழ்த்தி   அவற்றில் பங்கேற்ற ப்ராமண வேத பண்டிதர்களுக்கு தானம் சன்மானம் எல்லாம்  வழங்கினார்.   ஆயிரக்கணக்கான பக்தர்கள்  மஹா பெரியவா தரிசனம் செய்து மகிழ்ந்தார்கள். நமக்கு அத்தகைய  பாக்யம் கிட்டாததால்  அவர்களை நினைத்து வணங்கினால் போதும்.

மொத்தம்  ஏழு  மோக்ஷபுரிகள் நமது பாரத தேசத்தில் இருப்பவை.  அதில் பிரதானமானது  காசி க்ஷேத்திரம். காசியில்  இறந்தவனுக்கு மறுபிறவி கிடையாது என்று ஐதீகம்.  காசியில்  கங்கையில் ஸ்நானம் செய்ய சில  படித்துறைகள் இருக்கின்றன.   அங்கு தான் எல்லோரும்  சென்று ஸ்னானம் செயகிறார்கள். அவை  பஞ்சகங்கா காட்,   மணிகர்ணிகா காட்,   அஸி  காட்,  தஸாஸ்வமேதா காட். பத்து  அஸ்வமேத யாகம் பண்ணின புண்யம் இங்கே ஸ்னானம் செய்தால் கிடைக்கும்  என்று பெயர் கொண்டது.  வாராண சங்கம காட்  ஆகியவை. காசி யில்    தரிசனம் செய்ய  காசி விஸ்வநாதர் ஆலயத்தோடு, விசாலாக்ஷி ஆலயம், அன்னபூரணி ஆலயம்,  தந்தி  ஆலயம்  எல்லாம் வேறு இருக்கிறது.
கங்கை நதியின்   அக்கரையில் உள்ள  தக்ஷிணாமுர்த்தி மடத்துக்கு  செல்ல  படகில் கங்கையைக் கடந்தார்.  தரிசனம் செய்து விட்டு அங்கே  பக்தர்கள்  வேண்டிக்கொண்டு  செய்த பாதபூஜையை ஏற்றார்.  
அக்டோபர்  19ம் தேதி,  
தர்பங்கா ராஜ்ய  மஹாராணி  மஹாபெரியவா தரிசனம் பெற  வந்தார்.  பாதபூஜை செய்தார்.  
அக்டோபர் 27ம் தேதி.
காசி வட்டாரத்திலுள்ள வடக்கத்திய  சந்யாசிகள் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய  பாத பூஜை, பிக்ஷா வந்தனங்களை ஏற்றுக்கொண்டார்.   தமிழ்நாட்டிலிருந்து அங்கே குடியேறிய  சந்யாசிகள், பக்தர்கள் ஒன்று கூடி  பாத பூஜை, பிக்ஷா வந்தனம் செய்தார்கள். 

நவம்பர்  16ம் தேதி.
ஹனுமான் காட் எனும் படித்துறையில்  அஸி நதியில்  ஸ்னானம் செய்தார். 

நவம்பர்  18ம் தேதி 
ஹனுமான் காட்டில்  பஞ்சகங்கா  புண்ய நதி ஸ்னானம். குகை கோயில், மற்றும்  காசி எல்லை தேவதை ஆலயத்தில்  தரிசனம் பெற்றார்.  

1934ம் வருஷம்  டிசம்பர் மாதம்  17ம் தேதி  
இன்று  தனுர் மாசம் துவங்கியது.

தொடரும் 

TULASIDAS


 துளசி தாசர் -   நங்கநல்லூர்  J K  SIVAN


ஸ்ரீ  ராம  தரிஸனம் .  

வடக்கே  கம்பரைப்பற்றி அவர் எழுதிய ராமாயணத்தை பற்றி சொன்னால் காதில் விழாதவர்களாக அலக்ஷியமாக  எங்கோ  எதிரே மேயும் பசு மாட்டின் மேல் கவனம் வைப்பார்கள்.  அதே சமயம்  வால்மீகி,  துளசி தாசர், எழுதிய  ராமாயணம் என்றால்  ஆர்வத்தோடு ஓடிவந்து, கை கட்டி அதை கேட்க  உட்காருவார்கள்.  அதே கதை  தான் இங்கேயும்.  வால்மீகி ராமாயணம் வடமொழி அறிந்த நம்மவர்களுக்கு கொஞ்சம்  தெரியலாம். துளசி தாசர் ராமாயணம் என்பதோ , துளசி தாஸர்  யார்  என்றோ துளியும் தெரியாது, தெரிந்து கொள்ள  விருப்பமும் இல்லை.  VG பன்னீர்தாஸ் கடை,   ஏதோ ஒரு கட்சி தலைவர்  தாஸ்  என்றால்  புரியும், ஜேசுதாஸ் பாட்டு கேட்பார்கள்..   வேறே எந்த தாஸும்  தெரியாது.

எனவே  துளசி தாசர் பற்றி கொஞ்சம் அறிமுகம் செய்கிறேன்.
யாருக்காவது  ''ஸ்ரீ ராம்'' என்று மூச்சு உள்ளேயும் வெளியேயும் சத்தத்தோடு   பிரயாணம் செய்தால்  அவரை  ''நீங்கள் தான் துளசிதாசரா?'' என்று கேட்டால் ''ஆமாம்''  என தலையாட்டுவார்.   அவர்  பல முறைகள் ராமனை  நேரில் கண்டவர் பேசியவர்.  ஒருமுறை அவர் ஹனுமனை சந்திக்கிறார். வணங்குகிறார்.
'' ஜெய் மாருதி வீரா, நமஸ்காரம் "
'' ஜெய்  ராம் சீதாராம்.  அட,  துளசிதாசரா?  எங்கே   இவ்வளவு தூரம்?''
'' ஆஞ்சநேயா, மஹா வீரா,  எனக்குள் ஒரு ஆசை.   உங்களுக்கு ராம – லட்சுமணரின் அனுக்ரஹம் கிட்டியது போல் எனக்கும் நேரவேண்டும் . அதற்கு நீங்கள் தான்  கருணை செய்து நிறை வேற்ற வேண்டும்.''
''துளசி தாசரே, நீங்களே  அழைத்தால் ஸ்ரீ ராமன் ஓடிவருவார்.  இதோ பாருங்கள் எதிரே தெரிகிறதே ஒரு ஊர், அது தான்  சித்ர கூடம். இந்த இடத்திற்கு ராமகிரி என்றும்  பெயர். ராமன் வனவாசம் செய்த இடம். அங்கே வெள்ளி உருகி ஓடுவதை போல்  தெரிகிறதே  அது தான்  புண்ய நதி மந்தாகினி. அங்கே சென்று அமர்ந்து  ராமஜபம் செய்யுங்கள். ராம தரிசனம் கிட்டும் ''

'ஆஹா. அப்படியே.   மாருதி  ராயா,  எனக்காக  நீங்களும் சற்று நேரம் என்னோடு  சேர்ந்து ராம ஜெபத்தில் ஈடுபடலாமே.   நீங்கள்  ஜபம் செய்வதைப் பார்த்து  நானும் அவ்வாறே  உங்களோடு சேர்ந்து  ஸ்ரீ ராம நாம ஜபம் செய்கிறேன் ''  என்கிறார் துளசிதாசர்.

''ஓ, சந்தோஷம். கரும்பு தின்ன கூலியா வேண்டும்.  இதோ ஆரம்பிப்போம் ''  
ஹநுமானோடு  துளசி தாசரும் ராம ஜபம் செய்தார்.   உள் மனதில்  ராமர்  எப்போது வருவார், எப்படி வருவார்?  தனியாகவா கூடவே  லட்சுமணனுடனுமா ?   அடேடே  ஒரு வேளை  சீதையை வாருங்கள் என்று நான் அழைக்காததால் வரமாட்டாளோ, அவர் அழைத்து வருவாரா  மாட்டாரா? ராமர்  எப்படி இருப்பார்? தலையில் ஜடாமுடியுடன் வருவாரா? (அ) வைரக்கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? என்ற பல சிந்தனைகளோடு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக் கொண்டார். கண்களை இமைக்காமல் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தார்.

வெகுநேரமாகியது.  சூரியன் மேலே ஏறி மெதுவாக மேற்கே இறங்கி விடுவான் போல் இருக்கிறதே.   மலைப்பாதை, ஒற்றையடிப்பாதை. இருபுறமும் புதர் அங்கிருந்த பாறாங்கல்லில் நின்றுகொண்டு ராம, ராம என்று ஜபித்து நர்த்தனமாடினார் துளசி தாசர்.

திடீரென்று  மலை உச்சியில் இருந்து வேகமாக இரண்டு குதிரைகள் வந்தன. அதன் மீது இரண்டு ராஜகுமாரர்கள்.
 துளசிதாசர் எத்தனையோ ராஜாக்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் குதிரையில் வந்த ராஜகுமாரர்களோ தலையில் தலைப்பாகை, அதைச் சுற்றி முத்துச் சரங்கள் கொண்டை மீது வெண்புறா இறகுகள் என்று வித்தியாசமாக இருந்தனர்.   அவர்களை  வழிப்போக்கர்கள் என  அலக்ஷியமாக  பார்த்துக்கொண்டே நின்றார். குதிரையில்  வந்த  வீரர்கள்  துளசி தாசரைப்பார்த்துச் சிரித்துக் கொண்டே போய்விட்டனர்.
யாரோ ராஜகுமாரர்கள் .  யாரா இருந்தால் என்ன? என் ராம, இலட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்கக் கவசமும், தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புறாத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக் கொண்டே எத்தனை  அழகாக இருப்பார் என் ராமர்,  என்று தியானித்தவாறே ராம நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார்.

நேரமாகி விடவே, ஹனுமான்   ஜபம் முடித்து எழுந்தார்.
''என்ன துளசி தாசரே, ஆனந்தமாக  ராம லட்சுமணர்களை  தரிசித்ததில் சந்தோஷம் தானே?''  என்க
''ராம லக்ஷ்மண  தரிசனமா  எங்கே.  நான் பார்க்கவில்லையே''
''என்ன சொல்கிறீர்கள் நீங்கள், உங்களை பார்த்து  புன்னகைத்து  கை அசைத்து, வெகு அருகில் மெதுவாக குதிரை மேல் இருந்தவாறே  காட்சி தந்தார்களே , நான் பார்த்தேனே''  என்கிறார்  ஹனுமான்.
''அடாடா,  நான் கண்ட  யாரோ  ரெண்டு  ராஜகுமாரர்கள் தான்   ராம லட்சுமணர்களா? ஏமாந்து  கோட்டை விட்டேனே. அப்படி வருவார்கள் என எதிர்பார்க்கவில்லையே '' என புலம்பினார் துளசிதாசர்.
''என்ன இது துளசி தாஸரே, ராமர் உமது இஷ்டப்படிதான் வரவேண்டுமா? அவர் இஷ்டப்படி வரக்கூடாதா?'' --  ஹனுமான்.
'ஸ்ரீ ராம தூதா,  என்னை மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாத பேதை நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு ராம லக்ஷ்மணர்களை அலக்ஷியம் செய்து விட்டேனே.  
வாயுகுமாரா. இன்னும் ஒருமுறை தயவு செய்யும். ஸ்ரீ ராமன் எந்த வடிவில் வந்தாலும் ஆனந்தமாய் தரிசிக்கிறேன்'' என்றார் துளசிதாசர்.
'' சரி,  நீங்கள் போய் மந்தாகினியில் இறங்கி நீராடி ஜபம் செய்யும். ராமாயணப் பாராயணம் செய்யும். ராமன் மறுபடியும்  வருவாரா பார்க்கலாம்'' என்றார்  ஹனுமான்.

மந்தாகினியில் மீண்டும் நீராடி  துளசிதாசர்  ராம நாம ஜபம் செய்தார். வால்மீகியின் ராமாயண பாராயணம்  செய்தார், இரண்டு நாட்கள் ஓடிவிட்டது. அன்றைய தினம்  ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்பு ராம, லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்று கட்டத்தைப் படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினி யில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள்  நதியிலிருந்து கரை ஏறி துளசி தாசரிடம் வந்தனர்.
ஒருவன் நல்ல கருப்பு நிறம், மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்துப் பதினைந்து நாள் வளர்ந்த தாடி,
கருப்பன்  துளசிதாசரிடம்  ''சுவாமி, உங்களிடம் கோபி சந்தனம் இருக்குமா?   என கேட்டான்.
ராம ஜபம் சொல்லிக்கொண்டே  ''ம்ம்.  இந்தா . இருக்கிறது''  என  தாசர் சந்தனம்  நீட்டினார்.
மற்றவன் '' சுவாமி, எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்களேன்''என்றான்
''ஆஹா, இட்டு விடுகிறேனே''.   இடது கையில் நீர் விட்டுக் கொண்டே சந்தனத்தைக் குழைத்த போது கருப்பு இளைஞன் எதிரே உட்கார்ந்து முகத்தை நீட்டுகிறான். தாசர் அவன் மோவாயைப் பிடித்துக் கொண்டு முகத்தைப் பார்க்கிறார். அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்க்கின்றன. பார்த்தவுடன் தன்னை மறந்துவிட்டார். அந்த இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தைத் தன் கட்டைவிரலில் எடுத்து   தானே, தன் நெற்றியில்    தரித்துக்கொண்டு  துளசி தாசர்  நெற்றியிலும்   பூசினான்.   தன்னுடன் வந்தவனுக்கும்  நெற்றியில்  இட்டான். 

அவர்கள் உட்கார்ந்திருந்த படித்துறைக்கு அருகில் ஒரு மாமரம், மரத்தின் மீது இருந்த கிளி கூவியது. அது ஸ்லோகமாக துளசிதாசர் காதில் விழுகிறது. கிளி என்ன சொல்லியது:

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தக கீ பீர
துளசிதாஸமே சந்தந கிஸே  திலக தேத ரகுபீர.

''சித்ரக் கூடத்துக் கரையில்எப்போதும் சாதுக்கள் கூட்டம்.  ஒரு  ஓரமாக துளசிதாசர்  அமர்ந்து  சந்தனம் குழைக்கிறார்.ஆனால் எதிரே இருந்த  ராமர் அதை துளசிதாசருக்கு  திலகமிடுகிறார்;;

துளசிதாசர் திடுக்கிட்டு எதிரே உள்ள கருப்பனை பார்க்கிறார்: சிரித்துக்கொண்டே அவன் கேட்கிறான்:
''சுவாமி,   என்  நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா?
'' ராமா, உனக்கு இதைவிட பொருத்தமான நாமம் ஏது?''   துளசி தாசர் பக்தியில் திளைத்து கதறியவாறு அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசிதாசர்.  இளைஞர்களுக்கு பதில்  அங்கே ராம லக்ஷ்மணர்கள் அவருக்கு  தரிசனம் தருகிறார்கள். 

தொடரும் 

MOOKA PANCHASATHI


 மூக  பஞ்சசதி  -  நங்கநல்லூர்  J K  SIVAN 

ஆர்யா சதகம்  ஸ்லோகங்கள்  60-70

तुष्यामि हर्षितस्मरशासनया काञ्चिपुरकृतासनया ।
स्वासनया सकलजगद्भासनया कलितशम्बरासनया ॥ ६१॥

61. Thushyami harshitha smara sasanayaa, Kanchipura kruthaasayaa,
Swasanayaa sakala jagad bhasanayaa kalithasambarasanayaa

துஷ்யாமி ஹர்ஷிதஸ்மரஶாஸனயா காஞ்சிபுரக்றுதாஸனயா |
ஸ்வாஸனயா ஸகலஜகத்பாஸனயா கலிதஶம்பராஸனயா ||61||

அம்பாள்  காமாக்ஷி தேவி  பரமேஸ்வரனுக்கும்   பக்தர்களுக்கும்  பரம சந்தோஷத்தை அளிப்பவள் பிரபஞ்சத்தில் உள்ள சகல  ஜீவன்களுக்கும்  ப்ரம்மமே   ஆதாரம்,  அந்த பிரம்மமே உருவானவள் அம்பாள். பிரபஞ்சத்தில்  சகலமும் திருப்தி அடைய செய்பவள் அம்பாள்.  காஞ்சிபுர க்ஷேத்ரத்தில் நிலையாக  வாசம் செயது மகிழ்பவள்.  மன்மதன்  சம்பரன்  எனும் அசுரனை வதம்  செய்து சம்பராசனன் என்ற பெயர் பெற்றவன்.   அவனை  பரமேஸ்வரன் நெற்றிக்கண் தீயினால் சுட்டெரித்த பொது அவனுக்கு புத்துயிர் தந்தவள் அம்பாள்.   சம்பரம் என்றால்  மிகவும் ஸ்ரேஷ்டமானது என்று ஒரு அர்த்தம்.   சம்பராஸன என்று சொல்லும்போது அம்பாள் மிகச் சிறந்த, ஸ்ரேஷ்டமான  காஞ்சி காமகோடி பீடத்தில் அமர்ந்திருப்பவள் என்று அவளை வணங்கச் செய்கிறது.

प्रेमवती कम्पायां स्थेमवती यतिमनस्सु भूमवती ।
सामवती नित्यगिरा सोमवती शिरसि भाति हैमवती ॥ ६२॥

62. Premavathi kampyaam sdhemavathee yathi manassu bhoomavathi,
Saamavathi nithyagiraa somavathi sirasi bhathi Haimavathi.

ப்ரேமவதீ கம்பாயாம் ஸ்தேமவதீ யதிமனஸ்ஸு பூமவதீ |
ஸாமவதீ னித்யகிரா ஸோமவதீ ஶிரஸி பாதி ஹைமவதீ ||62||

இந்த ஸ்லோகத்தில் அம்பாளை மூகர்  அருமையாக வர்ணிக்கிறார்.  ஹிமவான் பெண் ஹைமவதி, காஞ்சியில் தவழும் கம்பாநதியின் மேல் ப்ரியம் கொண்ட பிரேமாவதி,  முனீஸ்வரர்கள் , யோகிகள், யதீந்த்ரர்கள் மனதில் ஸ்திரமாக வாசம் செய்யும்  ஸ்தேமவதி,  பூமியில் சகல செல்வங்களுக்கும் ஐஸ்வர்யங்களும்  அதிபதி பூமவதி, வேதங்களால்  பூஜித்து  பாடப்படுவாள் ஸாமவதி,  சந்திரனை பிறையாக சூடியவள்  சோமவதி என்கிறார். 

कौतुकिना कम्पायां कौसुमचापेन कीलितेनान्तः ।
कुलदैवतेन महता कुड्मलमुद्रां धुनोतु नःप्रतिभा ॥ ६३॥

63. Kouthukinaa Kampaayaam kousuma chapena keelithenaantha,
Kula daivathena mahathaa kudmala mudhram dhunothu na prathibhaa.

கௌதுகினா கம்பாயாம் கௌஸுமசாபேன கீலிதேனான்தஃ |
குலதைவதேன மஹதா குட்மலமுத்ராம் துனோது னஃப்ரதிபா ||63||

அம்பாள் மனசில் என்ன இருக்கிறது?  கம்பாநதி   மேல் அளவில்லாத  ஆசையும்  உத்ஸாகமும் . மன்மதனின்  ஸ்ருங்கார  ரசத்தை  அப்படியே  மனதில் கொண்டு  பரமேஸ்வரன் பால் பாவிக் கிறவள்,  நமது குல தெய்வமான அம்பாளின் மேல் நமது மனதை  அரும்புகள் மலர்வது போல் பரிமளிக்கச் செய்வோம்.

यूना केनापि मिलद्देहा स्वाहासहायतिलकेन ।
सहकारमूलदेशे संविद्रूपा कुटुम्बिनी रमते ॥ ६४॥

64. Yoonaa kenapi milad, dehaa swaahaa sahaya thilakena,
Sahakara moola dese, samvid roopaa kutumbhinee ramathe.

யூனா கேனாபி மிலத்தேஹா ஸ்வாஹாஸஹாயதிலகேன |
ஸஹகாரமூலதேஶே ஸம்வித்ரூபா குடும்பினீ ரமதே ||64||

அம்பாள்  நெற்றிக்கண்ணாக  ஸ்வாஹா எனும் அக்னியை உடையவள்.   ஹோமத்தில், யாகத்தில்  அக்னிக்கு வஸ்துக்களை அற்பணிக்கும்போது அதனால் தான்  ''ஸ்வாஹா ஸ்வாஹா''  என்று அவள் பெயரை மந்திரமாக  சொல்கிறோம்.   காமேஸ்வரன் எனும் பரமேஸ்வரனின் மேல் எல்லையற்ற  விருப்பமுடையவள். அவனுக்காக, அவனை அடைய    காஞ்சியில்   ஏக  ஆம்ரம் எனும் ஒற்றை மாங்கனி மாமரத்தின் அடியில் தவமிருப்பவள். அழகிய பாலா.

कुसुमशरगर्वसम्पत्कोशगृहं भाति काञ्चिदेशगतम् ।
तमस्मिन्कथमपि गोपितमन्तर्मया मनोरत्नम् ॥ ६५॥

65. Kusuma sara garva sampath kosa gruham, bhaathi Kanchi madhya gatham,
Sthapitha masmin kadhamapi gopitha mantharmaya manorathnam.

குஸுமஶரகர்வஸம்பத்கோஶக்றுஹம் பாதி காஞ்சிதேஶகதம் |
ஸ்தாபிதமஸ்மின்கதமபி கோபிதமன்தர்மயா மனோரத்னம் ||65||

இந்த ஸ்லோகத்திலோ மூகர்  காஞ்சிபுர க்ஷேத்ரத்தின் நடுவே அமைந்துள்ள காமகோடி பீடத்தை மன்மதனின்  கர்வத்திற்கு  பொக்கிஷமாக  உவமை சொல்கிறார்.   ஏனென்றால்  அங்கே  காமாக்ஷி இருக்கிறாளே. அவளல்லவோ அந்த பொக்கிஷம். அந்த  ரத்னத்தை  விலை மதிப்பற்ற பொக்கி ஷத்தை என் மனதில் நான் ஜாக்கிரதையாக   ஹ்ருதய  பெட்டகத்துக்குள் வைத்து க் கொண்டேன் என்கிறார். 

दग्धषडध्वारण्यं दरदलितकुसुम्भसम्भृतारुण्यम् ।
कलये नवतारुण्यं कम्पातटसीम्नि किमपि कारुण्यम् ॥ ६६॥

66. Dhagdha shadadwaranyam dhara dalitha kusumba sambhoothaarunyam,
Kalaye nava tharunyam kampa thata seemni kimapi karunyam.

தக்தஷடத்வாரண்யம் தரதலிதகுஸும்பஸம்ப்றுதாருண்யம் |
கலயே னவதாருண்யம் கம்பாதடஸீம்னி கிமபி காருண்யம் ||66||

மிக உயர்ந்த  ஜகத் காரண  தத்வம் இந்த ஸ்லோகத்தில் அடங்கியுள்ளது. காம க்ரோத, மத,  மோக, லோப, மாத்சர்யம் என்ற ஆறு ஈர்ப்புகளை  ஷட்வாரண்யம் என்பார்கள்.  ஆரண்யம் என்றால் காடு..மரங்கள் தாவரங்கள் ஒன்றை ஒட்டி இன்னொன்று  கூடவே வளர்ந்து அடர்ந்த காடாகுமே  அது போல் இந்த ஆறு குணங்கள் மனதை  ஆட்கொள்வதாக உபமானம்.  இன்னொரு உள்ளர்த்தம்,  ஆறு  விஷயங்கள் . அதில் வாக்கு  சம்பந்தப்பட்ட மூன்று  வர்ணம், பதம், மந்த்ரம்.  அர்த்தத்தை சேர்ந்தவை மூன்று  கலா, தத்வம், புவனம் என்பவை. அந்த ஆறு, ஷட்வாக்களால்  ஜகத் உருவாகிறது.. விவரமாக உள்ளே போக வேண்டாம்.  காமாக்ஷி அம்பாள் இந்த ஆறுக்கு, ஷட்வாக்களுக்கு, அப்பாற்பட்ட குங்குமப்பூ நிறக்காரி. கம்பா நதி தீர  கருணாசாகரி  என்கிறார்.

 काञ्चि वर्धमानामतुलां करवाणि पारणामक्ष्णोः ।
आनन्दपाकभेदामरुणिमपरिणामगर्वपल्लविताम् ॥ ६७॥

67. Adhi Kanchi vardhamaanam athulaam karavani paaranaam akshno,
Aananda paka bhedhaam arunima parinaama garva pallavithaam.

அதிகாஞ்சி வர்தமானாமதுலாம் கரவாணி பாரணாமக்ஷ்ணோஃ |
ஆனந்த பாகபேதாமருணிமபரிணாமகர்வபல்லவிதாம் ||67||

அம்பாள், காஞ்சி, கம்பாதீரத்தில்  யௌவன பாலையாக,  அதிரூப சுந்தரியாக, தன்னிகரில் லாதவளாக,   காருண்ய,  மணம் வீசும் மலர்க்  கொடியாக  எனக்கு காட்சி தருகிறாள்.

बाणसृणिपाशकार्मुकपाणिममुं कमपि कामपीठगतम् ।
एणधरकोणचूडं शोणिमपरिपाकभेदमाकलये ॥ ६८॥

68. Bana sruni pasa karmuka kamapi Kama peeta gatham,
Yena dhara kona choodam sonima pari paka bhedhamakalaye.

பாணஸ்றுணிபாஶகார்முகபாணிமமும் கமபி காமபீடகதம் |
ஏணதரகோணசூடம் ஶோணிமபரிபாகபேதமாகலயே ||68||

பூர்ணச்சந்திரனில்  கருப்பாக  இருப்பதை களங்கம் என்பார்கள், முயல் குட்டி, தோசை வார்க்கும் பாட்டி, என்றெல்லாம் சொல்லி  வா வா  என்று கையாட்டி  இடுப்பிலுள்ள குழந்தைகளுக்கு சாதம் ஊட்டுவது ஒரு வழக்கம்.    சந்திரன் சூடிக்கொண்டிருக்கும் மான்  அது என்கிறார்  மூகர் .   மானைச் சூடிக்கொண்டிருக்கும்  ''மூன்',  சந்திரனை,  தன்னுடைய சிரசில் சூடிக்கொண்டிருப்பவள் அம்பாள். அதுதவிர கரங்களில் புஷ்ப பாணங்கள், அங்குசம், பாசம், கரும்பு தனுசு,  அது தான் கோதண்டம், அதெல்லாவற்றுடனும் காமகோடி பீடத்தில் அமர்ந்து தரிசனம் தருபவளே வணங்குகிறேன். 

किं वा फलति ममान्यौर्बिम्बाधरचुम्बिमन्दहासमुखी ।
सम्बाधकरी तमसामम्बा जागर्ति मनसि कामाक्षी ॥ ६९॥

69. Kim vaa phalathi mamanyai, bimbadara chumbi manda hasa mukhi,
Sambhadhakari thamasaam Ambaa jagarthimanasi Kamakshi.

கிம் வா பலதி மமான்யௌர்பிம்பாதரசும்பிமன்தஹாஸமுகீ |
ஸம்பாதகரீ தமஸாமம்பா ஜாகர்தி மனஸி காமாக்ஷீ ||69||

எனக்கு ஒருவர் தயவும் தேவையில்லை. கோவைக்கனி போன்ற செவ்வதரங்களில்  மனதை மயக்கும் புன்முறுவல், ஆனந்தம் தரும் அருள் பார்வையால்  அஞ்ஞானத்தை  அகற்றுபவள்,  என் இதய பீடத்தை அலங்கரிக்கும்போது எனக்கு வேறு என்ன,  எவரிடம்,   வேண்டும்?

मञ्चे सदाशिवमये परिशिवमयललितपौष्पपर्यङ्के ।
अधिचक्रमध्यमास्ते कामाक्षी नाम किमपि मम भाग्यम् ॥ ७०॥

70. Manche sadaa shiva maye, para shiva maya lalitha poushpa paryange,
Adhi chakra madhyamaasthe Kamakshi naama kimapi mama bhagyam.

மஞ்சே ஸதாஶிவமயே பரிஶிவமயலலிதபௌஷ்பபர்யங்கே |
அதிசக்ரமத்யமாஸ்தே காமாக்ஷீ னாம கிமபி மம பாக்யம் ||70||

லலிதையை, காமாட்சியை உபாசிக்கிறவர்கள்  ஸ்ரீ சக்ர பூஜை செய்பவர்கள். அதன் நடு நாயகமாக இருப்பது தான் சர்வானந்தமய சக்ர பிந்து.   அதி சக்ர மத்யம் என்று மூகர்  அதைத்தான் சொல்கிறார்.  அந்த மஞ்சத்தில்,  காமேஸ்வரர் மஞ்சத்தில், புஷ்ப  மெத்தையில்  அமர்ந்திருக்க அவர் இடது பாகத்தில் அம்பாள் வீற்றிருந்து அருள் பாலிக்கிறாள். அவரை சதாசிவன் எனும் ஆநந்த ஸ்வரூபனாகவும், அந்த கட்டிலின்  நாலு கால்களுமே, ப்ரம்மா,  விஷ்ணு, ருத்ரன் , ஈஸ்வரன்  ஆகியோர்  என்றும்   சொல்வதுண்டு.  


Saturday, January 29, 2022

AVVAIYAR

 ஒளவையார்  -     நங்கநல்லூர்  J K   SIVAN 


4.   ஆஹா   அற்புத சொல் !

''உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.20

நம்மோடு  கூட  பிறந்தவர்கள், நம் குடும்பத்தை சேர்ந்தவர்கள்  மட்டுமே சுற்றத்தார் என்று நினைத்துக்  கொண்டு   இருக்கிறோம்.   நம்மோடு கூடவே இன்னும் சிலதும்  நம்மோடு பிறந்தவை  இருக்கிறது.   சர்க்கரை  நோய் போன்ற சில வியாதிகள்  நம்முடன் சேர்ந்தே    வளர்ந்து  நம்மைக் கொல்கின்றன.   அதே சமயம்  நம்முடன் சம்பந்தமே இல்லாத,  கூடப்  பிறக்காமல்,  எங்கோ ஒரு  பெரிய மலையில்  பிறந்து வளர்ந்த  ஒரு  மூலிகை, இலை, தழை,  நம்மிடம் வந்து   நம்மை துன்புறுத்தும்   வியாதியைப்  போக்குகிறது.  இந்த மாதிரி வியாதி நிவாரணி தாவரம் போன்றவர்களும் நம்முடன் இருக்கிறார்கள்.  அவர்களை கண்டுபிடித்து அவர்களோடு பழகவேண்டும்.

''இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை
இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல்
புலி கிடந்த தூறாய் விடும். 21

மனைவி வீட்டில் இருந்தால், கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள்.  அவளுக்கு தெரியாதது ஒன்றுமில்லை.  அவள்  நல்லதை தான் நினைப்பவள்.  அவள்  முடிவே  பாரபக்ஷமின்றி சரியானது, என்று நம்பி  வாழத்தக்க  சில  மனைவிகளும் இருக்கிறார்கள்.  அப்படி இல்லாமல், அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண் பாடாகவே பேசிக்கொண்டிருந்தால், அந்த நிலையில் அவன் வாழும் வீடு புலி பதுங்கியிருக்கும் புதராக மாறிவிடும்.  இது நான் சொல்வதில்லை. ஒளவைப்  பாட்டி  ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு சொன்னது.  அப்பவும்  அப்படி சிலர் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.

எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே!
கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்
முற்பவத்தில் செய்த வினை. 22

''என்ன சார் செயறது . பிரமன் தலையில் எழுதிட்டானே.  ப்ரம்ம லிபி.  அதை யாரும் மாத்த முடியாது.' இப்படி சிலர் பேசுவதை கேட்கிறோம்.  எந்தச் செயலும் ஒருவன் தலையில் எழுதியவாறே (nucleus-egg) நிகழும். மரபணுக்களின் பதிவில் உள்ளவாறே நிகழும். எண்ணிய செயல் நடக்கவில்லையே என்று வருந்திக்  கொண்டிருக்கும் மடத்தனமான நெஞ்சமே! எண்ணிப்பார். நீ  நினைத்தபடி எல்லாச் செயலும் நடந்து  விடுமா? கற்பக விருக்ஷம்  விரும்பியதை எல்லாம் தரும் என்பார்கள். ஒருவன் தானும்  பிள்ளையார் பெற்றது போல் மாம்பழம்  ஒன்றைப்  பெற வேண்டும் என்று எண்ணிக் கொண்டு கற்பக மரத்தடியில் அமர்ந்தான். ஆனால் அந்தக் கற்பக மரம் (தின்றதும் சாகும்) எட்டிப் பழம்  போல் ஒன்றை  அவனுக்குக் கொடுத்தது.   ஏன்?  என்ன காரணம்? அவன் முன் பிறவியில் செய்த வினையின் பயன்  அது.

''கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம். 23

எவ்வளவு  தான்  பலமான  பாறையாக இருந்தாலும்   ஒரு முறை  பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்  கொள்ளாது.  ஒட்டவைத்தாலும்  சேராது.  அதுபோல, பிரிந்து போன  தீயவர்கள் மீண்டும் ஒன்று  சேர மாட்டார்கள். பிரிந்த தங்கத் துகளைகள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து விட்டாலும் மீண்டும் ஒட்டிக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வில்லைப் பிடித்து  வேகமாக  செலுத்திய  ஒரு  அம்பு   விர்ரென்று  தண்ணீரைப்  பிளந்து  உள்ளே புகுந்தாலும்,  நீர்  மறுபடியும் அடுத்த கணமே பழையபடி   பிளவில்லாமல் ஒரே சீராக  ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர்கள்  கோபம்  அடுத்த கணமே மாறிவிடும்.  ஒரு கண  நேர கோபம் அவர்களது இயற்கை சாந்த ஸ்வரூபத்தை மாற்றாது.

BLUDSTAINED OLD DIARY PAGE

 பழைய டயரியில் ஒரு ரத்தக்கறை  -   நங்கநல்லூர்  J.K. SIVAN


இன்று ஜனவரி 30.  இந்த  டயரியில் இருப்பது 74 வருஷங்களுக்கு  முன் நடந்த  ஒரு சம்பவ குறிப்பு.
நாலாவது குண்டு யார் சுட்டது என்று எழுபது வருஷங்களுக்கு அப்புறம் தேடுகிறார்கள். இந்த நாள்(ஜனவரி 30) வந்தால் அவரை நினைக்காம இருக்க முடியலியே. காரணம். யாரும் மறக்கக் கூடாத விஷயம். மறக்கமுடியாத மனிதர்.

அப்போது எனக்கு 9 வயசு. நன்றாக நினைவிருக்கிறது. ஆல் இந்தியா ரேடியோவில் வயலின் வீணை  யாரும் என்னை மதித்து பதில் சொல்லலை. அதற்கு மேல் புரியவில்லை. தெருவெல்லாம் கூடிக் கூடி மொட்டு மொட்டாக கும்பல். என்ன பேசினார்கள் என்று தெரியாத வயது. கோடம்பாக்கத்தில் இருந்தேன். அன்று என்ன நடந்தது என்று சொல்கிறேன்.
+++
ஜனவரி 30, 1948 வெளிக்கிழமை.
காலை 3.30 மணி -- வழக்கமாக அவருக்கு பொழுது விடியும் நேரம். பிரிவினையால் நாடு துண்டாடப்பட்டு லட்சோப லக்ஷம் மக்கள் வீடு , வாசல், சுற்றம், உறவு, சுகம் அனைத்து இழந்து பரதேசிகளாக ஒரே இரவில் அனாதிகளாக, மதவெறி, இனவெறி,கொலை வெறி அவர்களைச் சூறையாட, ரத்தம் அநேக இடங்களில் ஆறாக ஓடியது. டில்லி பேருக்குத் தான் தலைநகர். அதற்கு தலை சுற்றியது. அல்புகர்க் தெருவில் பிர்லா மாளிகையின் முதல் மாடியில் நிசப்தம்.

நாடு சுதந்திரமடைந்து விட்டதாம்! கல்கத்தாவின் அமளியை ஒருவாறாக சமாதானப் படுத்திவிட்டு-- முழுமையும் அல்ல--, கொஞ்சம். செப்டம்பர் மாதம் 10 தேதி வாக்கில், அவர் டில்லி வந்து விட்டார். இங்கு அவர் வரவால் நிச்சயம் கட்டாயம் கொஞ்சம் ரத்த சேதம் குறையும். ஆத்திரம் அடங்கும், அமைதி ஏற்பட்டு, காற்றில் கொஞ்சம் அனல் குறைந்து வீசும். இந்த நான்கு மாதத்திலேயே பொதுவாக இருந்த மக்கள் கோபம் கொஞ்சம் அடங்கியது. வெறி சற்று பின் வாங்கியது. எல்லாம் அந்த மனிதரின் அலாதி திறமை. 78 வயதில் அன்பு தான் அவருக்கு பலமாக கை கொடுத்தது.

''அமைதி நீங்கள் காக்கவில்லை என்றால் என் பிராணனை விடுகிறேன். உங்கள் பொறுமைக்காக, விட்டுக் கொடுக்கும் குணத்துக்காக நான் பட்டினி உபவாசம் கிடக்கிறேன்.''

உபவாசம் பயனளித்தது. ஆச்சு. 12 நாள் ஆகிவிட்டது அவர் உண்ணாவிரதம் முடிந்து. ''ஒற்றுமை , ஒற்றுமை, அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். கஷ்டங்களை எதிர்கொள்வோம். காலம் மாறும். நிச்சயம் எதிர்காலம் இந்த சுதந்திர நாட்டில் நமக்கு இன்பத்தைத் தரும்'' என்ன தான் அவர் கத்தினாலும், சில காதுகளில் ஏறவில்லையே. என்ன செய்ய? அவர்கள் இழந்த, பணம், சொத்து, குடும்ப நாசம், பொறுமையாகவா அவர் பேச்சைக் கேட்க வைக்கும்? ஒரு சிலர் அவரையே கொல்ல முயற்சி செய்தனர். இவரால் தானே இவ்வளவும்?  எதிரிக்கும் அன்பு காட்டும், தவறு செய்பவ னையும் சகோதரனாக அணைக்கும் இவர் தேவையில்லை'' என்றனர் சிலர். தினமும் சாயந்திரம் அந்த மாளிகையின் வெட்ட வெளியில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் அவர் உபதேசம் செய்வார். அமைதி காக்க வேண்டுவார். இந்து முஸ்லிம் இருவரும் இரு கண்கள், ஒரே உயிர் என்றெல்லாம் எடுத்து சொல்வார். மக்களை ஒரே நாளில் அமைதியுறச் செய்ய இயலுமா? காலம் அல்லவோ உதவும்!

அன்று காலையும்  வழக்கம் போல் மரப் பலகை படுக்கையிலிருந்து எழுந்தார். மற்றோரை எழுப்பினார். யார் அவர்கள்? உதவியாளர் பிரிஜ் கிருஷ்ண சண்டிவாலா, பேத்திகளான மனு, அபா. எப்போதும்உடனிருக்கும் வைத்தியர் டாக்டர் சுஷீலா நய்யார் அன்று புதிதாக உருவான பாகிஸ் தானில் ஏதோ முக்கிய  வேலையாகச் சென்றுவிட்டார் .

முதியவர் வேப்பங்குச்சியால் பல் விளக்கினார். அது தான் டூத் பிரஷ் அவருக்கு எப்போதும். எத்தனையோ  இந்தியர்களுக்கும் இன்றும் அது தானே  ப்ரஷ்..

காலை மணி 3.45. -- முதல் மாடி வெராந்தாவில் குளிர் உடலைத் துளைக்க, வழக்கமான பிரார்த் தனை. எப்போதும் கீதை ஸ்லோகங்கள் வாசிக்கும்  சுஷீலா நய்யார்  இல்லாததால் மனு. அபா இன்னும் தூக்கத்திலேயே . கிழவரால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எங்கே அவள், என்னை விட்டுப் பிரிய எண்ணமோ? எனக்கு விருப்பமில்லாத செயல்கள் எங்கும் நிறைய இப்போ தெல்லாம் நடக்கிறதே. ''ஹே ராமா, என்னை சீக்கிரமே கொண்டு போய் விடு. வெகு காலம் இதையெல்லாம் இருந்து பார்க்க வைக்காதே. என் கட்டுக்கு மீறி போகிறதே.''

''தாத்தா, இன்று என்ன பிரார்த்தனை படிக்கட்டும்? -- மனு .
''உனக்கு தெரியுமே, அந்த குஜராத்தி பிரார்த்தனைப் பாட்டையே படி.பாடு''
அந்த பாட்டு சொன்ன பொருள் கிட்டத் தட்ட '' ஒ மனிதா, களைத்தோ, இளைத்தோ போனாலும், தொய்யாதே , விடாதே, தனி மனிதனானாலும் எதிர்கொள். மனதில் பலம் கொள். கைக்கு அது தானாகவே கிடைக்கட்டும். தொடர்ந்து முயன்று கொண்டே இரு!" ( இது என்ன  குஜராத்தி பாட்டு?)

பிரார்த்தனை முடிந்தது. அபாவும்  எழுந்து பிரார்த்தனையில் கலந்து கொண்டாச்சு. இருவர் தோளிலும் கைத்தாங்கலாக நடந்து தனது அறைக்கு திரும்பினார் பெரியவர். மனு அவரது குளிரில் உறைந்திருந்த   கால்கள் மேல் கம்பளி சுற்றினாள் . வெளியே கும்மிருட்டு. இன்னும் சூரிய உதயமில்லை. காரிருளும் பனியும், உறைய வைக்கும் டில்லிக்கே உரித்தான ஜனவரி மாத பனிப்படலம். கிழவர் தன் அன்றாட வேலையைத் துவங்கிவிட்டார்.

காங்கிரஸ் எப்படி இயங்க வேண்டும் (??) என்று முதல் நாள் இரவில் தான் எழுதிய சட்ட திட்டம் அவரது பார்வையில் மெருகு பெற்றுக் கொண்டிருந்தது. காங்கிரசின் செயல்பாடு எப்படி இருக்கவேண்டும் என்றுஅவர் எழுதியது தான் அவர் விட்டுச் சென்ற அவரது உயில் எனலாம்.

காலை 4.45 மணி. -- ஒரு குவளை எலுமிச்சம்பழ சாறு, தேனுடன் வெந்நீரில் கலந்து பருகினார்.
காலை 5.45 மணி. -- ஒரு சிறு டம்பளர் ஆரஞ்சு பழ சாறு. இதெல்லாம் அவருக்கு ஏன் தேவை என்றால் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து அவர் உடல் கலகலத்து விட்டது. சக்தி இல்லை. விரைவில் உணர்வு இழக்க தொடங்கியது. மயக்கம் லேசாக வருகிறதே. தலை கிறு கிறு கிறது. தூக்கமாகிவிட்டது. அரை மணி நேரம் நடை பழகினார். காலுக்கு சக்தி வேண்டுமே. பொழுது ஒரு நிமிஷம் கூட வீணாக்காமல் உழைக்கவேண்டும்? யாருக்கு, தனக்கு பணம் சேர்க்கவா? (அது மற்றவர்களை சேர்ந்தது)

''எங்கே அந்த கடிதங்கள்? சீக்கிரம் கொண்டுவா? நேற்று அந்த கிஷோரிலால் மஷ்ருவாலாவுக்கு பதில் எழுதி சீக்கிரமே நான் குஜராத் வருவேன் அதற்குள் குஜராத்தில் சேவா கிராமத்தில் செய்யவேண்டியதை விளக்கினேனே? ''
அந்த கடிதத்தை    மனு  எங்கோ ஞாபக மறதியாக வைத்து விட்டாள் . விடுவாரா கிழவர். 
''தேடிக் கண்டு பிடித்து உடனே தபாலில் அனுப்பு''
தாத்தா, நாம்ப எல்லோரும் பிப்ரவரி 2 வாக்கில் சேவா கிராமம் போகிறோம் இல்லையா?''
''மனு, நாளைக்கு என்ன நடக்கும் என்று யாருக்கம்மா தெரியும்?'' எல்லாமே கொஞ்சம் தெளிவானால் இன்று சாயந்திரம் பிரார்த்தனைக் கூட்டத்தில் நாம் இங்கிருந்து செல்வதைப் பற்றி அறிவிக்கி
றேனே. ரேடியோவில் ராத்திரியே தெரியப் படுத்தலாம்.''"

உண்ணா விரதங்கள் அவரை வாட்டி எடுத்தன. சில காலமாகவே இருமல். அதைச் சமனப்படுத்த பனை வெல்லம், இருமல் மாத்திரை, லவங்கப்பொடி எல்லாம் எடுத்துக் கொண்டார். 
''அடடே! என்ன இது? லவங்கப் பொடி தீர்ந்து விட்டதே. தினமும் காலையில் சற்று நேரம் அறைக்குள் ளேயே நடப்பதில் அவருக்கு உதவி செய்யாமல், உடனே லவங்கத்தைப் பொடி பண்ண மனு தயாரானாள். பொடி பண்ணிவிட்டு நொடியில் வருகிறேன்'' என்று குரல் கொடுத்தாள் . 
''ராத்திரி உங்களுக்கு தேவைப்படுமே.''
''ராத்திரி பத்தி இப்போ என்ன கவலை? இருப்பேனோ மாட்டேனோ? அப்போ பார்த்துக்கலாமே!''

அவருக்கு மேற்கத்திய மருந்துகள் பிடிக்காது. கிட்டேயே வரக்கூடாது. பென்சிலின் இருமல் மாத்திரை கொடுக்கும்போது கூட அவளிடம்''பைத்தியமே, என் ராமன் பெயரைக் காட்டிலுமா இது சக்தி வாய்ந்தது.'' என்பார்.

காலை 7 மணி - ராஜன் பாபு வருவார். அவருடன் நேருவும் சேர்ந்துகொண்டு இருவரும் அமேரிக்கா பயணம் விரைவில் போகவேண்டும். உண்ணாவிரத பாதிப்பு இன்னும் சரியாக பழையபடி நடக்க முடியவில்லை.
ஒரு பெஞ்சில் படுத்திருந்தார், பிரிஜ் கிருஷ்ணா அரை மணி நேரம் நன்றாக அவர் கால்களைப் பிடித்து எண்ணெய் தேய்த்து உருவி விட்டார். தெம்பாக இருந்தது. மாடியிலேயே உதவியாளர் பியாரேலால்  அறையும். அவரைக்  கூப்பிட்டு தான் எழுதித் திருத்திய காங்கிரஸ் செயல்பாட்டு திட்டம் குறிப்பை நீட்டி
''இதைப் படித்துப் பார்த்து நான் ஏதாவது விட்டிருந்தால் பூர்த்தி செய்து, அடுத்த காங்கிரஸ் காரிய கமிட்டியில் பேசி முடிவெடுக்கச் சொல்லுங்கள்''

டில்லி குளிரிலிருந்து விடுபட ரெண்டு மின் ஹீட்டர்கள் ''உர்'' என்று உறுமிக் கொண்டு மேலே இயங்கின. நேரத்தை வீணடிக்காமல் கிழவர் அன்றைய செய்தித் தாள்களைமேய்ந்து கொண்டிருந்தார்.

'' என்ன பியாரேலால், நான் எழுதியதைப் படித்து முடித்தாயா? இனி தமிழ்நாட்டில் அரிசிப்  பஞ்சம் இருப்பதை எப்படி தீர்க்கலாம் என்று ஒரு யோசனை சொல்லியிருக்கிறேன் இதையும் சேர்த்துக் கொள் ''. 

மனு   அவரது எண்ணெய்  உடம்பை குளிப்பாட்டி விட்டாள். அவளையும் விடவில்லை. 
'' கைகளுக்கு சக்தி அளிக்க நான் உனக்குச் சொல்லிக்  கொடுத்த பயிற்சியை விடாமல் செய்து வருகிறாயா?
''இல்லையே தாத்தா எனக்கு அது பிடிக்கலை'' 
மெல்லிதாக கோபித்துக்கொண்டாலும் அவளுக்கு தாத்தாவின் அக்கறை புரிந்தது. வழக்கமாக பார்க்கும் எடை இயந்திரம் 109 1/2 பவுண்டு காட்டியது. 5 அடி 5 அங்குலம்.உண்ணாவிரதத்துக்கு அப்புறம் ரெண்டரை பவுண்டு கூடியிருக்கிறதே. குளித்தவுடன் புத்துணர்ச்சி. ஒருவர் வந்து ஏதோ ஒரு செய்தி சொல்கிறார். 
''ஒரு பெண்மணி சேவா கிராம் போய்ச் சேரவில்லை''.
''ஏன்?''
''வார்தாவிலிருந்து வண்டி எதுவும் கிடைக்கவில்லையாம்''.
''வண்டி இல்லையென்றால் நடந்து போக வேண்டியது தானே.  சில மைல்கள் நடக்க முடியாதா?''
பலே கிழவர்.   எத்தனை மைல்கள் மின்னல் வேகத்தில் நடப்பவர். நடந்தவர். அப்புறம் சிறிது நேரம் வங்காளமொழி எழுத்துப் பயிற்சி.

''இந்தியாவின் அத்தனை மொழியும் எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். நான் ஒரு இந்தியன்'' என்ற கட்டுப்பாடு அவருக்கு. வங்காளியில் என்ன எழுதினார்?:
'' பைரவன் வீடு நைஹாதியில் இருந்தது. ஷைலா அவன் முதல் பெண். இன்றைக்கு ஷைலாவுக்கும் கைலாஷுக்கும் கல்யாணம்''
காலை 9.30 மணி. -- சாப்பாடு. வேகவைத்த காய்கறி. 12 அவுன்ஸ் ஆட்டுப்பால். 4 தக்காளி. 4 ஆரஞ்சு, கேரட்டு+ எலுமிச்சை, இஞ்சிச்சாறு. நேரம் வீணாகலாமா? 
இதைச் சாப்பிட்டுக் கொண்டே காங்கிரஸ் சட்டதிட்ட ஒழுக்க நெறி முறைகள் பற்றி பியாரே லாலுடன் விவாதம். நேற்று ஹிந்து மகா சபா தலைவர் சயாம பிரசாத் முகர்ஜியுடன் பேச்சு வார்த்தை. ''அவரிடம் சொல்லுங்கள், அந்த சபையில் ஒரு சிலர் தீவிரவாதிகளாக கொலை, வன்முறை என்று பேசுவது ஈடுபடுவது தவறானது. நாட்டுக்கு நல்லதல்ல. முகர்ஜி தலையிட்டு இவற்றை நிறுத்தலாமே ''
''தலைவரே இவ்வாறு வன்முறையை வளர்க்கும் விதத்தில் பேசுகிறாரே என்ன செய்ய?''

கிழவரின் புருவங்கள் நெருங்கின. அடுத்து நவகாளி கலவரம் பற்றி நிலவரம், விவாதம்.
''நான் பாகிஸ்தான் போகப்போகிறேன். என்னால் வன்முறையை நிறுத்த என்ன வெல்லாம் செய்யமுடியுமோ அதைச் செய்கிறேன்'. நீங்கள் உடனே நவகாளி திரும்புங்கள். சிறிது நாளில் நானும் வந்துசேர்ந்து கொள்கிறேன்.''

அப்போது அங்கே தென்னாப்ரிக்காவில் கூடவே உழைத்த ருஸ்தும் சொராப்ஜி குடும்பத்தோடு வந்தார். சிறிது நேரம் தான் அவரோடு.

காலை 10.30 மணி ---- சிறிய தூக்கம். உள்ளங்கால் மரத்து விட்டது. நெய் தடவி அமுக்கிப் பிடித்து விட்டார்கள்.
12மணி நடுப்பகல். --- ஒரு டம்ளர் வெந்நீர் தேனுடன் கலந்து. தானாகவே பாத் ரூம் சென்றார். அது தான் முதல் முறையாக ஒருவரையும் பிடித்துக் கொள்ளாமல் நடந்தது. பலநாட்களாக ''உண்மையிலேயே'' அவர் செய்த உண்ணாவிரதம் அவர் உடல் நிலையை ரொம்பவே பாதித்து விட்டதே.
''பாபுஜி ஆச்சர்யமாக இருக்கிறதே, மீண்டும் தானாகவே நடக்க ஆரம்பித்து விட்டீர்களே''  சிரித்துக்கொண்டு ''பிரமாதம் இல்லை? ''தனியே நட, தனியாகவே நட'' இது தாகூரின் கடைசி வார்த்தை அல்லவா? '' என்றார்.

மதியம் 12.45 மணி. -- ஒரு உள்ளூர் டாக்டரிடம், இலவச மருத்துவ மனை. அனாதை இல்லம் கட்டச் சொல்லி ஒரு ஆலோசனை.
மதியம் 1மணி -- சில முஸ்லிம் தலைவர்களுடன் பேச்சு. பிரிவினையால் ஏற்பட்ட நஷ்டங்கள், அலங்கோலங்கள், இழப்புக்கள், மதக் கலவரம், வெறியாட்டம் குறைக்க என்னவெல்லாம் வழி என்று ஆலோசனை.
'' நான் வார்தாவுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 2ந்தேதி சேவா கிராமின் வளர்ச்சி வேலை முறைகள் கவனித்து விட்டு 14ம்தேதி திரும்ப டில்லி வருகிறேன். கடவுள் சித்தம் அப்படியிருந்தால், ஏனென்றால் நாளைக்கு மறுநாள் என்னால் டில்லியை விட்டு புறப்பட முடியுமா என்பது கூட தெரிய வில்லையே. அது அவன் உத்தரவல்லவா. சாயந்திரம் ப்ரார்த்தனைக் கூட்டத்தில் என் பிரயாணம் குறித்து சொல்கிறேன்''
''மறைந்த என் காரிய தரிசி மகாதேவ தேசாய் பற்றி ஒரு புத்தகம் வெளியிட வேண்டுமே. என்ன அற்புதமான மனிதர் அவர். இதை வெளியிட பணம் வேண்டுமே ? மஹா தேவ தேசாய் எழுதி வைத்தவைகள் வேண்டும் .அவற்றில் இருந்து குறிப்பெடுத்து தான் ஒரு புத்தகம் தயார் செய்ய வேண்டும். நரஹரி பாரிக் இதற்கு சரியான ஆள். ஆனால் அவருக்கு உடல் நலம் சரியில்லை. எனவே, அடுத்து இந்த வேலையை சந்திரா ஷங்கர் ஷுக்லாவிடம் கொடுக்கலாம் '' என்றார் .

அதற்குள் சுதிர் கோஷ் என்ற நிருபர், ஆங்கிலே செய்திகளில் பிரதமர் நேருவுக்கும் உதவி பிரதம படேலுக்கும் இடையே விரிசல், லடாய் என்று விமர்சனங்கள் வருவதை கிழவரிடம் சொன்னார்.
''அப்படியா. இன்றே படேலைக்கூப்பிட்டு விசாரிக்கிறேன். ஜவகரும் ஆஜாத்தும் இன்றிரவு 7 மணிக்கு வருவார்களே. அவர்களிடமும் பேசுகிறேன்''

மத்தியானம் கொஞ்சம் ரெஸ்ட். அடி வயிற்றில் களி மண்ணைப் பிசைந்து பத்து கெட்டியாக போட்டுக்கொண்டு வெயில் பட படுக்கை. முகத்தில் வெயில் படாமல் நவகாளியிலிருந்து கொண்டுவந்த தாழங்குடை. மனுவும் அபாவும் மீண்டும் கொஞ்ச நேரம் கால் பிடித்து விட்டார்கள்.
ஒரு நிருபர்:  ''பாபுஜி நீங்கள் குஜராத் சேவாக்ராம் 1ம் தேதி பிப்ரவரி செல்கிறீர்களா?
''யார் சொன்னது அப்படி?''
''சில பத்திரிகைகளில் அப்படி ஒரு செய்தி ''
''ஆமாம். ஆனால் எந்த காந்தி போகிறார் என்று எனக்கு தெரியவில்லையே'' (அப்போதே காந்தி என்ற பேரில் சிலர் முளைத்து விட்டார்கள்)
பகல் 1.30 மணி. ---- பிரிஜ் கிருஷ்ணா ஒரு செய்தி படித்துக் காட்டினார். அகாலி தாள் தலைவர் மாஸ்டர் தாராசிங் ''ஹே காந்தியே, நீ நாட்டுக்கு செய்ததெல்லாம் ரொம்ப ஜாஸ்தி, உடனே இமயமலைக்குப் போய் தவம் செய்'' என்றும் பிரிவினைக் கலவரங்களுக்கு காந்தியே காரணம்'' என்று கோபமாகப் பேசியிருக்கிறார். நேற்று ஒரு பாகிஸ்தான் அகதி பண்ணிய ரகளையும் கிழவருக்கு  வருத்தம் தந்தது.  ஒரு  பெருமூச்சுவெளிப்பட்டது. கொஞ்சம் கேரட் எலுமிச்சை ஜூஸ்.

சில குருடர்கள், போக்கிடம் அற்ற அகதிகள் என்று சிலர் அவரைப் பார்க்க வந்தனர். அவர்களை ரட்சிக்க பிரிஜ் கிருஷ்ணாவிடம் சில ஆணைகள் இட்டார். அலஹாபாத் கலவரங்கள் பற்றி கேட்ட செய்தியால் கண்களில் ஜலம்.

பகல் 2.15 மணி. -- மக்கள் சந்திப்பு. இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பலர். ரெண்டு பஞ்சாபியர் அவர்கள் மாகாணத்திலிருந்த ஹரிஜன் மக்கள் நலம் பற்றி பேசினர். சில சிந்திகள். இலங்கை யிலிருந்து சிலர். அவர்கள் நாட்டு விடுதலை பெப்ரவரி 14க்கு வாழ்த்து செய்தி வாங்க .கூட வந்த ஒரு குட்டி சிங்களப்பெண், கிழவரின் கையெழுத்தை தனது புத்தகத்தில் பெற்றுக்கொண்டாள் . அதிர்ஷ்டக்காரி அவள்.!!

பகல் 3 மணி -- ஒரு பேராசிரியர் வந்தார். '' பாபுஜி, நீங்கள் செய்வதைத்தான் பல்லாயிரம் வருஷங்க ளுக்கு முன் புத்த பிரான் சொல்லியும் செய்தும் வந்தார்.

பகல் 3.15 மணி --- ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரர் வந்து ஒரு  போட்டோ  ஆல்பம்   பரிசு தந்தார். ''எல்லாம் நானே எடுத்த போட்டோ''.
 பஞ்சாபிலிருந்து ஒரு குழு வந்து  கேட்டது:    ''பெப்ரவரி 15ம் தேதி டில்லியில்  நாங்கள் நடத்தும்  மாநாட்டிற்கு தலைவர் ஒருவரை பரிந்துரை செய்யுங்கள்'' 
'' ராஜன் பாபு'வை  அழையுங்கள்.  மாநாட்டுக்கு நான் வாழ்த்து செய்தி அனுப்புகிறேன்''.

பகல் 4 மணி - படேல் தனது பெண் மணிபென்னுடன் வந்தார். கிழவர் எழுந்து தானே பாத்ரூம் சென்றார்.
'' பிரிஜ் கிருஷ்ணா. நாளைக்கு நாம் குஜராத் வார்தா செல்ல ரயில் டிக்கெட் வாங்கிவிடப்பா''. 
படேல் ப்ரிஜ்  க்ரிஷ்ணாவுடன் சிறிது சம்பாஷணை செய்தார். கிழவர் பாத்ரூமிலிருந்து மெதுவாக வந்தார். ரெண்டு பேரும் அவர் காலில் விழுந்து வணங்கினர்.  படேலுடன் பேசியபோது   '' பட்டேல்  ஜி, மந்திரி சபையிலிருந்து   நீங்களும்  நேருவும்  விலகணும் னு  சொன்னேன்.  ஆனால் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன்   நீங்க  ரெண்டு பேரும் அத்யாவசியம் என்று சொல்லிவிட்டதால் சரி என்று ஒப்புக்கொண்டேன். இன்னிக்கு  சாயந்திரம் பிரார்த்தனைக் கூட்டத்தில் இது பற்றி அறிவிக்கிறேன். இரவு நேரு வரும்போது அவரிடமும் இது பற்றி பேசுகிறேன். தேவைப்பட்டால் உங்கள் இருவரிடையே சமரசம் திருப்திகரமாக இல்லை  யென்றால் நாளை நான் வார்தா செல்வதையும் தள்ளிப்  போடறேன்'''

அவர் படேலுடன் பேசிக்கொண்டிருக்கும்  போது  மனு உள்ளே வந்தாள் :''பாபுஜி, கத்திய வாரிலிருந்து சில தலைவர்கள்  வந்திருக்கிறார்கள். சந்திக்க விரும்புகிறார்கள்'' 
'' கட்டாயம் சந்திக்கிறேன், ஆனால் இன்றைய ப்ரார்த்தனைக் கூட்டம் முடிந்த பிறகு தான். அதுவும் நான் இருந்தால்''.
மனு  இதைச் சொன்னபிறகு அவர்களும் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவருக்காக காத்திருக்க, அவர் படேலுடன் பேசிக்கொண்டே அபா  அவருக்கு  சாயந்திர உணவு தந்தாள். என்ன தட புடல் சாப்பாடு தெரியுமா?. ஆட்டுப்பால், வேகவைத்த காய்கறி ச்சாறு, வழக்கமான ஆரஞ்சு, கேரட், எலுமிச்சை சாறு.
''எங்கே நான் நூற்கும் சர்க்கா அதைக் கொண்டுவா'' ஆர்வமுடன் கொஞ்ச நிமிஷம் நூல் நூற்றார்.
+++
அன்று காலை 37வயதான ஒருவன் டில்லி ரயில் நிலையத்திலேயே 6ம் நம்பர் அறையில் வந்து தங்கினான். கூட ரெண்டு நண்பர்கள்  சேர்ந்துகொண்டார்கள். நாராயண ஆப்தே, விஷ்ணு கார்காரே . மொத்தம் எட்டு பேரில் இவர்கள் மூன்று பேருக்கு தான் இன்றைக்கு டில்லியில் வேலை.. அன்று எப்படியாவது  கிழவரை அருகில் சென்று சந்திக்கணும் .பிரார்த்தனைக் கூட பந்தல் மேடைக்கருகே வெளியே வடப் பக்க ஓரத்தில் நின்றால் அவரைக்  கிட்டத்திலேயே காணலாம் என்று முடிவு. அங்கிருந்து 35 அடி தூரம் தான் இருக்கும். அவருக்கு வெகு அருகில் செல்ல முடியாது. மற்ற இருவரும் துணைக்கு.
+++
பிற்பகல் 4.30 மணி. -- தான் புதிதாக வாங்கிய காகி கோட்டை போட்டுக்கொண்டான் அவன். நேராக ஒரு டோங்கா பிடித்து பிர்லா மாளிகை வந்தான் நண்பர்களோடு. 20ம் தேதி ஜனவரி அன்று யாரோ சில  விஷமிகள் கிழவரைக் கொல்ல சதி முயற்சி நடந்து தோற்றபின் நேருவும் படேலும் எப்போதும் 30 போலிஸ் காரர்கள் சூழ தான் கிழவரை வெளியே எங்கும் உலவ அனுமதித்தார்கள். ஆகவே எவருமே கிட்டே செல்ல முடியாது. எண்ணற்ற போலிஸ் வேறு சாதாரண உடையில் எங்கும் சுற்றிய வாறு கண்காணிப்பு.   ''மக்களை துன்புறுத்த வேண்டாம். பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டாம்'' என்று கிழவர்  கேட்டுக் கொண்டாலும் பாதுகாப்புக்காக நேருவும் படேலும் செய்ய வேண்டியதைச் செய்திருந்தனர்.
+++
3 நண்பர்களும் தனித் தனியாக பிர்லா மாளிகை மைதானத்தில் நுழைந்த நேரத்தில் தான் கிழவரும் படேலும் உள்ளே பேசிக் கொண்டிருந்தனர்.
+++
மாலை 5 மணி --- கார்கால சூரியன் ஒளி குன்றியிருந்தான். - அது பிரார்த்தனை நேரம். கிழவருக்கு குறித்த நேரத்தில் எதையும் செய்யவேண்டும். கால தாமதம் அவருக்கு அறவே பிடிக்காது. இடுப்பிலே கச்சத்தில் தொங்கும் இங்கர்சால் சங்கிலி கடிகாரத்தை எங்கே காணோம்?. கொஞ்ச நாளாக அருகில் உள்ளோர் தான் மணி சொல்லுவார்கள். மனுவும் அபாவும் நேரமாகிவிட்டதை  உணர்ந்தனர். ஆனால் கிழவர் படேலோடு மும்முரமாக பேசிக்கொண்டிருக்கிறாரே.

மாலை 5.10 மணி -- இனி தாமதிக்கக் கூடாது என்று அபா கடிகாரத்தை கிழவருக்குக் காட்டினாள். பாவம்.  அவர் கவனிக்கவில்லை. படேலின் பெண் மணிபென் தைரியமாக குறுக்கிட்டு  பிரார்த்தனைக்  கூட்டத்துக்கு  நேரமாகிவிட்டது''   என்றாள் .

''ஒ,  ஆமாம்.வெகு நேரமாகிவிட்டது.  இப்பவே  நான் கிளம்பிப் போகவேண்டும்''.படேலுடன்  பேச்சு முடிந்தது.

கிழவர் எழுந்தார். காலில் பாதுகை அணிந்தார். பக்க வாட்டு கதவைத் திறந்து அந்தி நேரத்தில் வெளி நடந்தார். மேலே ஒரு கம்பளி குளிருக்காக. ரெண்டு பேத்திகள் தோளில் கைத்தாங்கலாக, வலது கைக்கு மனுவின் தோள், இடது  கைக்கு அபாவின் தோள். மனுவின் ஒரு கையில் அவர் உபயோகிக்கும் எச்சில் துப்பும் பாத்திரம். மூக்குக் கண்ணாடி கூடு, ஜபமாலை, அத்துடன் அவளுடைய நோட்டுப் புத்தகம். பின்னால் பிரிஜ் கிருஷ்ணா. அவர் அருகில் பிர்லா குடும்பத்தினர் சிலர், மற்றவர்கள், கத்திய வாரிலிருந்து வந்த குழு. கூட்டத்தில் எல்லோருக்கும் ஆச்சர்யம். எப்படி கிழவர் நேரம் தவறினார் என்று. அவரைக் கண்டதும் ''ஓ'' வென்று ஆரவாரம்.
நேரம் கடந்ததால் வழக்கமாக வரும் வழியை விட்டு, குறுக்கு வழியாக புல் தரை கடந்து மேடைப் படி நோக்கி நடந்தார்.
''அபா , இன்று எனக்கு நீ கொடுத்த கேரட்  சரியாக வேக வில்லை. ஆடு மாடு உணவு  தான் எனக்கு,''
''இல்லை தாத்தா இதை கஸ்துரிபா பாட்டி குதிரை உணவு என்பாளே ஞாபகமிருக்கிறதா?'' 
இருவரும் சிரித்தார்கள். 
''மற்றவர்கள் ஏற்காததை நான் ஏற்று உண்பது சிறப்பல்லவா'' என்றார். ரெண்டுபேத்திகளும் தாத்தா கடிகாரம் உபயோகிக்காததை கேலி செய்தார்கள்.
''அது உங்கள் தப்பு. நீங்கள் எனக்கு அப்பப்போ  மணி சொல்லும்போது  எனக்கு எதற்கு கடிகாரம்?. நான் பத்து நிமிஷம் லேட்டானதற்கு நீங்கள் தான் காரணமே!''
''பிரார்த்தனைக்கு நேரம் தவறினது பிசகு. குறித்த நேரத்தில் செய்யவேண்டிய வேலைக்கு குறுக்கே கடவுளே வந்தாலும் காக்க வைக்க வேண்டும். நோயாளிக்கு மருந்து குறித்த நேரத்தில்  கொடுக்க வில்லை யானால் அவன் மரணமடைவான்.''
++++
200 கஜ  தூரத்தில்  170 கஜ தூரம் கடந்தாகிவிட்டது.  6 வளைந்த படிகள் தான் பாக்கி. அதைக் கடந்தால் பிரார்த்தனைத்  திடல்.  அங்கே  எதுவும்  பேசக்கூடாது. 
போலிஸ்காரன் குர்பச்சன் சிங் கும்பலை விலக்கினான். நூற்றுக் கணக்கானோர் சூழ, அதில் இருபது முப்பது பேர் போலிஸ் ஆட்கள். மேடையின் மேல்  படி முன் நின்று இரு கரம் கூப்பி கூட்டத்தை வணங்கினார் கிழவர். அனைவரும் மரியாதையாக வழி விட்டனர். கடைசி படி ஏறிவிட்டார்.
+++
தான் நிற்கும் இடத்திற்கு நேராக அவர் வருவது தெரிந்தது அவனுக்கு. எண்ணத்தை மாற்றிக் கொண்டான். முன்னே இருந்தவர்களை முழங்கையால் இடித்துத்   தள்ளி முன்னேறினான். மற்ற இருவர்கள் தயாராக வழி விட இரு கரம் கூப்பி கிழவரை வணங்கினான். இரு கூப்பிய கரங்களுக்கும் இடையே கைக்கடக்கமான அந்த கருப்பு இத்தாலி நாட்டு பெரெட்டா கைத்துப்பாக்கி! (அட. இதுவும் இத்தாலியா, எங்கேயோ கேட்ட பெயராக இருக்கிறதே!!) ''
''நமஸ்தே காந்திஜி''
 அவன் குரலைத்தொடர்ந்து, மனு பதிலுக்கு வணங்கினாள். காந்திஜியும் பதிலுக்கு வணங்கினார். அவன் குனிந்தான். மனுவுக்கு அவன் அவரது கால்களை வணங்கி முத்தமிடப் போகிறான் என தோன்றியது.  '
'வேண்டாம், அவருக்கு இந்த மரியாதை எல்லாம் பிடிக்காது , நகருங்கள் '' என்று கையால் ஜாடை காட்டியும் அவன் நகரவில்லை.
''அண்ணா, பாபு, ஏற்கனவே பிரார்த்தனைக்கு லேட். ஏன் அவரை தடை செய்கிறீர்கள்?''
 போலீஸ் யாரும் பக்கத்தில் அப்போது இல்லை.
+++
நாதுராம் விநாயக கோட்சே தன் இடக்கையால் மனுவைப் பிடித்து தள்ளினான். அவன் வலக்கரத்தில் துப்பாக்கி. அவள் கையில் வைத்திருந்த பொருள்கள் யாவும் கீழே சிதறின. சில வினாடிகள் மனு அவனை எதிர்த்தாள். அவருக்குத் தேவையான ஜப மாலையைக் கீழே யிருந்து எடுக்க குனிந்தாள். ஒரு வினாடிக்குள் அந்த அமைதிச் சூழலில் காது செவிடு பட  வெடி சத்தம். கோட்சே செலுத்திய துப்பாக்கி ரவைகள் காந்திஜியின் அடிவயிற்றைத் துளைத்தன. மூன்று குண்டுகள் அடிவயிற்றையும் இதயப்பகுதியையும் துளைத்தன. மூன்றாவது குண்டு துளைத்தபோது கூட காந்தி நின்றுகொண்டே இருந்தார். இருகைகளும் கூப்பியபடி இருந்தன.
'' ஹே ராம், ஹே ராம்'' . மூச்சு திணறியது. பிறகு, பிறகு, மெதுவாக அந்த மகா புருஷர் தரையில் சாய்ந்தார். கைகள் இன்னும் கூப்பியே இருந்தன. அஹிம்சா மூர்த்தி பின் எப்படி காட்சி யளிப்பார்?? கண் பிதுங்கி,நாக்கு முன்னே தள்ளி, கை கால் உதைத்துக் கொண்டா நம் போல் இருப்பார்? புகை மண்டலம் சூழ்ந்தது. எங்கும் ஒரே குழப்ப நிலை,அமளி, பயம்,கலவரம் பரவியது. இரு பேத்திகளின் மடியிலேயே தலை சாய்த்து அந்த மகான் கீழே விழுந்தார். முகம் வெளுத்து விட்டது. அவர் மேலே போர்த்தியிருந்த வெள்ளை நிற ஆஸ்திரேலிய கம்பளி செக்கச்ன் செவேலென்று ரத்த நிறம் பெற்றது.
மாலை 5.17 மணி -  மோகன் தாஸ்  கரம் சந்த் என்ற பெயர் வைக்கப்பட்டாலும் இனி அவர் ''மகாத்மா காந்தி''. அவர் இனி இல்லை.
பின்னர் மனு சொன்னது  ''அவருக்கு ஏற்கனவே இன்று தான் கடைசி நாள் என்று தோன்றி இருக்கிறது.  விடிகாலை இன்று அவர் என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?
''என்னை யாராவது சுட்டால் கூட ஒரு முணு முணுப்பும் இன்றி இறைவன் நாமத்தோடு என் மறைவு இருக்கும். நீ பின்னால் உலகுக்குச் சொல் இங்கு உண்மையாக ஒரு சத்தியம் கடைப்பிடித்த மகாத்மா இருந்தார் என்று''
காந்தி என்ற கிழவர், போர்பந்தரிலிருந்து துவங்கி, உலகமெங்கும் நமது தேசத்துக்கு நற்பெயர் தந்து, புகழ் பெற்று, அந்நியனிடமிருந்து நாட்டை மீட்டு, சுதந்திர நாடாக்கி இன்று நம் இஷ்டம் போல் களியாட்டம் ஆட வழி வகுத்தார். அவர் நடந்த பாதை, அசத்தியத்திலிருந்து சத்தியத்துக்கு. இருளிலிருந்து ஒளி மயத்துக்கு, அழிவிலிருந்து அழியாத அமரத்வத்துக்கு. அவர் சொன்னவை நாலு திசையிலும் உண்மை, தர்மம்,சத்யம் எது என்று எதிரொலித்து, நீதியை நிலைநாட்டி அனைவரையும் அவரைத் தெய்வமாக யுக புருஷனாக, அவதாரமாக, மகாத்மாவாக நோக்கச்செய்தது.

A PEACEFUL LIFE

 


இல்வாழ்க்கையில் நல்வாழ்வு.  நங்கநல்லூர்  J K  SIVAN 


''ராமண்ணா,  என்ன  இது  வாழ்க்கை வெறுத்து போயிடுத்து  என்கிறேள் ?  என்ன ஆச்சு உங்களுக்கு?  இப்போதானே  73 ஆகிறது.   போன சனிக்கிழமை  ஆஞ்சநேயர்  வடை கொண்டுவந்து கொடுத்துட்டு என்கிட்டே என்ன சொன்னீர்  ஞாபகமிருக்கா?''

''எவ்வளவோ சொல்றேன் சிவன், எது ஞாபகமிருக்கு, நான் என்ன சொன்னேன், நீங்களே
சொல்லுங்கோ?''

''வாழ்க்கை சுகம்னா  அப்படி ஒரு சுகம் சார். நான்  நூறு வயசு வாழணும்'' னு  சொன்னேள். அப்படி என்ன  சந்தோஷமான விஷயம் ?  என்று கேட்டேன்.  

''என் பிள்ளைக்கு பத்து வருஷம் கழித்து இப்போ தான் அப்பாவாகும் பாக்யம் கிடைச்சிருக்கு. டாக்டர்  மீனாக்ஷி கன்போர்ம் CONFIRM  பண்ணிட்டா.  எங்க  தெருக் கோடி ஆஞ்சநேயருக்கு  வடை மாலை சாத்தினேன்,இந்தாரும் னு எனக்கு ஐந்து கொடுத்தேள்'' அதுக்குள்ளே என்ன விரக்தி?

''ஓ அதுவா, இந்த   உலகத்திலே நடக்கிறது எதுவுமே பிடிக்கலே.   பேப்பரை  திறந்த  எந்த பக்கத்திலேயும் மனசை, மனுஷனை சந்தோஷப்படுத்தற நியூஸ் எதுவுமே காணோம்.  எப்படி திருடலாம், கொள்ளை அடிக்கலாம், பொய்  சொல்லலாம், எங்கெல்லாம் லஞ்சம் ஊழல்.  போலீஸ் ..... இது பார்த்தவுடனே,  ஆசையா குடிச்ச காப்பிகூட  வெளிலே வாயிலெடுக்க வைக்கிறது. 

வீட்டிலே  காய்கறி வாங்க  சின்ன கூடை கொடுத்தா.    எல்லாம் யானை விலை குதிரை விலை. முருங்கைக்கா  வாங்கப்  போனேன். ஒன்ணு 38 ரூபாய். தேங்கா 40 ரூபாய். எங்கேயோ எவனோ கோடி  கோடியாக  நிறைய  சைபரோடு  லஞ்சம் ஊழல் பண்ணிட்டு கார்லே சுகமா போகிறான்.  என் வம்சத்திலேயே யாரும்  ஒரு காலணா லஞ்சம் வாங்கினதில்லே, கொடுத்து கை  சிவந்த குடும்பம் என்கிறான் கேட்டுட்டு கை  தட்ட  கும்பல் அவனே ஏற்பாடு பண்றான். இந்த பாழாப்போன கொரோனா  இயற்கையா இல்லை, செயற்கையா  சீனா செஞ்சு  உலகத்திலே எல்லா இடத்திலேயும் பரப்பினது என்று ஒரு ஜப்பான் விஞ்ஞானி சொல்றான்.  பகவானை திட்றவன்  கோயிலை இடிக்கறவன் , இதெல்லாம்  அறவே எனக்கு பிடிக்கலே, எங்க தாத்தா காலம் இனி வராது, அதனாலே தாத்தா கிட்டேயே போயிடணும்  போல தோண்றது ''  

ராமண்ணா  விரக்தியா பெருமூச்சு விட்டார்.
''ராமண்ணா, ஒரு நிமிஷம் இதை கேளுங்கோ,  உலகம்னா   அப்படித்தான், மாறிண்டே இருக்கும், அது தான் நியதி, எதுவுமே  ரெண்டு  ரெண்டு தான்.  கணவன் X  மனைவி மாதிரி.  எதிரும்  புதிருமா. பகல் x  இரவு,  பிறப்பு x இறப்பு,  ஏழை x  பணக்காரன், ஒரு காசுக்கு ரெண்டு பக்கம்.  ஒரு பக்கம் ராஜா தலை, இன்னொரு பக்கம் அவன் தலையிலே வச்சுக்கமுடியாத பூ.  படிச்சவன் x  படிக்காதவன், ஆஸ்திகன் x  நாஸ்திகன்.. இதுபோல் எத்தனையோ.    சிலபேர் காரணமில்லாமல்  விதண்டாவாதம், பிடிவாதம்,  கர்வம்,  சுயநலமாக  நம்மை அணுகினாலும், அவர்கள் அறியாமைக்கு வருந்தி அவர்களை மன்னிப்போம், மறப்போம்.

நாம்  கருணையோடு, அன்போடு பெரிய மனதோடு நடந்துகொண்டாலும்  தீய எண்ணங் களோடு நெருங்குவார்கள்.  தேள், பாம்பு, பூரான், இயற்கை குணம் போல அது என்று அவர்களிடம் தொடர்ந்து அன்பும் கருணையும் கொள்வோம்.

நாம் நேர்மையாக இருந்தாலும், நமக்கு துரோகம் செய்வான். கிடக்கட்டும். நாம் நேர்மையோடு நடந்து  கொண்டே இருப்போம்.    நாம் சந்தோஷமாக இருப்பதை பார்த்து பொறாமையில் வெந்து கருகுவான். எதிலும் திருப்தியோடு சந்தோஷமாகவே ஒவ்வொரு  வினாடியும் நமக்கு கழியட்டும்.
எவ்வளவு தான் நல்லது செய்தாலும் தூற்றுபவன் தூற்றட்டும். நல்லதே நினைப்போம், செய்வோம்.
என்னிடம் இருக்கும் சிறந்ததை  சந்தோஷமாக  தருவேன்.  அது உலகத்துக்கு சிறந்ததாக இல்லா  விட்டால் எனக்கென்ன?  என்னிடம்  இருக்கிறது அது தான்.   என்  பெஸ்ட் . BEST .  சிறந்ததாக கருதி தானே தந்தேன்.  தரேன்.   அப்படி நினைச்சு தானே   எழுதறேன்.  பிச்சைக்காரனிடம்  ராஜ முழி  எதிர்பார்த்தால் அவன் என்ன  பண்ணமுடியும்?  இருக்கறது அவ்வளவு தான். 
 
நம் உடம்பில் எத்தனையோ  கெட்ட  சமாசாரங்கள் ஒளிந்து கொண்டிருந்தால்  கண்டுபிடித்து அவற்றை வெளி யேற்றி விடுவோம்.  நல்ல  ஆரோக்யமான உடல்நிலை, நல்ல  மனநிலையால் தான் கிட்டும்.  என் ஒவ்வொரு  திசுவிலும்  கிருஷ்ணன் இருந்தால் அப்புறம் என்ன கஷ்டம் எனக்கு?  அவனுக்கு நன்றி சொல்லவே  என் வாழ்நாள்  போதாதே.   மற்றவர்களை பற்றி எனக்கு என்ன கவலை? அப்படி நினைத்தாலும், அவர்களைப்  பற்றிய நினைவு நல்லதாகவே மனதில்படட்டும்.   உருவாகட்டுமே .  அதுவே என் ஆரோக்கியத்துக்கு இன்னொரு கனமான அஸ்திவாரக்கல்.

இந்த உலகை விட்டு நீங்கும்போது நீ என்ன பெற்றாய் என்பதை விட என்ன கொடுத்தாய் என்று தான் கணக்கு பார்ப்பார்கள்.  நான் நிறைய  புஸ்தகங்களை விட்டுச் செல்வேன். அது தான் என் ஆஸ்தி. அதற்காக ஒரு நாளைக்கு 20 மணி நேரம் சந்தோஷமாக மனதிருப்தியாக செலவிட முடிகிறது.. இப்போதைக்கு  அது தான் இந்த நிலை, கிருஷ்ணன் மனது வைத்தால்  சொச்ச காலமும் இப்படியே ஓடி விடாதா?  ஓடணும் என்பது தான்  வேணுகோபாலனிடம் என் வேண்டுகோள்.

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...