Wednesday, September 8, 2021

ULLADHU NARPADHU


 உள்ளது நாற்பது - நங்கநல்லூர்  J K  SIVAN  --

பகவான் ரமணர்.


உலகமும்  உடலும் ஒன்றே 


''உலகைம் புலங்க ளுருவேறன் றவ்வைம்
புலனைம் பொறிக்குப் புலனா – முலகைமன
மொன்றைம் பொறிவாயா லோர்ந்திடுத லான்மனத்தை
யன்றியுல குண்டோ வறைநேரே – நின்ற 6

நன்றாக  புரிந்து கொள்ளவேண்டும்.  பஞ்சகோச தேகத்தால்  நாம் இந்த உலகை அறிகிறோம். அப்படி நாம் காணும் உலகம் பஞ்ச இந்திரியங்கள், ஐம்புலன்கள், விஷயங்களின்  தோற்றம்.  வேறு எதுவும் இல்லை.  பஞ்சேந்திரியம் எனப்படும்  ஐம்புலன்களால் நாம்  எப்படி இந்த உலகை  அனுபவிக்கிறோம்.  உணர்கிறோம்.    காதால் சப்தம், தோலால்  ஸ்பரிசம்,   கண்ணால் ரூபம்,  நாக்கால் ருசி,  ரசம்,  மூக்கினால் கந்தம் என்று  உலகத்தை துளித்துளியாக  உணர்கிறோம்.
இந்த  ஐம்புலன்களால் தானாக  மேலே சொன்ன  அனுபவங்களை பெறமுடியாது.  தேகம்  ஐம்புலன்களின்  எடுபிடி.  புலன்கள் ஒவ்வொன்றையும் இயக்க ஒரு டைரக்டர் தேவை. அவர் தான்  மனம்.  அவர் தான் ஐம்புலன்களின் சக்தியால் நம்மை ஆட்டுவிக்கிறவர்.  உடல்  தான் உலகத்தை அனுபவிக்கிறது. உடல் இல்லையேல் உலகம் இல்லை.உலகம் உடல் ரெண்டுமே ஒன்று தான். மனதின் பிரதிபலிப்பு தான்  உலகம். மனம்  ஐம்புலன்களில் செல்லாவிட்டால்,உலகம் இல்லை.  மனத்தின் செயல்பாடு தான் மனோமயம். 
நாம்  கனவு காண்கிறோமே, அப்போது எங்கெங்கோ போவது போல், எதையோ ருசிப்பது போல், எதையோ கேட்பது போல், எதையோ ஸ்பர்சிப்பது போல், எதையோ முகர்வது போல் காட்சிகள் தோன்றும்போது ஐம்புலன்கள் இல்லாமலே  அல்லவா  அவை நிகழ்கிறது.  இதிலிருந்து என்ன தெரிகிறது?  ஐம்புலன்கள் மனதில் அடக்கம். மனோமயத்தில் அவை உள்ளடக்கியவை. 
ஆழ்ந்த மரக்கட்டை தூக்கத்தில் ஐம்புலன்களும் இல்லை, நான் எனும்  ஜீவன் இல்லை, மனம் இல்லை. ஆத்மா ஒன்றே  அமைதியாக உள்ளது. 
உலகம் தேஹத்தால் அறியப்படுவது.  தேகம் ஐம்புலன்களால் செலுத்தப்படுகிறது. மனம் ஐம்புலன்களை செலுத்துகிறது.  ஆகவே மனம் இன்றியேல் உடலும் இல்லை, உலகமும் இல்லை.? மனோ நாசம் செய்த ஞானிகள்,யோகிகள் சரீரத்துடன் நமக்கு தோன்றினாலும் சரீரம் உலகம் அற்றவர்கள். 
மனம் தான் அவித்யை என்பது. சகல ஸம்ஸார  பந்தத்துக்கும் அது தான் காரணம். அது அழிந்தால்  இயற்கையான ஆனந்தம் தவிர வேறு எதுவுமில்லை. 
எண்ணக்கற்றைகள் தான்  மனம். நாம் அவற்றிற்கு அடிமை. அவற்றை நீக்கி நோக்கினால், எண்ணங்கள்  ஹ்ருதயத்தில் ஒடுங்கினால் , உடலும் உலகமும் காணாமல் போகும்.  ''நான்   நான் '' எண்ணம் தோன்றும்போது, அதை கூர்ந்து கவனிப்பதால்  அதன் ஓட்டம் நின்றுவிடும். மெதுவாக மறைந்து விடும். உலகம் உடல் மறந்து போய், மறைந்து போய்  பரமாத்மா தத்வம் புரியும். 
ஒரு விஷயம் சொல்கிறேன் கவனியுங்கள்:
ரெண்டாம் உலக மஹா யுத்தம் கொடூரமாக  நடைபெறுகிறது. உச்சக் கட்டத்தில்  நடக்கிறது.  ரமணாஸ்ரமத்தில் பத்ரிகை யாராவது  கொண்டு வந்து மகரிஷிக்கு படித்து சொல்வார்கள்.   சில சமயங்களில் பகவானே  பத்திரிகையை புரட்டிப்பார்ப்பார்.   மற்றவர்கள் யுத்தம் பற்றி பேசுவார்கள்.   எங்கு பார்த்தாலும் உலகமுழுதும், ஹிட்லர், முசோலினி, என்ற பெயர்கள் அடிபடும். மகரிஷி எந்த வித சலனமும் இல்லாமல்  யுத்தம் பற்றியே  ஒரு வார்த்தையும் பேசாமல் ஒன்றுமே நடக்காதது மாதிரி அமர்ந்திருப்பார். 
தேவராஜ முதலியார் என்று ஒரு பகவானின்  அணுக்கத் தொண்டர்  ஒருவர் இதை கவனித்துவிட்டு  ''உலகமே  இந்த விஷயத்தில் மும்முரமாக பேசிக்கொண்டிருக்கும்போது எப்படி உங்களால் இந்த கடும் யுத்தம் பற்றி ஒன்றுமே நடக்காதது போல் இருக்க முடிகிறது?  என்று கேட்டார். 
மகரிஷி  ''முதலியாரே யுத்தம் எங்கே நடக்கிறது?  என்னுடைய  உலகத்தில் எதுவுமே நடக்க வில்லை. உங்கள் சித்த வ்ருத்தியால் யுத்தம் என்ற பாவனை  உங்கள் உலகத்தில்  நடக்கிறது.  சித்த வ்ருத்தி இல்லையென்றால்,  மனம் ஹ்ருதயத்தில் ஒடுங்கினால் அங்கே  இருப்பது  ஆத்ம ஞானம் ஒன்று தான். சித்த வ்ருத்தி ஒடுங்கினால் ஸ்ருஷ்டியுமில்லை, உலகமுமில்லை.  அப்புறம் நீங்கள் சொல்கிற யுத்தம் எங்கே  நிகழும்?  மனத்தை அது பிறக்கும் இடத்திலேயே  அடக்கி விட்டால், அது தான் மனோ நாசம்.   அதை அடைந்தவன்  மற்றவர் கண்ணுக்கு  சரீரத்தோடு தெரிந்தாலும்  அவன் உலகம், உடல் ஸ்மரணை  அற்ற  முக்தன்.  ஆத்மாவின் இயற்கைத்  தன்மையான ஆனந்தத்தில்  திளைப்பவன் .
அண்டம், பகிரண்டம், அகிலாண்டம், என்கிறோமே  அது எல்லாமே  தேகத்தில் அடங்கி விடுகிறது... தேஹம்  ஐம்புலன்களின் ஆதிக்கத்தில் அடக்கம்.  இந்த ஐம்புலன்களை ஓடவிட்டு வேடிக்கை  பார்ப்பது  மனம்.  அந்த மனத்தை  அது பிறக்கும் இடத்திலேயே அடங்கச்  செய்து. துறப்பவன் தான் உண்மையான சந்நியாசி, யோகி. அவனைப்  பொறுத்தவரை  அவனது ஆத்மாவுக்குள் தான் உலகமோ உடலோ ஐக்கியமான வஸ்து .  வெளியே  எதுவுமில்லை.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...