Tuesday, September 28, 2021

PESUM DEIVAM

 பேசும் தெய்வம்   -  நங்கநல்லூர்  J K  சிவன் 


பையனின் ஆசை 

எங்கோ படித்த ஒரு விஷயத்தை சுருக்கித்  தருகிறேன்.
மஹா பெரியவா என்றாலே  ஒரு தனித்வம்.     நடை உடை பாவனை, பேச்சு, செயல் எல்லாவற் றிலுமே தெய்வம் மனிதனிடமிருந்து வித்யாசமாக தான்காட்சி தரும்.

தேனம்பாக்கத்தில் மஹா பெரியவா இருந்த ஒரு சமயம் அது.   அதிர்ஷ்ட வசமாக பெரியவாளுக்கு சற்று  ரெஸ்ட்  கிடைத்தது  பக்தர்கள் கூட்டம் வந்து போய்விட்டது. அடுத்து எவராவது வருவதற்குள் பெரியவா சில நிமிஷங்கள்  விஶ்ராந்தியாக கிணத்தடியில் அழகாக அவருக்கே உரிய பாணியில் உடலை குறுக்கிக் கொண்டு, கால்களை பின்னிக் கொண்டு உட்கார்ந்துவிட்டார். அனேகமாக எல்லாரும் ப்ரஸாதம் வாங்கிக் கொண்டு போயாச்சு இல்லையா.  யாரும் வந்தாலும் வராவிட்டாலும் மஹா பெரியவாளின் அனுக்ரஹம்  எங்கோ  யாருக்கோ, எப்போதுமே, கிடைத்துக் கொண்டே இருக்குமே. அது தானே  அவர் ஸ்டைல்.
பெரியவா  கண்களில்  ஒரு நிழல் தென்பட்டது. 
''அங்க யாரோ நிக்கறாப்ல இருக்கே! என்னன்னு கேளு”
யாரோ  ஒரு  பையன்  கண்களில் பக்தி பரவஸம் மின்ன, இரு கைகளையும் தலைக்குமேல் கூப்பிக் கொண்டு தன்னை மறந்த நிலையில் பெரியவாளை தர்ஶனம் பண்ணிக் கொண்டிருந்தான்.
அணுக்க தொண்டர்  அவனிடம் சென்றார்.
''என்னப்பா, பெரியவா தர்ஶனத்துக்குத்தாநீ வந்தே? கிட்டக்க போய் நன்னா தர்ஶனம் பண்ணிட்டு, நமஸ்காரம் பண்ணிக்கோப்பா! …”
''பையன்  பார்வை  பெரியவா  மேல்  ஆணி அடித்திருந்தது.  அதை விட்டு நகரவில்லை!  மடத்து தொண்டர்  கேட்டது காதில் விழுந்ததா இல்லையா?''
''உன்னைத்தாம்பா கேக்கறேன்,  உனக்கு என்ன வேணும்? பெரியவா கிட்டக்க போப்பா. போய் அவர்கிட்டே கேளு .”
” நானும்  பெரியவா மாதிரி ஆகணும்!!”
''அட  ஈஶ்வரா !………
“இங்க பாருப்பா,இந்த மாதிரில்லாம் ‘தத்துபித்து‘ன்னு பெரியவாட்ட போய் கேட்டுடாதே. என்ன? புரிஞ்சுதா? ”
''என்ன  சொல்றேள்  நீங்க.  பெரிய சக்ரவர்த்தி கிட்ட போய், உப்பு, புளி வேணும்னா கேப்பா?…பகவான்  கிட்ட பகவானையே கேக்காம, அழியற ஶரீர ஸௌக்யங்களை, ஸுக போகங்களையா கேப்பா? நான் கேட்டதுலே என்ன தப்பு ?''
“ஸாதாரணமா எல்லாரும் கேக்கறா மாதிரி.  வேலை,  ப்ரமோஷன், கல்யாணம் கார்த்தி, வ்யாதி சொஸ்தம், படிப்பு, பதவி…ன்னு இப்டித்தான் எல்லாரும் கேட்பா ..என்ன? ஸரியா?…”
“ஒங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோதானா '' என்பது போல் பையன்  தொண்டரைப்  பார்த்தான்.
“வா…. வந்து நமஸ்காரம் பண்ணிக்கோ!.”
 தொண்டரோடு  பெரியவா முன்னால்  சென்றான்.  பெரியவாளுக்கு நான்கு முறை நமஸ்காரம் பண்ணினான். பேச்சே வரவில்லை! கண்கள்  பெரியவாளின் முகத்தையே ஆனந்தமாக பருகிக் கொண்டிருந்தன!. 
பையன்  ரெண்டுங்கெட்டானாச்சே.  பெரியவா கிட்டே  வாயை திறந்து  ராபணா ன்னு    ஏதாவது ‘ஏடாகூடமாக‘  பேசிடப்போறானே...  தொண்டருக்கு கவலை.   தானே  பேச்சை ஆரம்பித்தார். …
“இந்த பையனுக்கு.. பெரியவா அனுக்ரஹம் வேணுமாம்……தொண்டர்  பெரியவாளுக்கு காது கேட்க உரக்க சொன்னார்.…”
பெரியவா  பையனுக்கு ப்ரஸாதம் குடுத்தார். சென்றுவிட்டான்.
அப்பாடா! நல்லவேளை ... பையன் வாயை திறக்காமல் போய்விட்டான்... தொண்டர் நிம்மதியாக மூச்சு விட்டார்.   ஆனால்  பெரியவா  அவரை கிட்டே அழைத்தார். 
” ஏண்டா…அந்த பையன் கிட்டே ஏதோ  ரொம்ப நேரமா பேசிண்டிருந்தியே?  என்ன சொன்னான்?”
“இல்ல பெரியவா  அவன் ரெண்டுங்கெட்டான்.. அசடாட்டமா  பேசினான்.
'' அப்படி என்ன பேசினான் ?'
''அவனுக்கு…. பெரியவா மாதிரி தானும்  ஆகணுமாம்! ……”
“நீ என்ன பதில் சொன்ன?...”
“…………….”
“சொல்லு   நீ  என்ன  பதில் சொன்னே?''
இந்த மாதிரில்லாம் தத்துபித்துன்னு பெரியவாட்ட கேக்கப்டாது….ன்னு சொல்லிட்டியோ?”
ஸுமார் 25 அடி தள்ளி நின்று பேசியதுதுல்லியமாக  பெரியவா காதில் விழுந்திருக்கிறது..!!!
 எல்லா தெசைலயும் கோடிகோடியா காதுகளும், கண்களும், கைகளும் வெச்சிண்டு, நம்ம முன்னால, ஒரு ‘ஸ்வாமிகள்’னு ஒரு வேஷம் போட்டுண்டு, காஷாயம் கட்டிண்டு உக்காந்துண்டு இருக்காரே!… இவருக்கா காது கேக்காதுன்னு உரக்க பேசறேன். இப்போ…. வகையா மாட்டிண்டேனே!”
“ஆ……..மா…..பெரியவா”
‘அப்பாடா! எப்படியோ உண்மையை   பெரியவா கிட்டே  சொல்லியாச்சு. !
நீ…அப்டி சொல்லியிருக்கப்டாது.! அவன், ஏன் அப்டி கேட்டான்னு ஒனக்கு தெரியுமோ? ஒனக்கு என்ன தோணியிருக்கும்?…… அவன், என்னை மாதிரி பீடாதிபதியா ஆகணும்னு ஆசைப்படறதா நெனைச்சிண்டியோ?… குரு பீடத்ல ஒக்காந்துண்டுட்டா….. எல்லாரும்… ப்ரைம் மினிஸ்டர்லேர்ந்து… க்ரைம் மினிஸ்டர் வரை வந்து நமஸ்காரம் பண்ணுவா.! காணிக்கை குடுப்பா….! ஸாமான்ய விஷயத்த சொன்னாக் கூட, அத, வேத வாக்கா எடுத்துண்டு பேப்பர்ல போடுவா…! இப்டி நெனச்சு ஆசைப்பட்டுட்டான்னு தோணித்தோ?..……”
தொண்டர்  கைகட்டி வாய் பொத்தி நின்றார். பெரியவா தொடர்ந்தார். 
“அதையே.. அந்த பையன் வேற விதமா ஏன் ஆசைப்பட்ருக்கக் கூடாது? இவர் பெரிய ஞானி.! பக்தர்! வேதஶாஸ்த்ர புராணங்கள்ள கரை கண்டவர்.! இவர் பேரை சொல்லிண்டு நெறைய நல்ல கார்யங்கள் நடக்கறது! கோவில் கும்பாபிஷேகங்கள் நடக்கறது! க்ராமியக் கலைகள் அபிவ்ருத்தி யாறது..! இப்பிடில்லாம் இருந்தாலும், அவர் கொஞ்சமும் கர்வமில்லாம… தாமரை எலை தண்ணீர் மாதிரி இருக்கார்….! நானும் அந்த மாதிரி ஆகணும்! ஞானியா ஆகணும்!…ன்னு நெனைச்சிருக்க லாமில்லியோ?….”
அடாடா  நம்மால் இப்படி நினைத்துப்பார்க்க முடியுமா. அது தான் பெரியவா.
சரி  நீ “போ ! போயி…. அந்த பையன கூட்டிண்டு வா”
எங்க போய் தேடறது? எங்க போனானோ?
நாலாபுறமும் தேடிக் கொண்டு போனார்.
அதோ! அப்பாடா! ஶிவன் கோவிலை ப்ரதக்ஷிணம் பண்ணிக் கொண்டிருந்தான்!
“கொழந்தே! பெரியவா கூப்டறா…. வாப்பா..”
அவிழ்த்து விட்ட கன்னுக்குட்டி போல் தாயை தேடிக் கொண்டு ஓடினான்…… அந்தக் குழந்தை.
ஏறக்குறைய ஐந்து நிமிஷம் பெரியவாளை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ! பெரியவாளும் நடுநடுவே அவனை கடாக்ஷித்தார் …….நயன தீக்ஷை நல்கினார்..….
“பெரியவா கை சொடுக்கி ஏதோ குறிப்பாக சொல்ல, தொண்டர்  ஒரு தட்டில் ஒரு பழத்தை வைத்து பெரியவாளிடம் கொடுத்தார்.  பெரியவா தன்  கையில் பழத்தை வைத்து  உறுத்திக்கொண்டே ஏதோ கண்மூடி சிந்தித்தார்.  ஒரு அம்மாவானவள், தன் குழந்தையின் கையில் ஸாதத்தை பிசைந்து போடுவது போல, சில நிமிஷங்கள் பெரியவாளின் திருக்கரத்தில் இருந்த [ஞான] பழம், பையனுக்கு பெரியவாளாலேயே அவனுடைய கையில் அனுக்ரஹிக்கப்பட்டது!
அரிய ஞானப்பழமாக அதை அன்போடு எடுத்துக்கொண்டு, நமஸ்கரித்துவிட்டு வேகமாக போய் விட்டான் அந்த பையன் , இல்லை  யாரோ ஒரு  ஞானி! 
மஹான்கள் தங்கள் கைகளால் நமக்கென்று கொடுத்த எதையும் ஸாதாரணமாக உடனே பங்கு போட்டு யாருக்கும் கொடுக்கக்  கூடாது.  அது தான் உபதேச உத்தமம்! இது ஸுயநலமில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, மஹான்கள்  ஸங்கல்பம்  செய்து  நமக்கு தனியாக  கொடுக்கப்பட்டது.

கர்மாவை கழிக்க பூமியில் பிறந்தாச்சு! கஷ்டமில்லாம ஓரளவு ஸௌகர்யமான வாழ்க்கை அமைஞ்சாச்சு! எல்லாத்துக்கும் மேல, கஷ்டமான ஜீவிதமோ, ஸுக ஜீவிதமோ, மஹா மஹா அவதாரமான பெரியவாளோட தர்ஶனமோ, ஸ்மரணமோ நிறையாவே கிடைச்சாச்சு! அவர் மேல அப்படியொரு அன்பும், பிடிப்பும் வந்தாச்சு! அவர் உபதேஸிப்பதை கடைப்பிடிக்கும் ஸௌகர்யமும் இருக்கு! பெரியவாதான் பகவான், காமாக்ஷி, ஶிவன், நாராயணன், பரப்ரஹ்மம் எல்லாமே .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...