பேசும் தெய்வம்: நங்கநல்லூர் J K SIVAN -
70 மஹாலக்ஷ்மி பெற்ற மஹா பெரியவா
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு பல நூறு ஆண்டுகள் பல ராஜ்யங்களாக பிரிந்து இருந்தது. அப்படி ஒன்று தான் திருப்பதி அருகே வேங்கடகிரி ராஜ்ஜியம். அதற்கு ஒரு ராஜா வெள்ளைக் காரர்கள் காலத்திலேயே இருந்தார். அந்த ராஜா மஹா பெரியவா திருப்பதி வந்திருப்பதை அறிந்து வேங்கடகிரி வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததை பெரியவா ஏற்றார். 1932ம் வருஷம் ஏப்ரல் 24ம் தேதி வேங்கடகிரி விஜயம். ஊருக்கு வெளியே பெரிய கூட்டமாக பக்தர்கள் கூடி வரவேற்றனர். அங்கே ஒரு சங்கரமடத்தில் பெரியவா தங்கினார். அதை கட்டியவர் தர்ப காளஹஸ்தி சாஸ்திரிகள். ஒவ்வொரு வருஷமும் அங்கே சங்கர ஜெயந்தி விசேஷமாக கொண்டாடப்படும். 1932 வருஷ சங்கர ஜெயந்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டதற்கு காரணம் மஹா பெரியவா விஜயம் தான். வேங்கடகிரி மஹாராஜா குடும்பம், சமஸ்தான சிப்பந்திகள்,பக்தர்கள் அனைவரும் பாதபூஜை, பிக்ஷா வந்தனம் செய்து பெரியவா ஆசி பெற்றார்கள். கிட்டத்தட்ட மூன்று வாரம் பெரியவா வேங்கடகிரியில் இருந்து எல்லா பக்தர்களுக்கும் பரம திருப்தி அளித்தார்.
வேங்கடகிரியிலிருந்து விஜயம் தொடர்ந்த மஹா பெரியவா அங்கிருந்து பூண்டி, வடமலைப் பேட்டை,பதிறேடு, ஜோகுல மல்லாவரம், புங்கலூர் வழியாக மீண்டும் திருப்பதி வந்து சேர்ந்தார். மனா நிறைவோடு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் தரிசனம் செய்தார். அன்று பௌர்ணமி. பிறகு மலை இறங்கி திருச்சானூர் வந்து ரெண்டு நாள் தாங்கினார். அலமேலு மங்கா தாயார் தரிசனம். 22ம் தேடி புத்தூர் விஜயம் செய்தார். புத்தூரில் 15நாள் முகாம். கைலாஸ கோனா தீர்த்தத்தில் ஸ்னானம் .இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசம். யாருக்குமே அங்கிருந்து அகல மனம் வராது. சிறிய நீர்வீழ்ச்சிகளோடு இன்னும் ரெண்டு கூட அங்கிருந்தது. சதாசிவ கோனா, அம்மவாரு கோனா என்று அவற்றிற்கு பெயர். அங்கேயும் ஸ்னானம் செய்தார்.
மஹா பெரியவா புத்தூரி இருந்த ரெண்டு வார காலமும் தக்க வசதியான ஏற்பாடுகள் செய்தவர் ஆனம் குப்புஸ்வாமி நாயுடு , G. ரெங்கையா ரெட்டி மற்றும் சில பிரமுகர்கள். அருகே உள்ள புக்கா BUGGA என்கிற ஊருக்கு வந்து வ்யாஸ பூஜை ஏற்கவேண்டும், சாதூர் மாஸ்ய வ்ரதம் கழிக்க வேண் டும் என்று என்று வேண்டினார்கள்.
1932ம் வருஷம் ஜூன் மாதம் 4ம் தேதி மஹா பெரியவா கார்வேட் நகரத்துக்கு விஜயம் செய்தார். நான்கு நாள் அங்கே தங்கி இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். கார்வேட் நகருக்கு ஒரு ராஜா இருந்தார். அவர் பெரியவாளை வரவேற்று தன்னுடைய லட்சுமி விசால அரண்மனையில் தங்குவதற்கு சக்லயேற்பாடுகளும் செய்தார். இந்த ஊரிலும் ராஜ குடும்பத்தோடு பொதுமக்களும் பாத பூஜையில், பிக்ஷா வந்தனத்தில் கலந்துகொண்டார்கள். ராஜா ஒரு பெரிய வெள்ளி தாம்பாளத்தை , ஸஹஸ்ரதாரா அபிஷேக பாத்திரத்தை சந்திரமௌலீஸ்வரர் பூஜைக்கு அளித்தார். பெரியவா ராஜாவுக்கு ஆசீர்வாதம் பிரசாதம் வழங்கியபின் புறப்பட்டார்.
சித்தூரில் நகரி என்று ஒரு இடம். அங்கே பெரியவா வந்து சேரும்போது கும்பகோணம் காமகோடி மடத்திலிருந்து ஒரு தந்தி அவருக்கு வந்து சேர்ந்தது. மடத்து மானேஜர் அனுப்பி இருந்தார். அது ஒரு துயரச் செய்தி.
மஹா பெரியவா பூர்வாஸ்ரம அம்மா மஹாலட்சுமி அம்மாள் கும்பகோணத்தில் 1932 ஜூன் மாதம் 14ம் தேதி தேஹ வியோஹம் அடைந்தார் என்று செய்தி வந்திருந்தது. அன்று சுக்ல ஏகாதசி.
செய்தி வந்த போது மஹா பெரியவா சமஸ்க்ரித பண்டிதர்களோடு வேதாந்த சம்பாஷணையை ஈடுபட்டுக்கொண்டிருந்தார். ஒரு ஆச்சர்யமான விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்:
மஹாபெரியவாளோடு யாத்திரையில் வந்த மடத்து அதிகாரி கையில் தந்தியை வைத்துக் கொண்டு மஹா பெரியவா இருக்கும் இடத்துக்கு தயங்கி தயங்கி வந்தவர் அவர் கவனைத்தை ஈர்க்க முயன்றார். அவரைப்பார்த்த மஹா பெரியவா ''என்ன தந்தி வந்திருக்கா? கும்பகோணத்திலிருந்தா ? '' என்று கேட்டார்.
மானேஜர் குனிந்தவாறே ஆமாம் என்று தலையை ஆட்டினார்.
சில வினாடிகள் மௌனம். பிறகு பெரியவா அவரோடு சம்பாஷித்துக் கொண்டிருந்த பண்டிதர்
களிடம் ''ஒரு சன்யாசி தன்னுடைய பூர்வாஸ்ரம தாயார் காலகதி அடைந்துவிட்டார் என்று அறிந்ததும் என்ன செய்யவேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது?''
மேனேஜர் வந்து நின்றது, பெரியவா அவரோடு பேசியது எல்லாம் கேட்ட பண்டிதர்களுக்கு விஷயம் விளங்கிவிட்டது. அவர்கள் சற்று திகைத்து இருந்தார்கள். அந்த நேரம் மஹா பெரியவா எழுந்தார். விடுவிடுவென்று நடந்தார். ரெண்டு மைல் தூரத்தில் ஒரு சிறு நீர்வீழ்ச்சி அதை நோக்கி நடந்தார். கூடவே பக்தர்கள் பின் தொடர்ந்து சென்றார்கள். எங்கும் ஹரஹர சங்கர, ஜயஜய சங்கர சப்தம் தான் ஒலித்தது. மஹா பெரியவா அந்த நீர் வீழ்ச்சியில் ஸ்நானம் செய்த பெரியவாவின் மனத்தில் ஓடிய எண்ணங்கள் நமக்கு அறிய வாய்ப்பில்லை. கூடச்சென்ற மற்றவர்களும் மெளனமாக அந்த நீர் வீழ்ச்சியில் ஸ்நானம் செய்தார்கள். மட அதிகாரிகள் வெள்ளி தங்க காசுகளை வேத பண்டிதர்களுக்கு தானம் செய்தார்கள்.
மஹா பெரியவா மனதில் அம்மாவைப்பற்றிய எண்ணம் எழுந்தது நமக்கு தெரியாவிட்டாலும் அந்த பேசும் தெய்வத்தை பெற்ற புண்யவதி மஹாலக்ஷ்மி அம்மாளை பற்றி நாம் சற்று நினைப்போம்:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு-கும்பகோணம் பாதையில் 5 கி.மீ. தூரத்தில் அருமையான ஒரு சிறு கிராமத்தின் பெயர் ஈச்சங்குடி. காவேரிக்கு வடகரையில் உள்ளது. மிகப்பழைய வீடுகளை சிதில நிலையில் கொண்ட இந்த ஊரில் ஒரு வீடு பிரசித்தம். ஈச்சங்குடியில் அக்ரஹாரத்தில் உள்ள அந்த வீடடியில் தான் மஹா பெரியவாளின் தாயார் மஹாலக்ஷ்மி அம்மாள் பிறந்தாள். நாகேஸ்வர சாஸ்திரிகளின் புத்ரி. வேதம் அத்வைதம், உபநிஷம் எல்லாம் நன்றாக கற்று தெரிந்த 18 வயசு சுப்ரமணிய அய்யருக்கு 7வயது மஹாலக்ஷ்மி மனைவியானாள்.
சுப்ரமணிய ஐயர் மஹாலக்ஷ்மி அம்மாளின் ரெண்டாவது பிள்ளை தான் சுவாமிமலை முருகனை வேண்டி வைத்த பெயர் ஸ்வாமிநாதன். சரியான பெயர். பன்னிரண்டு வயசில் ஸ்வாமிநாதன் சன்யாசியாகி ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி எனும் 68 வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆன நமது மஹா பெரியவா.
சுப்ரமணிய ஐயர் மஹாலக்ஷ்மி அம்மாளின் ரெண்டாவது பிள்ளை தான் சுவாமிமலை முருகனை வேண்டி வைத்த பெயர் ஸ்வாமிநாதன். சரியான பெயர். பன்னிரண்டு வயசில் ஸ்வாமிநாதன் சன்யாசியாகி ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி எனும் 68 வது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகதகுரு ஆன நமது மஹா பெரியவா.
தந்தைக்கு உபதேசம் செய்தவன் பெயரை ஜகத்துக்கெல்லாம் உபதேசம் செய்யப் போகிறவருக்கு வைத்தது எவ்வளவு பொருத்தம்.
1932ல் ஜூன் 14 அன்று ஆந்திராவில் நகரி என்னும் ஊரில் மஹா பெரியவா முகாமிட்டி
ருந்தபோது தான் தாயார் மஹா லட்சுமி அம்மாள் காலமான செய்தி வந்தது. தாய்க்கு ஸ்நானம் செய்து விட்டு பிராமணர்களுக்கு தானம் வழங்கினார். அதோடு அந்த சந்நியாசி தன்னைப் பெற்ற தாய்க்கு ஒரு சந்நியாசியின் கடமையை முடித்தார். அப்போது தான் அவர் மனதில் ஒரு எண்ணம் உதயமாயிற்று. தனது தாய் பிறந்த பழைய வீட்டை ஈச்சங்குடியில் ஒரு வேத பாடசாலையாக்கினால் என்ன? வேத சப்தம் ஒலிக்கட்டுமே . இந்த எண்ணம் பூர்த்தியாக பல வருஷம் ஆகியது. எண்ணம் எப்போது செயலாகியது?
1993ல் ஒருமுறை பெங்களூர் ஹரி என்ற பக்தர் தரிசனத்துக்கு வந்தபோது மகா பெரியவா " நீ ஈச்சங்குடி கச்சபுரீஸ்வரர் கோயிலை புனருத்தாரணம் பண்ணப் போறியா?
''பெரியவா அனுகிரஹத்தோடு அப்படி ஒரு எண்ணம் இருக்கு ''
''ரொம்ப சந்தோஷம். நிச்சயம் அது பூர்த்தியாகும். அங்கே தான் நான் சின்ன வயசிலே அம்பாளை காருண்ய வல்லியா , கச்சபுரீஸ்வரரோடு நிறைய தரிசனம் பண்ணி இருக்கேன். வேதம் எல்லாம் கத்துண்டேன். ஞாபகம் இருக்கு '' என்று மஹா பெரியவா சிரித்தார்.
''சீக்கிரமே ஆரம்பிக்க ஏற்பாடு பண்றேன். எல்லாம் பெரியவா ஆசீர்வாதம் அனுக்கிரஹம்''
''நான் உன்னை ஒண்ணு கேட்கட்டுமா. எனக்கு உபகாரம் பண்ணுவியா?''
''மஹா பெரியவா ஆக்ஞா எதுவா இருந்தாலும் அதை நிறைவேற்றுவேன் பெரியவா''
''ஸ்ரீ காருண்யவல்லி சமேத கச்சபுரீஸ்வரர் அனுக்கிரஹம் உனக்கு கிடைக்கட்டும். நான் என் பூர்வாஸ்ரம தாயார் பிறந்து வளர்ந்த ஒரு பழைய வீடு ஈச்சங்குடியிலே இருக்கே உனக்கு தெரியுமா? அதை குழந்தைகளுக்கு வேதம் கத்துக்கொடுக்கிற பாடசாலையா புனருத்தாரணம் பண்ணனும் னு மனசிலே வெகுகாலமா ஒரு எண்ணம். அங்கே வேதம் என்னிக்கும் ஒலிக்கணும். நாலு பேருக்கு ஊரிலே உபயோகமான இடமாக அதை மாத்தணும்''
ஹரி உணர்ச்சி வாசத்தோடு கண்களில் ஆனந்த கண்ணீர் வடிய ''மஹா பெரியவா, இது எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம்! என் பூர்வ ஜென்ம புண்யம். உடனே அதற்கு செயல்படறேன்''
இத்தனை வருஷம் எவரிடமும் சொல்லாத மனதில் தேக்கி வைத்திருந்த ஒரு எண்ணத்தை மஹா பெரியவா சொன்னதற்கு காரணம் இருந்திருக்கிறது. அந்த பழைய வீட்டை அப்போதைய உரிமையாளரிடம் பேசி வாங்க வேண்டும், இடித்து பாடசாலை கட்ட ஒரு வருஷமாக ஆகும். தனது வாழ்நாளில் அங்கே வேத பாடசாலை நிறுவிய சேதி காதில் விழவேண்டும் என்பதற்காக காத்திருந்தார்.
அந்த பழைய வீடு உரிமையாளரிடமிருந்து விலை பேசி வாங்கப்பட்டு பக்தர்களின் ஒத்துழைப் போடு விரைவில் பாடசாலையாகியது.
1994 ஜனவரி 8 உலகம் மஹா சோகத்தில் ஆழப்போகிறது என்று அந்த காலை வேளை ஒருவருக்கும் தெரியாது. உடல் நலம் ஒத்துழைக்காததால் பக்தர்களுக்கு தரிசனம் தர இயலவில்லை. தியானத்தில் ஈடுபட்டார். அருகே இருந்தவர் உரக்க காதில் சொன்னார்:
''பெரியவா பெங்களூர் ஹரி தரிசனம் பண்ண வந்திருக்கார்''
'' யாரு பெங்களூர் ஹரியா? எங்கிருந்து?
''ஈச்சங்குடியிலிருந்து , பெரியவாளுடைய அப்பா அம்மா படம், பாதுகை கொண்டு வந்திருக்கார்''
''அழைச்சுண்டு வா''
வெள்ளிப் பாதுகைகளை காலில் மெதுவாக அணிந்துகொண்டார். ஹரிக்கு ஆசீர்வாதம் பண்ணினார்.
''பெரியவா உங்க அனுகிரஹத்தோடு ஈச்சங்குடியிலே அந்த இல்லத்தில் பாடசாலையை ஆரம்பிக்க நாள் குறிச்சாச்சு. பத்திரிகை வெளியிடணும் . பெரியவா கையாலே தொட்டு
ஆசிர்வாதத்தோடு ஆரம்பிக்கணும்
புன்னகையோடு பெரியவா அந்த பாடசாலை ஆரம்ப விழா பத்திரிகையை வாங்கிப் படித்தவர்,
தன்னுடைய பெற்றோரின் புகைப்படத்தைப் பார்த்து விட்டு கண்களில் ஒற்றிக் கொண்டார். பிறகு தன்னுடைய பாதுகைகளை ஹரியிடம் கொடுத்தார்.
"இந்தப் பாதுகைகளை எடுத்துண்டு போ! ஈச்சங்குடி வேத பாடசாலையில வை. நன்னா நடக்கும்!' என சொல்லாமல் சொல்லி, ஆசி வழங்கினார்.
No comments:
Post a Comment