Thursday, September 23, 2021

ulladhu narpadhu

 உள்ளது நாற்பது -  நங்கநல்லூர் J K SIVAN---

பகவான் ஸ்ரீ ரமணமஹரிஷி.

13.  தங்கம் ஆபரணமாகிறது. 

''ஞானமாந் தானேமெய் நானாவா ஞானமஞ்
ஞானமாம் பொய்யாமஞ் ஞானமுமே – ஞானமாந்
தன்னைன்றி யின்றணிக டாம் பலவும் போய்மெய்யாம்
பொன்னையன்றி யுண்டோ புகலுடனா – னென்னுமத்'' 13

மறுக்கவே முடியாத  பேருண்மை எது வென்றால்  ஞானஸ்வரூபமாகிய  ''நான்'' எனும் ஆத்மாவாகிய ஸத்யம். மற்ற ஸ்வரூபங்கள் தோற்றங்கள் எல்லாமே மாயை. பொய்யானவை. எல்லா அஞ்ஞான வஸ்துக்களும் தோற்றங்களும்  ஆத்மாவை சுற்றியே உள்ளவை.   நவரத்ன கற்கள் ஜொலித்தாலும் , கண்ணைப்பறித்தாலும்  தங்கக்கம்பி இல்லாமல் அவை தனித்து நிற்கமுடியுமா? தங்கம் கண்ணில் படாது. பளபளக்கும் கல் தான் கண்ணில் பட்டு நம்மைக் கவரும். அது போல்  உள்  நின்று ஒளிரும் ஆத்மா நமக்கு தெரிவதில்லை. ஒவ்வொருவரும்  ''தான்''  தான் அந்த ஆத்மா வேறொன்றுமில்லை என்று தானாகி அனுபவிப்பது தான்  ஸத்யமான  தத்பாவம். ஆத்ம ஸ்வரூபம். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை.
மனதால் அறியும்  வெளி உலக  விஷயம் எல்லாமே  அஞ்ஞானம் தான்.    அந்தர்முகமான ஆத்ம விசாரம் தான் உண்மை ஸத்யமான ஞானத்தை தருவது.  பொய்யை மெய்யென்று நம்புகிறோம். சூரியனை மேகம் மறைக்கிறது.  அப்படி மறைக்கும் மேகத்தை அறிய உதவுவதே சூரியனின் ஒளி தான். அதுபோல்  காணும் வெளியுலக விஷயங்களுக்கும் ஒளிந்திருப்பது ஆத்மஞானம் எனும் ப்ரம்மம் தான்.  நெக்லஸ் சங்கிலி வளையல் தோடு என்று பல ரூபத்தில்  நகைகள், ஆபரணங்கள் கண்ணுக்கு தெரிந்தாலும் அதற்கெல்லாம் ஆதாரம்  தங்கம் தான். அது தெரிவதில்லை, புரிவ தில்லை. ஆனால் இருக்கிறது என்று அறிவு சொல்லும்.   நகையை செயகிற  தட்டானுக்கும்,  நகையை திருடும்  திருடனுக்கு  ஆபரணம் கண்ணில் மனதில் கிடையாது. அதில் உள்ள தங்கம், அதன் மதிப்பில் தான் கவனம். அதுபோல் ஞானிக்கு எதிலும் உள்ள பிரம்மத்தின் மேல்  தான் ஈர்ப்பு.
ஒரு கிராம வாசி படிக்காதவன்  ரமணரை தரிசிக்க வந்தபோது ''சாமி, வாழ்க்கையிலே  ரொம்ப  கஷ்டம் துக்கம் இருக்குதுங்க''  என்று பெரிய லிஸ்டாக தனது கஷ்டம், துக்கங்களை கூறினான். எல்லாவற்றையும் கேட்ட  மகரிஷி,  ''நீ  அயர்ந்து  தூங்கும்போது உன் துக்கம் கஷ்டம், வலி எல்லாம் எங்கே போயிற்று.? அதேபோல் விழித்துக்கொண்டிருக்கும்போதும்  அந்த நிலையை எப்போதும் மனதில் நிறுத்திக் கொள்ள முயற்சி செய். துன்பம் இருக்காது.''  சிறிது நேரம் அவர் அருகே உட்கார்ந்திருந்த அந்த மனிதன் எழுந்து  சென்றான்.  இதைப்பார்த்த ஒரு  படித்த பக்தர்  ''சுவாமி உங்கள்   பிரம்மோபதேசத்தை பாமர மக்களுக்கும் சொல்கிறீர்களே அவர்கள் எதிர்பார்ப்பது உலக வாழ்வில் படும் துன்பத்துக்கு தானே வழி தேடுகிறார்கள்''  என்றார் .  அதற்கு உங்கள் பரமார்த்திக உபதேசம் உதவுமா?
இதோ பார்  அப்பா . ஒரு அறையில் ரெண்டு பேர் தூங்குகிறார்கள்.  ஒருவன் கனவில் அவன் வீட்டை கொள்ளை அடித்து திருடன் எல்லாவற்றையும் மூட்டை கட்டிக்கொண்டு ஓடுகிறான். கனவு கண்டவன் தூக்கத்தில் திருடனைப் பிடி  ஓடறான் பிடி பிடி என்று கத்துகிறான்.  மற்றொருவன் தூக்கம் கண் விழித்து ஓடினால் திருடனை பிடிக்க முடியுமா.  திருடனை பிடிக்க தூங்குபவனை  எழுப்பினால் கொள்ளையுமில்லை, திருடனும் இல்லை, அவன் ஓடவும் இல்லை, எதற்கு யாரை ஓடிப்பிடிக்கவேண்டும்?   பாமரனோ பண்டிதனோ தனது துன்பம் தீர  ஆத்ம ஞானம் நாடினால் விலகுமே. 
 
புத்தி எப்போதும்  தானே பிரச்னைகளை உருவாக்கி, அவைகளுக்கு தீர்வு காண கஷ்டப்படுகிறது. பிரச்னைகளுக்கு  தீர்வு தேடவேண்டாம்.  பிரச்னைகளை விட்டுவிட்டாலே போதும்.  மறைந்துவிடும்.உலகத்தில்  வெறுப்போ, விருப்போ உள்ளதால் தான் சித்தத்தில் உணர்ச்சிகள் தோன்றுகிறது. இதற்கு பின்னால்  எப்போதும் இருப்பது சித் . தங்கம் ஆபரணமாக கதை இது தான். சமுத்திரம் நீரால் ஆனது. அதன் மேல் அலை, குமிழிகள், நீர்த்திவலை, நுரை எல்லாம்  நீரின்  வெளிப்பாடுகள். தனித்தனியாக வஸ்துகளை பார்த்து இன்ப துன்பங்களை நாம் அனுபவிக்கிறோம்.
 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...