எனது ஆச்சார்யர்களில் சிலர் - நங்கநல்லூர் J K SIVAN
முதன் முதலில் எனக்கு ஸ்லேட் எனும் பலகையில் பலபத்தால் (எழுதும் மாவு குச்சிக்கு இப்படி ஒரு பெயர். இதன் ரிஷி மூலம், நதி மூலம் இன்னும் எனக்கு தெரியவில்லை)நான் எழுத கற்றுக் கொண்டது முட்டை வடிவ கோளங்கள் . பூஜ்யத்தை அறிந்தவன் ப்ராஞன் என்பது அப்புறம் பின்னால் தெரிந்துகொண்டது. என் கையை பொறுமையாக பிடித்து ஐந்து வயதில் எனக்கு அக்ஷராப்யாசம் பண்ணி வைத்தது காவேரியம்மா என்கிற டீச்சர். வடபழனி பாண்டுரங்கன் கோவில் அருகே ஒரு கார்பொரேஷன் கூரைக்கட்டு ஸ்கூல். தரையில் மண்ணில் தான் உட்கார வேண்டும். முக்கால் வாசி நேரம் காற்றோட்டமாக மரத்தடியில் தான் படிப்பே ஆரம்பித்தது.
இப்போது மாதிரி பேபி க்ளாஸ், கிண்டர் கார்ட்டன், கிட் kid ஸ்கூல்ஸ் கிடையாது. பால் குடித்த வாயோடு குழந்தைகள் பாடம் படிக்க வராது. ரெண்டரை வயது தாண்டாத சிசுக்களை அடைத்து வைக்கும் வழக்கம் இல்லை. தூங்க அங்கே குழந்தைகள் வருவதில்லை. ஐந்து வயதானபிறகு தான் பள்ளியிலே சேர்க்கும் வழக்கம். தமிழில் தான் பாடம்.
ஐந்தாம் வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பு கிட்டதட்ட 10-11 வயதில் தான் ABCD கற்றுக்கொடுத்தார்கள். வீட்டில் ஆங்கிலம் பேசும் வழக்கமில்லை. ஆங்கில பாட்டுகளோ படங்களோ பரிச்சயம் கிடையாது. நீளமாக அப்பா யாருடனோ ஆங்கிலத்தில் பேசுவதை வாய் பிளந்து அர்த்தம் புரியாமல் கேட்ட அனுபவம் உண்டு.
ஒரு நிழல் வடிவத்தில் காவேரியம்மாள் நினைவில் தோன்றுகிறாள். பச்சை சாயம் போன கிழிந்த புடவை. சிகப்பு தொளதொள ரவிக்கை. காலில் செருப்பு கிடையாது. நெற்றியில் பெரிய காலணா குங்குமம். (காலணா என்பது அரை அங்குல விட்டம் கொண்ட வடிவம் என்று புரிந்துகொள்ளவும்) அது தான் குறைந்த பக்ஷ காசு. நாணயம். அதற்கு மிட்டாய், அரை நெல்லிக்காய், கமர்கட், கலர் கலர் ரவுண்டு மிட்டாய், வேர்க்கடலை, பொரி எது வேண்டுமானாலும் வாங்க முடிந்தது.அதன் மதிப்பு 64 காலணாக்கள் ஒரு ரூபாய். அதற்கும் சின்ன காசு அப்போது பழக்கத்தில் இருந்தது. அதற்கு தம்பிடி என்று பெயர். அது உருவத்தில் வாமனன். மூன்று தம்பிடி ஒரு காலணா. என்னிடம் வெகுகாலம் தம்பிடி காலணாக்களிருந்து எப்படியோ காணாமல் போய்விட்டது?
காவேரியம்மாள் கண்களில் ஏதோ எனக்கு தெரியாத ஒரு சோகம் புரையோடியிருத்தது எனக்கு அந்த சின்ன வயதில் எதுவும் தெரியவில்லை. என் அம்மாவிடம் வந்து பேசுவாள். தனது சோகக் கதைகள் ஏதெல்லாமோ சொல்வாள். அம்மா ஆவலுடன் ஆறுதலாக பேசி அவளுக்கு சாப்பிட ஏதாவது கொடுப்பாள்.
அடுத்தது நினைவில் இருப்பது வரதராஜுலு நாய்டு. சைதா பேட்டையிலிருந்து சின்ன குட்டி வண்டியில் ஒரு காளைகன்னுக்குட்டி அவரை இழுத்து வரும். பாவம் அவருக்கு யானைக்கல்கள். நடக்க ரொம்ப கஷ்டப்பட்டுக்கொண்டே வருவார். வெற்றியால் கால்களை மூட முடியாது அளவு பருத்த கால்கள். முழு சட்டைக்கு மேல் ஒரு மேல் துண்டு. எப்போதும் கடுகடு என்று இருப்பார். மாணவர்களை கெட்டவார்த்தையில் திட்டுவார். கொம்பால் அடிப்பார். பாதி நேரம் அவருக்கு கால் வலி,உபாதையில் அவஸ்தைப்படவே நேரம் சரியாக இருந்தது. நான் அவரிடம் என்ன கற்றுக் கொண்டேன் இன்று இன்னமும் யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை.
சரோஜினி டீச்சர் ஒல்லியாக கீச்சுக்குரலில் பேசுவாள். எல்லோரும் அவளை குரங்கு மூஞ்சி டீச்சேர் என்பார்கள். பாவம், எலும்பும் தோலுமாக தாடை ஒட்டி முன்னால் பற்கள் நீண்டு சிரிக்காமல் இருப்பாள். ரொம்ப ஸ்ட்ரிக்ட் டீச்சர். பாட்டு பாடுவாள். கீச் கீச் என்று குரல் இருக்கும். அவள் அதிகம் பழகியது மாணவிகளிடம் தான். ஏனோ மாணவர்களிடம் அதிக சலுகை இல்லை. பிரம்பு அடிக்கடி எங்களிடம் பேசும். ''பச்சைமலை பவழ மலை எங்கள் மலை அம்மே'' அவளிடம் தான் கற்றுக்கொண்டேன். நாங்கள் பின்னால் நின்று கை தட்டி குதிக்கவேண்டும். மாணவிகள் பச்சை பாவாடைகள், மேலாக்கு போட்டுக்கொண்டு சின்ன சின்ன கூடைக்குள் பச்சை துண்டு துணிகள் போட்டு டான்ஸ், ரௌண்டாக நின்று ஆடி பாடி கோலாட்டம் போடுவார்கள். ஒவ்வொருவருஷமும் சுதந்திர தினம், குடியரசு தினம் வருவதற்கு ஒரு மாதம் முன்பே சரோஜினி டீச்சர் நிகழ்ச்சிகள் ஆரம்பித்து விடும்.
சூளைமேடு கார்பொரேஷன் ஸ்கூல் கங்கை அம்மன் கோவில் பக்கம் சௌராஷ்டிரநகர் அருகே இருந்தது. பெரிய பழைய ஷெட் ஒன்று. பாதி கூரை. நிறைய மரங்கள் . அநேகமாக வேப்ப மரமும் ,தூங்குமூஞ்சி மரங்களும் தான் இருக்கும். அதில் ஒரு கிளையில் தான் தண்டவாள துண்டு தொங்கும். அப்பாதுரை என்பவர் மணி அடிப்பார். மீதி நேரம் மாட்டு சாணம் கொண்டு வந்து பள்ளி வெளிப்புற சுவர்களில் வறட்டி தட்டி வியாபாரம். நான்கு ஐந்தாம் வகுப்பு களில் ஆசிரியர் தலைமை உபாத்தியாயர் எல்லாமே சுப்ரமணிய ஐயர் . ஒடிசலான குள்ள ஐந்தடி பொம்மை. பாதி வழுக்கை மண்டை காது பக்கம் சில பாலைவன சோலையை இழுத்து பின்புறம் முடிச்சு போட்ட குடுமி. அழுக்கு கரை வேஷ்டியில் பஞ்சகச்சம். நெற்றி நிறைய விபூதி குங்குமம். கதர் ஜிப்பா. பூர்வாஸ்ரமத்தில் வெள்ளையாக இருந்த வேஷ்டி ஜிப்பா. சரஸிஜனாப சோதரி என்ற ஒரு அடியை அடிக்கடி பாடுவார். யாரையும் அடிக்கும் வழக்கம் இல்லை. சிரிப்பார். பற்கள் கிடையாது. ஒரு பழைய துருப்பிடித்த சைக்கிள் வாசலில் மரத்தில் சாத்தி வைத்திருப்பார். அதற்கு பூட்டு சாவி கிடையாது. எவரும் அதைத் திரும்பி கூட பார்ப்பதில்லை. ஊரில் எங்கே கல்யாணம் நடந்தாலும் அழைக்காமலேயே சென்று சாப்பிடுவார். கடமை முடிந்ததும் உடனே திரும்புபவர். ஆங்கிலம் ரொம்ப தெரியாது. என் பிறந்த நாளை மாற்றி அமைத்த புண்யவான். அவரால் இன்றும் எனக்கு மூன்று பிறந்த நாட்கள். பிறக்காத நாளில் உலகமுழுதும் நண்பர்களின் வாழ்த்துக்கள். எல்லா ஆவணங்களிலும் அந்த தப்பான பிறந்த தேதி. மறையும் மட்டும் அதோடு எனக்கு உறவு அவசியமாகிவிட்டது..
ஆறாம் வகுப்பு நுங்கம்பாக்கம் ஏரி பகுதி என்று சொல்வார்கள். நான் ஏரி அங்கே பார்த்ததில்லை. நுங்கம்பாக்கம் செல்வதற்கு கோடம்பாக்கம் தெரு சந்திக்கும் முக்கில் இருந்தது அதற்கு முன்பாக இப்போது சுதந்திர தின பார்க் பெரிசாக இருக்கிறது. நாகேஸ்வர ராவ் கட்டிடம் என்று கட்டிடத்தின் முன்பாக பெரிதாக ஆங்கிலத்தில் எழுதி இருந்தது ஞாபகம் இருக்கிறது. மூன்று வருஷம் அங்கே படித்தேன். ஆறாவது ஏழாவது எட்டாவது வரை. என் தந்தையார் ஸ்ரீமான் ஜே. கிருஷ்ணய்யர் அங்கே பெரிய வகுப்புகளுக்கு ஆங்கிலம், சரித்ர ஆசிரியர். பள்ளியின் உப தலைமை உபாத்தியாயர். தமிழ் ஆங்கிலம் சமஸ்க்ரிதம் மூன்றிலும் புலி. சரளமான நடையில் எழுதுவார் பேசுவார். அவருடைய மாணவர்களில் சிலர் நமது ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண டிரஸ்ட் முகநூல் குழு உறுப்பினர்கள் என்று அறிந்து அவர்கள் அவரது வகுப்புகளில் அடைந்த மகிழ்ச்சியை அறிந்து வியந்தேன். நான் என் தந்தையார் நடத்திய வகுப்புகளில் படிக்க பாக்யம் செய்யவில்லை.
ஆறாம்வகுப்பில் என்னைக் கவர்ந்தவர் ஸ்ரீ P S ராகவன். வகுப்பு ஆசிரியர், பஞ்சகச்சம், துல்லியமான வெள்ளை அரைக்கை சட்டை . நெற்றியில் பட்டை விபூதி. தினமும் முகக்ஷவரம் செய்த பளிச் முகம். கணீரென்று குரலில் ஆங்கிலம் கற்றுத்தந்தவர். நான் மறவாத வணங்கும் என் முதல் ஆங்கில ஆசான்.
நாராயண ஐயர் பற்றி நிறைய எழுதி இருக்கிறேன். கணக்கு வாத்யார். முதுகில் அடிக்க ரொம்ப பிடிக்கும். தலையில் மீதி நேரம் கொட்டுவார். அவரையும் அவர் நடத்திய கணக்கு பாடங்களையும் வகுப்புகளையும் நாங்கள் விரும்பியதில்லை. விஜயராகவன் எப்போதும் ஒரே நிற கருப்பு கோட் அணிந்த சயின்ஸ் வாத்யார். பாதிநேரம் நாற்காலியில் தூங்கி வழிவார். பார்ப்பதற்கு சினிமா நடிகர் நாகையா மாதிரி இருப்பார்.
இன்னும் எத்தனையோ ஆச்சார்யர்கள் ஆசிரியர்கள் என் வாழ்க்கையில் உண்டு. ஒரே ஒரு வாத்யார், ஆச்ச்சார்யனை இன்றும் கெட்டியாக பிடித்து வணங்கி கற்றுக்கொண்டு வருகிறேன். வேறு யாருமில்லை, கீதாச்சார்யன் கிருஷ்ண வாத்யார் தான்.
No comments:
Post a Comment