உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN -
-ஸ்ரீ பகவான் ரமண மஹரிஷி
12. இருந்து ஒளிர்வது.
அறிவறி யாமையு மற்றதறி வாமே
யறியும் துண்மையறிவாகா - தறிதற்
கறிவித்தற் கன்னியமின் றாய விர்வ தாற்றா
னறிவாகும் பாழன் றறிவாய் - 12.
அறிவு என்பது ஆத்ம ஸ்வரூபம் என்று திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறோம். வெளி விஷயங்களை, ப்ரக்ருதிக்கு உள்ளே உள்ளவற்றை மட்டும் அறிவது அபரா எனப்படும். ஜீவன் சம்பந்தப்பட்ட அறிவு பரா. சம்பந்தப்பட்ட விஷயம். எனக்கு தமிழ் தெரியும் என்றால் என்ன அர்த்தம்? தமிழ் பேசும்போது உண்டாகும் சப்தம், அவற்றால் அறியும் உருவங்களும் கருத்துக்களும் என் மனதில் பதிந்தவை. ஆகவே தமிழ் மொழி அறிவு எனக்கு விக்ஷேபம். மனம் சார்ந்தது. மனத்திற்கு ஒரு திரை இந்த விக்ஷேபம். இந்த அறிவு, அறியாமை ரெண்டுமே நீங்கவேண்டும். புலன்கள் வழியாக விஷயங்கங்களை அறிவது, வெளி விஷயங்களை அறிவது ஞானமாகாது.
தன்னைத்தவிர வேறொரு ஒளிவீசும் வஸ்து இல்லை என்று வேறு எதுவும் இல்லாமல் இருக்கிற ஆத்மாவை அறிவது தான் ஆத்மஞானம். அது வெறும் விஷயங்கள் இல்லை என்று தெரிந்துகொள்வது தான் அறிவு என்கிறார் ரமணர் இந்த பாடலில்.
ஸ்ரீ ரமணர் அக்ஷரமணமாலையில் ஒரு இடத்தில் ''ராப் பகல் இல்லாத வெறு வெளி வீட்டில் ரமித்திடுவோம் வா அருணாசலா '' என்கிறார். என்ன அர்த்தம்? உலக வெளி விஷயங்களை கிரஹிக்கும் மனத்தின் உணர்ச்சி தான் பகல். இந்தமாதிரி வெளி விஷயங் களை உணராமல் கிரஹிக்காமல் மனது உறங்குவது தான் 'ரா' என்று அவர் சொல்லும் இரவு. இந்த இரண்டு உணர்ச்சிகளும் எதிலிருந்து உற்பத்தி ஆயிற்றோ அது தான் 'வெறுவெளி'' வெட்டவெளி என்று சித்தர்கள் பாடுவது. அங்கே அந்நியமான வஸ்துக்கள் இல்லை, மறுப்பதற்கும் எதுவும் இல்லை. அதை தான் ''சித் ''என்ற ஸ்வயம்பிரகாசமான, தானே ஒளிவிடும் உணர்வு என்பது. சில இடங்களில் ''ஞப்தி '' என்று வருகிறதே அது இது தான் . அது தான் ''நான்'' எனும் ஸ்வயம்பிரகாசம். இதை அறிய மனமும் வேண்டாம், புலன்களும் வேண்டாம். மற்றதெல்லாம் ''பாழ்''. மூன்று வித நிலைகள் அதாவது விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்க நிலைகளை தான் ஞானிகள் ''முப்பாழ்''. கோபாலக்ரிஷ்ண பாரதியாரின் ஒரு பாடலில் ''முப்பாழும் தாண்டி நின்று அப்பாலே நின்றவர்க்கு இப்பார்வை கிடையாது '' என்று வருமே ஞாபகம் இருக்கிறதா? அதே தான் இது.
காணும் எல்லா தரிசனங்களும் தோன்றி மறைபவை. ஆத்ம தர்சனம் தவிர. தானாகவே ஜோதியாக என்றும் நித்யமாக மின்னுவது. இதை தான் ''இருந்து ஒளிர் '' என்கிறார். நான் இருக்கிறேன் என்று ஆத்மா சொல்வதை தான் பகவத் ஸ்வரூபமாக உணர்கிறோம். எங்கும் நிறைந்த ப்ரம்மம் இது தான். நான் யார் என்ற விசாரத்தின் பதில் தான் இது.
No comments:
Post a Comment