பிள்ளையாரி'' நங்கநல்லூர் J.K. SIVAN
இப்போது எங்கும் பிள்ளையார் பற்றிய பேச்சு எழுதது தான் கண்ணில் படுகிறது, காதில் விழுகிறது. நல்லது கேட்டது ரெண்டும் சேர்ந்தது தான் உலகம். நல்லதை பிடிக்கிறபோது கெட்டதை நினைக்கவேண்டாம், கேட்கவேண்டாம். படிக்கவேண்டாம், பேசவேண்டாம். மனித ஸ்வபாவம் வேடிக்கையானது. எதிர்மறையாக சில நேரங்களில் யோசிக்கும் பழக்கம் மனதுக்கு உண்டு. அதற்கு எப்போதும் மாறுதல் ரொம்ப பிடிக்கும். ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் கற்பனை செய்து, சிங்காரித்து, பெயர் வைத்து மகிழ்வது. பெண்ணை பிள்ளையாக ''டா'' போட்டு அழைப்பது பேசுவது இன்னும் சில வீடுகளில் பழக்கம். அதேபோல் பிள்ளையை பெண்ணாக சிங்காரித்து அழகு பார்ப்பதும் உண்டு.
ஆண் குழந்தைகள் தலையில் பின்னலோடு, கவுன் போட்டுக்கொண்டு, கண்ணில் மை இட்டுக் கொண்டு, காலில் கொலுசு போட்டுக் கொண்டு 7-10 வயது வரை கூட பார்த்து இருக்கிறேன். என் ரெண்டு அண்ணாக்கள் பெண் வேடத்தில் இருக்கும் பழைய புகைப்படம் வெகுநாள் என்னிடம் இருக்கிறது.
பெண்ணாக கிருஷ்ணனையே பாவித்து நிறைய பாரதியார் பாடி இருக்கிறார். அத்தனையும் அற்புதங்கள். என்னுடைய ''எந்தையே நந்தலாலா'' புத்தகத்தில் நிறைய தேடி பிடித்து எழுதி இருக்கிறேனே. வேண்டும் என்பவர்கள் பெற்றுக்கொள்ளலாம். விலை போடப்படாத புத்தகம். நன்கொடை பெற்று அந்த வருமானத்தில் புத்தகங்கள் பிரசுரித்து விநியோகிக்கிறோம்.புத்தகங்கள் வேண்டுவோர் என்னை வாட்ஸாப்ப் 9840279080ல் முகவரியோடு அணுகலாம். அனுப்புகிறேன்.
ஆழ்வார்களும் பக்தி பரவசத்தில் பராங்குச நாயகி, பரகால நாயகி என்று பெயரோடு விளங்கி இருக்கிறார்கள். மாணிக்கவாசகர் திருவெம்பாவையில் தன்னை ஒரு பெண்ணாக கற்பனை செயது பாடிய பாடல்கள் அற்புதமானவை.
நடாதூர் அம்மாள் என்றும் ஒருவர் பெண்ணல்ல ஆண் .நாயன்மார்களில் இப்படி சிலர் உண்டு. திருவானைக்கா கோவிலில் நடுப்பகலில் சிவாச்சாரியார் புடவை தரித்துக்கொண்டு அகிலாண்டேஸ்வரி சந்நிதியில் வழிபாடு நடத்துவது அங்கே சென்று தரிசித்தவர்களுக்கு தெரியும். இது தினமும் நடைபெறுவது. நான் பார்த்திருக்கிறேன். கடவுளை பெண்ணாக சேர்த்தே வழிபடுவதும் நமக்கு வழக்கம். சிவன் அர்த்தநாரி. விஷ்ணு மோஹினி, விஷ்ணு மாயா.
ஆனால் யாராவது பிள்ளையாரை பெண்ணாக பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்திருக்கிறேன். விக்னேஸ்வரரை விக்னேஸ்வரியாக பார்த்தபோது ரொம்ப ஆச்சர்யமாக இருந்தது. பிள்ளையார் சதுர்த்தி அன்று இந்த விஷயத்தை சொன்னால் கொஞ்சம் வித்யாசமாக இருக்கும் அல்லவா?
பிள்ளையாருக்கு ஒரு ஸ்வபாவம். கணேசன் அவரைச் செய்யும் களிமண் போலே எளிதில், நினைத்த படி யெல்லாம் வளைந்து கொடுக்கக் கூடிய தெய்வம். இந்த ஒரு காரணத்தாலேயே அவரைப் பணியாத பக்தர்களே கிடையாது. எல்லோருக்கும் பொதுவானவர். எந்தெந்த உருவில் எல்லாம் அவரைப் பார்த்தாலும் அதிகமாக ஒரு பெண் தெய்வமாக பிள்ளையாரைப் பார்த்ததில்லையே என்ற குறை இன்று என்னைப்போலவே உங்களிலும் பல பேருக்கு தீர்ந்து விடும்..இத்துடன் இணைத்த படங்களை பாருங்கள்.
வினாயகி, கணேசனி, கணேஸ்வரி, கஜானனி என்று பெயர்கள் அதிகம் பரிச்சயம் இல்லை அல்லவா. தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் இருக்கிறாள் இவள். அவளை சக்தியாக யோகினி தேவதையாக கொண்டாடுகிறார்கள்.
கணேசர் பிரம்மச்சாரி. ஒண்டிக்கட்டை. எங்காவது சாதுவாக அரசமரத்தடியில், வேப்ப மரத்தடியில், நாற்சந்தியில், தெரு ஓரத்தில், குளத்தங்கரை, ஆற்றங்கரையில் அவரை பார்க்கிறோம். சித்தி புத்தி என்று இருவரோடும் பார்த்ததுண்டு. ஆனால் அவரையே பெண்ணாக???
மதுரையில் வியாக்ரபாத கணபதியாக இருக்கிறார். புலியுடைய பாதங்களோடு .யானைத் தலை. மனித உரு. ஆனால் பெண் உடம்பு. வினாயகி!!
சுசீந்திரத்தில் கணேசனி தாணுமாலய ஆலயத்தில் இருக்கிறாள்.
வட தேசத்தில் நிறைய இடங்களில் கஜானனி இருக்கிறாள். பல நூற்றாண்டுகளாக இருந்து சிதைந்து போன ஒரு சிலையை படத்தில் பார்த்ததும் தான் அவளைத் தேடினேன். புராணங்கள் அவளைப் பற்றி சொல்கிறது.
ராஜஸ்தானில் சிகார் என்று ஒரு ஊரில் விக்னேஸ்வரியை ஒரு பழைய சிவன் கோவிலில் வழிபடுகிறார்கள். வேதங்களில் கூட வித்யா கணபதியை பெண்ணுருவில் தான் காட்டியிருக்கிறது. வல்லப கணேசனி என்றும் பெயர். சுசீந்திரத்தில் சுகாசன கோலத்தில் கணேசனியை காணலாம்.
ஜபல் பூரில் பேரகாட் என்ற ஊரில் 64 யோகிநிகளுக்கு ஒரு கோவில். அதில் முதல் யோகினி கணேசனி. இவளை மற்ற சௌசதா யோகினி கோவில்களில் ரிகியன், ஹிரபூர், ராணிப்பூர், ஜாரியல் ஆகிய ஊர்களில் பார்க்கலாம். வடக்கே நிறையவே இருக்கிறாள். பழைய கால சிலைகளில் சிதைந்து இவள் காண்பது இவளை பண்டைய காலத்திலேயே வழிபட்டார்கள் என்றும் புரிகிறது. திபெத்தில் கூட கஜானனி தெய்வமாக நிற்கிறாள்.
என்னவோ விக்னேஸ்வரர் அதிகமாக பெண் தெய்வமாக வணங்கப் படவில்லை. அதிக வழிபாடுகளும் பரவலாக இல்லை. வேதங்கள், புராணங்களும் கொஞ்சம் சைலென்ட் தான்.
ஒரு வேடிக்கை. வினாயகி ஒரு புத்த மத பெண் தெய்வமாக கணபதி ஹ்ரிதயா என்ற பேரில் தாந்த்ரிக வண்ண ஓவியங்களில் நேபாளத்தில் பார்த்திருக்கிறார்கள். பாலித் தீவிலும் கணேந்த்ரி திக் தேவதையாக உள்ளாள் . வாயுவின் திசையில் அமர்ந்திருக்கிறாள்
புத்தமதம் இவளைத் தேர்ந்தெடுத்தது. ஜைனர்கள் விரும்பினார்கள். ஐங்கிணி என்று பீடத்தில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் படம் கீழே கொடுத்திருக்கிறேன். முதலாவது நூற்றாண்டு ராஜஸ்தான் இவளை தந்தம் இல்லாமல் பெண்ணாக வணங்கியது. ஆதாரம் இருக்கிறது.
கணேசா நீ எப்படியெல்லாம் உருவெடுத்தாலும் எங்கள் உள்ளம் கொள்ளை போகுதே. இன்னும் ரெண்டு மூன்று கட்டுரைகள் விநாயகர் சம்பந்தமாக எழுதுகிறேன். அதற்கிடையே ஒரு விண்ணப்பம். நாளை விநாயக சதுர்த்தி என்பதால், நமக்கு பூஜைக்கு களிமண் விநாயகர் முக்கியம் என்பதால் அவரவர் வீட்டிலேயே விநாயகர் செயது வழிபட வழி இருக்கிறது. இத்துடன் ஒரு வீடியோ அனுப்பி இருக்கிறேன். அதை நண்பர்களுக்கு அனுப்புங்கள். நமக்கு தேவை பக்தியும் களிமண்ணும் தான். அது ரெண்டு இருந்தால் வீட்டிலேயே ஐந்து நிமிஷத்தில் விநாயகர் தயாராகிவிடுவார். மற்றவை இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
https://youtu.be/0SU4zgdkVbM
No comments:
Post a Comment