Wednesday, September 15, 2021

ulladhu narpadhu

 


உள்ளது நாற்பது -  நங்கநல்லூர்   J K  SIVAN 
பகவான் ஸ்ரீ ரமணர் 

9.  யோகிகளும்  போகிகளும்.

இரட்டைகண் முப்புடிக ளென்றுமொன்று பற்றி
யிருப்பவா மவ்வொன்றே தென்று – கருத்தினுட்
கண்டாற் கழலுமவை கண்டவ ரேயுண்மை
கண்டார் கலங்காரே கானிருள்போன் – மண்டும் 9

ஆகாயத்திற்கு நிறம் கிடையாது.  கீழே கடலின் நிறத்தை கடன் வாங்கி காட்சி அளிக்கிறதோ?
அது போல தான்  இந்த உலகத்தில் நம்மை வாட்டும்  ரெட்டைகள் -- இந்த ரெட்டையர்கள் இல்லாமல் எவரும் வாழ முடியவில்லையே--   சுகம்X துக்கம் , இன்பம் X  துன்பம், நன்மை X தீமை,  கெட்டதுX நல்லது,   இறப்பு X பிறப்பு,  இவை எல்லாமே  அஹங்காரம் எனும் நிறத்தை கொண்டவை.   எது இந்த அஹங்காரம், எதனால் விளைகிறது என்று ஆராய்ந்து உள்  நோக்கினால்  காணாமல் போய்விடும். இப்படி அதைக் கண்டுபிடித்து அகற்றியவர்கள் தான் ஞானிகள் , தத்வ தர்ஸிகள் .  இவர்கள் மேலே சொன்ன ரெட்டையால் அவஸ்தைப்படாதவர்கள்.  

கோழி முதலா, முட்டை முதலா?  போன்ற  ரெட்டைகள் நம்மை இன்னும்  மாயையில் இந்த கேள்விக்கு விடை காணமுடியாமல் வைப்பவை.  இது போல் அநேகம்  நம்  மனதை ஆக்கிரமிப்பவை . கோழி , முட்டை ரெண்டுமே  ஆதாரத்தில் மண் தான். மண் அழிந்தால் எதுவுமே  இல்லையே!  சுகம்  துக்கம்  நன்மை தீமை, நல்லது  கெட்டது , எதையுமே துறந்தால் ஆனந்தம் ஒன்றே மிச்சம்.  ஆழ்ந்த தூக்க  நிலையில் மனதில் இதெல்லாம் கிடையாதே. மனமே அப்போது இல்லையே. 

எல்லாவற்றுக்கும் காரணம்  வில்லன் நம்பியார் மனம்  தான். அதை இயக்குவது  ''நான்''  எனும் அகந்தை, அகம்பாவம். எல்லாம்  கானல் நீர் போல் மாயை, இல்லாதது இருப்பது போல் காட்டுவது  என்று உணர்ந்தவன் ஞானி.

மிகவும்  சூக்ஷ்மமான  ஆத்மாவை அஹங்காரத்தோடு  அறியமுடியாது.  ஞான விசாரத்துக்கு மனம் காலியாக இருக்கவேண்டும். அதில் ஒன்றும் இடம் பிடிக்க கூடாது.  இது தான் மனோநாசம்.  அயம் அஹமஸ்மி     ''இவனே  நான் ''  என்று ஆத்மாவை கெட்டியாக பிடித்துக் கொள்ளவேண்டும். இதில் நிலையாக நிற்பது தான் ஸமாதி  நிலை.

காமம்,  கோபம், மோகம்,  போன்றவை மனதில் தோன்றும்போது,  இவை எல்லாம் யாருக்கு வருகிறது? என்ற  தீர்க்கமான கேள்வி கேட்டுக்கொண்டே இருந்தால்  ''நான்''  எனும் தேஹ அபிமானம் ஓடிவிடும். 

ஸ்ரீ ரமணர் போன்ற மஹான்கள்,நம்மைப்போலவே  நடந்துகொள்வார்கள், உலக சஞ்சாரம் செய்வார்கள், ஒரே இடத்தில் இருப்பார்கள்,  எல்லோரையும் போல் தூங்குவார்கள், அன்பாக எல்லோருடனும் பழகுவார்கள், உணவு உண்பார்கள், நீர் பருகுவார்கள்,  காற்று குளிர் வெப்பம் எல்லாம் அவர்களையும் தாக்கும்.   ஆனால்  மேலே சொன்ன என்ன தாக்கமும், அவர்களை  நெருங்காமல் உடல் மட்டும் இதெல்லாம் செய்து கொண்டிருக்கும்.   யாருடனும் பேசாமல் இருக்கும் அவரது  மௌனம் நிறைய பேருக்கு  அவர் ஏதோ  ''சும்மா'' இருப்பதாக  மட்டுமே தோன்றும். நமது     ''சும்மா ''வேறே.   யோகிகள் இருப்பது நிர்விகல்ப சமாதி நிலை. பூரண சுகம் அனுபவிப்பவர்கள்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...