இரு திருவடிகள் - நங்கநல்லூர் J K சிவன் -
கருடனுக்கு சில சமயம் தன்னைவிட பலசாலி, சாமர்த்தியசாலி, வேறு யாரும் இல்லை என்று கர்வம் வந்து விடும். விஷயம் கொஞ்சம் அல்ல நிறைய தெரிந்தவர்களுக்கு கர்வம், ஆணவம் என்பது ஒரு உடன் பிறந்த வியாதி. பாற்கடலில் அம்ருதம் கிடைத்தவுடன் அந்த அம்ருத ஜாடியை அசுரர் களிடமிருந்து மீட்ட பெருமை கருடனுக்கு கட்டுக்கடங்கவில்லை. இந்திரன் தோட்டத்திலிருந்து
கிருஷ்ணனுக்காக, பாரிஜாத மரத்தை நைஸாக கொண்டு வந்த ஆணவம் வேறு தலைக்கேறி விட்டது கருடனுக்கு. இந்திரன் வீசிய வஜ்ராயுதம் கருடனை ஒன்றும் செய்ய முடியவில்லை என்ற பெருமை வேறு. எண்ணற்ற அசுரர்களை விஷ்ணு அழித்தபோது கருடன் தனது பங்கு அதிகம் என்று ஒரு எண்ணம் கொண்டிருந்தான். விஷ்ணுவுக்கு தான் இல்லையென்றால் சக்தி இல்லை, தானே அனைவரையும் விட உயர்ந்தவன் என்ற எண்ணம் மனதில் பூரா பரவி இருந்தது. இதை கிருஷ்ணன் கவனிக்காமல் இருப்பாரா? கருடனுக்கு பாடம் கற்பிக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது என மனதில் சங்கல்பம் செய்து கொண்டார். .
ஒருநாள் கிருஷ்ணன் ஹனுமனை துவாரகைக்கு வரச் செய்தார். கருடனின் கர்வபங்கத்தை அடக்க துவாரகை நந்தவனத்தை ஹனுமான் அழிக்கும்படியாக செய்தார். ஹனுமான் அட்டகாசம் செய்தன. பழங்களை பறித்து எறிந்தான், தின்றான், வீணாக்கினான், மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தான். துவாரகையில் கிருஷ்ணன் அரண்மனை நந்தவனம் பெரிய சுனாமியில் சிக்கியது போலாகிவிட்டது. அரண்மனை காவல்காரர்கள் நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, கிருஷ்ணனிடம் ஏதோ ஒரு பலசாலி குரங்கு அட்டகாசம் செயது நந்தவனத்தை அழிக்கிறது என்று முறையிட்டார்கள்.
கருடன் அப்போது கிருஷ்ணன் அருகில் இருந்தான். ''கருடா, நீ தான் சிறந்த பலசாலி. உடனே நமது படை வீரர்களோடு போ. யார் அந்த குரங்கு என்று கண்டுபிடித்து தக்க தண்டனை கொடுத்து விரட்டு.'' என்று கட்டளையிட்டார்.
''ப்ரபோ, ஒரு குரங்கை பிடித்து அடித்து விரட்ட எனக்கு எதற்கு படையின் உதவி. நானே பார்த்துக் கொள்கிறேன். அந்த குரங்கைபிடித்து உங்கள் முன் நிறுத்துகிறேன்.'' என்ற கருடனுக்கு தனது பழத்தின் மேல், சக்தி மேல் அவ்வளவு நம்பிக்கை. கர்வம்.
நந்தவனத்தில் கருடன் ஹனுமான் ஒரு மரக்கிளையில் மேல் அமர்ந்து பழங்களை சாப்பிடுவதை பார்த்தான். நிறைய பழங்களை பறித்து தரையில் வீசி எரிந்து ஹனுமான் சேதப்படுத்தியிருந்தான். பல மரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. செடிகொடிகள் ஒடிக்கப்பட்டு துண்டாக கிடந்தன.
''ஏய் துஷ்ட குரங்கே யார் நீ? எதற்கு எங்கள் நந்தவனத்தை சேதப்படுத்தினாய்?'' இடி போல் கேட்டான் கருடன். ஹனுமான் கருடனை லக்ஷியம் பண்ணாமல் மேலும் சேதப்படுத்திக் கொண்டிருந்தான். சில காய்களையும் பழங்களையும் கருடன் முகத்தில் வீசி எறிந்தான்.
''ஏய், அல்ப, முட்டாள் குரங்கே, யாருடன் பேசுகிறாய் என்று அறியாமல் நடந்து கொள்கிறாய். உன் உயிரை இழக்காமல் முதலில் என்னோடு வா உன்னை உயிரோடு கொண்டுபோய் என் எஜமானன் முன் நிறுத்துகிறேன். இல்லாவிட்டால் என் கூறிய நகங்களால் கிழிபட்டு துடித்து சாவாய். ஜாக்கிரதை''
''ஹனுமான் சிரித்தான். ''அறிவற்ற சாதாரணமான பறவையே. நான் உன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. உன்னைப்போல எவ்வளவோ பறவைகளைப் பார்த்தவன் நான். நீ சக்தி உள்ளவன் என்று பீற்றிக்கொள்கிறாயே. எங்கே உன் சக்தியை என் முன்னால் காட்டு பார்க்கலாம்'' என்ற ஹனுமான் தனது வாலால் கருடனை சுற்றி இறுக்கி கட்டினான். எவ்வளவோ முயன்றும் கருடனால் ஹனுமான் வாலின் இரும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. மூச்சு திணறியது. கண் இருண்டது .
''என் எஜமான் கிருஷ்ண பிரபு தான் உன்னை அழைத்துக்கொண்டு வர அனுப்பினார்.வா என்னோடு'' என்றான் கருடன்..
''போனால் போகிறது என்று உன்னை விடுகிறேன். நான் என் பிரபு கோசல ராமனின் அடிமை. நான் எதற்கு உங்கள் கிருஷ்ணனை வந்து பார்க்கவேண்டும்''
ஹனுமானின் வாலின் இறுக்கம் கொஞ்சம் தளர்ந்து கருடனால் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது. அப்போதும் அவன் கர்வம் தளரவில்லை.
''என்ன உளறுகிறாய் நீ. ராமனும் கிருஷ்ணனும் ஒன்று தானே. ஆகவே உடனே என்னோடு கிருஷ்ணன் முன் வா''
''ஏ அல்ப பறவையே, என் முன்னாலிருந்து ஓடிவிடு. தப்பித்துக் கொள். என்னிடம் மோதாதே. உயிரிழக்காதே. நான் இன்னும் கொஞ்சம் சுகமாக பழங்கள் சாப்பிடும்போது குறுக்கே தொந்திரவு செய்யாமல் ஓடிவிடு ''
கருடனுக்கு கோபம் உச்சிக்கேறி ஹனுமனைத் தாக்கினான். ஹனுமான் கருடனின் பின் கழுத்தைப் பிடித்து தூர சமுத்திரத்தில் எறிந்தான். பிறகு ஒன்றும் நடக்காததுபோல் ஹனுமான் மலயமாருத மலையை நோக்கி நடந்தான். தொப்பென்று சமுத்திரத்தில் விழுந்த கருடன் எப்படியோ சுதாரித்துக் கொண்டு எழுந்து துவாரகையை நோக்கி பறந்தான் .
''என்ன கருடா இவ்வளவு நேரம்.? ஏன் முழுதும் நனைந்திருக்கிறாய். மழை கூட பெய்யவில்லையே? என்று கிருஷ்ணன் கேட்க :
''பிரபு , அந்த முட்டாள் குரங்குக்கு ரொம்ப பிடிவாதம். கர்வம். என்னைப் பிடித்து சமுத்திரத்தில் வீசிவிட்டது. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ராமன் தான் அதன் எஜமானனாம். உங்களை லக்ஷியம் பண்ணி இங்கே வராதாம்.''
''கருடா, நீ சொல்வதைப் பார்த்தால் அந்த குரங்கு ஹனுமனாக இருக்குமோ என்று தோன்றுகிறது . நீ உடனே மலயமாருத கிரிக்கு பறந்து செல். அந்த குரங்கை கண்டுபிடித்து ''உன்னை ராமர் அழைக்கிறார். துவாரகையில் உனக்காக காத்திருக்கிறார் '' என்று சொல். ராமன் அழைக்கிறான் என்றால் தட்டாமல் ஹனுமன் ஓடிவருவான். ''
கருடன் பறந்தான். அதற்குள் கிருஷ்ணன்
''சத்யபாமா, நீ சீதை போல் உருவம் மாற்றிக்கொள்..அவளைப்போல் ஆடையணிந்து நில். '' '' சுதர்ஸன சக்ரமே, நீ வாசலில் நின்று எவரையும் என் உத்தரவின்றி உள்ளே அனுமதிக்காதே'' கிருஷ்ணன் கையில் வில்லேந்தி ராமனாக மாறி நின்றான்.
கருடன் ஹனுமானைக் கண்டு ராமர் அழைக்கிறார் என்றதும் உடனே கருடன் பின் ஓடினான் ஹனுமான். இவனுக்கு என் வேகத்தையும் பலத்தையும் காட்டுகிறேன் என்று கருடன் வெகு வேகமாக துவாரகைக்கு பறந்தான். துவாரகையில் கிருஷ்ணன் அரண்மனையை அடைந்த கருடனுக்கு ஆச்சர்யமும் ஏமாற்றமும் காத்திருந்தது. அவனுக்கு முன்பே ஹனுமான் காற்றோடு கலந்து பறந்து அங்கே வந்து விட்டான். வாசலில் ஹனுமனை உள்ளே நுழையவிடாமல் சுதர்சன சக்ரம் தடுத்தது
''என் ராமனைப்பார்க்க ஆவலோடு வந்த என்னை இதுவா தடுக்கிறது'' என்று சுதர்சன சக்ரத்தை அப்படியே வாய் திறந்து விழுங்கிவிட்டு உள்ளே சென்றான் ஹனுமான்.
''என் பிரபுவே ஸ்ரீ ராமா, எங்கே என் தாய் சீதம்மா, யார் இந்த அழகற்ற பெண். இவளுக்கென்ன உன்னிடம் வேலை?'' என்று சத்யபாமாவை காட்டி கேட்டான் ஹனுமான். ஸத்யபாமாவுக்கு தனது அழகில் கர்வம். அதற்கு தான் இந்த பரிசு.
''ஹனுமான், எப்படி இங்கே உள்ளே வந்தாய்? வாசலில் எவரும் யார் நீ என்று கேட்டு தடை செய்ய வில்லையா?
''அதை ஏன் கேட்கிறீர்கள் பிரபு, வாசலில் சுதர்சன சக்ரம் என்னை தடுத்து நிறுத்தியது. என் பிரபுவை உடனே காணவேண்டும் என்று வந்த எனக்கு அதோடு நின்று பேச, சண்டைபோட, நேரம் இல்லை. என்னை வந்து பார் என்று கட்டளையிட்ட உங்களை காக்க வைக்கவும் மனமில்லை. ஆகவே அதை அப்படியே விழுங்கிவிட்டேன்.. வாயைத் திறந்து சுதர்சன சக்ரத்தை வெளியே விட்டான் ஹனுமான்.
இதெல்லாம் தூர நின்று பார்த்துக் கொண்டிருந்த கருடன் சிலையாக நின்றான். இவ்வளவு பெரிய அதிர்ச்சியை அவன் சந்தித்ததே இல்லை. ஹனுமானின் பக்தி, பணிவு, ராமனிடம் கொண்ட அன்பு, நேசம், சுதர்சன சக்ரத்தையே செயலிழக்கச் செய்யும் வலிமை, வீரம், அவனை சரணடையச் செய்து அவன் கர்வம் அவனை விட்டு நீங்கியது. சத்யபாமா தலை குனிந்து நின்றவள் கர்வமும் விலகியது.
கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் புன்னகையோடு பார்த்து ஹனுமனை அன்போடு அணைத்தார் ''கருடா, சக்தி பணிவுடன் கலந்திருந்தால் தான் அதற்கு மதிப்பு'' புரிகிறதா? என்றார்.
அதற்கப்புறம் என்ன கருடன் பெரிய திருவடி, ஹனுமான் சிறிய திருவடி.. இன்றும் இருவரும் நாராயணனோடு இணைபிரியாதவர்கள். நம்மால் வணங்கப்படுபவர்கள்.
No comments:
Post a Comment