Tuesday, September 14, 2021

TRAMS





 


டிராம் ஞாபகம் இருக்கிறதா? -  நங்கநல்லூர்  J K  SIVAN 


சென்னையில்  டிராம்  வண்டி தெருக்களில் ஓடும்  போது எனக்கு அதில் அடிக்கடி பிரயாணம் பண்ணும் வயது இல்லை.  ரசிக்கும் அனுபவம் கிட்டவில்லை.  டிராம் வண்டிகள் நின்று விட்டன. நான் சைக்கிளில்  மவுண்ட் ரோடு, பாரிஸ் சென்றபோது,  ட்ராம்கள் ஓடிய  தண்டவாளங்களை பெயர்த்துவிட்டு  தார்  பூசிக்கொண்டிருந்தார்கள்.  டிராம் மெதுவாக ஓடும். அதில் ஓடும்போதே ஏறிக் கொள்ளலாம், இறங்கி கொள்ளலாம்.  காசு கொடுத்து டிக்கெட் வாங்காமல் பிரயாணம் பண்ணியவர்கள் தான் ஜாஸ்தி.   இதுவே அதன் அழிவுக்கு காரணம்.

வெள்ளைக்காரன் முதலில் டிராம் ஒட்டியது  1873ம் வருஷம் பிப்ரவரி மாதம் 24ம் தேதி.  குதிரை தான் அதை இழுத்துக் கொண்டு போயிற்று.  கல்கத்தாவில்  சீயல்டா,  -  அர்மீனியன் காட்  மார்க்கம் தான் முதல் டிராம்  ஓடிய இடம்.  இந்த சர்விஸ் வெகுகாலம் ஓடவில்லை. நின்று போயிற்று.  

கல்கத்தா  டிராம் கம்பெனி பிறகு   லண்டனில் பதிவு செய்து கொண்டு  டிராம் ஒட்டியது 1880ம் வருஷம். .புது இருப்புப்  பாதைகள் போடப்பட்டு,  பௌ பஜார், டல்ஹவுசி ஸ்குயர்,  ஸ்ட்ராண்ட் ரோடு, பகுதிகளில் டிராம் ஓடியது.  குதிரை தான் அப்போதும் இழுத்துக்கொண்டு ஓடியது.  

ரெண்டு வருஷம் கழித்து, குதிரைக்கு பதிலாக  நீராவி இன்ஜின்  ஜிக் புக் என்று இழுத்துக்கொண்டு போனது. எங்கும் புகை மண்டலம்.  ஒரு காலத்தில் 166  டிராம் வண்டிகள், 1000 குதிரைகள், 7 ஜிகு புகு இஞ்ஜின்கள்   19 மைல் தூரத்துக்கு பிரயாண வசதியை தந்தன. 

1902ல்   எஸ்பிளனேட் லிருந்து  கித்தர்பூர்  வரை இன்ஜின் ட்ராமை  இழுத்துக்கொண்டு  ஓடியது.  அப்புறம் எஸ்பிளனேடிலிருந்து  காளிகாட்  வரை.   1943 வாக்கில்  கல்கத்தா  ஹௌராவுக்கு அடிக்கடி டிராம்   மின்சார கம்பியால் ஓடியது.  1951ல்  வங்காள அரசாங்கமே   டிராம் கம்பெனியோடு ஒப்பந்தம் போட்டுக்கொண்டு டிராம் ஒட்டியது. 1967ல் டிராம் சர்வீஸ்  தேசியமயமாக்கப்பட்டது. 

1990ல்  மூடுவிழா ஆரம்பித்து  ஏதோ சாஸ்திரத்துக்கு  ஆட்டு ஏழு டிராம் லைன்கள் மட்டும் ஓடுகிறது.

பம்பாயில் 1873ல்   இப்படித்தான் குதிரை இழுத்த  டிராம் வண்டிகள்  கொலாபாவிலிருந்து
கிராபோர்ட மார்க்கெட்,  கல்பாதேவி,போரி பந்தர் வழியாக,  பைதோனி  வரை ஓடியது.  .மின்சார ரயில் வந்ததும் டிராம் சகாப்தம் முடிந்தது. கூட்டம் நெரிசலுக்காக  டபுள் டெக்கர்  டிராம் கூட  ஓடியது.

1895ல்  சென்னையில், அப்போதைய  மெட்ராஸில்,  டிராம்  ஓடியது. மவுண்ட் ரோடு, பாரிஸ் முனை, பூந்தமல்லி ரோடு,  ரிப்பன் கட்டிடம், வரை ஓடியது.  டிராம் கம்பெனிகள் வருமானம் கட்டு படியாகாமல்  திவாலாகி டிராம் ஓடுவது நின்றுபோனது.

சின்ன வயதில் அப்பாவோடு  நான் ட்ராமில்  பாரிஸ் முனையில் பிரயாணம் செய்திருக்கிறேன்.  டாங் டாங் என்று மணி அடித்துக்கொண்டு மெதுவாக ஓடும்.   திறந்த ஜன்னல்கள் , இரும்பு பெஞ்சுகள் போட்டிருந்த ஞாபகம். பஸ் மாதிரி ஆடாது.   தரையிலிருந்து  அரை அடி  உயரத்தில்  கடைசி படிக்கட்டு. அதிலிருந்து ஓடும் ட்ராமில்  ஏறுவது, இறங்குவது  வழக்கம்.  சிலர் டிக்கெட் கேட்டால் இறங்கி விடுவதும் உண்டு. நின்று கொண்டு பயணம் செய்பவர் ஜாஸ்தி. இப்போது பஸ் , ட்ரைனில்   நிற்பவர்கள் பிடித்துக் கொள்ள மேலே  கம்பி இருப்பது போல் அப்போது இருந்தது. நான் கம்பியை பிடித்து நிற்கும் உயரமில்லாத சின்னப்பையன் என்பதால் அப்பாவின் இடுப்பை பிடித்துக்கொண்டு நின்றவன். 
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...