பேசும் தெய்வம் - நங்கநல்லூர் J K SIVAN --
78. டாக்டரின் அதிர்ஷ்டம்.
மைலாப்பூரில் ஒரு பிரபல டாக்டர் வாழ்ந்த காலம் அது. அவருக்கு வெகுநாட்களாக தனது இல்லத்துக்கு மஹா பெரியவாளை அழைக்கவேண்டும் என்று ஆர்வம். 1932ல் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் சமஸ்க்ரித கல்லூரி வளாகத்தில் பெரியவா உபன்யாசத்துக்கு தவறாமல் வருவார். தரிசனம் செய்வார். முகத்தில் அவருக்குள்ளே இருந்த ஆசை தெரியும். ஆனால் எப்படி அது சாத்தியமாகும்? ஆனால் அது சுலபமல்லவே. எப்படிசாத்தியமாகும்?தினமும் பெரியவாளை நமஸ்காரம் பண்ணுவார்.
ஒருநாள் அப்படி அருகே நின்று நமஸ்காரம் பண்ணும்போது பெரியவா ''உனக்கு எங்கே ஜாகை?''''இதே மைலாப்பூரில் தான் பெரியவா''''ஓஹோ அப்படின்னா இன்னும் அரைமணி நேரத்தில் உன் கிரஹத்துக்கு வரேன் . நீ இப்பவே போய் அங்கே தயார் பண்ணவேண்டியதை கவனி ''ஒரு சந்நியாசியை வீட்டுக்கு அழைப்பதற்கு சில வரைமுறைகளுண்டு. அதை தான் பெரியவா உணர்த்தி இருக்கிறார். அந்த டாக்டருக்கு அப்போது ஏற்பட்ட உணர்ச்சிகள் என் எழுத்துக்கு அப்பாற்பட்டவை என்பதால் வாசகர்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். டாக்டருக்கு ஒரு பக்கம் ஆனந்தம், இன்னொரு பக்கம் கவலை. ஏற்பாடுகளில் ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டால்?அவர் முகத்தின் கவலை ரேகை பெரியவா கண்ணில் படாமலா போகும்? மடத்தில் ஒருவரை கூப்பிட்டு ''நீ இந்த டாக்டரோடு போய் அங்கே செய்யவேண்டியதை கவனிச்சு ஒத்தாசை பண்ணு ''அரைமணி நேரத்தில் பெரியவா வரும் சேதி கேட்டு அந்த தெருவே அதிர்ந்தது. எல்லோரும் குழுமிவிட்டார்கள். பூர்ணகும்பத்தோடு வரவேற்றார் டாக்டர்.சில நிமிஷங்கள் அந்த வீட்டில் பெரியவா அமர்ந்தார். வீட்டில் இருந்த எல்லோரையும் குழந்தைகளையும் தனித்தனியே கூப்பிட்டு அவர்கள் யார் என்ன செய்கிறார்கள் என்று குசலம் விசாரித்தார். விபூதி குங்கும அக்ஷதை பிரசாதம் கொடுத்தார். டாக்டர் கண்களில் வெகுநாளைய ஆசை நிறைவேறிய தில் ஆனந்த, நன்றிக் கண்ணீர்.
1932ம் வருஷம் அக்டோபர் 8ம் தேதி ஸ்வதேசமித்ரன் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு மஹா பெரியவா ஸ்ரீமுகம் வாழ்த்து செய்தி அனுப்பினார். ஸ்வதேச மித்ரன் ஆசிரியர் ஸ்ரீ C R ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
இப்போது ஒரு அற்புத சம்பவம் சொல்கிறேன். மைலாப்பூரில் மஹா பெரியவா சமஸ்க்ரித கல்லூரியில் தங்கியிருந்தபோது ஒரு தீவிர பக்தர் ஸ்ரீ தண்டபாணி ஐயர் (ஸ்ரீ P T பாணி என்ற பிரபல பெயருக்கு சொந்தக்காரர்) தினமும் தரிசனம் செய்ய வருவார். பாணி அய்யர் P.T. பாணி பப்ளீசிங் கம்பெனி என்ற அச்சு நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தவர். மஹா பெரியவா விஜய யாத்திரைக்கு என்று ஐந்து கலசங்கள் பொருத்திய ஒரு பல்லக்கு தயார் செய்து காணிக்கை யாக்கினார். பாணி ஐயரின் இந்த சேவை பலராலும் போற்றப்பட்டது. இந்த பல்லக்கில் மஹா பெரியவா அமர்ந்து பிரயாணம் செய்வதைப் பார்க்கும் பாக்கியமும் மற்ற பக்தர்களோடு சேர்ந்து பாணி அய்யருக்கும் கிடைத்தது. எண்ணற்ற சமஸ்க்ரித ஸ்தோத்திரங்களை தமிழ் படுத்தி வெளியிட்டவர் ஸ்ரீ பாணி ஐயர். அவரை முதுமையில் அவரது திருவல்லிக்கேணி இல்லத்தில் சென்று தரிசிக்கும் பாக்யம் எனக்கு கிடைத்தது. காரணம் அவர் என் மனைவி மூலம் ஒரு நெருங்கிய உறவினர்.
18.9.2021 அன்று சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீ பாணி ஐயர் பதிப்பகத்தி லிருந்து ஒரு பழைய விருந்தை பரிமாறினார்கள். அதை மீண்டும் வெளியிட்டது காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர். அந்த அற்புத புத்தகத்தின் பெயர் ''ஸ்ரீ ஸத்குரு நித்ய தர்சனம். அது 1933ம் ஆண்டு மஹா பெரியவா பேசிய அனுகிரஹ பாஷணங்கள் பதிவாகியிருக்கிறது. இந்த வெளியீட்டு விழா ஓரிக்கை மணிமண்டபத்தில் 18.9.2021 அன்று நிகழ்ந்தது. எனக்கு அழைப்பு வந்தும் என்னால் உடல் நிலை காரணமாக பங்கேற்க முடியாமல் உடல் இங்கே இருக்கையிலும் உள்ளம் ஓரிக்கையிலுமாக நேரம் ஊர்ந்தது. மனம் பெரியவாளையும் ஸ்ரீ பாணி ஐயரையும் நினைத்தது. நன்றாக நினைவிருக்கிறது. திருவல்லிக்கேணி இல்லத்தில் மாடியில் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த ஒற்றைநாடி தேகம். மேலே அங்கவஸ்திரம் அணிந்து இனியமுகத்துடன் என் தந்தையைப் பற்றி விசாரித்தார். நான் அப்போது சென்னையில் ஒரு கப்பல் நிறுவனத்தில் பணியில் இருந்தேன்.அதுபற்றி விசாரித்தார். இது ஒரு நிழலான புகை படிந்த அரைநூற்றாண்டுக்கும் மேலான நினைவு. குடத்திலிட்ட தீபமாக வாழ்ந்து மறைந்த மா மனிதர்கள் வரிசையில் ஸ்ரீ பாணி ஐயரும் ஒருவர்.
ஸ்ரீ ஸத்குரு நித்ய தர்சனம்'' வேண்டுமென்பவர்கள் அணுக: ஸ்ரீ சந்திரசேகர் வாட்ஸாப்ப் நம்பர் 9884885611. ஆக்ஷேபணை இல்லை என்றால், எனக்கு ஒரு புத்தகம் அனுப்பினால் மற்ற பக்தர்களோடு சேர்ந்து இந்த முகநூல் குழுவில் பங்கேற்க தயாராக இருக்கிறேன்.
No comments:
Post a Comment