Sunday, September 19, 2021

ULLADHU NAARPADHU

 உள்ளது நாற்பது -   நங்கநல்லூர்   J K  SIVAN  --

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி.

11. சித்தத்தை சிவன் பால் வைத்து....

முதலில் உங்களை ஒன்று கேட்கப்போகிறேன்.   நாற்பது  செய்யுளில் இதுவரை பத்து செய்யுளுக்கு அர்த்தம் சொல்லியிருக்கிறேன்.  எத்தனை  பேர்  விரும்பி படிக்கிறீர்கள்?. புரிகிறதா?  எவ்வளவோ முடிந்த வரை புரியும்படியாக தான் எளிமையாக எழுதி வருகிறேன்.  ரமணரை  புரிந்துகொள்வது நிச்சயம்  சுலபமல்ல. அவரது தத்வம் மிகவும்  ஆழமான  வேதாந்த எல்லை. ஆத்ம விசாரம் என்பது எல்லோராலும் முடியாத காரியம் என்று நினைத்தால் ரொம்ப ரொம்ப கஷ்டம் தான்.  முடியும், முடிய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால்  மலை கடுகாக தெரியும். 

''அறிவுறுந் தன்னை யறியா தயலை
யறிவ தறியாமை யன்றி – யறிவோ
வறிவயற் காதாரத் தன்னை யறிய
வறிவரி யாமை யறுமே – யறவே 11

உலகில் எல்லா விஷயங்களையும் தெரிந்து  கொண்டு  தனக்குள்ளே இருக்கும் ஆத்மாவைத் தெரிந்து  கொள்ளாத ஞானம் பயனற்றது.  நிஜத்தை அறியாமல் நிழலை அறிவது.  அது தான் அஞ்ஞானம். உலக விஷயங்கள் அனைத்தும் நாம் அறிய உதவுவது நமது ஐம்புலன்கள், மனது, அஹங்காரம், ஆகியவையே. இதெல்லாம் தாண்டி மறைந்திருக்கும், உள்ளே ஹ்ருதயத்தில் உறைந்திருக்கும் ஆத்மாவை உணரும்போது மற்றதெல்லாம்  மறைந்து விடும். இல்லாததாகி விடும். 

வெளியே  காண்பவை உணர்பவை எல்லாம் மனதில்  பதிவாகி  திரையாகி நிற்கிறது. அதனுள்ளே இருக்கும் ஸத்யமான ஆத்மாவை மறைக்கிறது. புகை  விளக்கின் ஒளியை மறைப்பது போல.

அந்தக்காலத்தில் என் சின்ன வயசிலே தினமும் சாயந்திரம் ஹரிக்கேன் விளக்கின் கண்ணாடியை வெளியே எடுத்து நன்றாக  சாம்பல் போட்டு  துடைத்து, திரியை நிமிண்டி அடி  எண்ணெய்  கிணறில்  கெரோசின்  ஊற்றி  திரியைப் பற்றவைத்து, மீண்டும் கண்ணாடியை போட்டு மூடிவிட்டு ஹரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தில்  மூன்று பேர் உட்கார்ந்து  படிப்போம். 

புகைமண்டலம் விளக்கின் ஒளியை மறைப்பது போல் இந்த  வெளியுலக  விஷயஞானம் ஆத்ம ஒளி யை  மறைக்கிறது.   இதை பிளந்து தன்னை அறிபவன் பிரகாசம் பெறுகிறான்.

அறிவு எனும் ஆத்மஸ்வரூபம் அவித்யையால் சூழப்பட்டு சங்கல்ப, விகல்பமாக மனம் என்று தோன்றுகிறது. மனதிலிருந்து சப்தம் ஆகாசமாக, ஸ்பர்சங்களுடன் வாயுவாக,  சப்த ஸ்பர்சம் இரண்டும் கலந்து அக்னியாக,  சப்த, ஸ்பர்ச, ரூபத்தோடு  ஜலமாக , இந்த நாலும்  கலந்து கந்தத்தோடு  பூமியாகிறது.  பிரபஞ்சமாக நாம் உணர்வது மனத்தினால் என்று புரிகிறதா?

இவை அனைத்தும் நம்மிலிருந்து தனித்த அந்நிய வஸ்துக்கள். அவித்யையிலிருந்து ஆத்மாவை பிரித்து உணரும்போது மேலே சொன்ன அந்நிய வஸ்துக்கள் இல்லாததாகிவிடும். இப்படி மனம் அந்நிய வஸ்துக்களை விஷயாகாரமாக  காட்டுவது தான் ''சித்தம்''. விகல்பம் .  

சித்தம் இதெல்லாம் தவிர்த்து நிர்மலமானால் சித் சக்தி பெறுகிறது. ஆனந்தம் நிலைக்கிறது. நிர்விகல்பம் ஆகிறது.இதை அந்தர்முகம் என்பார்கள். 

ஒரு பக்தர்  ரமணரிடம் ஒரு நோட்டு புத்தகம் பென்சில் கொடுத்து  எனக்கு  ஏதாவது ஒரு அக்ஷரமாவது எழுதிக் கொடுங்கள் என்கிறார்.  ரமணர் சிரித்துக் கொண்டே  ''ஏகமக்ஷரம் ஹ்ருதி, நிரந்தரம்  பாஸதே ஸ்வயம் லிக்யதே கதம்?''  என்று எழுதினார் ? என்ன அர்த்தம் ?

''நீ கேட்ட  அந்த அக்ஷரம், ஹ்ருதயத்தில்  இடைவிடாமல் தானாகவே ஜொலிக்கிறதே, அதை எப்படி அப்பா எழுதுவேன்?''

நள்ளிருளில் கயிறு பாம்பாக தோன்றி நாம் பயந்து, வியர்த்து, உளறி, அலறி, கடைசியில் அது கயிறு தான் பாம்பில்லை என்று அறிகிறோம்.  கயிறு பாம்பாக நிஜமாக தோன்றி கடைசியில் கயிறு தான் நிஜம் என்று தெரிகிறது.   

ஸ்வப்னத்தில், சுஷுப்தி (ஆழ்ந்த தூக்கத்தில்) நமது ஸ்வானுபவம், உண்மை ஸ்வரூபம் அறியப்பட வில்லை.  ஆத்மா உள்ளே நிற்கிறது. உணரப்படாமல்.  

திரை பலமாக, அழுத்தமாக இல்லை என்பதால் ஆத்ம சுகம்  மட்டும் அறியப்பட்டு  ஆனந்தமாக தூங்கினோம் . அப்போது  தேகம் மனம் இரண்டும் இல்லை. புத்தி ஆத்மாவை ஒட்டிக் கொண்டிருந்தது. ஆகவே  ஆத்ம சுகம் உணர்த்தியது.  அதை நினைவிலும் வைத்துக் கொண்டோம்.  மிகவும் சூக்ஷ்மமான இந்த  ''புத்தி'' எல்லோரிடமும் உள்ளது.    ஸ்ரத்தா சக்தி என்று பெயர். அதற்கு முக்யத்வம் கொடுத்து கவனித்தால் அறிவே ஸ்வரூபமான ஆத்மாவை அறிவினாலேயே அறிய முடியும்.  

மொத்தத்தில் சுருக்கமாக சொல்வதானால் நமது தேகம், மனது,  நம்மை கண்டபடியெல்லாம் அலையச்செயகிறதல்லவா. இந்த  விஷயஞானத்திலிருந்து புத்தியை திருப்பி மனதை, தேஹத்தை  கட்டுக்குள் வைத்து, மனதின் அடிவாரத்துக்கு செலுத்தினால்  ''சித்தின் '' அனுபவம் முக்தி ஸ்வரூபமாக  தெரியும் இதை தான் மணிவாசகர்  ''சித்தத்தை சிவன் பால்  வைத்து ''  என்கிறார் என்பது இப்போது விளங்கும்.  


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...