Tuesday, September 28, 2021

ORU ARPUDHA GNANI

 ஒரு அற்புத ஞானி -  நங்கநல்லூர்  J K  SIVAN 


''சிட்டாய் பறக்கும் ஸ்வாமிகள்''

சேஷாத்ரி  ஸ்வாமிகளை பற்றி  நிறைய எழுத  ஆசை. ஆனால்  அதற்கு ரெண்டு விஷயங்கள் தடையாக இருக்கிறது.  ஒன்று  அவர்  விளம்பர சாமியார் இல்லை என்பதால், எவரையும் கிட்டே அணுக ஒட்டாதவர், யாருக்கும் குரு இல்லை,  தனக்கென ஒரு இடம் தேடாத, புகழ் விரும்பாத ப்ரம்மஞானி என்பதால் அதிக விஷயங்கள் அவரைப்பற்றி வெளி உலகம் அறியமுடியாமல் போய் விட்டது.   குழுமணி ஸ்ரீ நாராயணஸ்வாமி சாஸ்திரிகள் போன்ற ஒரு சிலரால் வெளியே கசிந்த விஷயங்கள் தவிர அதிகம் வெளியே தெரியாத ஒரு மஹான் ஆகிவிட்டார். 

 ரெண்டாவது அவரைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் போதெல்லாம் என் கண்ணில் நீர் திரையிடுகிறது. பார்க்க முடியவில்லை. கண் கோளாறு எதுவும் அல்ல. மனதில் பொங்கி வழியும் பக்தி ஆனந்தக் கண்ணீர் தான் திரையிடுகிறது. மனம் நினைக்கும் விஷயத்தை கை  எழுதமுடியவில்லை ஸ்வாமி. நான் என்ன பண்ணுவேன்.

சேஷாத்ரி ஸ்வாமிகள் என்கு  சென்றாலும் அவர் பின்னே தொடர்ந்து செல்லும் பக்தர் கூட்டம் பெருகிக்  கொண்டே வந்தது.

 திருவண்ணாமலையில் போளூர் தாலுக்கா பக்கம் துரிஞ்சி குப்பம் என்று ஒரு குட்டி கிராமம். அங்கே  ஒரு பழைய  ஆதி பராசக்தி அம்மன் கோவில் உண்டு.  ஒருநாள் அதற்கு செல்லும் பக்தர்கள் கண்ணுக்கு  ஸ்வாமிகள் அம்பாளாக தென்பட்டாரா  என்று தெரியவில்லை அவரை பின் தொடர்ந்
தார்கள்.

''இது  திருவண்ணாமலை  போகிறது' என்று மண்ணில்  எழுதி காட்டினாரோ, சுவற்றில் கரியில் எழுதினாரோ, காகிதத்தில் எழுதிக்காட்டினாரோ சரியாக தெரியவில்லை.  மெளனமாக வேகமாக பின் தொடர்பவர்களை விட்டு விலகிச்  சென்றார்.

மார்செட்டி குளம் கிராமம் பக்கம் வந்தபோது  பின்னால் தொடர்ந்து வந்தவர்களிடம்  குளக் கரையில்  நிறைய  களாக்காய் காய்த்திருக்கிறது போய் பறித்துக்கொண்டு வாருங்கள் என்று அறிவித்து விட்டு சென்றார்.   சில  நிமிஷங்க
ளிலேயே  அவர்  கை நிறைய  களாக்காய் சேர்ந்துவிட்டது. குழந்தை மாதிரி ஆனந்தம். சிரிப்பு.   புளிப்பாக இருக்கும் சிலவற்றை சுவைத்தார்.  மற்றவற்றை  போட்டுவிட்டு,  நடந்து சென்று அடுத்த ஊர்  ஐயன் தோப்பை அடைந்தார்.

 எவ்வளவோ பேரை அவர்  எப்படியோ  பின் தொடராமல் கழற்றி விட்டாலும் மூன்று பேர் விடாமல் நிழல் போல் தொடர்ந்து வந்தார்கள்.   அது காலை வேளை. அவர்  ஒரு இடத்தில் உட்கார்ந்த
போது  அவர்கள் இவர் இங்கே இருக்கட்டும்,  சீக்கிரம்  அதற்குள்  நாம்   குளித்து விட்டு வந்துவிடுவோம்  என்று நகர்ந்த சமயம் சிட்டாக  பறந்துவிட்டார்.   குளித்து விட்டு வந்தவர்கள் எங்கு தேடியும்  ஸ்வாமிகளைக்  கண்டு பிடிக்க முடியவில்லை.

அடுத்த சில  மாதங்களுக்கு  ஸ்வாமிகள் எங்கிருக்
கிறார் என்ற அட்ரஸே  இல்லை.  காஞ்சிபுரத்துக்கு தெற்கே உள்ள  தூசி மாமண்டூர் எனும் கிராமத்தில்  பாண்டவர் குகைகள் அருகே ஸ்வாமிகள் செல்வதை  பார்த்ததாக ஒரு சிலர் தகவல் தந்தார்கள்.  உடனே ஒரு கூட்டம் அங்கே சென்றது.

 ஸ்வாமிகளின் தம்பி   நரசிம்ம ஜோசியரும்  இந்த சேதி கேட்டு விழுந்தடித்துக்கொண்டு அங்கே ஓடினார். ரொம்ப நாளாக  அண்ணாவை தேடிக்
கொண்டிருப்பவர் அல்லவா?   அங்கிருந்ததாக சிலர் சொன்னாலும்  ஸ்வாமிகள்  அதற்குள் வேறு எங்கோ சென்றுவிட்டார்.  

சில நாட்கள் வேகமாக வளர்ந்து  வாரங்களாகி விட்டன . வடாற்காடு ஜில்லாவில் திருப்பத்தூரில் ஸ்வாமிகள் இருப்பதாக ஒரு சேதி கிடைத்தது.  

எனக்குத் தெரிந்து  திருச்சி - சென்னை நெடுஞ்
சாலையில், சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் ஆலயம்  இருக்கிறது.  இங்கேயா  ஸ்வாமிகள் வந்தார்?  ரொம்ப அற்புதமான ஆலயம் அது. சமய புரத்தில் இருந்து 15 கி.மீ.தூரம்.  பிரம்மபுரீஸ்வரர்  ஆலயத்தில் 3001 வேதம் ஓதுபவர்கள், அனு தினமும் வேதங்களை பாராயணம் செய்ததால்  காற்றில் எங்கும்  அங்கே  அதிர்வலைகள் பரவி இருந்ததால் ‘திருப்பிடவூர்’ என்று பெயர், அது தான்  காலப்போக்கில் ‘திருப்
பட்டூர் ’.  இங்கே  புலியின் கால்களை கொண்ட  ‘வியாக்ர பாத ரிஷி  சிவனை நோக்கி தவம் செய்த ஸ்தலம்.  இந்த ஆலய  குளத்து நீரைத் தொட்டாலே
கங்கையில் நீராடிய பலன்.  அவ்வளவு விசேஷம்.   காசிக்கு சமமான புனித ஸ்தலம்.   விஷ்ணுவை  வணங்கி தொழுததால், ஆதிசேஷன் பதஞ்சலி முனிவரான  ஸ்தலம். 
சிவபெருமான், பிரம்மனின் ஐந்தாவது  தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர். திருவையாறு ஸப்த ஸ்தான ஆலயங்களில் ஒன்று. நிறைய இது பற்றி எழுதியிருக்
கிறேன்.  அந்த பிரம்மன் பரிகாரம் தேடிக் கொண்
டது இந்த  திருப்பட்டூர் ஸ்தலத்தில் .  அம்பாள் பெயர்  பிரம்ம சம்பத் கவுரி.கருணா  சாகரி . இங்கு
பிரம்மாவை  தனி சந்நிதியில்வணங்கும் போதே, குரு தட்சிணாமூர்த்தியையும் கண்டு தரிசிக்கலாம். ரொம்ப விசேஷமானவர்.இதுவரை தரிசிக்கா
தவர்கள் நிச்சயம் ஒரு முறையாவது சென்று வணங்கவேண்டிய ஸ்தலம்.

சேஷாத்ரி  ஸ்வாமிகள் இந்த  ஆலயத்திலும்  முத்துக்குமாரசுவாமி  ஆலயத்திலும்  சிலநாள் தங்கி  தரிசித்தார். எதற்காக  ஸ்வாமிகள் இங்கே வந்தார்  என்பது  கோவிலில் உள்ள ப்ரம்மாவுக்கே தெரியாத ப்ரம்ம ரஹஸ்யம்.  அவர் அத்தை மகள்  காகினி இங்கே கல்யாணமாகி கணவன் வெங்கட்ரமண ஐயரோடு வாழ்ந்தாள் . அவளை தான் மரகதம் தன் மகன் சேஷாத்திரிக்கு மணமுடிக்க ஆசையாக இருந்தும், சித்தப்பா  ராமஸ்வாமி  ஜோசியர் தான்  சேஷாத்திரிக்கு சந்நியாசி ஜாதகம். மண வாழ்க்
கையில் ஈடுபடமாட்டான்  என்று கல்லைத் தூக்கி  தலையில் போட்டு அந்த  ஏக்கத்திலேயே விரைவில் அம்மா மரகதம் மறைந்து போனதை ஏற்கனவே சொன்னேனே.

சேஷாத்ரியின்  சித்தப்பா  ராமஸ்வாமி ஐயர் சகோதரி  வெங்கட லக்ஷ்மி மாப்பிள்ளை  வெங்கட்ரமண  ஐயருக்கு   கடிதாசு எழுதினார். 

 ''மாப்பிள்ளே, உங்க ஊருக்கு தான்  சேஷாத்திரி வந்திருக்கான்னு கேள்விப்பட்டேன். கொஞ்சம் திருப்பத்தூரில் தேடிப்பாருங்கோ. இருந்தா உடனே தந்தி போல் பாவித்து எனக்கு தெரியப்படுத் துங்கோ ''
வெங்கட்ரமணன்தேடிக்கொண்டிருந்த போது  சேஷாத்திரி ஒருநாள் மார்க்கெட் பக்கம்  அவர் கண்ணில்  பட்டுவிட்டார்.  நைஸாக   பேசி ஸ்வாமிகளை  வீட்டுக்கு அழைத்தார். ஸ்வாமிகளின் சித்தப்பா ஜோசியர்  ராமஸ்வாமி ஐயர் எழுதிய கடிதத்தை காட்டினார்.  எவ்வளவோ வற்புறுத்தியும்  ஸ்வாமிகள் வீட்டுக்குள் நுழையாமல் திண்ணை
யிலேயே  உட்கார்ந்துவிட்டார்.  அத்தை வெங்கட
லக்ஷ்மி சேஷாத்ரியின் வாடிய முகம், ஒட்டி உலர்ந்த வயிறு,  கலைந்த  எண்ணெய் காணாத தலை,  கிழிசல் வேஷ்டி துண்டு--  இதைஎல்லாம்  பார்த்து அழுதாள்.  உறவு எதையும் சுவாமி லக்ஷியம் பண்ணவில்லை.   என்ன கேள்வி கேட்டாலும் அவர் பதில் சம்பந்தமில்லாமல் இருந்தது. இல்லை இல்லை அந்த  மஹான் சொன்னது அவர்களுக்கு புரிய
வில்லை.  உயர்ந்த வேதாந்தி எளிதில் புரிவாரா? 

''உள்ளே வாடா  சேஷு  கண்ணா என்று அத்தை கெஞ்சினாள்.  ஏதோ எங்கோ  கவனத்தில் சிரித்துக் கொண்டே  தெருவையே வெறிக்கப்  பார்த்துக்
கொண்டிருந்தார் ஸ்வாமிகள்.  அத்தை மகள் காகினி நெஞ்சு படபடத்தது.  அம்மாஞ்சி இப்படி ஆயிட்டானே .  இப்படி  பரப்ரம்மமா வாசலிலேயே உட்கார்ந்து கொண்டிருக்கானே.  அவனைப் பார்க்கும்போது வயிறு பகபகவென்று பத்தி எரியறதே.இப்போது பிறன் மனைவி என்பதால் பேச முடியவில்லை. ஸ்வாமிகள் அவள் இருந்த திசை
யைக் கூட திரும்பி பார்க்கவில்லை. உணவு கொண்டு வந்து கொடுத்தார்கள். சாப்பிட்டுவிட்டு திண்ணையிலே சாய்ந்தார்.  அவர் பக்கத்திலேயே  வெங்கட்ரமணய்யர் படுத்து தூங்கினார்.  பொழுது விடிந்தது. அத்தை வெங்கட லக்ஷ்மி  வாசலில் பெருக்கி நீர் தெளித்து கோலம் போட  ஐந்து மணிக்கே எழுந்து வந்தாள் . அவள் கண்கள் திண்ணையில் சேஷுவைத்  தேடின.  சேஷாத்ரி ஸ்வாமிகள் படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. எப்போது எழுந்து எங்கே போனார்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...