உள்ளது நாற்பது - நங்கநல்லூர் J K SIVAN --
பகவான் மகரிஷி ரமணர்
15. ஆத்மா தான் நிகழ்காலம்.
''நிகழ்வினைப் பற்றி யிறப்பெதிர்வு நிற்ப
நிகழ்கா லவையு நிகழ்வே – நிகழ்வொன்றே
யின்றுண்மை தேரா திரப்பெதிர்வு தேர்வுன
லொன்றின்றி யெண்ண வுனலுணர – நின்றபொருள் 15
இன்று ஒரு ரமணாஸ்ரம சம்பவத்தோடு மேற்கண்ட செய்யுளுக்குள் செல்வோம்.
ஒரு துறவி எங்கோ ஒரு ஊரிலிருந்து ரமணரை தரிசிக்க திருவண்ணாமலை வந்தார். அவர் மனதில் ஆயிரம் சந்தேகங்கள். அவற்றைப் போக்க வழி தெரியவில்லை. ஆகவே ரமணரிடம் அவற்றை கேட்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் எப்போதும் ரமணாஸ்ரமத்தில் யாராவது பகவான் அருகே இருந்து கொண்டே இருக்கிறார்களே. எப்படி அவரிடம் மனம் திறந்து சந்தேகங்களை கேட்பது? நமது சந்தேகங்களை கேட்டு அவர்கள் சிரித்தால் , கேலி செய்தால் வெட்கமாக இருக்குமே? சில நாட்கள் இப்படி பொறுமையாக பகவானை தனியாக பிடிக்க காத்திருந்தார். ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது பகவான் அருகே சென்றார். பகவான் ரமணர் இவரை சிலநாட்களாக கவனித்துக் கொண்டு வந்தார். இவர் மனதில் ஓடுவது அவருக்கு துல்லியமாக தெரியுமே. ஆகவே எல்லோரும் வெளியே செல்லும் நேரத்திற்கு காத்திருந்தவருக்கு இது நல்ல சமயமடா, இதை நழுவ விடுவாயோ என்று தோன்றியது. கைகூப்பியவாறு ரமணரிடம் பேசினார்:
''சுவாமி, சில நாட்களாக உங்களிடம் சில சந்தேகங்களை கேட்கவேண்டும் என்று ஆவலாக இருந்தேன். ''இத்தனை நாள் எதற்கு காத்திருக்க வேண்டும். அப்போதே கேட்டிருக்கலாமே '' ''எல்லோரும் போகட்டும் என்று காத்திருந்தேன். அவர்கள் எதிரே என் சந்தேகங்களை கேட்பதற்கு கூச்சமாக இருந்தது.''''ஓஹோ''''சுவாமி இப்போது எல்லோரும் போய்விட்டனர். நான் மட்டுமே இருக்கிறேன்''''அதுவும் போகட்டும் '' என்கிறார் ரமணர்.இதுவே உபதேசமாக போய்விட்டது அந்த துறவிக்கு.இனி மேலே கண்ட செய்யுளின் அர்த்தம்:
காலத்தை மூன்றாக பிரித்து கடந்தது, நிகழ்வது, எதிர்காலம் என்கிறோம். நிகழ்காலத்தை வைத்துதான் கடந்த, எதிர் காலங்கள் பிறக்கிறது. ஏனென்றால் இறந்தகாலம், எதிர்காலம் ரெண்டுமே அவை நடந்தபோது ''நிகழ்''காலம் தானே. நிகழ்காலம் என்பது தான் ஸத்யம் .இன்று, இப்போது, என்பவை ஸத்யானுபவம். இதை விட்டு கடந்தகாலம், எதிர்காலத்தை பற்றி எண்ணுவது ஒன்று என்பதை எண்ணாமல் விட்டு எண்ணுவதைப் போல. ஆதாரமே ஒன்று தானே
ஒரு சமயம் ஒரு பெரிய பண்டிதர் ரமணரிடம் கலியுகம், ஸத்யயுகம் போன்ற யுகங்களைப் பற்றியும் அவற்றின் கால அளவைப் பற்றி சர்ச்சை செய்ய முயன்றபோது பகவான் அவரிடம் ''காலம் என்பதே மனம் உதிக்கும்போது தான் உண்டாகிறது. ஆன்ம ஸ்வரூபத்தில் ரமிப்பவருக்கு காலம் கிடையாது. இது போன்ற சர்ச்சைகளுக்கு இடமே இல்லை '' என்றார் . இறந்த காலம் என்பது எப்போதோ நடந்து முடிந்தது. இப்போதைய அனுபவம் கிடையாது எதிர்காலம் அதுபோல ஏதோ ஒரு எதிர்பார்ப்பு. நிகழ் காலம் ஒன்று தான் நிதர்சனமான அனுபவம். நிகழ்காலத்தை மனம் தொட்டுவிட்டால் அது இறந்த காலமாகிறது. இறந்தகாலம், எதிர்காலம் ரெண்டுமே மனோமயம்.
ஒரு நல்ல மனதில் பதியும் உதாரணம் சொல்கிறேன். கடிகாரத்தின் பெண்டுலம் அசைந்தால் தான் அது காலம் காட்டும். மனம் எனும் பெண்டுலம் இறந்தகாலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அசைந்துகொண்டே இருக்கிறது. அசையாமல் அது நின்றால் நிகழ்காலத்தில் எல்லாம் நிற்கிறது. கடிகாரம் அப்படியே நின்று விடுகிறதே அது போல. அப்போது காலம் இல்லை.
''சுவாமி நான் பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தேன் என்று எப்படி அறிந்துகொள்வது?'' என ஒரு பக்தர் கேட்டார். பகவானின் பதில்:
''பூர்வ ஜென்மம் பற்றிய ஆராய்ச்சி அங்கேயே இருக்கட்டும். இப்போது நீங்கள் பிறந்திருக்கிறீரா? ஆம் என்றால் இப்போது நீங்கள் யார்? எப்படி இருக்கிறீர்கள் என்பதை விசாரம் செய்து பாருங்கள்''என்றார் .
ரொம்ப சிம்பிள்: உடம்பு இறந்தகாலம். மனம் எதிர்காலம். ஆத்மா என்றும் எப்போதும் நிகழ்காலம். ஆனால் ஆத்மா காலத்துக்கு அப்பாற்பட்ட ஸத்யம் . ஸாஸ்வதம் .
ஒரு பக்தர் பகவான் ரமணரிடம் அன்றைய திதி பற்றி பேசினார். சந்தேகம் கேட்டார். பகவான் சிரித்துக் கொண்டே, ''எனக்கு இப்போது இரவா, பகலா என்பதே சந்தேகம்.என்னிடத்தில் சதுர்த்தி, ஏகாதசி பற்றி கேட்டால் எப்படி சொல்வேன்? என்றார். பரமாத்ம ஞான நிஷ்டையில் உள்ளவர்களுக்கு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சில காலமாக, அறைவினாடி நேரமும் சில சமயம் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தோன்றும். காலம் என்பது பிரமை.
ஒருமுறை ஒரு பக்தர் ''சுவாமி ஒரு மனிதன் இறந்த பிறகு ரெண்டு வருஷத்தில் இன்னொரு இடத்தில் பிறந்திருப்பானா?'' என்று கேட்டார். பகவான் ''பிறந்திருப்பது மட்டுமல்ல சிலசமயம் 72 வருஷம் வயசாகியும் இருக்கக்கூடும்'' என்று பதில் சொன்னார்.
தொடரும்
No comments:
Post a Comment