Wednesday, September 22, 2021

pesum dheivam

 பேசும் தெய்வம்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  --


79  பாபம் புண்யம் பற்றி கொஞ்சம்...

மஹா பெரியவா பக்தர்களே, வாசகர்களே,  உங்களுக்கு ஒரு அருமையான விருந்து இப்பொழுது  தரப்போகிறேனே , அது நான் தயார் செய்த  அறுசுவை விருந்து இல்லை. மஹா பெரியவா  1932ம் வருஷம் அக்டோபர் மாதம் 10ம் தேதி  அப்போதைய மெட்ராஸ்  ஸமஸ்க்ரித  கல்லூரி வளாகத்தில் நிகழ்த்திய   உபன்யாச சாரம்.  ஏராளமாக பக்தர்கள்  கூடி இருந்தார்கள். அனைவரும் தரையில் அமர்ந்திருந்தார்கள். ஒரு சின்ன சப்தம் கூட இல்லை. மெல்லிய குரலில் மஹா பெரியவா பேசுவது தேன்  துளிகளாக  எல்லோர் காதிலும் விழுந்தது.  இதைத்  தான் பாரதியார்  ''இன்பத் தேன்  வந்து பாயுது காதினிலே''  என்று பாடி இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. கேளுங்கள்: 

''சாப்பிட  உட்கார்ந்தால்  நாம்  வயிறு நிறைய சாப்பிடுகிறோம். அதேபோல் நமது குடும்பத்தில் மனைவி, பெற்றோர், குழந்தைகள் , பந்துக்கள், மித்ரர்கள், எல்லோரும் சுகமாக இருக்க வழி தேட சில லௌகிக காரியங்கள் செய்கிறோம். உடுக்க வஸ்திரம், இருக்க வீடு,  உண்ண  சாப்பாடு இதுபோல வசதிகள் கிடைக்க உழைக்கிறோம்,  தேடுகிறோம்.  இது இந்த லோகத்துக்கு தான் உபயோகம்.  மற்ற லோகங்களுக்கு நாம் செல்ல வேண்டுமே, அப்போது அங்கே  இப்படி நமக்கு வசதி கிடைக்க என்ன செய்யவேண்டும். அதற்கு  தான் தர்மம் செய்வது.   

''நீங்க சொல்றதெல்லாம் சரிதான். அன்றாடம் காலம் தள்ள, குடும்பத்தை கவனிக்கவே  நேரம் போத வில்லையே, அடுத்த லோகம் போனால் சௌகர்யத்துக்கு தர்மம் எல்லாம் எப்படி பண்ணறது, நேரம் எங்கே, போதாதே. சொல்றது ஈஸி'' என பதில் சொல்லலாம்.   நான் ஒரு விஷயம் சொல்றேன்.  பணம் சம்பாதிக்க நேரம் ஆகட்டும். அதையும் மீறி  உல்லாசத்துக்கு, வம்புக்கு, கேளிக்கைக்கு, வீண் பேச்சுக்கு, கேலிக்கூத்துக்கு  எல்லாம் கூட நமது நேரம் வீணாகிறது அல்லவா?  அனாவசியமாக  செலவாகிற தல்லவா? அதை தர்ம காரியத்துக்கு  திருப்பிவிடுங்களேன்'.  உதாரணமாக  ட்ரெயினில்,  ட்ராமில் , பஸ்ஸில், வண்டியில் உட்கார்ந்து போகும் நேரம்  பகவான் நாம ஜபம் பண்ணலாமே.   மனம் இருந்தால் நிச்சயம் மார்க்கம் உண்டே.  இப்போ  கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு அப்போது நம்மோடு  கூட வரப்போவதில்லை, அடுத்த  லோகங்களிலும் செல்லாது.  நேரமில்லை என்று  சொல்வது  பொய் . நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.''  (நான் இல்லை, மஹா பெரியவா  சொல்றார்)

பணம் இல்லை என்கிறது தப்பு.  கொஞ்சம் சம்பளம், கஷ்ட தசை என்றாலும்  ஒரு பைசா, காலணா, நிச்சயம் மிச்சம் பண்ணி  உண்டியல்லே பகவானுக்குன்னு போடுகிறேன்  என்று  திடமாக சங்கல்பம் பண்ணிக்கொள்ளலாம்.  தூக்கத்திலேயும், வம்பிலேயும் நேரம் செலவாகாமல் பகவான் சரணங் களை தியானம் செய்யலாம். இது தான் வரவு. சேமிப்பு அடுத்த லோக சௌகர்யத்துக்கு.   

நாம்  ரொம்ப பாபம் செய்தவர்கள், பாபிகள் என்று நினைக்கவே வேண்டாம். நம்மைவிட ரொம்ப ரொம்ப பாபம் பண்ணியவர்களை எல்லாம் புண்யசாலிகளாக்கி இருக்கிறான் பகவான்.  அப்படி ஆக்குவது தான் அவனுக்கு பெருமை.

''டேய் , அர்ஜுனா  நீ பாபிகளிலேயே முதல்வன் என்றால் கூட,  பாபம் என்கிற சமுத்திரத்தை ஞானம் என்கிற ஓடத்தில் ஏறி நீ கடந்துவிடலாம். கவலைப்படாதே.''  (கீதை  4.36)
''ஐயோ,  நாம  இவ்வளவு பாபம் செய்துட்டோமே என்று அழாதே. அதைர்யப்படாதே. உன்னை எல்லா பாபத்திலிருந்தும் நான் மீட்டுடறேன்''  (கீதை 18.66)''  என்கிறார் கிருஷ்ணன்.

பாபம் நாம் எப்படி பண்றோம்?   மனசிலே  கெட்ட எண்ணங்களால், வாயிலே கெட்ட , தப்பான வார்த்தைகள், புரளிகள் பேசுவதால், உடம்பாலே பண்ற பாபத்தை சொல்லவே முடியாது. அவ்வளவு ஜாஸ்தி.   பாபங்கள் பண்ணாமல் இருக்க முடியலையே ? அது   குடிகாரன் மாதிரி பழக்கமாயி டுத்தே,  பிசாசு பிடிக்கிற மாதிரி நம்மை பாபங்கள் விடாது பிடித்துக் கொள்கிறதே.  இதிலிருந்து எப்படி விடுபடறது?

முள்ளை முள்ளாலே எடுப்பது என்கிறோமே, அதே டெக்னிக்  தான். எந்த வழியிலே பாபம்
பண்ணினோமோ அதே வழியில். வாயினால் நல்ல சொற்களை, யாருக்கும்  தீங்கில்லாமல், உதவும்படியாக பேசுவோம், மனதில் எவருக்கும் தீங்கு செய்யாமல்   தப்பு என்று தோன்றும்போது அதை மதித்து கண்ட்ரோல் பண்ணிக்கொண்டு, தேகத்தை  கட்டுப்பாடோடு வைத்துக்கொண்டு பகவத் காரியங்களில் அதை ஈடுபடுத்திக் கொண்டு தர்ம காரியங்களை  முடிந்தவரை செய்வோம்.  
மஹா நாராயண உபநிஷத் இதைத்தான் ''பாபத்தை தர்மத்தால் நிவர்த்தி பண்ணு '' என்கிறது.  

எல்லாத்துக்கும் காரணம் மனசு. அதை நேர் வழியில் இழுத்து பிடித்து நிறுத்தவேண்டும். ஆசைக்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்வோம். பாபத்தை பண்ண தூண்டுவது மனசு தான். புண்யம் என்று எங்கோ எதையோ தேடிப்  போய் செய்யவேண்டாம். பாபம் செய்யாமல் இருந்தாலே புண்யம் தான். புண்ய பலன் சந்தோஷமாக இருப்பது தான். சாந்தி தான் மனதுக்கு தேவையானது. அலை பாய்வது அல்ல.   பாபத்தின் பலன் தான் அத்தனை கஷ்டமும்.  மனச்சாக்ஷி சொல்லியும் தடுத்தும், அதை மீறி தப்பு செய்வது தான் பாபம். 

யாருக்குமே  பாபம் செய்யவேண்டும் என்ற எண்ணம் கிடையாது. ஆனால் செய்வது நூற்றுக்கு எண்பது  தொண்ணூறு  பாப காரியம் தான்.    ஏன்? ஆசை, ஐம்புலன்களின் ஈர்ப்பு. பாப மூட்டை பெரிதாக போய்க்கொண்டே இருக்கிறது. அப்புறம்  ஏன் இப்படி என்று கேட்டு என்ன  பயன்?

அர்ஜுனன் புத்திசாலி. ஒரு கேள்வி கேட்டான் பாருங்கள் கிருஷ்ணனை . 
''பாபம் பண்ணனும் என்று எண்ணமோ நோக்கமோ இல்லை, ஆனால் பாபம் நிறைய செய்கிறோமே, யார் இப்படி தூண்டுவது , யார் இப்படி செய்விப்பது?(கீதை  3.36)

''நமது காரியங்கள் அத்தனையுமே மனதில் எழும் ஆசையினால், (ஆசை தான் காமம்)  பாபம், தப்பு, தவறு என்று தெரிந்தும் சுயலாபத்துக்காக,  அல்ப சுகத்துக்காக  செய்கிறோம். அது தான் முதல் சத்ரு.    அடுத்தபடியாக   அது கிடைக்காமல் போனால்  வரும்  கோபம் (க்ரோதம்). காமம் தான் க்ரோதமாகிவிட்டது.  ரெண்டும் ஒன்று தான்.   சுவற்றில் எறிந்த பந்து அதே வேகத்தோடு நம் முகத்தில் விழுவது போல். காமம்,  கோபமாக திரும்புகிறது. காமத்தை அடக்க அதன் வழி போனால்  திருப்தி அடைவதில்லை.    இன்னும் பசி  அதிகமாகும்.  நெருப்பு மாதிரி மேலே போடப்போட  இன்னும் பெரிதாக  ஜ்வாலை  எழும்புவது போல் அதிகமாகும்.    ஆகவே  நாம் செய்யும் பாப காரியங்களுக்கு காரணம் இந்த காம  க்ரோதங்கள் தான்.  யோசித்துப்பாருங்கள் உண்மை புலப்படும்.   மனம் வாக்கு காயம்  இந்த மூன்றாலும் பாபம் செயகிறோம் என்றேன் அல்லவா?. 
 அந்த மூன்றையும் முதலில்  கண்ட்ரோல் பண்ணி சுத்தப்படுத்திக் கொள்வது தான் த்ரிகரண சுத்தி. 

பகவான் மனிதனுக்கு மட்டும் வாக்கு  எனும்  வசதி கொடுத்திருக்கிறான். மனதில் நல்ல எண்ணங்களை தோற்றுவித்து அதை வெளிப்படுத்த வாக்கு அவசியம்.   நாமும் நல்ல காரியம் பண்ணி, பிறரையும் பண்ண வைக்க வாக்கு , நாக்கு, உதவட்டும் என்று தான் கொடுத்துள்ளான்.  நாம் அதை துஷ்ப்ரயோகம் பண்ணுகிறோம். நரம்பில்லாத  நாக்கு என்னவேணும் என்றாலும் பேசும் என்று நாமே சொல்கிறோம்.  பாபம்  சேர அதுவே முதல் காரணம் ஆகிறது. வேலியே பயிரை மேயும்  கதை.  புகையிலை,  மூக்குப்பொடி, சிகரெட் பீடி,   எல்லாம் முதலில் அல்ப சுகம் தந்து மீண்டும் மீண்டும்  அதை செய்ய தூண்டுகிறதே  அது போல்.   முளையிலேயே இந்த கெட்ட பழக்கத்தை விலக்கி  நல்ல ஸத் காரியம் பண்ண பழக்கப் படுத்திக் கொண்டால் மேலே சொன்னதெல்லாம்  கிட்டேயே  வராது.  

தினந்தோறும்  மனதாலும், வாக்காலும், உடம்பாலும், பணத்தாலும், கொஞ்சமாவது நல்லதே செய்து  கொண்டு வருவோம். அதுவே பழக்கமாகிவிடும். தினமும்  ஒரு சில பைசாவாவது, தர்ம காரியத்துக்கு என்று ஒதுக்கி டப்பாவில் போட்டு பின்னால்  அதை அந்த காரியத்துக்கே
 உபயோகிக்கும்போது மனசந்தோஷம் ஏற்படும்.  குழந்தைகளை தினமும் ஒரு காலணா, ஒரு பைசாவாவது வேண்டிக்கொண்டு ஸ்வாமிக்கு டப்பாவில் போடா வையுங்கள். இந்த பணம் தான்  AFTER LIFE INSURANCE.  வாக்கினால் தினமும்  ரெண்டு ஸ்லோகமாகவாவது,  பகவன் நாமாவாவது சொல்வோம். ஜபமாலை உருட்டி  108 சொல்லமுடிந்தால் அற்புதமான புண்யம் சேர்த்துக்கொள்கிறோம்.   வீட்டை சுத்தமாக பெருக்கி மெழுகி வைத்துக் கொள்கிறோம், அதுபோல் மனதை சுத்தமாக்கினால்  ஹ்ருதய பீடத்தில் பகவான் வந்து அமர்வான். தினமும்  ஐந்து நிமிஷ தியானமே போதும்.   பணம் சம்பாதிக்க எவ்வளவு நேரம், மனதையும் உடம்பையும் வீணாக நேரத்தை செலவழிக்கிறோம். ஒரு ஐந்து பத்து நிமிஷம், முடிந்தால்  அரைமணி , அதை தியானத்தில் திருப்ப முடியாதா?   

பாபம் பண்ணியிருப்பதால் தான் தர்மம் மூலம் புண்யம் தேவை.  கடன் தீர  கொஞ்சம் கொஞ்சமாக வட்டி, கொஞ்சம் அசல் திருப்பி கொடுப்பதால்  கடன் சுமை குறைவது போல் பாபம் கரைந்து  புண்யத்துக்கு இடம் கொடுக்கும். 

நமது அந்திம  காலத்தில், பிரயாண காலத்தில், மனது அசையாது.  மலைபோல் இருக்கும். பாபத்தைப் பற்றிய பயம் இருக்காது.  அதனால் கோப,க்ரோத பயமும் இல்லை.  பகவத் தியானம், மனதை அவனிடம் சேர்க்கும் . (கீதை  8.10)  நாம் பண்ணிய காரியத்துக்கு எல்லாம் பகவான் பொறுப்பேற்று நம்மை மீட்கிறான்.   அதனால் தான் அவனை கருணாசாகரன் என்று சொல்கிறோம். 

தொடரும். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...