Wednesday, September 30, 2020

HAMPI

 



ஒரு  அற்புத  கலைக் களஞ்சியம் J K  SIVAN 









நெஞ்சில் இடம்பிடித்த  ஒரு  ஊர்  வட  கர்நாடகாவில்   பெல்லாரியில்  இருந்து  80  கி.மீ.   பெங்களூரிலிருந்து  420 கி.மீ.  தூரத்தில் உள்ள  ஹம்பி.  ஹோஸ்பேட்டிலிருந்து  8 கி.மீ. 

 உலகத்தில் ஒரு  சிறந்த பழங்கால அடையாள சின்னம் துங்கபத்ரா நதிக்கரையில்  ஒதுங்கி அமைதியாக  தனது   புகழ் மிக்க  சரித்ரத்தை  சத்தம் போடாமல்  வெளிப்படுத்துகிறது. அங்குள்ள  விட்டலன் கோவிலின் சிற்ப அழகுக்கு ஈடு உண்டா?   அங்கே இருக்கும்   56 இன்னிசை எழுப்பும் கல் தூண்களுக்கு தான் இணையுண்டா?  ஸ  ரி க ம  தூண்கள்  என்று பெயர் கொண்ட அவற்றை மெல்லிதாக தட்டினாலே போதும்.  வீணை தோற்றது.  கவனிப்பாரற்று சிதைந்த புராதன சின்னம் ஹம்பி.

ஹம்பி நாம் நினைப்பது போல் விஜயநகர காலத்திய சிற்பக் கோயில் இல்லை. முதலாம் நூற்றாண்டை சேர்ந்தது. மூன்றாம் நூற்றாண்டில் அசோகனின் அதிகாரி அதை  ஆண்டிருக்கிறான். ஹம்பியின் புராணப்பெயர்  கிஷ்கிந்தா க்ஷேத்ரம்., பம்பா க்ஷேத்ரம், பாஸ்கர க்ஷேத்ரம்,  இங்கே துங்கபத்ரையின் முந்தைய பெயர் பம்பா. அதன் தென் கரையில் தான் ஹம்பி உள்ளது.  பம்பாவை ஹம்பே என்பார்கள் கன்னடத்தில். அதிலிருந்து புறப்பட்டது ஹம்பி.    இங்கே  ஹஸாரா  ராமர் கோவில் உண்டு.  ராமர் கிருஷ்ணன் காலத்திய அடையாளங்கள் இங்கே காணப்படுகிறது. சுவர்களில்  இராமாயண நிகழ்ச்சிகள்  சிலையாக காண்கிறதே.

எட்டடி  உயர  கணேசர் கண்ணைப்  பறிக்கிறார். இடுப்பில் நாகம் சுற்றி இருக்கும். அது தான் BELT . சதுர் புஜம்.  ஒரேகல்லில் ஆன சிலை.  விஜயநகர  ராஜா  ராணி வசித்த  59000 சதுர மீட்டர் தடுப்பு  கொண்ட   தாமரை மஹால் அரண்மனை பெண்டிர் வசித்த பகுதி சிதிலமடைந்துள்ளது.  சரித்திர சிறப்பு மட்டுமல்ல  அருங்கலை நிறைந்த அற்புத  உல்லாச பயண ஸ்தலம். 

14ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்பிராஜ்யத்தின் தலைநகரம் ஹம்பி.  உலகத்தில்  சீனாவின்  பீகிங் நகரத்திற்கு அடுத்து விஸ்தாரமான, விசாலமான நகரம் ஹம்பி.  ராம லக்ஷ்மணர்கள் அடிக்கடி விஜயம் செய்த ஸ்தலம்.  கம்பியின் மலைக்குகைகளில்  சுக்ரீவன் வாழ்ந்ததாக  சொல்வார்கள்.  இங்கே உள்ள  ஹேமகூட சிகரத்தில் தான்  சிவன் தவமிருந்த போது  அவர் கவனத்தைக்கலைத்த  மன்மதனை  நெற்றிக்கண்ணால் எரித்த இடம்.  ஹனுமானின் ஜென்ம ஸ்தலம் அஞ்சனாத்ரி  மலை ஹம்பியில் தான் உள்ளது.1060 படிகள் கொண்ட  ஆஞ்சநேயர் ஆலயம்.   அங்கேயே  அவர் தாய்  அஞ்சனாவிற்கும் கோவில்.

இங்குள்ள 7ம்  நூற்றாண்டு கட்டப்பட்ட 160 அடி  உயர  கோபுரம் கொண்ட  விருபாக்ஷ ஆலயத்தின் எதிரே ஒன்று கி.மீ தூர, நீளம் கொண்ட,   ஹம்பி கடைத்தெரு.  நடப்பதற்கு சுகமான தெரு.   தெருவின் கிழக்கு மூலையில்  பெரிய  நந்தி சிலை. ஐநூறுக்கும் மேற்பட்ட  சரித்திர சான்றான  ஓலைச்சுவடுகள் நிறைய  ஹம்பியைப் பற்றி சொல்கிறது.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் 15ம் நூற்றாண்டில்   தான் அநேக  ஹிந்து கோவில்கள் கட்டப்பட்டன. புனரமைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று  ஹஸாரா ராமா கோவில்.  

பரமேஸ்வரன்,  கிருஷ்ணன் ஆலயங்கள்  இன்னும்  சிவன் மற்றும் கிருஷ்ணர் கோயில் இப்போதும் உயிர்ப்புடன் வழிபாட்டில் தொடர்ந்து வருகிறது.   உலகெங்கிலிருந்தும்  ஹிந்துக்கள் வழிபாட்டுக்கும்  சுற்றுலா  உல்லாசப்பயணத்திற்கும் கலையை ரசிக்கவும்  விடாமல்  எறும்பு போல்  சாரி சாரியாக  வருகிறார்கள்.

ஹம்பி மலையில்  ஒரு  அழகான  ஆலயத்தில் இருப்பவர்  மால்யவந்த ரகுநாதர். அங்கிருந்து பார்த்தால், ஹம்பி பள்ளத்தாக்கின் ஒட்டுமொத்தக் காட்சியும் காணக்கிடைக்கும். பாறைக்குன்றுக் கூட்டங்களும், தென்னையும், வாழையும், வயல்களும் துங்கபத்திரையின் வளைந்த ஓட்டமுமாய்க் கண்ணுக்கினிய  குளு  குளு  காட்சிகள்.

கிருஷ்ண தேவராயருக்கு அப்புறம் வந்த ராஜா அச்சுத ராயர். அவர் கட்டியது அச்சுதராயர் ஆலயம்   போடி நடையாக அங்கிருந்து நடந்தால் விட்டலன் ஆலயம் தரிசனம் தரும்.சிறந்த கலைச்சிற்ப  வேலைப்பாடு கள்   நுணுக்கங்கள் நிறைந்தது.

ஹம்பியில் எல்லாமே இருக்கிறது.  யானை கொட்டடி, படைகள் தங்குமிடம், காசு பட்டறை, மசூதி, நவராத்ரி விழா மேடை,  படிகள் நிறைந்த குளம்,  சிவாலயம்,  ஒரே கல்லில் நரசிம்மர், ஒரே கல் விநாயகர்,  மண்டபங்கள்,  இன்னும் என்னென்னவோ.  ஜம்மென்று  இங்கே  துங்கபத்ரா  ஸ்னானம் பண்ணலாம்.   புரந்தரதாசர்   ராம கீர்த்தனைகள் இயற்றியது இங்கே தான். பட்டாபிராமன் கோவில்.   இன்னும் என்னென்னவோ ஸ்வாரஸ்யமான  விஷயங்கள் கொண்டது.  .   ஹம்பியில் முழுதும் சுற்றி பார்க்க குறைந்தது நாலு நாள்  தங்குவது  சமயோசிதம். அபூர்வங்கள் நிறைய  இருக்கிறது.

விஜயநகர சாம்ராஜ்ய காலத்தில்  தலைநகரான ஹம்பியை சுற்றி    ஏழு வரிசை கொண்ட கோட்டைகள்  இருந்தது.  ஹம்பியை பற்றி  ஆயிரம் பக்கங்களுக்கு குறையாமல் எழுத  நிறைய  சமாச்சாரம் இருக்கிறது.  யார் படிப்பார்கள்?



Tuesday, September 29, 2020

GEETHANJALI

 

கீதாஞ்சலி 56   J K  SIVAN 

தாகூர் 

                              56. நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா?

56 .Thus it is that thy joy in me is so full. 

Thus it is that thou hast come down to me. 
O thou lord of all heavens, where would be thy love if I were not?
Thou hast taken me as thy partner of all this wealth. 
In my heart is the endless play of thy delight. 
In my life thy will is ever taking shape.
And for this, thou who art the King of kings hast decked thyself in beauty to captivate my heart. 
And for this thy love loses itself in the love of thy lover, 
and there art thou seen in the perfect union of two.

எனக்கு  எவ்வளவு சந்தோஷம் தெரியுமா கிருஷ்ணா.   உனக்கு  என்னை பிடித்திருக்கிறது. என்னுள்ளே நீ களிக்கிறாய்  என்று நான் உணரும்போது நான் பார்க்கிறேன். விண்ணில் உன்னைப்போல்    கருடனில்லா மலேயே,  நான்  தனியாகப்  பறக்கிறேன்.  நீ எங்கோ இருந்தவன், இருப்பவன்  அல்ல. என்னுள்ளே இருப்பதற்கு வந்துவிட்டாய் என்று நான் அறிந்து மகிழ்கிறேன். உன்னை ஒரு கேள்வி கேட்கட்டுமா?  என் போன்றார் இதயம் உனக்கு கிடைக்காவிட்டால்  எங்கே  உன்  கருணையை, அன்பை நிரப்புவாய்?உன்னிடமிருந்து  பெருகும்  அன்புச்செல்வத்தில் எனக்கும்  பங்குண்டு.  நானும் ஒரு பங்காளி. இந்த இதயத்தில்,கண்ணா,  நீ   உன் ஆனந்தமான எல்லையற்ற விளையாட்டை ரசிக்கிறேன்.

இந்த  என்னுடைய  மானுட வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்று சொன்னால் பெரிய தப்பு.  நீ விரும்பியபடி நடக்கிறது  என்றால் சரி. நீ    ராஜாதி ராஜனடா கண்ணா, எவ்வளவு நேர்த்தியாக அழகுடன் என் இதயத்தை கொள்ளை  கொண்டவன். நான் உன் காதலி. உன்மேல் நான் கொண்ட   அளவற்ற  காதலில் உன்  காதல் எங்கோ எப்படியோ கரைந்துவிட்டதடா.   நீயும்  நானும் இருவரல்ல, தனித்தனி அல்ல,  உனக்கு அடையாளம் கிடையாது. நீ  என்னில்  கலந்து, கரைந்து, மறைந்து நானாகிவிட்டாய். இல்லை நான்  நீயாகி விட்டேனா ?










 

SVKARAI AGRAHARAM

 சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை-8   J K  SIVAN    

                                                                 
             



              த்வாதசி அன்னதான சத்திரம்

கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு. எளிமையான  ஆனால்  சக்தி மிக்க  கர்ம பாப வினை தீர்க்கும் பரிஹாரம்  அன்னதானம் . ஜாதக தோஷங்கள் சாபங்கள் எல்லாம்  தீரும். நாம்  அன்றாடம்  அதிதிகளுக்கு  அன்னதானம் இடுவது முடியாதே.  சிறிது காகத்திற்காகவது, தெருவில் பசியால் வாடும்  ஏழைகள்,   நாய், பசு, பறவைகளுக்காவது சிறிது தினமும் அன்னமிடலாம். இதுவும் அன்னதானம் தான்.

அதுவும்  ஏகாதசி விரதம், உபவாசம் இருந்து மறுநாள் துவாதசி அன்று விரதமிருந்தவர்களுக்கும்   மற்றவருக்கும் அளிக்கும் அன்னதானம்  ஸ்ரேஷ்டமானது. 
 
ஒரே ஒரு துவாதசி திதியன்று  திருவண்ணாமலையில்  செய்யப்படும் மூன்று வேளை (காலை, மதியம், இரவு)அன்னதானமானது   புனித க்ஷேத்ரமான காசியில் ஒரு நாளுக்கு ஒரு கோடி பேர்கள்  என்று  நமது  வாழ்நாள் முழுவதும்   தினமும் அளித்த அன்னதான பலனைவிட அதிக  பலன் தரும் என்று ஐதீகம்.  

ஜாதகத்தில் சனியும், செவ்வாயும் சேர்ந்திருப்பவர்கள் கண்டிப்பாக துவாதசி திதியன்று  திருவண்ணாமலையில்  யாத்ரிகர்களுக்கு 
அன்னதானம் செய்து  தோஷங்கள் நீங்கப்பெறுகிறார்கள். 
  
சாம்பவர் வடகரை  அக்ரஹார  குடும்பங்கள்  இதெல்லாம் தெரிந்தவர்கள். மேலும்  காசிக்கு, அதாவது தென்காசிக்கு அருகே  இருப்பவர்கள் அல்லவா?  டபுள்  DOUBLE  நன்மை அவர்களுக்கு ஏற்பட  அக்ரஹாரத்தில் ஒரு    துவாதசி அன்னதான சத்திரம் கட்டி வைத்தார்கள்.  அநேக  யாத்ரிகர்கள் வந்து  தங்க, அவர்களுக்கு போஜனம் அளிக்க, கோவில்களில் விழாக்காலத்தில் அன்னதானம் அளிக்க,  தானதர்மங்கள் செய்ய இங்கே  வசதி செய்து வைத்தார்கள்.  அக்ரஹார வாசிகள்  பெரும்  பண்ணையார்கள்,  நிலச் சுவான்தார்கள், மிராசுகள் என்று பயிர்த் தொழிலில் ஈடுபட்டு செல்வந்தர்களாக திகழ்ந்த காலம். ஆகவே விழாக்கள்  தான தர்மங்கள் சிறப்பாக நடந்தது.  காலப்போக்கில் உச்ச வரம்பு வந்து பயிர்த் தொழில் குறைந்து, அந்த  குடும்பங்கள் இடம் பெயர்ந்து விட்டதால் போதிய  வருமானம் இன்றி   பொது கார்யங்களை  கவனிப்பதற்கு ஆள்  இல்லாமல் போய்விட்டது.  சிதறிய  அக்ரஹாரகுடும்பங்கள் தேசத்தில்   வெவ்வேறு  மாநிலங்களுக்கோ, அல்லது  வெளிநாடுகளுக்கோ  சென்று விட்டதால் அக்ரஹாரம் பொலிவு குறைந்த புது முகம் பெற்றுவிட்டது

அந்த காலத்தில் புரட்டாசி திருவோணம், வைக்கத்து அஷ்டமி, தேரோட்டம், திருக்கல்யாணம் என்கிற விசேஷ நாட்களில்  சாம்பவர் வடகரை சத்திரத்தில்  ஊர் ஜனங்களுக்கு மதியம் சாப்பாடு இலவசமாக (ஊர் சத்தி) அளிப்பார்கள். கிராமத்தில் ஒருவர் இந்த செலவை ஏற்றுக்கொள்வர். இந்த செலவிற்காகவே சில பெரியோர் கள் சத்திரத்துக்கு விளைநிலம் எழுதி வைத்து அதன்மூலம் வரும் வருமானத்தில் இந்த முறைகள் தொடர்ந்து நடக்கும்படி ஏற்பாடு செய்து வைத்திருந்தனர்.  இருநூறு முன்னூறு பேருக்கு சமையல் செய்து சாப்பாடு போடுவதற்கான சமையல் மற்றும்  பரிமாறும்  பாத்திரங்கள் சத்திரத்தில் உண்டு.  இதே மாதிரி வசதியா னவர்கள் வீடுகளிலும் பாத்திரங்கள் இருந்தன.  

சாம்பவர் வடகரை அக்ரஹாரத்தில் யார்  வீட்டிலாவது   கல்யாணம் முதலான விசேஷங்கள் வந்துவிட்டால் ஊர்க்  காரர்களை தவிர   அண்டையில் இருந்த  சுந்தரபாண்டியபுரம், இலத்தூர் பிராமணர்கள் எல்லோரையும் கல்யாணத்துக்கு வந்து  சாப்பிட   அழைப்பது வழக்கம்.    கிட்டத்தட்ட  எல்லோருமே ஒருவருக்கொரு வர்  உறவுக்காரர்களாகவே இருந்தார்கள்.  உறவு முறைகளும் தெரிந்திருந்தன. வில்வண்டி போட்டுகொண்டு ஆண்கள் பெண்கள் எல்லோரும் வருவார்கள். விசேஷத்தில் கலந்துகொண்டு காலை மதியம் சாயங்காலம் டிபன் காபி சாப்பிட்டுவிட்டு அவரவர்கள் ஊருக்கு திரும்பி போவார்கள்.  உள்ளூர்  சாம்பவர் வடகரை வாசிகளுக்கு கேட்கவே வேண்டாம்.  மூன்று வேளைகளிலும் கல்யாண வீட்டில் தான் சாப்பாடு.   

ஒரு மாதம் முன்பே அரிசி உளுந்து முதலியவற்றை கொஞ்சம் கொஞ்சமாய் பல  வீடுகளுக்கு  கொடுத்து  விடுவார்கள். அதை அவர்கள் தோசை மாவாக அரைத்து திரும்ப கொண்டு வந்து தருவார்கள்.  மிக்சி  கிரைண்டர்   இல்லாத காலம். அதே மாதிரி அப்பளம் மாவு இடித்து எல்லோருடைய வீட்டிற்கும் கொடுத்து விடுவார்கள். அந்தந்த  வீட்டுக்காரர்கள் அப்பளம் இட்டு திரும்ப கொடுப்பார்கள். கல்யாண அப்பளம்  ஜையண்ட்  சைஸ்.  ஆனை  அடி  அப்பளம் என்பார்கள்.  அவ்வளவு  சிறந்த  நல்ல சமூக ஒற்றுமையாக இருந்தார்கள்.  இதேபோல் சமையலுக்கான காய்கறிகள்  நறுக்குவதை   அக்ரஹாரத்து மாமிகள்  எல்லாம் ஒன்று சேர்த்து கல்யாண பந்தலில் வைத்து கல்யாணத்திற்கு  முதல் நாள்  இரவு  தயார் செய்த்துவிடுவார்கள்.  சமையல் செய்வதற்கு மட்டும்  இரண்டு மூன்று சமையற்காரர்கள் வருவார்கள். பந்தியில் பரிமாறுவதை  கிராமத்து இளைஞர்கள் கவனித்துக் கொள்வார்கள்.  

துவாதசி அன்னதான சத்திரத்தில் 10 அடி  விட்டம் கொண்ட பெரிய கிணறு  இருந்தது.  குடிக்க குளிக்க கைகால் கழுவ,  தண்ணீர் பஞ்சமில்லை.    இந்த சத்திரம்  தற்போது சிதிலம் அடைந்து   SV கரை டிரஸ்ட் முயற்சியால், வெளியூர் வாழ்  மஹாஜனங்கள் கைங்கரியத்தினால்  கட்டிடம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  ஒரு காலத்தில் இந்த  சத்திரத்தை கிட்டு ஐயர் என்பவர் அந்த சத்திரத்திலேயே  தங்கி  கவனித்துக் கொண்டார்.

 சத்திரத்தின் வட பகுதியில் ராமகிருஷ்ண ஐயர் என்பவர் ( அவரை  கடை  கிருஷ்ணய்யர்  என்று அடையாள பெயரில்  அழைத்தார்கள்.)   அவர் மகன்   என்னோடு  சில தினங்கள் முன்  என்னுடைய கட்டுரைகளை  தொடர்பு கொண்டார். ஒரு மளிகைக் கடை நடத்தி வந்தார். அக்ரஹாரத்தில் இந்த ஒரு கடைதான் இருந்தது.  . ஹனுமான் நதி  ஆற்றின் மறுபுறம் அக்கரையில் விவித கோஆபரேடிவ் சொசைட்டி என்ற கடை இருந்தது.  மளிகை சாமான்கள் இந்த இரு கடைகளிலும் தான் கிடைக்கும்.

கிட்டு ஐயருக்கு பிறகு கோவிந்த ஐயர், என்ற  சம்ஸ்கிரத‌ பண்டிதர், சத்திரத்தை நிர்வகித்ததோடு, மாணவர்களுக்கு ஹிந்தி  சம்ஸ்கிரதம் பாடமும் நடத்தி வந்தார்.  மேலும் அவ்வப்போது ஊரில் நடக்கும் வைதீக விசேஷங்களிலும் பங்கேற்று ஜப பாடமும் சொல்லிக்கொடுத்து  வந்தார்.  இவருக்கு பிற்பாடு  ''கிச்சன்''  எனும் கிருஷ்ண ஐயர்  சத்திரத்தை கவனித்து வந்தார்.  இவர் உறவினர் ஒரு பெண்மணியும்  சில தினங்கள் முன்பு என்னோடு தொடர்பு  கொண்டு வாழ்த்தினார். 

சத்திரத்தில், ஊர் ஊராய் போய்  கொண்டிருக்கும் யாத்ரிகர்களுக்கு   சாம்பவர் வடகரைக்கு வந்தால் இளைப்பாறும் வசதியுடன் ஒரு வேளை சாப்பாடும் இலவசமாக வழங்கப்படும்.  அதற்கான அனுமதி  சீட்டு தரப்படும்.  சத்திரத்திற்கு கிராம பொது  மஹாஜனங்கள் சிலர் மானியமாக நிறைய விளை நிலங்கள் எழுதி கொடுத்திருந்தார்கள். அந்நிலங்கள் மூலம் கிடைக்கும் வருமானம்   சத்திர பராமரிப்புக்கு  உதவியது. கிராமத் தாரால்  நியமிக்கப்பட்ட   ஒரிருவர் நிர்வகித்தார்கள்.  சாப்பாட்டு சீட்டு,   சத்திரம் பராமரிப்பு ஆகிய  பொறுப்பை வகித்தவருக்கு  ஒரு  சாப்பாட்டு  சீட்டுக்கு ஒரு படி அரிசி அல்லது அதற்கு ஏற்றபடி நெல்  ஊதியமாக கொடுக்கப்பட்டது.

இந்த  அன்னதான சாத்திரம்  நல்ல விஸ்தாரமாக  இருப்பதை நேரில் பார்த்தேன். அதை புதுப்பித்து அதன் பெருமை குன்றாமல் புழக்கத்துக்கு கொண்டு வரவேண்டும். ஒருகாலத்தில் ஊருக்கு  வந்த அனைத்து யாத்ரிகளும் தங்கி உண்டு வசித்த இடம். விழாக்காலங்களில் வெளியூரிலிருந்து பக்தர்கள் வந்து தங்குவார்கள். த்வாதசி  அன்னதான சத்திர புனருத்தாரண வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.  டிரஸ்ட் அங்கத்தினர்கள், மற்றும் சாம்பவர் வடகரை பிராமண சமுதாயத்தினர்  நிதி உதவி  கை கொடுத்து உதவினார்கள்.   சத்திரம் இப்போது தான்  கட்டியது போல் புனருத்தாரணம்  ஆகிவிட்டது. எல்லாம் இந்த ஊர் வாசிகளின் அபிமானத்தால் என்று தாராளமாக சொல்லலாம். 

 அக்ரஹாரத்தில் இன்னும்  நிறைய வேலைகள் பாக்கி இருக்கிறது.  அவை நிறைவேற  சாம்பவர் வடகரை டிரஸ்ட்  ஸ்ரீ  எஸ். ஆர்.  கிருஷ்ணனை  போனில்  9380196674  தொடர்பு கொண்டு  பேசி  உதவ ஊர்  சம்பந்தப்பட்ட அன்பர்கள் முன்வரலாம். 

Monday, September 28, 2020

SVK AGRAHARAM

 சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை -7   J K  SIVAN     

                                                                




                       ஹரிஹர குஹ  பஜனை மடம்

 
பழைய  காலத்தில் ஒவ்வொரு ஊரிலும்  ஒரு  பொது இடத்தில்  ஊர்  கூடி  அங்கே  தினமும்  பஜனை,  காலக்ஷேபம், கச்சேரி, உபன்யாசம் எல்லாம் நடக்கும்.   அது விசாலமான கோவிலோ, சத்திரமோ,   மடமோ , மண்டபமோ  ஏதோ ஒன்றாக இருக்கும்.  அன்றாடம் தவறாமல்  ஏதேனும்  நிகழ்ச்சிகள் அங்கே நடக்கும்.

 சாம்பவர் வடகரை அக்ரஹார வடக்குத்தெருவில்  இன்றும்  இருக்கும்  ஒரு புராதன  சின்னம் ஹரிஹர குஹ  பஜனை மடம்.  ஒரு பழைய வீடு. 

 அநேக மஹான்கள், வருஷா வருஷம் அதில்  அகண்ட நாம பஜனை நடத்தி இருக்கிறார்கள். உள்ளூர் வாசிகள் ஆனந்தமாக பங்கு கொண்டு சிறப்பாக  அதை  இன்னும் முடிந்தவரை நன்றாக நடத்தி  வருகிறார்கள்   என்பது மனதிற்கு ஆரோக்கியமாக இருக்கிறது.  

அந்த வீட்டை  ஒரு காலத்தில் யாரோ  ஒரு அக்ரஹார வாசி  பஜனை மடத்திற்காக  என்று  அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார்.  மிகப் பழைய  கட்டிடம் நூறு வயது கண்டது போல்  இருப்க்கிறது.  சில இடங்களை இடித்து புதுப்பிக்க வேண்டிய  நிலை. 

 வாராவாரம் ஏதாவது ஒரு  பஜனை, பாராயணம், நாம சங்கீர்த்தனம்  நிகழ்ச்சி இந்த ஸ்தலத்தில்  அடிக்கடி நடந்தது என்கிறார்கள்.   இப்போது ''முடிந்தபோது''   என்று குறுகி விட்டது . சிதிலமாகி நிற்கும் இந்த ஹரிஹர குஹ பஜனை மடம்  எத்தனையோ மகான்களை  பார்த்திருக்கிறது  என்பதில் மட்டும் சந்தேகம் இல்லை. 

இந்த  பஜனை மட கட்டட நிதிக்காக   பழைய கால  பிரபல சினிமா,  நாடக,  நடிகர், சங்கீத வித்வான்  ஸ்ரீமான் எஸ் வி சுப்பையா பாகவதர் தலைமையில் மூன்று நாட்கள் நாடகங்கள் நடத்தப்பட்டன. அந்தக் காலத்து நாடகங்கள் தெருக் கூத்து மாதிரி இருக்கும்.  புதுக்கோட்டை ப்ரம்ம ஸ்ரீ கோபாலகிருஷ்ண பாகவதர் அவர்கள்   நேரிலே இங்கே குழுவோடு வந்து  இவ்வைபவங்களில் 
 முன்னின்று  நடத்த  ஸீதா கல்யாணம், ராதா கல்யாணம், கிருண்ணாவதாரம் முதலியவற்றை   இந்த அக்ரஹார வாசிகள்,  இந்த பஜனை மடத்தில் விமரிசையாக  கொண்டாடி இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில்   கணேச வாத்தியார்  என்பவர்  தலைமையில் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்  ஸ்லோக வகுப்புகள்  நடக்கும். இப்போதிருக்கும் முதியவர்கள் பலருக்கும்  விஷ்ணு சஹஸ்ரநாமம் மனப்பாடமாக தெரிந்து இருப்பதற்கு கணேச வாத்யார் முக்கிய காரணம் என்கிறார்கள்.. கிராமத்தில் அடுத்த  தலைமுறை  இதெல்லாம்  தெரிந்து கொள்ள,  கற்க,  வேண்டாமா?  இது மாதிரி பொது இடங்கள்  இருத்தால்  ஆன்மீக நிகழ்ச்சிகள்  அவசியம் ஒவ்வொரு கிராமத்திலும்  நடந்து கொண்டே இருக்கவேண்டும்.

 நான் பார்த்தபோது  இந்த மண்டபத்தின் சுவர்கள் சுண்ணாம்பு பெயர்ந்து  காரை  வெளியே  தெரிந்தது . மேலே  மர  உத்தரத்தின் வலிமை போதாது. பழுது பார்க்கப்பட வேண்டும். சில இடங்களை  சுத்தமாக  இடித்து  புதிதாக பெரிதாக கட்டப்பட வேண்டும். . அதை புதுப்பித்து வசதியான பெரிய  பஜனை கூடம் தயாராகி   அகண்ட  ராம நாம பாராயணம்  தொடர்ந்து ஒலிக்க வேண்டும். மண்டப பின் பகுதி  வாகன மண்டபமாக மாற்றப்பட்டு  கருட  வாஹனம் அங்கே நிலை பெற வேண்டும். சிதிலமடைந்தவற்றை  புணருத்தாரணம், ஜீர்ணோத்தாரணம் செய்ய முயற்சிகள் நடக்கிறது  என்று ஸ்ரீ  S .R . கிருஷ்ணன்  சொல்லியதிலிருந்து ஓஹோ  அக்ராஹார வாசிகள் கவனம்  அதில் இருப்பதால்  துரிதமாக  செயல்படுகிறார்கள்  என  அறிந்தேன். அவர்கள்  முயற்சி வெற்றிபெற   சாம்பவர் வடகரை ஊர்க்காரர்கள் ஒன்று சேரவேண்டும்.   தேவையான  நிதியுதவி தர கிராமத்தவர்களும், மற்ற புரவாளர்களும் முன் வர இறைவன் அருளை  வேண்டும் .  இந்த கிராம அபிவிருத்திக்கென  ஒரு டிரஸ்ட் ஏற்கனவே இருக்கிறது. 

ஜாம்பவர்  வடகரை அக்ரஹார மக்கள் ''ஜாம்பவான்கள்'' இல்லையா?. அவர்களால் முடியாதது  ஒன்றுமில்லை. அவர்கள் இதை புதுப்பித்து  அந்த கட்டிடத்தில்   கலை  ஆன்மீக  பஜனை நாட்டிய  நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து  பஜனை பகவன்  நாம  பாராயண ஒலி ஊரெங்கும்  மண்டபத்திலிருந்து ஊரெல்லாம்  கேட்கவேண்டும். செயல்பட  சம்பவர் வடகரை அக்ரஹாரம் டிரஸ்ட்  குழுவினர்  தயாராக இருக்கிறார்கள் என்று தெரிகிறது.  இந்த மண்ணைச் சேர்ந்தவர்கள்  அவர்கள் கரங்களை வலுப்படுத்த வேண்டும்.   சிறு துளி பெருவெள்ளம்.  இது  விஷயமாக   ஸ்ரீ   S .R  கிருஷ்ணன் 9380196674  அவர்களை தொடர்பு கொள்ளலாம்.
 
அக்ரஹார ஆலயங்களில் நாள் கிழமை தவறாமல் விசேஷ காலங்களில் பூஜை, அர்ச்சனை, திருவிழாக்கள் ஊர்வலம் தொடரவேண்டும், என்ற  எண்ணங்களை, நிஜமாக்க இந்த SV கரை டிரஸ்ட் நிறுவனம் முயல்கிறது. செயல்பட்டும் வருகிறது.

இந்த ஹரிஹர குஹ  பஜனை  மண்டபத்தில்  ஒரு சில அற்புதமான  பழைய கால படங்களை பார்த்தேன்.  அக்கால பிரபல நாடக, திரை உலக நடிகர், சங்கீத வித்துவான், இந்த ஊரில் பிறந்த  சாம்பவர் வடகரை  சுப்பையா பாகவதர் பெயர்  அறியாதோர் உண்டா? ( SV  SUBBAIAH  BAGAVATHAR) . அவர் ஒரு அருமையான ராமர் படத்தை பஜனை மடத்திற்கு அளித்து அதை அங்கே பூஜை செய்யப்பட்டு காட்சிப்  பொருளாக வைத்துள்ளார்கள்.

பித்துகுளி ஸ்ரீ முருகதாஸ் என்ற பாகவதோத்தமர்   இந்த ஊரில் வந்து  தங்கி பஜனை, முருக நாமம், காவடி உற்சவம்  முதலிய வைபவங்கள் நடத்தி யுள்ளார்.   இரண்டு மூன்று மாதங்கள் கூட தங்கி  இருந்திருக் கிறார்.  பஜனை பாடல்கள் இனிய குரலில் பாடி இருக்கிறார் அவர் பிரம்மசாரி.  அவருக்கு ஒரு கண் பார்வையற்றதாய் இருந்தது.  பிள்ளைகளை ஆற்று மணலுக்கு கூட்டிப்போய் பல யோகாசனங்கள் செய்து காட்டி பயிற்சியும் அளிப்பார்.   அபூர்வமாக  பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இளம் வயது கறுப்புக் கண்ணாடி இல்லாத, தலையில் துணியில்லாத படத்தை பார்த்தேன்.  இந்த புத்தகத்தில் அந்த படமும் இடம் பெற்றிருக்கிறது.  நான்  பித்துக்குளி முருகதாஸ் பஜனை சின்னவயதிலிருந்தே  கேட்டு அனுபவித்தவன்.  நங்கநல்லூரில் எங்கள் வீட்டுக்கு ஒரு முறை 1970களில்  வந்தார். 

சாம்பவர்  வடகரை  ஹரிஹர குஹ  பஜனை மண்டபத்தில் 2015ல்  அகண்ட ராம நாம உச்சாடனம், சீதா கல்யாண மஹோத்சவம் இந்த நிறுவனத்தால் நிறைவேறியது. அதற்கு முக்கிய காரணம் இந்த சாம்பவர் வடகரை  அக்ரஹார  மக்கள் அளித்த   நன்கொடையும் சரீர, சம்பத்து, ஆதரவும் தான்.   ஹரிஹர குஹ  பஜனை மடம்  விரைவில்  முன்பு போல்  மீண்டும்    அகண்ட நாம பஜனையோடு  செயல்பட பிரார்த்திக்கிறேன்.

இன்னும் இருக்கிறது.


 சிவவாக்கியர்   J K SIVAN

                                                                  பளிச்சென  பாடல்கள் 
இதுவரை   எத்தனை படித்திருக்கிறேன்.   நிறைய  கேட்டிருக்கிறேன். ஆனால் இன்னும் உள்ளே  இருப்பவனை அறியவில்லையே,  அவன் புரியவில்லையே.  இதுதான் இறைவன்.   நாம் யோசிக்க  முயல்வதில்லை.  யோசிக்கலாமே என்ற  எண்ணம்  உள்ளே  அடிவாரத்தில்  தலை எடுத்தாலும்  உடனேயே  ''சரி  அப்பறம்  நிதானமாக யோசிப்போம்''  என்று  அதை  அப்படியே  அமுக்கி   கீழே தள்ளுகிற  ஸ்வபாவம்  நமக்கு உண்டு. .
எப்போதாவது தெரிந்துகொள்ள மெல்லிதாக  ஆர்வம்.  மறுபடியும் கேட்பது,  படிப்பது  ரசிப்பது, மறப்பது. இது   கடல் அலையைப் போல்   பலர்  வாழ்வில்  தொடர்ந்து இது நடக்கும் சம்பவம். 

பல  ஆயிரம்  வருஷங்களுக்கு  முன்  --   அவரைப்பற்றி  இன்னும்  சரியாக  தெரியக்கூட  இல்லை.  காலமோ, இயற்பெயரோ,  ஊரோ தெரியாத  ஒரு சித்தர் .  அவரைப்பற்றி  யார் யாரோ  என்னன்னவோ  சொல்கிறார்கள்.  நாத்திகர்,  சைவராக இருந்து  வைணவரானவர் . அவர் தான்  பின்னால்  திருமழிசை  ஆழ்வார்  என்று எல்லாம் அறிகிறோம்.  நாம்  அதற்குள்ளே  எல்லாம் போகத் தேவையே இல்லை.   ''ஆணியடித்தாற் போல '' .  ''பொட்டுலெ அறைஞ்சாப் போல பளிச் சென்று ''  என்று  சொல்வோமே  அப்படி  இருக்கிறது அவர்  சொற்கள் என்பது  சிவ வாக்கியர்  பாடல்களை  படிக்கும்போது, கேட்கும்போது  தெளிவாகத்  தெரியும்.   இதை  ஒவ்வொரு மனிதனும்  தனக்குள்ளே  அலசினால் தான்  அதன் தத்வார்த்தம் புரிபடும். 

'' கோயிலாவது ஏதடா ? குளங்களாவது ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே''.

 ''அடே  கோவிந்தசாமி,   நீ கோயில் கோயிலாக  போகிறாயே. இதுவரை  எத்தனையோ   குளங்களில்  ஸ்நானம் செய்து புண்ணியம்  தேடியிருக்கிறாய்.  எங்கெங்கோ சென்று திரிந்து  அலைந்து  சலித்து களைத்து கோவிலையும் குள த்தையும்  நாடினாயே .  அந்த  கோவில்கள்  குளங்கள்  எல்லாம்  உனக்குள்ளேயே  இருப்பதை  என்றாவது  ஒரு  நிமிஷம்  உணர்ந்ததுண்டா? . பிறந்தான்  இறந்தான்  என்று  ஒவ்வொரு வனைப்பற்றியும்  பேசுகிறோமே,  அதோ பார்  நேற்று  இருந்தது  இன்று  இல்லை  என்று  மாற்றங்களைப்பற்றி  மணிக்கணக்கில்  பேசுகிறோமே.  அந்த  மாற்றங்கள்,  பிறப்பு  இறப்பு  இவை யாவுமே  மாயை.  இருப்பது  போல் தோன்றும்  அது  உண்மையிலேயே  இல்லாதது.    

 ''செய்ய தெங்கிலே இளநீர் சேர்த்த காரணங்கள் போல்
ஐயன்வந் து என்னுளம் புகுந்துகோயில் கொண்டனன்
ஐயன்வந்து என்னுளம் புகுந்துகோயில் கொண்டபின்
வையகத்தில் மாந்தர் முன்னம் வாய்திறப்ப தில்லையே.''
 
உன் கண்ணெதிரே  நிற்கிறதே  உயரமான  தென்னை மரம். குலை குலையாக  பச்சையும்  பழுப்புமாக  எத்தனை எத்தனை பெரிய  இளநீர்கள்  தொங்குகின்றன  என்பதை தலை ஒடித்து அண்ணாந்து பார்க்கிறாயே.  ஒரு  விஷயம்  யோசித்தாயா?  யாரப்பா  அவ்வளவு உயரத்தில் ஒவ்வொரு  தேங்காய் உள்ளேயும்   இனிமையான சுவையான  இளநீரை நிரப்பி  மேலே கொண்டு போய்  தொங்கவிட்டது? காரணம்  ஏதாவது  சொல்ல முடிகிறதா?  இது தான்  இங்கேயும். என் மனத்தில்  நான்  அறியாமலேயே நான்  பிறந்தது முதல்  என் இறைவன்  என்னைக்  கேட்காமலேயே  எனக்குத் தெரியாமலேயே, என்னுள், என் மனத்தைக் கோயிலாகக்  கொண்டு  குடியிருக்கிறான்.  நான்  ஏன்  இன்னும்  அதை புரிந்து கொள்ளவில்லை?  அவனைத் தெரிந்து கொள்ளவில்லை?  புரிந்து கொண்ட அடுத்த  கணமே மௌனமாகி விடுவேன்.  ஏன் என்றல்  என்னால்  அதைச் சொல்ல முடியாது.  விவரிக்க , சொல்ல, என்னிடம் மட்டும் அல்ல, எவரிடமும்  வார்த்தை கிடையாது.  அனுபவிக்கவே  நேரம்  போதாதே.

 இன்னும் சொல்கிறேன். 

SVKARAI AGRAHARAM

 


  சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை  - 6       J K  SIVAN     


                                                    கோட்டை வாசல்

சாம்பவர் வடகரை  கிராம  அக்ரஹார  விவரங்கள்  அந்த ஊரைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல, மற்றவர்களுக்கும்  விறுவிறுப்பாக  ருசியுள்ளதாக  இருக்கிறது என்று அறியும்போது மட்டற்ற மகிழ்ச்சி.  வாஸ்தவம். நான் அந்த  ஊரைச் சேர்ந்தவன் அல்ல. ஒரு  யாத்ரீகன்.  அந்த ஊரில்  மூன்று நாட்கள் இருந்து பல விஷயங்களை சேகரித்து அளிக்கும்போது  அங்கிருந்து மகிழ்ந்ததை விட  கூடுதல் மகிழ்ச்சியை தருகிறது.

இன்று ஒரு அற்புத விஷயம்.  கோட்டையே இல்லாத ஒரு  இடத்துக்கு  கோட்டை என்று பெயர்  எப்படி வந்தது என்ற ருசிகர தகவல்.  ஸ்வாரஸ்யமாக இருந்தது எனக்கு.

 சாம்பவர் வடகரை வடக்கு தெருவிற்கு கிழக்கு  முனையில் கோட்டை வாசல் என்கிற திறந்த வெளி ஒரு காலத்தில்  இருந்தது.  அங்கே  ஸ்ரீ விஷ்ணு துர்கையம்மன் ஆலய வளாகத்தில் பதினைந்தடி விட்டமுள்ள பெரிய கிணறு ஒன்று இருந்தது. இப்போது சில வருடங்கள் முன்பு   அதை மூடி விட்டார்கள்.  இந்த கிணறு நிலத்தடி தண்ணீர் சேமிப்பிற்கு உதவியாக இருந்தது. இது தவிர,    அந்த  கோட்டை வாசலை ஒட்டி ஒரு பெரிய மில் கட்டிடம்,  தாசில்தார் / கிராம அதிகாரி அலுவலகம், அஞசல் ஆபீஸ், சானிட்டரி ஆபீஸ்-பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகம், ஆரம்ப பள்ளிக்கூடம் முதலானவை இருந்தன. சானிட்டரி ஆபீஸ்- பிறப்பு /இறப்பு பதிவாளர் மேற்பார்வையாளர் ஸ்ரீ முத்துக்கிருஷ்ணய்யர் என்பவர்  வடக்குத் தெரு வாசி.  சாம்பவர் வடகரை  ஆரம்ப பள்ளிக்கூட தலைமையாசிரியர்  ஸ்வாமிநாத சார் ஒற்றைத் தெருவில் வாழ்ந்தவர்.  

 ஸ்கந்தஷஷ்டியை ஒட்டி வடக்குத் தெரு கோட்டைவாசலில் வருஷாவருஷம்  கோலாகலமாக  முன்பெல்லாம்  சூர சம்ஹாரம் நடக்கும். ஸ்ரீ வேதநாராயண பெருமாள் கோவிலில் இருந்து  சிங்க முகன், யானை முகன், மஹா சூரன்  வேஷமிட்டுக்கொண்டு கோட்டை வாசலில் ஸ்ரீ முருகன் சப்பரம் முன்பு ஆட்டங்கள் ஆடி பின்பு ஸ்ரீ முருகனால் சம்ஹாரம்  செய்யப்படுவார்கள்.

இந்த ஊர்க்காரர்   காலஞ்சென்ற  சங்கர கிருஷ்ணய்யர் என்பவர்  சிறந்த  கார்ட்டூன் சித்ரக்காரர்.   அவர்  வரைந்த சில படங்களை அவர் வீட்டில் வாழ்ந்தபவர்கள் காட்டினார்கள் அசந்து போய் விட்டேன்.   சில்பி  கோபுலு  மணியம்  அளவுக்கு  அற்புதமான திறமை கொண்டவராக இருந்திருக்கிறார் ஸ்ரீ  சங்கர கிருஷ்ணய்யர்.  இவரைப் பற்றி பின்னால் மீண்டும் குறிப்பிட்டிருக்கிறேன்.  அவரது சில அற்புதமான படங்கள் ஒரு சிலவற்றை   இத்துடன் இணைக்கிறேன். 

அந்த சங்கரகிருஷ்ணய்யர்  மேலே சொன்ன  சூர ஸம்ஹார ஆட்ட வேஷதாரிகளில் படங்களையும் வரைந்திருக்கிறார்.  சங்கர கிருஷ்ணய்யர்  இப்போது இல்லை, அவர் குடும்பமும் வேறு ஒரு கிராமத்தில் வசிக்கிறார்கள்.  கடைசி காலத்தில் கூட  சங்கரகிருஷ்ணய்யர் எப்படியோ உடம்பு முடியாத நிலையிலும் சாம்பவர் வடகரை வந்து உத்சவங்களில் கலந்து கொண்டார் என்று அறியும்போது அவரது  பிறந்த மண் பற்று போற்றத்தக்கது. சங்கரகிருஷ்ணய்யர்  குடும்பம் தற்போது வசிக்கும்  இலத்தூர் வீட்டிற்கு சென்றபோது அவர் மனைவி, மற்றும் குடும்பத்தினர்  நிறைய  அவர் வரைந்த படங்களை காட்டினார்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக  அவற்றை ரசித்தேன். அத்தனையும் இங்கே  இணைப்பது இயலாது.என் மனத்தில் இருத்திக் கொண்டிருக்கிறேன். 
சங்கர கிருஷ்ணய்யர்  படங்களில் உயிரோட்டம் இருப்பது தெள்ளது தெளிவாக புரிந்தது.  அதுசரி  அது என்ன  விந்தன் கோட்டை என்று நான் கேட்டு அறிந்தது: 

முன்னொருகாலத்தில்  சாம்பவர்  வடகரை அக்ரஹாரத்தில் உள்ள  குளத்திற்கு தென்புறம் விந்தன் கோட்டை என்ற ஒரு ஊர் இயற்கை வளம் கொழித்த ஊராக  ஆச்சர்யமாக   இருந்திருக்கிறது.  சாம்பவர் வடகரை கிராமம் ஆரம்பத்தில்  இந்த செழிப்பான  விந்தன் கோட்டை பகுதியில் இருந்து  பின்னர் இப்போதிருக்கும் இடத்தில் குடும்பங்கள் குடி பெயர்ந்தன.

திருநெல்வேலியை  ஆண்ட  ஸார்வ பௌமன் என்ற பாண்டிய அரசன் ஒரு முறை   திருக்குற்றாலம் சென்று நீராடிய பிறகு தென் வடக்கு திசையில் பரந்து கிடக்கும் காட்டில் புகுந்து வேட்டையாடத்  தொடங்கினான்.
அப்பொழுது அங்குள்ள ஓர் சாதாரண  சிறிய   முயலானது  ராஜாவின்   பெரிய  வேட்டை  நாயை  எதிர்த்து  கடித்து கொன்று விடவே அதைக் கண்டு ஆச்சரியமுற்ற  ராஜா  அருகில்  இருந்த ஒரு  அழகிய ஆசிரமத்தையும் அதில் ஒரு முனிவர் தவம் புரிந்து கொண்டிருப்பதையும் கண்டு அவரை தரிசித்து முறைப்படி  வணங்கி ஆசி கோருகிறான். இங்கே என்ன விசேஷம் என கேட்கிறான்.

விருபாக்ஷர் என்ற  அந்த முனிவர் அருகில் இருக்கும் ஸ்ரீமூலநாதர் என்ற   சிவாலய க்ஷேத்ரத்தின் மகிமையை  ராஜாவுக்கு  விவரித்துக் கூறி அங்கு எழுந்தருளிருக்கும் ஸ்ரீ மூலநாதப் பெருமானுக்கு விமானம் பிரஹாரம்   முதலான அங்கங்களுடன் பெரிதாக ஒரு சிவாலயம் திருப்பணி செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அரசன் முனிவர் விரும்பிய படியே சிவபெருமானுக்கு சிறந்த ஆலயம் திருப்பணி செய்வித்து அதன் வலது பக்கத்தில்  ஓடும்  ஹனுமான்  நதியை இடது பக்கதத்தில் ஓடுமாறு  ஆழப்படுத்தி  வெட்டி, நதியின் போக்கை மாற்றி அவ்வாற்றின் கரையில் சோபன மண்டபம் முதலானவைகளும், கோயிலின் தென்மேற்குக் கோடியில் அக்ரஹாரமும்  கட்டுவித்து  ஸ்ரீ மூலநாதசுவாமியுடைய நித்திய பூசைக்குரிய ஒழுங்கு முறைகளையும்  ஏற்படுத்தினான்.  

 சிவபெருமான்  ஆஞைப்படி முயல் நாயைக் கொன்ற இடத்தில் ஆச்சரியபுரம் என்ற நகரையும்  உண்டாக்கி னான்.  அந்த ''விந்தை நகர் '   காலப்போக்கில்  ஆச்சர்யபுரமாக, விந்தைநகராக  மாறி இப்போது விந்தன் கோட்டை என்ற  உருமாறி விட்டது.   இன்னொரு  ஆச்சர்யம்  புலியும் முயலும் இங்கே   ஒன்றாக விளையாடியது என்று சொல்வதாலா? 
அக்கால ராஜாக்கள் மண்ணில் கட்டிய கோட்டை மண்ணோடு மண்ணாகி விட்டது.  இப்போது  விந்தன் கோட்டை எழுத்தில் தான் இருக்கிறது

பராக்கிரம பாண்டியன்  என்ற பாண்டிய ராஜா,  விந்தனூரில்   நிர்மாணித்த  சார்வ பௌம வடகரை   அக்ரஹாரம் நாளடைவில்  சாம்பவர் வடகரை  அக்ரஹாரமாகியது என்று கேள்விப்பபட்டபோது  ஓஹோ இந்த  சாம்பவர் வடகரை அக்ரஹாரத்துக்கு  இப்படியும் ஒரு காரணப்பெயரா என்று  ஆச்சர்யமாக இருந்தது. 

பாண்டியனை  இந்த ஊர்  கல்வெட்டுகள்   ''விந்தைப் போர் கடந்த பாண்டியன் என்று   சொல்வதால்   இந்த விந்தன் கோட்டை இருந்த இடத்தில்  ஒருகாலத்தில்  பெரும் போர் நடந்திருக்கிறது  நிச்சயம்.   பாண்டியன் யாருடன் போர் புரிந்தான்? அக்ரஹாரம் பிரதிஷ்டிக்கிறதுக்கு  முன் விந்தனுர் எவ்வாறு  இருந்தது என  யூகிக்க  ஒரு  ஆதாரமும்   இதுவரை கிடைக்கவில்லை.  விந்தனுர் ஒரு  க்ஷத்ரிய  ஸ்தலம்.  படை  நடந்தபோது   அழிக்கப்  பட்டதென்று  ஆவூர் கிராம சைவர்கள்  கர்ணபரம்பரையாக  சொல்வார்கள்.

விந்தனுரில் கோட்டை எனப்படும் சிதைந்த மண்கோட்டையும் அருகில் உள்ள பாழடைந்த பெருமாள் கோவிலையும் முன்பிருந்த நகரின் அறிகுறிகளாக காட்டுகின்றனர். பாண்டிய சாஸனங்களில் விந்தனுர் ''பராக்கிரம பாண்டிய சதுர் வேதி மங்கலம்,பெருமாள் அகரம்''   என்றும் நாயக சாஸனங்களில் ''வடகரை விந்தனூர்''  என்றும் குறிப்பிடப் படுகிறது. புராணத்தில் கூறப்படும்   ஆச்சரியபுரம் என்பது விந்தை என்பதின்  வடமொழி என்பதில் சந்தேகமில்லை.  

விந்தன் கோட்டை பற்றிய  இன்னொரு கதையும் கேள்விப்பட்டேன்.  இந்த  ஊரை ஆண்ட ஒரு ராஜாவுக்கு ஏழு பெண்கள்.   ஒருநாள்  அந்த  ராஜா தனது   காவல்காரனை கூப்பிட்டு '' நீ ஜாக்ரதையாக   என் ஏழு  பெண்க ளையும்   பார்த்துக் கொள்'' என்று சொல்லிட்டு  அவன் பொறுப்பில் அவர்களை தனியாக விட்டு  விட்டு   எங்கோ வேட்டையாட சென்றான்.  இரவில்  தூக்கத்தில்  காவல்காரனின் கால் இடறி கோட்டை கதவு மேல் பட்டு பெரிய சப்ததத்துடன் அது  திறந்தது.   இந்த  சத்தம் கேட்டு அந்த  ஏழு பெண்களும்  ''ஆஹா , அப்பா  இல்லாத நேரத்தில் தமக்கு ஏதோ ஆபத்து''   என்று ஓடி பக்கத்தில் இருந்த குளத்தில் விழுந்து உயிரை விட்டார்களாம். அவர்களே இன்றும் அங்கே சிலையாக  சப்த கன்னிகைகளாக காண்கிறார்கள்.    சப்த கன்னிகை சிலைகளை பார்த்தபோது இந்த கதை காதில் விழுந்தது. 

சாம்பவர் வடகரை கிராமத்தை ஒட்டி ஓடும்  ஹனுமான் நதி  மழைக்காலத்தில் வெள்ளமாக பெருகி  ப்ரவாக நீர் வெளியேற  உருவான பல மடைகளில் ஒன்று அருகே இருக்கும் ''கன்யா மடை''  .  S  R  கிருஷ்ணன் எனக்கு இந்த  மடையைக் காட்டினார். 

தன்னால் தான் இந்த ஏழு பெண்களும்  மாண்டார்கள் என்ற துக்கத்தில் தன்னுயிரைப் போக்கிக்கொண்ட காவல்காரன் தான் இன்றும்  கோட்டை மாடன்  என்ற பெயரில் அரூபமாக  வாழ்ந்து வருகிறான் என்று ஊர்மக்கள் வழிபடுகிறார்கள். கிராம மக்கள்  அவனுக்கு  தை  மாதம் பொங்கலிடுகிறார்கள். ஆடும் வெட்டப் படுகிறதாம்.

விந்தன் கோட்டை  கண்ணுக்கே தெரியாமல்  காணாமல் போனாலும் அதை பற்றிய  புராணங்கள் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. இதோ  ரெண்டு கதை கேட்டதற்காக   ஒன்று  இலவசம்.  FREE. 
                                                   
விந்தன் கோட்டை ராஜா ஒருவன் தனது சிவபக்தி மஹிமையாலும், அபூர்வ சக்தியாலும் தினமும் காசிக்கு சென்று விஸ்வநாதரை தரிசிப்பது வழக்கமாம்.  பின்னர் உடல்நலம் குன்றி,  ப்ரம்ம ஹத்தி தோஷம் வேறு சேர்ந்து கொண்ட பொது  விடாது வயிற்று  வலியால்  துவண்டான். காசிக்கு போகமுடியவில்லை.  ''விஸ்வநாதா, இனி உன்னை தரிசிப்பது எப்படி?'' என்று வேண்ட, சிவன்   ஒருநாள் கனவில் அவனுக்கு  என்ன பதில் சொன்னார் தெரியுமா?

''கவலைப்படாதே, நான் உன்னைத் தேடி வருவேன். நாளைக் காலை  நீ எழுந்ததும் உன் கண்ணில் ஒரு எறும்பு கூட்டம் சாரி சாரியாக வரிசையில் செல்வதை பார்ப்பாய். அந்த எறும்புகள் எங்கே நிற்கிறதோ அங்கே நீ என்னை காணலாம்'' என்கிறார் காசி விஸ்வநாதர்..

மறுநாள்  விடியற்காலையிலிருந்தே   ராஜாவுக்கு  பொறுமை இல்லை. எப்போது சூரியன்  வருவான் வெளிச்சம் தெரியும் என்று காத்திருந்தான்.    எங்காவது எறும்புகள் தெரிகிறதா என்று தரையையே பார்த்துக்கொண்டு  அரண்மனை  வாயிலில் காத்திருந்தான்.  திடீரென்று எங்கிருந்தோ ஒரு எறும்புக்கூட்டம் ஒரு மரத்தின் ஓரமாக போவதை பார்த்துவிட்டான்.   எறும்புகளை தொடர்ந்து சென்று அவை நின்ற இடத்தில் ஒரு சிவலிங்கம் இருப்பதை காண்கிறான்.   அந்த இடம் தான்  இப்போது தென்காசியில் பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டு  வானளாவி நிற்கும் காசி விஸ்வநாதர் கோவில் என்பது ஆச்சர்யமாக  இருக்கிறதா? இல்லையா? விந்தன் கோட்டை ராஜா அப்புறம் என்ன பண்ணினான்?

கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததும் எல்லோரும்  வாசலை தாண்டி வெளியே போகும்போது தன்னை மிதித்து செல்ல வேண்டும் என்று வாசல் கருங்கல் படியில் தன்னுருவத்தை செதுக்க செய்தான்.  இந்த  விஷயம் கேட்கும்போது  குலசேகர ஆழ்வார் கதை நினைவுக்கு வருகிறது. பெருமாள்  கோவில்களில்   குலசேகர படி  பார்த்திருக் கிறீர்களா. யாரும் அதன் மேல் காலை வைக்கமாட்டார்கள். தாண்டி தான் உள்ளே செல்வார்கள்.

இந்த விந்தன்கோட்டை ராஜா சிறந்த சிவபக்தன் என்பதால் ஜீவ சமாதி அடைந்து அவன் ஜீவ சமாதி அடைந்த இடம் விந்தன் கோட்டையில் ஒரு சிறு மேட்டில் காணப்படுகிறது.

புதர்களுக்கு இடையே ஒரு சிறு செங்கல் சிதிலம்  சூழ்ந்த மண் மேடு  இருந்ததை எனக்கு காண்பித்தார் ஸ்ரீ   S.R  கிருஷ்ணன்.    அதன் மேல் யாரோ ஒரு குட்டி சிவலிங்கம் வைத்திருக்கிறார்கள்.  அங்கு வருவோர் போவோர்  புஷ்பங்கள் சாற்றுகிறார்கள் போல் தோன்றுகிறது.  அந்த சிறிய  சிவலிங்கம் மேல்  சில காட்டுப்பூக்கள் வைத்திருந்தது.  அந்த பக்கம்  அதிக ஜனநடமாட்டம் இல்லை.  பள்ளமும் மேடும் நிறைந்த ஹனுமான் நதிக்கரை.    








அந்த ஜீவசமாதியைத்   தாண்டி சற்று தூரத்தில் ஒரு கல் நடப் பட்டிருந்தது.   அதில் ரெண்டு பக்கமும்  வாளை  ஓங்கிக்கொண்டு ஒரு வீரன் உருவம் தெரிந்தது.  ஒருவேளை  அது தான்  கோட்டை மாடனாக மாறிய காவல் காரனோ?.   வெகு பழங்கால சின்னங்கள் இவை.

யாராவது இரவில் தனியாக செல்லும்போது  பின்னால் ''ஜல் ஜல்' என்று கோட்டை மாடன்  உதவி செய்ய காவலுக்கு வருகிறான் என்று  சொல்லுகிறார்கள்.
அருகிலிருக்கும் ஆய்க்குடியில்  ஸ்கந்த  ஷஷ்டி உத்ஸவம்  விமரிசையாக இன்றும் கொண்டாடப் படுகிறது.
மேலும் சொல்கிறேன்.

     பிரம்மஹத்தி  --    J K  SIVAN 


கோப மூட்டினால்  அதிக பக்ஷமாக  அப்பா அடிக்கடி  உபயோகிக்கும் ஒரு வசவு . ( திட்டு)   " ப்ரம்மஹத்தி'' .  நான்  பலமுறைகள் ப்ரம்மஹத்
தியாக  வாழ்த்தப்பட நேர்ந்தது   அவர்  1978ல்  மறையும் வரை.   என்னை மட்டும் அல்ல.  பாரபக்ஷம் இல்லாமல்  எங்கள் குடும்பத்தில்  எல்லோரையும் ஆண்  பெண் பால் வித்தியாசமின்றி அவ்வாறு  திட்டியது தெரியும். 

ப்ரம்மஹத்திக்கு அப்போது எனக்கு அர்த்தம் தெரியவில்லை. ப்ராமணனைக் கொன்றால் உண்டாகும் தோஷம் தான் ப்ரம்ம ஹத்தி.  ராமர்  ராவணனைக் கொன்று ராமேஸ்வரத்தில்  பரிகாரம் தேடியது உங்களுக்கு தெரியும்.   சிவனுக்கும் அதே போல்  பிரமன் தலையை கொய்த  ப்ரம்மஹத்தி சாபத்தை நிவர்த்தி செயய  ஹரசாப விமோசன பெருமாள் கோவிலுக்கு  திருவையாறு பக்கத்தில் திருக்கண்டியூர் சென்று தவமிருந்து  விமோசனம் ஆயிற்று. அந்த கோவில் சென்று அதைப் பற்றி எழுதி இருக்கிறேன்.

ப்ரம்ம ஹத்தி பற்றி  ஒரு குட்டி கதை சொன்னால் நன்றாக இருக்கும் அல்லவா?

7வது நூற்றாண்டில்  மதுரையை ஆண்ட  பாண்டிய  ராஜா  வரகுண பாண்டியன்  ஒரு நாள் காட்டுக்கு வேட்டையாட சென்றான்.  வேட்டையாடி  பல மிருகங்களைக் கொன்றுவிட்டு  களைத்து குதிரை மேல் திரும்பி வந்து கொண்டிருந்தான். குதிரைக்கு  அவனைவிட களைப்பு அதிகம். பாவம்  அது தானே அவனையும் தூக்கிக்கொண்டு காட்டுக்குள்  அங்கும் இங்கும் ஓடி மிருக வேட்டைக்கு உதவியது.  இருள் சூழ்ந்து விட்டது.  வேகமாக  பசியோடு அரண்மனைக்கு திரும்பிக்கொண்டிருந்த  குதிரை  வழியில் இருட்டில்  மரத்தடியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு  கிழ பிராமணன்  கழுத்தின் மேல் காலை வைத்து மிதித்து கொன்றுவிட்டது. நிரபராதியான ஒரு  ப்ராமணனைக்  கொன்ற  ப்ரம்ம ஹத்தி தோஷம் பாண்டியனைப் பிடித்துக் கொண்டது. 

வரகுண பாண்டியன் சிவ பக்தன்.   நேராக மதுரை சுந்தரேஸ்வரர் முன் சென்று முறையிட்டான். 

 ''பரமேஸ்வரா, நான்  வேண்டுமென்றோ,  தண்டனையாகவோ ,காரணமில்லாமலோ,  அந்த பிராமணனைக் கொன்றதால்   ப்ரம்ம ஹத்தி தோஷம்  பிடித்துக் கொண்டது.  யாகமெல்லாம் செய்தேன். தான தர்மம்  புரிந்தேன். என் குதிரை செய்த தவறு என்னுடையது என்று ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு எப்படியாவது இந்த தோஷத்தி லிருந்து விமோசனம்  தரவேண்டும்'' என்று வேண்டினான்.

''என்னுடைய  ஆலயம் இருக்கும் திருவிடைமருதூருக்குப்  போ. அங்கே  என்னை வழிபடு '' என்று கனவில் மதுரை சொக்கநாதர் சொல்லிவிட்டார் 

பாண்டியனுக்கு ஒரு சங்கடம்.  

''சுந்தரேஸ்வரா,  திருவிடை மருதூர்  சோழ தேசத்தில் இருக்கிறதே. பாண்டியன் நான் எப்படி அங்கே செல்வது. உறவு இருவருக்கும் சரியில்லையே.  பகைவர்களாகி விட்டோமே.  என்னை அங்கே போகச்சொல்கிறாயே, எப்படி?''

''வரகுணா , கலங்காதே, இன்னும் சிறு நாளில் சோழன் உன் மேல் படையெடுத்து தோற்று, சோழ தேசம் உன் வசமாகும் நீ திருவிடைமருதூர் செல்வாய்''

பாண்டியனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷத்தோடு  அதிர்ஷ்டமும் அவன் பக்கம் இருந்தது. சில நாளில் சோழன் படையெடுத்து திடீரென்று    பாண்டிய நாட்டை தாக்கினான்.  கடும்போர்  பாண்டியன் படைக்கும் சோழ படைக்கும் நடந்து பாண்டியன் போரில் வென்றான்.  சோழனை வென்று திருவிடை மருதூர் அவன் கைவசம் வந்தது. அங்கே  மஹாலிங்க சுவாமி கோவில் கிழக்கு வாசல் வழியாக  உள்ளே சென்றான். வேண்டிக் கொண்டான். 

அவனை நிழல் போல் தொடர்ந்து வந்த ப்ரம்ம ஹத்தி  சிவாலயம் உள்ளே செல்ல முடியாமல் வாசலிலேயே  பாண்டியன் திரும்பி வெளியே வந்தால் மீண்டும் பிடித்துக்கொள்ள  காத்திருந்தது

விஷயம் தெரியாத  வரகுணன் திரும்பி  வந்த வழியே  கிழக்கு வாசலில் வெளியே திரும்ப யத்தனித்தபோது ஒரு அசரீரி அவனுக்குள் கேட்டது.

''வரகுணா , வந்த கிழக்கு வாசல் வழியே  வெளியே செல்லாதே. அடுத்த  வாசல் வழியாக செல். இனி ப்ரம்மஹத்தி உன்னை  தொடராது. உன் தோஷம் இங்கு வந்ததால் நீங்கியது''   என்கிறார் மகாலிங்கேஸ்வரர்.

அன்று முதல் யாருக்கெல்லாம்  ப்ரஹ்மத்தை மற்றும் தோஷங்கள் உண்டோ, அவர்கள் திருவிடைமருதூர் மகாலிங்கத்தை வேண்டி வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று பக்தர்கள் நம்பிக்கை.

தோரண வாயிலில்  தெற்கு சுவற்றில் இரு  கைகளால் முழங்கால்களை கட்டிக் கொண்டு  முழங்கால்களுக்கு இடையே  கோரமான முகத்தை புதைத்துக் கொண்டு ப்ரம்மஹத்தி உட்கார்ந்திருப்பதைப் போல் ஒரு சிலை வடித்திருக்கிறது.  திருவிடைமருதூர் சென்ற போதும் அதைப் பார்க்காதவர்கள்  அடுத்த முறை செல்லும்போது பார்க்கலாம். 

வீட்த்தில் யாராவது  முழங்காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்தால் போதும் என் அத்தை படு பயங்கரமாக கத்துவாள்       ''எடு கையை, சரியாக உட்காரு. ப்ரம்மஹத்தி மாதிரி உட்காராதே''  

முகத்தை வேறு  முழங்காலில் புதைத்துக் கொண்டு  இருப்பதை பார்த்தால்   ஒருவேளை அங்கேயே நம்மைக்  கொன்றுவிட்டு அவளுக்கு ப்ரம்ம ஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டு  கஷ்டப்பட  சந்தர்ப்பத்தை 
 நானும் மற்றவர்களும் அவளுக்கு கொடுக்கவில்லை. 


GEETHANJALI



கீதாஞ்சலி 55     J K  SIVAN 
தாகூர் 

                          55. பாதையின் முடிவில் பரமா!

55  LANGUOR is upon your heart and the slumber is still on your eyes.

Has not the word come to you that the flower is reigning in splendour among thorns? 

Wake, oh awaken! Let not the time pass in vain!
At the end of the stony path, in the country of virgin solitude my friend is sitting all alone.
 
Deceive him not. Wake, oh awaken!
What if the sky pants and trembles with the heat of the midday sun
What if the burning sand spreads its mantle of thirst-
Is there no joy in the deep of your heart? 
At every footfall of yours, will not the harp of the road break out in sweet music of pain?

ஒன்றுமே  தோன்றாத, அசையாத, பேசாமல்   உணர்வு ஒன்றுமே  இல்லாமல் கிடக்கும் மரக்கட்டை  இதயமாக  
 இருக்கட்டும், 
 ஆழ்ந்த தூக்கம் கண்களை விட்டு  அகலாமல் ஒரு அரை மயக்க சக்தியற்ற நிலையில்  இருக்கட்டுமே. 
எங்கு பார்த்தாலும் கூரான முள் இலையோடு இருந்தாலும்  கவலையே இல்லாமல்  மலர்ந்து ஆட்சி புரியும்  மென்மையான மலரைப் பற்றி அறிந்ததுண்டா?

விழித்துக்கொள், படுக்கையும் விட்டு ஏழு.  நேரம்  வீணாக  செலவழிய வேண்டாம்.

என் நண்பன் கிருஷ்ணனை உனக்கு தெரியுமா?இந்த  கடினமான  கூரிய  கற்கள் நிரம்பியக  நடக்கமுடியாத பாதையில்,  எவரும்  இல்லாத, பாழ்படுத்தப்படாத தனிமையான,  அமைதியான,  ஊரில் கிருஷ்ணன் எவருமின்றி உட்கார்ந்திருக்கிறான்.   அவனை ஏமாற்றாதே.  எழுந்திரு   விழித்துக் கொள் . 
கொளுத்தும்  உச்சி வேளை   சூரியனின் கருணையில்லாத  உஷ்ணத்தில்  ஆகாசம் திணறுகிறது. பெருமூச்சு விடுகிறது. நடுங்குகிறது.  எங்கும் சுடு மணல்.  ஆவி பறக்கிறது. தாகத்தை கிளப்பிவிடுகிறது.

உன் இதயத்தின் ஆழத்தை சோதித்து, தொட்டுப்பார்   கொஞ்சமாவது  சந்தோஷம் இருக்கிறதா  பார்.கட்டாயம் சந்தோஷம், ஆனந்தம் அதில் நிரம்பி இருக்கவேண்டுமே. தேடு. 
உன் ஒவ்வொரு காலடி வைக்கும்  ஓசையிலும், எனக்கு கேட்பது  கூரிய  கல் பாதையில்  எதிரொலிக்கும்  துன்ப கீதம், துயர சங்கீதம்.  வேறென்ன சொல்வது?.  என்று  இந்த கொடிய  வாழ்க்கைப்பாதையில் இருந்து விடுபடுவது. 

கிருஷ்ணா  அதோ அங்கே   பாதை முடிவில்  தனியாக என்னை எதிர்நோக்கி அமர்ந்திருக்கும் உன்னை என்று அடைவது?

Sunday, September 27, 2020

SV KARAI AGRAHARAM

 


  சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை  - 5       J K  SIVAN      


           









     ஸ்ரீ   வேத நாராயண பெருமாள் ஆலயம்    

 சாம்பவர் வடகரை அக்ரஹாரம் ஹனுமான் நதியின் தென்மேற்கில் உள்ளது. மேலே  சொன்ன வடக்கு தெரு  தான்  வேத நாராயண  பெருமாள் கோயில் உள்ள   தெரு.

வரசித்தி விநாயகர்  எனும்  பிள்ளையார்  கோயில் உள்ள  தெரு  தான் தெற்கு  வீதி.
                                     
அக்ரஹாரத்தின் சிறப்பு,  அதன்  சிகரம்  ஸ்ரீ  வேத நாராயண பெருமாள் ஆலயம் எனலாம்.  எல்லா கோவில்களையும் போல் இதுவும்  தமிழக அரசு  அற நிலைய  பராமரிப்பில் உள்ளது.  சத்திர சோத்துக்கு  தாத்தய்யங்கார்  உத்தரவு என்பார்களே அது மாதிரி தான். அற  நிலைய நிர்வாக   அதிகாரிகளின் ஒப்புதலுடன் தான் எந்த காரியமும் நடைபெறும் எனும்  போது கும்பாபிஷேகமும் அப்படித்தானே.

சற்றும்  எதிர்பாராமல் எனக்கு கிடைத்த  அதிர்ஷ்டம் என்று தான் சொல்லவேண்டும்.  2019 ல்  சாம்பவர் வடகரை  அக்ராஹாரத்தில் கருட சேவை புரட்டாசி 25 அன்று  (அக்டோபர் 12ம் தேதி 2019)  சிறப்பாக நடைபெற்றது. மரத்தில் செய்யப்பட்ட  அழகான  கருடன்   அலங்கரிக்கப்பட்டு  வெள்ளி கவசத்தில் வேத நாராயண பெருமாள் உற்சவரை அழகாக தனது புஜங்களில் தாங்கி அக்ரஹார தெருக்களில் வலம் வந்த காட்சி மறக்க முடியாதது.   அந்த அக்ரஹாரம்  இப்போது அதிக வீடுகளை கொண்டதாக இல்லை.  பழைய குடும்பங்கள் பல வெளியேறிய நிலையில்  பொலிவிழந்ததாக  காண்கிறது.  

 இந்த  வருஷம் ஒரு புதிய விஷயம்.  சாம்பவர் வட  கரை  அக்ரஹார டிரஸ்ட் நிறுவனம் ஒரு நாலு சக்கர சப்பரத்தை  அமைத்து கருடவாஹன வேதநாராயணரை  மூன்று தெருக்களிலும்   ஊர்வலம் வர ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.  இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால்  இந்த  4 சக்கர  நவீன சப்பரத்தை  தயாரிக்க பொருளுதவி   செய்தவர்கள்  ஸ்ரீ    S .R . கிருஷ்ணமூர்த்தி , மற்று ம் ஸ்ரீ   R .B .S  மணி  என்ற  அக்ரஹாரத்தை பூர்விகமாக கொண்டு தற்போது எங்கோ  வசிக்கும்  S V K  வாசிகள்.  எங்கிருந்தாலும் இந்த  கிராம அபிவிருத்திக்கு,  ஆலய  விழாக்களுக்கு  தக்க நேரத்தில்  உதவி செய்பவர்கள்.    இந்த அக்ரஹார  பூர்வீக வாசிகள் சிலர் இந்த கிராமத்தை பொன்னே போல் போற்றி மேலும்  இதன் சிறப்பு வளர எடுத்துக் கொள்ளும்  பிரயாசையால்  தான்  அக்ரஹாரம்  இன்னும்  பழைய  வாசனையோடு இருக்கிறது.   சாம்பவர் வடகரை அக்ரஹாரம் ட்ரஸ்ட் நிறுவனம். 27.8 2014 அன்று பதிவு செய்யப்பட்டு  சிறப்பாக இயங்குகிறது.

ஒரு  வைணவ பட்டாச்சாரியார், மற்ற அர்ச்சகர்கள்,  முக்யமாக ஸ்ரீ மூல சிவாச்சாரியார்,  மற்றும் உள்ளூர் பக்தர்களின் ஒத்துழைப்பு இன்றி   கருடசேவை சிறப்பாக அமைவது  சாத்தியமில்லை  அது அவ்வளவு சிறப்பாக நடந்திருக்கவும்  வழியில்லை.  ஸ்தோத்திரங்கள்,  சூக்தங்கள்,  விஷ்ணு சஹஸ்ரநாமம், நாராயணீயம், பாராயணம் எல்லாம் வெளியூரிலிருந்து வந்தவர்களாலும்  அங்கேயே  வசிப்பவர்களாலும்  கோஷிக்கப்பட்டு  செவிக்கு இனிமையாக இருந்தது.  நானும்  சேர்ந்துகொண்டேன்.   காலையில்    நானாவித புஷ்பார்ச்சனை, அபிஷேகங்கள், மந்த்ர கலச தீர்த்த அபிஷேகம் நடந்தது. மாலை  கருட வாகன வீதி வலம்  ஏற்பாடு கோலாகலமாக நிகழ்த்தினார்கள்.

 இரு சிறு  அக்ரஹார  குழந்தைகள்  கிருஷ்ணன் பாடல்களுக்கு அபிநயம் பிடித்து அற்புதமாக  ஆடினார்கள் .  சிறுமிகள்  ஷ்ரிஞ்சினி , தனிஷா  சகோதரிகள் ராதையாக, கிருஷ்ணனாக வேஷமிட்டு அனைவரையும்  மகிழ்வித்தனர்.  இத்தகைய நிகழ்ச்சிகளை வரவேற்று உற்சாகப்படுத்த  SV கரை அக்ரஹார டிரஸ்ட் நிறுவனம் அக்குழந்தைகளுக்கு பரிசளித்து கைதட்டல் பெற்றது.   ஸ்ரீ க்ரிஷ்ணார்ப்பணம் சேவா டிரஸ்ட்  சார்பாக வெளியிடப்பட்ட எனது புத்தகங்களை  அந்த குழந்தைகளுக்கு  பரிசாக அளித்த பெருமை எனக்கு.   எல்லோருக்கும்  ஸ்ரீ   வேத நாராயண பெருமாள் பிரசாதம் வழங்கப்பட்டது.  இந்த ஊர்க்காரர்கள் பலர்  வேறு மாநிலத்திலிருந்தெல்லாம் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தது ரொம்ப பாராட்டுக்குரியது.  இந்த வருஷ கரோனா விஜயம்  கருட சேவையின்  உற்சாகத்தை குறைத்து  அடக்கி வாசிக்கச் செயது விட்டது என்று அறிந்தேன்.  
 
மேலே சொல்கிறேன்.

SVKARAI AGRAHARFAM

 

சரித்திரம்  படைத்த சாம்பவர் வடகரை  - 4     
 J K  SIVAN    

       
   ஸ்ரீ  மதுரவாணி சமேத ஸ்ரீ மூலநாத சுவாமி

சாம்பவர் வடகரை  அக்ரஹாரத்தில் ஹனுமான்  நதியின்  கரையோரம்   வடகிழக்கில் பெரிய கோவில்  என்று உள்ளூரார் அழைக்கும்  ஸ்ரீ மதுரவாணி அம்மன் சமேத   ஸ்ரீமூலநாத ஸ்வாமி சிவன் கோவில் அமைந்துள்ளது. ஜாம்பவான் ஸ்ரீ மூலநாத ஸ்வாமியை வழிபட்ட  புராணக்கதை யுடன் சம்பந்தப்பட்டது.   அதனால் தான் ஊர் பெயர் சாம்பவர் வடகரை  என்று ஏற்கனவே சொன்னது ஞாபகமிருக்கிறதா?

இது ஒரு மிக பழமையான  பாண்டிநாட்டு சிவாலயம்.   1200  ஆண்டுகளுக்கு முந்தையது.   ஸ்தல விருக்ஷம் வில்வம். தீர்த்தம் ஹனுமான் நதி.   சிவாகம ஸம்ப்ரதாய  பூஜைகள்.  வழிபாடு.   இந்த  க்ஷேத்ரத்தின் புராண  பெயர்   விந்தை அல்லது விந்தனூர், சாம்பூர் வடகரை, சதுர் வேதிமங்கலம்  என்பது  புராண த்தில்  காணும்  பெயர்கள்.  

இந்த ஆலயத்தில் ஒரு அதிசயமான  விஷயம்  இருக்கிறது.  தெற்கே  திருவிடைமருதூரில் ஒரு  சோழன் ப்ரஹ்மஹத்தி இருந்து கொண்டு உள்ளே சென்றவர்கள் திரும்பிவரும்போது   பிடித்துக் கொள்ள காத்திருப் பது போல் இங்கேயும்  ஒரு பிரஹ்ம ஹத்தி சிலை, சதியன் தம்பிரான்,என்ற  பெயரோடு இருக்கிறது. அரிகேசரி பராக்கிரம பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்க  இங்கே வந்து இந்த  ஆலயத்தில் உள்ள சுயம்பு லிங்கமான  ஸ்ரீ மூலநாத சுவாமியை வணங்கி தோஷம் நீங்க பெற்றான்   என்று வரலாறு.

ஆகவே  திருவிடை மருதூரில் போலவே  இங்கே யும்   உள்ளே வந்த  நுழைவாயில் வழியாக  யாரும்  வெளியே போவதில்லை. போவதற்கு இன்னொரு வாசல் இங்கேயும் இருக்கிறது.  இதற்கென்றே  கருங்கல் சுவற்றை உடைத்து வழி பண்ணி இருக்கிறார்கள்.  

 ராம லக்ஷ்மணர்களால் வழிபடப்பட்ட  சிவன் தான்  சுயம்புவாக நிற்கும்  ஸ்ரீ மூலநாதர்.  அம்பாள் மதுரவாணி எனும் கனிவாய் மொழி அம்மன். சுந்தரர் பதிகம் பாடிய ஸ்தலம்.

இந்த ஸ்தலத்தில் மதுரவாணி அம்பிகை தவம் புரிந்து ஸ்ரீமூலநாத பெருமானை  அடையப்  பெற்றாள்  என்று ஐதீகம்.   காசி முதலான 8 சிவஸ்தலங்களுள் ஒன்றான இந்த ஸ்ரீமூலநாத  க்ஷேத்ரம். சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை வழிபட்டு பலனடைந்தோர்  பலர்.

இந்த கோவில்  விஷயமாக நான் கேள்விப்பட்ட ஒரு கதை சொல்கிறேன் விந்தன் கோட்டை ராஜாவுக்கு தீராத வயிற்று வலி. என்ன செய்தா னோ அவனுக்கு  ப்ரம்மஹத்தி தோஷம் ஒட்டிக் கொண்டது.    ஒவ்வொரு  தரமும் கோவி லில் நுழைந்ததும் வயிற்று   வலி நின்று விடும்.  ஆலயத்தை விட்டு வெளியேறியவுடன் மீண்டும்  வலி  ஆரம்பித்துவிடும்.

ராஜா மூல நாதர் பக்தன்,  சிறந்த சிவ பக்தன்.   ''ஈஸ்வரா நீ தான் என்னை காப்பாற்றவேண்டும்'' என்று வேண்டிக்கொண்டான்.

மூலநாதர் அவனுக்கு கனவில் தோன்றி,  ''பக்தா உன்னைப்பிடித்த  ப்ரஹ்ம ஹத்தி தோஷம்  நாளை  விலகும். உன் குதிரைகளை தெற்குப் பக்கமாக அவிழ்த்துவிட்டு விட்டு என்னை வந்து தரிசிக்கலாம். தெற்கு வாசல்  நிலையை  இடித்து வெளியேறும் வாசல் செய்து கொள்.  அதன் வழியாக  வெளியேறு '' என்கிறார் மூலநாதர்.
அவ்வாறே  செய்து  ராஜா  ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கி தெற்குவாசல் வழியாக வெளியேறி விட்டான்.

காத்திருந்த பிரஹ்ம ஹத்தி  மூலநாதரை  வேண்டிக்கொண்டு   ''பகவனீ, தோஷம் உள்ள விந்தன் கோட்டை  ராஜாவை நான் எப்படி பிடித்துக் கொள்வது ?'' என்று கேட்டதாம் ..

''ராஜாவின் தோஷம் நிவர்த்தி ஆகி  விட்டது.  இனி நீ அவனை நெருங்க முடியாது.  அது மட்டும் அல்ல, இனி நீ எங்கும் செல்ல முடியாது.  என் ஆலய வாசலில் நீ   சதியன் தம்பிரான்  என்ற  நாமகரணத்தோடு  ஒரு தனி சந்நிதியோடு இனிமேல்  இருக்கப்போகிறாய்.  முதல் பூஜை உனக்கு தான். அப்புறம் தான்  எனக்கு '' என்று அருளினார் ஈஸ்வரன்  மூலநாதர்.  
 
இந்த கோவில்  கிராமங்கள் பகுதியெல்லாம்  ஒரு காலத்தில் திருவாங்கூர்  சமஸ்தானத்தை சேர்ந்தி ருந்ததால் மலையாள பெயர்கள்,  மொழி, பேச்சு, எல்லாம் இன்னும் கூட  வழக்கத்தில் கலந்து இருக்கிறது.  இந்த கோவில் ஒன்றில் தான்  ப்ரஹ்மஹத்திக்கு பூஜை, தோஷம் விலக பிரார்த்தனை எல்லாம்.

 நோய்   நீங்கி,தோஷம்  நீங்கிய விந்தன் கோட்டை ராஜா, கோவிலை புனருத்தாரணம் செய்து பெரிதாக   கட்டினான்.   ப்ராஹ்மண குடும்பங்களை கொண்டு வந்து பூஜை நித்ய அனுஷ்டானங்கள் இன்றும் சிறப்புற நடந்து வருகிறது.  

இன்னொரு விஷயம் .  சாம்பவர் வடகரை  மூலநாதர் கோவிலில்  நடராஜாவுக்கு  முன்னும் பின்னும்  முகங்கள்.  இந்த பக்கத்தில்  பௌத் தர்கள் நடமாட்டம் அந்த  காலத்தில் இருந்தி ருக்கிறது  என்பதை  மூல  நாதர் ஆலயத்தின் முன்புறத்தில் உள்ள  ஒரு புத்தர்  சிலை இருந்த தில் தெரிகிறது. அந்த புத்தர்  சிலை  தற்போது  ஆராய்ச்சி மையத்துக்கு கொண்டு  செல்லப்பட்டுள்ளது.  

சாம்பவர் வடகரை கிராமம்  முதலில் விந்தன் கோட்டை பகுதியில் தான் இருந்தது. இன்றும் அங்கே கல்வெட்டு இருக்கிறது.

ஒரு காலத்தில்  இந்த  விந்தன் கோட்டை பகுதியில் வாழ்ந்த மக்கள்  குடும்பங்களோடு இப்போது  இருக்கும் அதே பெயர் கொண்ட சாம்பவர் அக்ரஹாரத்தில்  குடியேறினார்கள்.  அவர்கள் சுபிக்ஷமாக  வாழ, கிராமங்களை மானியமாக  கொடுத்தான் விந்தன் கோட்டை மஹாராஜா.இப்போதுள்ள சாம்பவர் வடகரை  அக்ரஹாரம் இப்படித்தான்  தோன்றியது.   முதலில் தெற்கு அக்ரஹாரம் உருவாகி  அதில் வேத பண்டிதர்கள் சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் குடும்பமாக  குடியேறினார்கள்.

 நூறு  நூற்றிருபது  வருஷங்களுக்கு  முன்பு சங்கராண்டி தீக்ஷிதர்  அங்கே  யாகம் பண்ணினார் என்று   கேள்வி.    ஏற்கனவே சொன்னதுபோல் இந்த  கிராமம்   கேரள திருவாங்கூர்  சமஸ்தான ஆட்சிக்குட் பட்டிருந்ததால்  பழக்கவழக்கங்கள், பேச்சு எல்லாமே  மலையாளம்  கொஞ்சம் கலந்த தமிழ்.

கோவில் அர்ச்சகர்கள், வேலையாட்களுக்கு   திருவாங்கூர் ராஜா சமஸ்தானம்  மானியமாக நிலம் வழங்கி  தேவைக்கு மேற்பட்ட வருமானத்தோடு  சுகமாக வாழ்ந்தார்கள். 

தினமும்  திருவாங்கூர்  சமஸ்தான ராஜாவுக்கு   மாலை  7   மணிக்கு  லலிதா ஸஹஸ்ரநாம அர்ச்சனை, பாடல்கள்.   சித்திரை திருவிழாவில்  9 நாளும்  கோலாகலம்.  தேர்  நிலைக்கு திரும்பின பிறகு தான் ராஜா சாப்பிடுவான்.  இந்த பகுதி தமிழக ஆட்சி கட்டுப்பாட்டில் வ







ந்ததும்  இது  அனைத்தும்  நின்று போய்விட்டது.
 
சுவாமி திருமண  கோலத்தில் காட்சி தருவதால் திருமணத்தடை தோஷம் நிவர்த்தி    கடன்   தொல்லை,வியாதி போன்றவை நீங்க மூல நாதரை  வழிபடும்  பக்தர்கள் உள்ளூரிலும் வெளியூர்களிலும்  அதிகம்.  காரிய சித்திக்கு   பிரசித்தமான   புராதன ஆலயம். ஆலயத்தில் மொத்தம் 3 வாசல்கள்  உள்ளது.  அதில் ஸ்வாமிக்கு ஒன்றும் அம்பாளுக்கு ஒன்றும் மற்றொன்று இந்த அரிகேசரி பராக்கிரம பாண்டியனுக்கு (பிரம்மஹத்தி தோஷம் தோஷம்  நீங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டது.  பிரகாரத்தில் ஒரு லிங்கம் உள்ளது.  வில்வலிங்கம் எனப்  பெயர்.  .
 கேரளாவின் நுழைவு வாயிலாக சாம்பவர்  வடகரை கிராமம்  1951 -ம் ஆண்டு நவம்பர் 1 -ம் தேதி வரை விளங்கியது.  இதற்கு ஆதாரமாக   இன்னும் கேரளாவின் சின்னமான சங்கு முத்திரை ஆலயத்தில் உள்ளது.      இந்த  ஆலயத்தில் சுரங்கப்பாதை  இருக்கிறது என்கிறார்கள்.  மூலநாதர்  ஆலயத்தில் இருந்து  விந்தன் கோட்டை ஆலயத்திற்கு அது சுரங்கப்பாதை.  ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி  அன்று தேரோட்டம்.

சிறப்பு திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி ,சித்திரை விசு,, நவராத்திரி, ஐப்பசி விசு, திருக் கல்யாணம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை

 நித்திய 3 கால பூஜை விவரங்கள்
  காலை:06:00-10.00am
   சாயரட்சை:06:00pm

   அர்த்தஜாமம்:08:00pm  

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...