என் உயிர் நீ தானே J K SIVAN
எங்கள் பேச்சில் வாங்கோ போங்கோ என்ற மரியாதை எல்லாம் கிடையாது. ஒருமையில் தான்.
''அடிக்கடி நான் சொல்வேன் என்னுயிர் நீ தானே என்று தெரியுமில்லையா?''
''ஆமாம், எனக்கும் நீ அப்படித்தான்''
''வாஸ்தவம் உன் உயிர் இல்லையென்றால் எனக்கு உயிர் ஏது ?நீயின்றி நான் இல்லை தானே.
''இந்த உலகத்திலேயே இப்போ நாம் ஒருத்தருக்கு ஒருத்தர் தானே இருக்கோம்''
''நான் உன்னை நம்பி வந்தவன். நீ நான் வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தவள்''
''என் நினைவே, எண்ணமே, எதுவுமே நீ தான் ''
''எனக்கு எது பிடிக்கும் என்று அறிந்தவள் நீ
''எனக்கு மந்திரி நீ, என் கோபத்தைஅறிந்து
''சில்லென்று மோர் குடி''க்க வைத்து விசிறியவள் நீ
பேசாமல் சிரிப்பாய். பதிலே சொல்லமாட்டாய். புடவை தலைப்பால் முகத்தை துடைத்துக் கொள்வாய். கண்களில் விழியோரத்தில் கசியும் நீரை லாகவமாக துடைத்துக் கொள்வாய்.
++
''சம்பளம் இந்த மாதம் இவ்வளவு தான், நிறைய பிடித்துவிட்டான் ''
''பரவாயில்லே, எப்படியோ மேனேஜ் பண்ணுவோம். போன மாதம் கொடுத்ததில் மிச்சம் கொஞ்சம் இருக்கே '
தீபாவளி புதுப்புடவை எனக்கு வாங்க வேண்டாம், கமலா கல்யாணத்தில் கொடுத்தது ஒன்று உபயோகப் படுத்தாமல் புதிசாகவே இருக்கிறது ''
''அப்போ எனக்கும் ஒன்னும் வேண்டாம்''
'' பேண்ட் தச்சுக்க புது துணி உன் பிரெண்ட் கல்யாணத்தில் கொடுத்தது இருக்கு. ஆபிஸ் போகும்போது டைலர் கோபு கிட்டே கொடுத்தா சீக்கிரம் தச்சு கொடுப்பான். தீபாவளி ரஷ் லே டிலே பண்ணிடுவான் இன்னிக்கு மறக்காம கொடுக்கணும். பையிலே வச்சிருக்கேன்''
'''அடடே சைக்கிள்லே காத்து அடிக்கணும் மறந்து போய்ட்டேன். ஆபிஸுக்கு நேரம் ஆறதே . சீக்கிரம் வேறே போகணுமே''
'' காலம்பறவே பார்த்தேன். எதுத்த வீட்டு பையனை காத்து அடிச்சு கொடுக்க சொன்னேன். இப்போது ரெடி ''
++
''குழாயில் தண்ணீர் பிடிக்க நான் போகு முன் எதுக்கு நீயே ரெண்டு குடம் க்யூவில் நின்று பிடித்து வைச்சே?';'
''குழாயடிலே பொம்மனாட்டி கும்பல். சண்டை போடுவா.. நானே பிடிச்சு வச்சுட்டேன்'''
++
''இன்னிக்கு சாயந்திரம் என் பிரென்ட் சிஸ்டர் கல்யாண ரிசெப்ஷன். நான் சாப்பிட்டுட்டு வந்துடுவேன். நீ எனக்காக காத்திருக்காமே இருக்கிறதை சாப்பிடுடு''
''அவல் இருக்கு. உப்புமா பண்ணிக்கிறேன். கொஞ்சம் வைச்சிருப்பேன். வந்து டேபிள் மேலே இருக்கறதை மறக்காம சாப்பிடணும்''
++
''குண்டு மல்லி அடர்த்தியா பூக்கடை பஜார்லே கம்முனு வாசனை அடிச்சுதுன்னு வாங்கிண்டு வந்தேனே
பாக்கலியா, எங்கே காணும்''
''அதோ, கிருஷ்ணன் மேலே சாத்திட்டேனே''
++
''தொண்டை வாய் ஓயாம ராத்திரி எல்லாம் இருமித்தே. சில்லுனு ஏதாவது வெயில்லே சாப்பிட்டா தான் இப்படி ஆகும். ஐஸ் வாட்டர் பிடிக்கும்ன்னு குடிக்க வேண்டாம். வெந்நீரலே சுக்கு தட்டி போட்டு ப்ளாஸ்குல வைச்சிருக்கேன். மறக்காம அடிக்கடி எடுத்து குடிக்கணும்''
++
''எதுக்கு வெள்ளை சட்டை டேபிள் மேலே?''
''வெள்ளை சட்டை கருப்பு பேண்ட்க்கு எடுப்பா இருக்கும் னு அயன் பண்ணி மடிச்சு வச்சிருக்கேன். போட்டுக்கணும் ''
''சரி''.
++++++++
இதெல்லாம் கடகடவென்று இப்போது ஞாபகம் வருகிறது.
சென்ட்ரல் ஸ்டேஷன் எதிரே தெரியறது . ரெண்டாம் மாடி ஜன்னல்லேருந்து பார்க்கறேன்.
எதிரே கீழே உயிரோட்டம் வேகமாக நடக்கிறது. பஸ், கார், சைக்கிள், ஜனங்கள், ரிக்ஷா, கைவண்டி, மாட்டு வண்டி மேடு ஏறமுடியாம நுரை தள்ளி பாரம் இழுத்துஐந்து போறது.
என் பாரம் எல்லாம் சுமந்து உனக்கும் நுரை தள்ளி போய்ட்டுதா?
உள்ளே போனவளை இன்னும் காணோமே.
அதோ வெள்ளை கோட்டு வந்துட்டுது.
அதன் தோளுக்கு பின்னாலே மலையாள சரோஜா நர்ஸ்.
''எப்படி இருக்காங்க?''
''டாக்டர் கண்ணாடியை கழட்டி விட்டு என்னை தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு பெருமூச்சு விட்டுட்டு நகர்ந்து விட்டார். நர்ஸ் சரோஜா ஒரு பேப்பரை கையில் அழுத்தி என்னை பார்த்து தலையை இடது வலதாக ஆட்டினாள்.
''இன்னும் சில நிமிஷங்களில் பெட்லே கொண்டுவந்து போடுவாங்க. சீக்கிரம் பேப்பரை ஆபீஸ்லே கொடுத்துட்டு மேற்கொண்டு அவங்க என்ன செய்யணும்னு சொல்லுவாங்க அதும்படி செய்யுங்க.
வண்டி அவங்களை கேளுங்க. தருவாங்க''.
++
''அதோ நீ வந்துவிட்டாய். களைத்து கண்மூடி இருக்கிறாய். எனக்கு உழைத்து உழைத்து உனக்கு ரெஸ்டே இல்லையே. இப்போ கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ''
''அடேடே உனக்கு பெர்மனெண்ட் ரெஸ்ட்டா? ''
''என் உயிர் நீ தானே'' இப்போ உனக்கு உயிர் இல்லையா?'' அப்போ எனக்கு?''
''எனக்கு உயிர் இருக்கிறது ஆனால் நீ தானே என் உயிர், ஆகவே உனக்கு உயிர் இல்லை என்றாலும்
என் உயிர் இருக்கிறதே, என்னை பெற்று வளர்த்த தாயே, நீ மறையவில்லை, உன் உடல் மட்டும் என்னிடமிருந்து பிரிந்தாலும் நீ என் மனதிலிருந்து என்றும் பிரிய முடியாதே.
'' என்னுயிர் நீ தானே.''
No comments:
Post a Comment