கண்ணன் வந்தான்... J K SIVAN
சுதாமா என்கிற குசேலர், நிமிஷத்துக்கு மூணு தடவை வாசலுக்கு சென்று தெரு ரெண்டு பக்கம் முனை வரை பார்த்துவிட்டு வந்தார். இன்னும் வரவில்லையே. நிலை கொள்ளவில்லை சுதாமாவுக்கு.
மனது ஒரு நிமிஷம் நடந்ததையெல்லாம் நினைத்து பார்த்தது.
** சின்னவயதில், பரம ஏழைப் பிராமணன் குழந்தையாக வளர்ந்தது. குரு சாந்தீபனியிடம் சென்று கல்வி கற்றது. அருகிலே ரெண்டு தோழர்கள், ஒருவன் பலராமன், மற்றவன் கிருஷ்ணன். ரெண்டுபேருமே மதுராவிலிருந்து வரும் மாணவர்கள். குருகுல வாசம். சுதாமாவுக்கும் அப்படியே தான் என்பதால் நல்ல நண்பர்கள் ஆனார்கள். அவ்வப்போது சுதாமா தனது வீட்டுக்கு செல்வான். வீட்டிலிருந்து அருமையான பக்ஷணங்கள் பண்ணிக் கொடுப்பார்கள். அதெல்லாம் கொண்டுவந்து நண்பர்களோடு சேர்ந்து தின்பான். குருகுலவாசம் முடிந்தது. ரெண்டு நண்பர்கள் துவாரகை போய்விட்டார்கள். சுதாமா வீடு திரும்பினான். திருமணம் நடந்தது. காலம் ஓடியது. வறுமை அவனை விடவில்லை. '' 27 குழந்தைகள்..''.. இதுவே போதும் குசேலன்
வறுமையை பற்றி இனி நான் ஒரு வார்த்தை கூட எழுத அவசியமில்லை..
''உங்கள் நண்பன் ராஜாவாகிவிட்டானாமே, கிருஷ்ணன் உங்கள் பால்ய நண்பன் இல்லையே ரொம்ப நல்லவன். என்னைக்கண்டால் ரொம்ப பிடிக்கும் என்பீர்களே அடிக்கடி. அவரைச் சென்று நேரில் பார்த்து நமது நிலையை சொல்லி கொஞ்சம் பணம் பொருள் உதவி பெற்று வாருங்கள். இனிமேல் வறுமை நம்மை ஒவ்வொருவராக கொன்றுவிடும் என்ற நிலை வந்து விட்டது. வேறு வழியே தெரியவில்லை..''
''சுசீலா, நான் அவனை எந்த உதவியும் கேட்ட தில்லை, என் ஞாபகம் அவனுக்கு இருக்குமா என்றும் தெரியவில்லை. எதற்கும் போகிறேன். கேட்கிறேன்''
தரித்ரத்தின் உச்சத்தில் இருந்தாலும், வெறும் கை யோடு பழைய நண்பனை எப்படி பார்ப்பது என்று எங்கோ கொஞ்சம் கடன் வாங்கி நெல் பொறித்து அவல் பொட்டலம் கொடுத்து அனுப்பினாள் . மேல் துண்டில் அதை முடிந்து கொண்டு குசேலர் துவாரகை நடந்தார். கிருஷ்ணனை பார்த்தார். அவரை வாசல் வந்து உபசரித்து சப்ரமஞ்ச கட்டிலில் அமர்த்தி கால் பிடித்து விட்டு பழைய விஷயங்கள் நிறைய பேசினான்.
''சுதாமா என்ன கொண்டுவந்தாய் எனக்கு?''
ஆசையாக கேட்ட நண்பனுக்கு பதில் பதில் சொல்ல முடியாமல் வெட்கத்தில் தவித்தான். இவ்வளவு பெரிய ராஜாவுக்கு இந்த தரித்ரன் எப்படி வெறும் அவல் பொரி தருவேன்?. பேசாமல் இருந்து பேச்சை மாற்றினான் குசேலன்.
பரமாத்மாவிடம் மறைக்க முடியுமா? கண்ணனின் கண்கள் குசேலனின் மேலாடையை சுங்க அதிகாரி போல் தடவி பார்த்து முடிச்சை அவிழ்த்து அவல் பொரியை ஆசையாக ஒரு கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான் கண்ணன். சந்தோஷத்தில் மகிழ்ந்தான். நேரம் ஓடியது பேச்சு தொடர்ந்தது. பரம சந்தோஷத்தில் வந்த வேலையை சுதாமா மறந்தார். விடைபெறும் நேரம் வந்தது. கண்ணனின் தேரில் சுதாமா ஊர் போய் சேர்ந்தான். ஊர் திரும்புமுன் கிருஷ்ணன் ''சுதாமா இன்னும் ரெண்டு நாட்களில் உன் ஊருக்கு நான் வருகிறேன் உங்களை எல்லாம் பார்க்கவேண்டும்'' என்றான்
. ****
கண்ணன் வருகிறான் என்ற சேதி அறிந்ததும் ஊரே மகிழ்ந்தது. எல்லோரும் சுதாமா வீட்டுக்கு வந்து காத்திருந்தார்கள்.
''ஆஹா என்ன பாக்யம் நமக்கு. நம் ஊருக்கு சுதாமாவின் விருந்தாளியாக துவாரகை ராஜா, ஸ்ரீ கிருஷ்ணன் ருக்மிணி சமேதராக வருகிறாராம். ஊரே கூடி அவரை வரவேற்போம் என்று ஊரில் பெரியோர்கள் முடிவெடுத்தார்கள்.
''மஹாராஜா கிருஷ்ணன் வருகிறான் இங்கே என்றால் இந்த சுதாமா வீட்டை முதலில் புதிதாக் குவோம், கிருஷ்ணன் வந்தால் தங்குமிடம் மரியா தையோடு, மதிப்பாக இருக்கவேண்டாமா?''
ஊரே சேர்ந்து குசேலன் வீட்டை புதிதாக்கியது. இரவும் பகலும் வேகமாக உழைத்து அது மாளிகை யானது. தோரணம், மாவிலை கொடிகள் எல்லாம் கட்டி சிங்காரித்தார்கள். சுதாமா வீட்டில் அனைவருக்கும் புத்தாடைகள், ஆபரணங்கள். வாசலில் தெரு முழுக்க பெரிதாக விதம் விதமான வண்ண கோலங்கள். எங்கும் பூக்கள் கம்மென்று வண்ணவண்ணமாக நறுமணம் வீசி வரவேற்றன. சுசீலையும் சுதாமாவும் இரு கரம் கூப்பி அனைவரையும் நன்றியோடு வணங்கினர், வாழ்த்தினர். இன்று கண்ணன் வரப்போகிறான்.
தெருவின் இரு மருங்கிலும் வரிசையாக ஊர்மக்கள் காலையிலிருந்தே கண்ணன் வருகைக்கு காத்து நின்றனர். கிருஷ்ணன் தேர் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
கிருஷ்ணன் தேரில் வந்தான். தெரு முனையி லேயே தேர் நின்றது. கிருஷ்ணன் குதித்து கீழே இறங்கினான். கிராமவாசிகளோடு கலந்து நின்றான். பெண்கள் ஓடிவந்து ஆரத்தி எடுத்தார்கள். கோலாட்டம் ஆடினார்கள். பாடினார்கள். கிருஷ்ணன் இடுப்பிலிருந்து புல்லாங்குழலை எடுத்து ஆனந்தமாக ஊதினான். ஜீவராசிகள் ஆடின. சில நிமிஷங்களில் சுதாமா வின் ஊர் பிரிந்தாவனமாகியது. எல்லோரும் ஊர்வலமாக சுதாமா வீடுவரை வந்தார்கள். சுசீலை குடத்தில் புனித நீர் எடுத்து கிருஷ்ணன் ருக்மிணி இருவரின் பாதங்களை அபிஷேகித்து மலர்களால் பூஜித்தாள். சுதாமா அவர்கள் பாதங்களை பட்டு வஸ்த்ரத்தால் துடைத்து வணங்கினார். மலரிட்டு மகிழ்ந்தார். அவரது 27 குழந்தைகளும் வரிசையாக வணங்கி னார்கள். '
'அண்ணி, எனக்கு பசிக்கிறதே, தின்பதற்கு என்ன வைத்திருக்கிறாய்?''
சுசீலை சிரித்தாள்.
''கோவிந்தா, நீ எங்களுக்கு என்ன கொடுத்தாயோ அதைத்தானே உனக்கு நாங்கள் கொடுக்க இயலும்'' '
'ஓடிச்சென்றாள் . உள்ளே இருந்தது ஒரு பாத்திரம் நிறைய வெண்ணையை கொண்டுவந்து கிருஷ்ணனுக்கு அளித்தாள் .இது வெண்ணெய் இல்லை. எங்கள் எல்லோரின் தூய அன்பு, பாசம் நிறைந்த உள்ளம் ''
கிருஷ்ணன் மகிழ்ந்தான். ருக்மிணி சந்தோஷத்தில் கை தட்டினாள். ஊர் மக்கள் கைகூப்பி கிருஷ்ண னை வணங்கினார்கள். என்ன பேசுவதென்றே அவர்களுக்கு தோன்றவில்லை. கள்ளம் கபடறியா ஜீவன்கள்.
கிருஷ்ணன் வாயில் வெண்ணெய் சென்ற வேளை இடி இடித்தது. பலநாட்கள் பெய்யாத மழை ஜோவென்று பெய்து, எல்லோர் மனமும் பூமியை போல் குளிர்ந்தது.
No comments:
Post a Comment