மனிதனின் ஆன்மா மரணமெய்தாது. J K SIVAN
மனிதர்கள் எல்லோரும் பயப்படும் ஒரு வார்த்தை ''மரணம்''. எப்போது, என்று, எங்கே, எப்படி நேருமென்று தெரியாத ப்ரம்ம ரஹஸ்யம் என்பதால் தான் இந்த பயம். அதிலிருந்து தப்ப முடியாது என்று தெரிந்தும் விடா முயற்சிகள். அதை பற்றி பேசினால் ஓடிவிடுகிறார்கள். தைரியமாக உட்கார்ந்து கொஞ்சம் யோசிப்போமா?
மரணம் என்பது எப்போது உடல் செயலிழக்கிறதோ அந்த நேரம். உள்ளே ஆன்மா என்று ஒன்று நம் எல்லோருக்கும் இருக்கிறது. பலர் அது இருப்பதை யே தெரியாமல் வாழ்ந்து முடிகிறார்கள். ஆன்மா அடிக்கடி வேறு வீடு தேடும். நம் உடல் ஒரு வீடு. கொஞ்சகாலத்துக்கு. அது இந்த வீட்டை காலி செய்வது தான் மரணம்.வாழ்க்கையை புரிந்து கொண்டால் மரணத்தை புரிந்து கொண்ட மாதிரி. ஆன்மாவுக்கு பிறப்போ இறப்போ கிடையாது அது இடம் மாறுகிறது. உடல் தான் ஆன்மா நுழைந்தது பிறந்ததாகவும், அது போகும்போது இறந்ததாகவும் அறியப்படுகிறது. உடலே ஆத்மா என்று நினைப் பவர்கள் கோடிக் கணக்கானவர்கள்.
ஒரு மனிதன் நல்லவனாக, அன்புள்ளவனாக, கருணை கொண்டவனாக எல்லோராலும் விரும்பப்படுபவனாக சுயநலமற்று இருப்பது அவனுள்ளே இருக்கும் ஆன்மாவின் வெளிப்பாடு.
ஸயன்ஸ் என்ன சொல்கிறது. எதுவும் மறைவதில்லை, உருமாறுகிறது. அவ்வளவு தான். விதை செடியாகி, மரமாகி, வெட்டப்பட்டு கிளையாகி, விறகாகி, வீடுகட்ட ஜன்னலாகி, கதவாகி, மேஜை, நாற்காலியாகி, ஊஞ்சலாகி, எல்லாமே ஒன்றின் மாற்றுருவம் தானே.
குப்புசாமி இதற்குமுன் எங்கோ ஒரு கோபாலசாமி, இனிமேல் கருப்புசாமி, கிருஷ்ணசாமி ஒருவரை மற்றொருவர் அறியாமலே எல்லாம் ஒருவர். மனிதனின் மாற்றம் ஒன்றிலிருந்து இன்னும் உயர்ந்த ஒன்றாக இருக்கவேண்டும் என்பது அவசியம். அதற்கு தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
வியாதி, உபாதைகள், அவஸ்தைகள், துன்பம் இன்பம் எல்லாம் இந்த உடம்புக்கு தான். ஆன்மா எதிலும் ஒட்டாதது. பேசாமல் பார்த்துக் கொண்டே இருப்பது. நல்லதையே செய், நினை, என்று அடிக்கடி மெல்லிய குரலில் நமக்கு உபதேசிப்பது. அது சொல்வது எதையும் நாம் கேட்பதில்லை. அது நமது செயல்கள், சொல், எண்ணம் எல்லாவற் றுக்கும் சாக்ஷியாக இருக்கிறது. மனசாக்ஷி.
மற்றவர்களுக்கு அன்பும், கருணையும், வாழ்வும் தரும் ஆன்மா அன்பின் கருணையின் உயிரின் வடிவமாக இருக்கிறது.
உலக பற்றுக்கள், அதற்கான பணம், பொருள்கள் தேடி அலைபவன் மரணத்தை அடையும்போது அவனது பற்றுதல்கள் அனைத்திலிருந்தும் பிரிக்கப்படுகிறான். அது தான் அவனுக்கு மரணத்தை கண்டால் பிடிக்கவில்லை. பயம். பொதுநல காரியங்கள், இறை சிந்தனை, பரோபகாரம், எண்ணத்தில் நிறைந்தவன் வாழ்வு கடைசி நிமிஷம் வரை ஆனந்தமாக அமைந்து இந்த உலகில் கடைசி நிமிஷம் வரை அவன் ஸ்வர்கத்தில் வாழ்கிறான். மரண அச்சம் அவனை நெருங்காது.
இப்படி தனக்கென வாழா பிறர்க்குறியாளன் மறைந்தபின் அவன் சேவைகளை அவனைச் சார்ந்தோர் பின்பற்றி வந்தால் அவன் என்றும் வாழ்கிறான். மரணம் அவனை நினைவிலிருந்து மறைக்காது. அப்படிப்பட்டவர்களைத் தான் அமரர்கள் என்கிறோம். ஆன்மா நினைவில் இருக்கும்போது உடல் மறந்துபோகிறது .
No comments:
Post a Comment