Tuesday, February 4, 2020

LETTER




                      ஒரு அப்பனின்   கடுதாசு...  J K  SIVAN 

டேய்  பையா   ஜம்புலிங்கம்,


நான்  தாண்டா உங்கப்பன்  சொக்கலிங்கம் பேசறேன்.  பேசறேன்னா  என்னா?  நான் பேசியதை யாரையோ விட்டு எழுத வச்சிருக்கிறேன். எனக்கு தான் எழுத தெரியாதே.  நீ  சென்னபட்டணத்திலே ஒரு இங்கிலீஸ்  ஆபிஸ்லே  பியூன் வேலை கிடைச்சு போய் இருக்கிறே.  இங்கே நிறைய பேருக்கு  உன்மேலே  திருஷ்டி டா.   அங்க பெரிய கடல் இருக்குதாண்டா . ஜாக்கிரதை கதவை மூடியே வச்சுடு. ராத்தரி நீ தூங்க சொல்ல தண்ணி உள்ளாற  வந்துடப்போது.

நான் ஏன் உனக்கு இதை எழுதணும்?  மூணு   நாலு  காரணம் டா.

எனக்கும்  வயசு 75 ஆவுதாம்.   ஸ்கோலு   வாத்யார்  ஏகாம்பரம் கணக்கு  பாத்து சொன்னார். எப்படியோ, இப்படியே என் காலம்  ஓடுது. ஆனா  சில  விஷயம் நீ தெரிஞ்சுக்க ணும்டா.

வாழ்க்கை, அதிர்ஷ்டம்  அப்படின்னு   நிறைய பேர்  சொல்றாங்களே, அது எல்லாம் நம்பவே முடியாதுடா. ஒருத்தன் எவ்வளவு வருஷம் வாழுவான் என்று அவனுக்கே தெரியாதுடா.  அதுலே என்னன்ன கஷ்டம் அவனுக்கு வரும்னுட்டும்  தெரியாது. வந்தப்புறம் தான் தெரியும்.  அதனாலே  நானு  ரொம்பவும் யோசித்தேன் அதை கொஞ்சம் சொல்றேண்டா.

உங்கப்பன்  நான் இதை  எல்லாம் உனக்கு  ஏன் சொல்லணும்?.   நான் இதை சொல்லலேன்னா வேறே யார்  சொல்லப்போறா உனக்கு ? அதனாலே.ll.

நான் சொல்றதெல்லாம் என்னோட சொந்த அனுபவம் டா.  தெரிஞ்சிகிட்டா  நீ அதுமாதிரி கஷ்டம் நீயும் படமாட்டியே. அதுக்காக. 

டேய் , யாராவது உனக்கு நல்லது செய்யலேன்னா கோவப்படாதே.  உங்க ஆத்தா வேலம்மா, நானு உங்கப்பா தவிர வேறே யாருடா உன் மேலே அக்கறை படப்போறாங்க?  உனக்கு நல்லது செஞ்சவங்களை  உட்டுடாதே. அவங்க தான் உன் சொத்து.  நீ  ரொம்ப  ஜாக்ரதையாக இருக்கணும்  உன்கிட்டே  பழகறவங்க  உன்கிட்டேருந்து எதுனாச்சும்  லாபம் கிடைக்குமான்னு  தான் நெருங்கறவங்க ன்னு புரிஞ்சுக்கோ.  காரியம் முடிஞ்சா  உன்னை   சாம்பார் கருவேப்பிலை மாதிரி  தூக்கி  எரிஞ்சுடுவாங்க. அவங்களை உயிருக்கு உயிரா பழகுற உண்மை நண்பருங்க என்று நம்பி ஏமாந்து போவாதே . 

இந்த உலகத்தில் யாரும் முக்கியமில்லைடா.  இந்த உலகத்திலே நமதுன்னு எதுவும் கிடையாதுடா. எல்லாம் கிருஷ்ணன் சாமி  எல்லாருக்காகவும் கொடுத்த பொது சொத்து.  இது புரிஞ்சுட்டா உனக்கு  எந்த ஏமாற்றமும் கிடையாது,  எதுவும்  கிடைக்கலே, நம்மகிட்ட  இல்லையே  என்று வருத்தப்படவே  மாட்டே.

 நாம இருக்கப்போறது கொஞ்ச காலம் தான் டா. கனவு காணாதே. ஒருநிமிஷத்தையும்  வீணடிக்காதே. எவ்வளவு சீக்கிரம் நிறைய உன்னாலே  நல்லபடி வாழ முடியுமோ அப்படி வாழ்ந்துடு .நாலு பேருக்கு உபகாரம் செய்.  எப்படி முடியுமோ, எப்படி தோணுதோ அப்படி. 

டே , பையா,  அன்பு பாசம்  எல்லாம் ஒரு நல்ல  சந்தோசமான அனுபவம் டா. நேரத்துக்கு  நேரம்  மனுஷன் மனசு மாறிக்கிட்டே இருக்கும். குரங்கு அது.  நீ ரொம்ப விரும்பின மனுஷன் மனுஷி உன்னை விட்டு பிரிஞ்சுட்டா  வருத்தப்படாத.   அவ்வளவு தான்னு விட்டுடு.  காலம் போக போக  அந்த ஏக்கம் துக்கம் எல்லாம் மறைஞ்சிடும்.  அழகு ன்னு  ஓஹோன்னு புகழாதே. அதே மாதிரி துக்கத்தையும் வானமே  இடிஞ்சு தலைமேல்  விழுந்ததுமாதிரி தலைலை கையைவச்சுக்கிட்டு மூலை லே போய் உட்காராதே.  ரெண்டுமே வேணாம்.

வாழ்க்கைலே வெற்றி அடைஞ்சவன் அத்தனை பெரும் காலேஜு போய் படிச்சவனில்லே. பள்ளிக்கூடமே முழுசா போகாதவங்க கூட இன்னிக்கு சிலையா  நிக்கிறாங்க.  அதுக்கா  படிக்கணும்னு அவசியம் இல்லேன்னு நான் சொல்ல வரலே.  அவனவன் உழைப்பு, குணம், சமூகத்திலே பழகுற விதம்  தாண்டா காரணம்.  உனக்கு கடவுள் கொடுத்த  சக்தி, நீ தெரிஞ்சுக்கிற நல்ல   விஷயம் தான் உன்னை காப்பாத் தும்.  பிச்சைக்காரனை கூட  கோடிஸ்வரனா  மாத்தும். 

நீயி  சம்பாரிச்சு எனக்கு காசு அனுப்பவேண்டாம்டா.   நானும் உனக்கு எதுவும் இங்கிருந்து சம்பாரிச்சு அனுப்ப முடியாது.  என் வயித்தை கழுவறதுக்கு  நான்  சம்பாதிக்கிறது போதும் டா.   நீயி இப்படி  வளர்றவரைக்கும் நான் எப்படியோ உன்னை பாத்துக்கிட்டேன். அவ்வளவு தாண்டா என்னாலே  முடிஞ்சுது. இனிமேல்ட்டு  நீயே  உன்னை பாத்துக்கணும்டா. 

சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்டா.   அதுக்காக  நாம்  எதுக்கும்   அனாவசியமா  வாயை விடக்கூடாது. 
எல்லோருக்கும் நல்லவனா நடந்துக்கோ.  அவங்கல்லாம்  அப்படி உனக்கு  உதவணும்னு திர்பார்க்காதே.  இது தெரியாம நிறைய பேரு  கஷ்டப் படறாங்க.

 கிராமத்திலே  நம்ம வேப்பமர தோப்பு  எண்ணெய்க்கடை  கோவாலு செட்டியார்  லாட்டரி சீட்டு  யாவாரம் செய்வாரே அவரு   எப்படியோ  பேசி  15  ரூபாய்க்கு  லாட்டரி சீட்டு என் தலைல கட்டி  நீ  லச்சாதிபதி யாவப்போறே எனக்கு கடன் கொடுப்பியா ன்னு கேட்டே  நானு  நிறைய  ரூபா இழந்துட்டேண்டா.  காயிதத்தாலே ஒருத்தன்  லச்சாதியாதியாக முடியாதுடா. வேர்வை சிந்த உழைக்கனும்டா.  அடுத்த தபா கேட்டபோது  செட்டியாரே  நீயே  கோடிஸ்வரனாயிடு  எனக்கு வாணாம்னுபுட்டேன். அந்த பதினைஞ்சு ரூவா  இருந்தா  ஆத்தங்கரை சிவன் கோவிலுலே  விளக்குக்கு அவ்ராண்டேயே  எண்ணெய்  வாங்கி ஊத்தியிருக்கலாம். 

நேரம்தாண்டா பொன்னு. எனக்கு இருக்கிற  நேரத்தை  உன்னை நினைச்சுட்டே  ஓட்டிடுவேன்.  ரெண்டுபேரும் மனசாலே நினைச்சா அதுவே போதும்டா. நீ எங்கேயோ நான் எங்கேயோ இருந்தா என்னா ? இப்போ  உட்டா  அப்புறம் எப்படா  பாக்கப்போறோம்? கிருஷ்ணனை நினைச்சுக்கோடா.  கூடவே இருக்கிறவன் அவன் தாண்டா.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...