Friday, February 7, 2020

VALLALAR




    146 வருஷங்களுக்கு  முன்  இன்று  ஜோதியில் கலந்தவர் 
                                               J K  SIVAN  


'நீ  என்  அப்பாஅல்லவா.   நான்  சொல்வதை கேட்டு அருள்வாயா?'' 

''என்ன  சொல்லுடா குழந்தே?"'
'' எல்லார் கிட்டேயும்,  எது கிட்டேயும்  நான்   இருக்கணும்'' உலகத்தில் எங்கே வேணாழும்  சுத்தணும். உன்னைப் பற்றி   உன் நல்ல குணத்தை பற்றி எடுத்து சொல்லணும். எங்கும்  சுத்தமான உன் சைவமார்கத்தை  விளக்கி எல்லோரும் அருள்ஜோதி பெற்று  வாழ்க்கையை சுகமாக அனுபவிக்கனும்.  நான்  ஏதாவது தப்பு பண்ணிடுவேன். அப்போ  என்னை மன்னிக்கணும். பொறுத்துக்கணும்..கடைசியா ஒண்ணு  கேக்கறேன். அப்பா, நான் எப்போவும் உன்னோடு சேர்ந்தே இருக்கணும்.  செய்வியா?'' இதை பாட்டாக பாடினார். இது தான் அந்த பாடல்:

''அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும்
செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே''.  


இப்படி நாம்  கடவுளை கேட்போமா?. ஒரு ஒல்லியான தேகம் கொண்ட அமைதி வடிவான வெள்ளை உடை  சந்நியாசி கேட்டார்.  இன்று  தைப்பூசம்.  


 இறைவனோடு தான் விரும்பியபடி  ஒன்றாக சேர்ந்தார்  ஆச்சர்யமான ஒரு  மனிதர் 30.1.1874 நள்ளிரவில் 146 வருஷங்களுக்கு முன்பு.   அவர் என்ன சொன்னார்?

அப்போது வெள்ளையன் ஆட்சி.   அந்த மடத்தில்  எல்லோரும்  கூடி இருந்தார்கள்.   அவர்  எப்போதும் ஒரு ஒற்றை அறையில் தான் இருப்பார். திடீரென்று அவர்  எழுந்து அவர்களைப்  பார்த்து 

 '' நான்  என் அறைக்குள் செல்கிறேன். யாரும் கதவைத் திறக்க முயற்சிக்க வேண்டாம்.   அரசாங்கம் என் விருப்பை மீறி கதவை உடைத்து திறந்தாலும் உள்ளே நான் இருக்கமாட்டேன். எல்லா உயிரிலும் கலந்திருப்பேன். எல்லா உயிரிடத்தும் காருண்யம் புரிய செய்வேன். இது என் முடிவு.'' என்று சொன்னவர் உள்ளே சென்று கதவை தாழிட்டுக்கொண்டார்.  உள்ளே சென்றவர் வெளியே வரவில்லை என சேதி கேட்டு தென்னாற்காடு வெள்ளைக்கார கலெக்டர் டாக்டர்கள் புடை சூழ கதவை திறந்து உள்ளேசென்றபோது அங்கே அழுகிய பிண நாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பச்சை கல்பூர வாசனை மணத்தது. ஜோதியுடன் தீபம் ஒன்று எரிந்துகொண்டிருந்தது.  இன்றும் அது எரிகிறது.

தென் ஆற்காடு  அரசாங்க  பதிவேடு  1874ல்   அந்த  தென்னாற்காடு வெள்ளைக்கார கலெக்டர்  W . பிரான்சிஸ்  ICS    என்ன எழுதியிருக்கிறான் தெரியுமா?     இன்றும் கல்வெட்டாக சுவரில் பதித்திருக்கிறார்கள்
''கடலூருக்கு தென்மேற்கில்  23 மைல்  தள்ளி விருத்தாசலம் சாலையில் ஒரு இடம் ராமலிங்க பரதேசி என்பவர் சம்பந்தப்பட்டது. ரொம்ப ஆச்சர்யமானவர். 1823ல் சாதாரண  வேளாள குடும்பத்தில் சிதம்பரம் தாலுகாவில் பிறந்தவர். சிறு பையனாக இருந்தபோதே  கவித்துவம்  மறுக்கமுடியாத  ஆச்சர்யமாக  அவரிடம் இருந்தது.  அவரை தெய்வமாக  அவரை பின்பற்று வோர் கொண்டாடுகிறார்கள்.  தெய்வீக பாட்டுகளை  எல்லாம் பழைய சைவ சமய  தெய்வ புனித  கவிஞர்கள்  போல் எழுதியவர். இதெல்லாம் வட ஆற்காடு,  மதராஸ் பக்கம் திருவொற்றியூர்  போல் இடங்களில்  அவர் எழுதினது.. அவரை பலர்  குருவாக, ஆசானாக ஏற்றனர். பல புனித  இடங்கள் எல்லாம்  சென்றுவிட்டு  பார்வதிபுரத்தை அடுத்த  கருங்குழி கிராமத்தில்  வாசம் செய்தார். உண்மையிலேயே  பிரபலமானவர். அவர் சீடர்களில் பலர்  அரசாங்க உயர் உத்யோகங்களில் இருந்த.  படித்தவர்கள் கூட அவரருகில் இருக்கவேண்டும் என்று கருங்குழியில் குடியேறியவர்கள்.  1872ல் பொதுமக்கள் அளித்த நன்கொடையால் பார்வதிபுரம் அருகே வடலூர் கிராமத்தில்  விசித்திரமான பத்து கோண வடிவில் மேலே ஒரு வட்ட கூரை  DOME வைத்து ஒரு  கோயில்  கட்டியவர். அங்கே ஏன் கட்டினார் என்றால் அங்கிருந்து  பார்த்தால் சிதம்பரம் நடராஜர் கோவிலின் நான்கு கோபுரங்கள் தெரியும்.   இந்த கட்டிட கோவிலில் வழிபாட்டுமுறைகள் வித்தியாசமானது. ராமலிங்க பரதேசி தனது பக்தர்களிடம்  இறந்தால் மீண்டும் பிறக்கலாம் என்று சொல்கிறார். எரிப்பதை காட்டிலும் இறந்த உடலை புதைப்பது நல்லது என்கிறார். எத்தனையோ பிராமணர்களும் வழக்கத்தை மீறி இவ்வாறு  புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.     வேறு கிராமங்களின் இறந்தவர்கள் உடல்கள் கூட வடலூருக்கு  கொண்டுவந்து புதைக்கப்பட்டிருக்கிறது.          

1874ல்  கருகுழியை அடுத்த மேட்டுக்குப்பம்  கிராமத்தில் ஒரு அறையில்  சமாதி அடையப்போகிறேன், த்யானத்தில் ஆழ்ந்துவிடப்போகிறேன் என்று சொல்லி விட்டு உள்ளே சென்று தன்னை பூட்டிக்கொண்டார்.    சீடர்களிடம் சிலகாலம் அந்த அறையை திறக்கவேண்டாம் என்று கட்டளையிட்டார்.    அந்த அறை  இன்றும் பூட்டப்பட்டே இருக்கிறது.        அவரது பக்தர்கள்  அவர் உள்ளே சென்று தனது இறைவனோடு இரண்டறக் கலந்து விட்டார்.  என்றேனும் மீண்டும் ஒருநாள்  வருவார்  என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள். .  அவரை பிறகு காணவில்லை.     எது எப்படி இருந்தாலும் அவர் சிறந்த கவிஞர், அவரது பாடல்கள் உயர்தரமானவை என்பதால் அச்சேறி வெளிவந்துள்ளன. அவரது சீடர்களுக்கு அவர் இட்ட    நல் வழி  காட்டுதல்கள் பின்பற்றப்பட்டு  வருகிறது.

''அருட்பெருஞ்ஜோதியை வேண்டி  அருள்பெற்றபடி  நான்  என்றும் அழியாத மரணமற்ற உடலை பெற்றுவிட்டேன்  ''

இப்படி தான்  கல்வெட்டில் இன்றும் காண்கிறது.  அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.  ஸ்ரீ ராமலிங்க அடிகள் வள்ளலார் ''அப்பாவை வேண்டி கேட்டதை பெற்றுவிட்டாரல்லவா?''



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...