சிட்டு குருவி சேதி J K SIVAN
எவ்வளவு குருவிகள், குறுக்கும் நெடுக்கும் விர்ரென்று பறந்து வரும். கிச்சு கிச்சு வென்று அவற்றின் சப்தம் காதுக்கு இனிமையாக இருக்கும். எதிரே ஜன்னல் கம்பியில் உட்கார்ந்து தலையை சாய்த்து அழகாக விழியை உருட்டி பார்க்கும். அதன் கலர் ரொம்ப அழகாக இருக்கும். பயமே கிடையாது.
அருகே வந்து தரையில் வீசிய பருப்புகள் பொரியை ஒவ்வொன்றாக கொத்தி தூக்கிக் கொண்டு பறக்கும். மீண்டும் வரும். சுறுசுறுப்பான சின்ன உடம்பு. ரெக்கை. கண்ட இடத்தில் கூடு காட்டும். பரணில் பித்தளை பாத்திரங்கள் இடுக்கில், பெட் ரூம் சரஸ்வதி படம் பின்னால், ஊஞ்சல் கம்பி மாட்டும் உத்தரத்தில் இடுக்கில், வாசலில் திண்ணை மேல் இருக்கும் மரப் பெட்டியோரத்தில், மின்சார மீட்டர் இருக்கும் மரப்பெட்டி கதவு திறந்திருந்தால் அதில் நிறைய வைக்கோல் செருகி அதில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும்.
சிறு குஞ்சுகள் மேலே கூட்டிலிருந்து விழுந்து எங்களால் காப்பாற்றப்படும், சில அகால மரணமடையும். பூனைகளை விரட்டுவது எனது முக்கிய வேலையாக இருந்தது. என் வீட்டுப்பக்கம் பூனை, குட்டியாக இருந்தால் கூட விரட்டுவேன். குருவின் மேல் அவ்வளவு அக்கறை.
நமது வாழ்க்கை முறை மாற மாற வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு வெற்றி இயலாத இனங்கள் மறைய ஆரம்பித்து விட்டன குருவி இனம் அதில் ஒன்று. குருவி பிடிக்கும், குருவிக்காரர்கள் என்ற பெயர் மறைந்து விட்டது. குறவர்கள் தான் இருக்கிறார்கள். பிடிப்பதற்கு குருவி இல்லை. சிட்டுக்குருவி லேகியம் விளம்பரமும் காணோம்.
கிராமங்களில் இன்னும் குருவிகள் இருப்பது கொஞ்சம் மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. வெளிநாடுகளில் குருவிகள் இன்னும் வளர்க்கிறார்கள்.
உலகில் வேகமாக மறைந்து போகும் பறவை இனத்தில் குருவி பெயர் இடம் பெற்றுவிட்டது. குருவி அன்பும் அறிவும் கொண்ட பறவை. மனிதர்களோடு இணைந்து வீட்டில் வாழ்ந்தவை. நகரங்களின் சுற்று சூழ்நிலை மாற்றம் பாவம் குருவியை தின்றுவிட்டது. குருவியின் வாழ்க்கை முறை தற்போதைய மனித வாழ்க்கை முறையோடு ஒன்று படவில்லை. காற்றோட்டமான ஜன்னல் இல்லை, மரங்கள் இல்லை, சப்தம் அதிகமாகி விட்டது. இயந்திரங்கள் ஓசை இடுகின் றது. கோல மாவு கூட அரிசி இல்லாமல் சுண்ணாம்பாக போய்விட்டதே. அதற்கு தின்ப தற்கு புழு பூச்சி இல்லையே. கொல்லைப் புறங்களை வீடுகள் இழந்த கான்க்ரீட் கட்டிடத்தில் குருவிக்கு என்ன வேலை. புல் தரை, மண்ணில் அதற்கு வேண்டிய ஆகாரம் நெளியும். கிடைக்கும். இப்போது தார் ரோட்டில் என்ன கிடைக்கும்? கூடு கட்ட இடமில்லாமல் குருவி வம்சம் எப்படி பெருகும்? டீசல், பெட்ரோல் புகை, மின்காந்த அலைகள், குருவியின் ஸ்வாசத்தை நிறுத்தி விட்டது. செல்போன் டவர்கள் குருவிக்கு எதிராக பூதாகார ராக்ஷசனாக அதை பூண்டோடு அழித்துவிட்டது.
சிட்டு குருவி சிட்டு குருவி சேதி தெரியுமா என்று அதை சேதி கேட்கப்போய் இப்போது அதன் சேதியே தெரியாமல் போய் விட்டதே. கிராமத்தில் இன்னும் கொஞ்சம் வைக்கோல் போர்கள் இருப்பதால் கூடு கட்ட வைக்கோல் கிடைத்து, மரங்களில் தோட்டங்களில் கூடு கட்டி, குஞ்சு பொறிக்க முடிகிறது.
கிராமங்களே மனிதனின் உற்ற நண்பன் சிட்டு குருவியை மறக்காதீர்கள்.
No comments:
Post a Comment