Sunday, February 2, 2020

HSSF2020



                  வேளச்சேரியில்  ஆறு நாள்  ஆனந்தமாக  
                                               J K   SIVAN 

















ஹிந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி இன்றோடு நிறைவு பெறுகிறது. 28.1.2020 அன்று துவங்கி கோலாகலமாக சென்னை நகரத்தையே ஒரு கலக்கு கலக்கி வேளச்சேரி தெருக்கள் போக்குவரத்தில் சிக்கி தவிக்கும்படியாக ஜன வெள்ளம் இந்த ஆறுநாள் பெருக்கெடுத்து கண்காட்சி திமிலோகப்பட்டது.

எனக்கு அளிக்கப்பட்ட ஸ்டால் U 9 கடைசி சில ஸ்டால்களில் ஒன்று. எனக்கு அடுத்து உணவு சந்தை. இதில் எனக்கு ரெண்டு வித அனுபவம். ஒன்று கண்காட்சிக்கு வந்தவர்கள் உணவை தேடி வந்தவர்கள் தான் என் ஸ்டால் இருக்கும் பக்கம் வந்தார்கள். வயிறு நிரம்பி என் ஸ்டால் பக்கம் வரும்போது அவர்கள் கவனம் அவர்கள் தின்று கொண்டுவரும் திண்பண்டங்களில், முக்கால்வாசி குல்ஃபீ kulfi, அல்லது குச்சி ஐஸ்க்ரீம் சூப்பிக்கொண்டா, சப்பிக்கொண்டா, ஏதோ ஒரு வார்த்தை, எப்படியாயினும் இந்த நிலையில் பக்தி யற்று அவர்களை எச்சிலோடு நான் என் கிருஷ்ணன் புத்தகங்களை தொட விடவில்லை.

இரண்டாவது, U வரிசை இருப்பதே அநேகருக்கு தெரியவில்லை. என் வரிசைக்கு அடையாளமே இல்லை. ஒரு சில ஸ்டால் பெற்றவர்கள் நாங்களே எங்கள் ஸ்டால் வரிசை எண்களை எழுதி வைத்தோம். அவரவர் பேனாவால் காகிதத்தில் எழுதி ஒட்டி வைத்திருந்தது பலர் அறிய உதவியது.
அப்படியும் விடாப்பிடியாக என்னைத் தேடி வந்தவர்கள் தாங்கள் தேடி அலைந்த அனுபவத்தை சொல்லும்போது அவர்களது அக்கறை எனக்கு புரிந்தது. மிக மகிழ்ச்சியோடு வரவேற்றேன். புத்தகங்கள் மஹா பெரியவா காலண்டர் எல்லாம் கொடுத்தேன். எனக்கு நேர் முதுகுக்கு பின்னால் ஏதோ ஒரு வரிசையில் ஒரு சங்கு வியாபாரி போல் இருக்கிறது. காலையிலிருந்து இரவு வரை சங்கு சத்தம் காதை செவிடாக்கியது. இப்படியே இன்னும் சில நாள் போனால் உண்மையிலேயே என் காதில் அந்த சத்தம் செவிடன் காதில் ஊதிய சங்கு எனும் பழமொழியை நிரூபணம் செயதிருக்கும். நல்லவேளை இன்று சாயந்திரத்தோடு நான் சங்கநாதத்திலிருந்து விடுபடுவேன்.

யாரோ U 9ல் ஸ்படிக லிங்கம் கிடைக்கும் என்று சொல்லி என்னிடம் அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். நிறையபேர் என்னை ஸ்படிக லிங்கம் கேட்டபோது இங்கே ஸ்படிக லிங்கம் கிடையாது. சிவன் தான் இருக்கிறேன் என்று சொல்லி அனுப்பவே சரியாக இருந்தது. நிறைய பேர் என்னை பார்த்து J.K . SIVAN நீங்கள் தானே, நீங்கள் தானே FACEBOOK ல் எழுதுபவர் என்று கேட்கும் போதெல்லாம் நாமும் ஏதோ சில உள்ளங்களை திருப்தி படுத்துகிறோமே என்று பெருமையாக இருந்தது.

ஆன்மீக செம்மல்கள் ஸ்ரீ கோபாலவல்லி தாசர், ஸ்ரீ பம்மல் பாலாஜி மற்றும் பலர் என்னுடைய ஸ்டாலுக்கு விஜயம் செய்தது ஒரு மறக்கமுடியாத அனுபவம்.
நிறைய முகநூல் அன்பர்கள், வாசகர்கள் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். சிலர் இன்னும் அனுப்பவில்லை, சிலர் அனுப்பினார்கள். ஆன்மீக ப்ரவசன கர்த்தர் ஸ்ரீ உ.வே. கோபாலவல்லி தாசர், ஸ்ரீ பம்மல் பாலாஜி ஆகியோர் வந்து வாழ்த்தியது என்னோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டது நான் பெருமைப்படும் ஒரு விஷயம்.

நண்பர் ஸ்ரீ ஈசனேசன் ஸ்ரீனிவாசன் 1.2.20 அடுத்த வரிசை V பகுதியில் திருவாசகத்துக்கு தான் எழுதிய உரையை தனது சிவ நேயப் பேரவை ஸ்டாலில் வெளியிட்டபோது அங்கே ஒரு சில நிமிஷங்கள் கலந்துகொண்டேன்.


காலை 9மணி முதல் இரவு 8.45வரை இந்த ஐந்து ஆறு நாட்கள் நேரம் போவதே தெரியவில்லை. முடிந்தவர்கள் இன்று தவறாமல் 3.2.20 கண்காட்சியை கண்டு மகிழவும். மிகச் சிறந்த முறையில் முழு முயற்சியோடு ஈடுபட்டு அற்புதமாக நடத்தப்படும் கண்காட்சி. இது போல் பார்ப்பது எளிதல்ல. அடிக்கடி நேருவதும் அல்ல. என் நண்பர்கள் என்னை U 9ல் சந்திக்கலாம். மாலை 8 மணிவரை இருப்பேன்

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...