என் போன்ற தாத்தாக்களே , பாட்டிகளே , J K SIVAN
ஒரு நிமிஷம்....
நில்லுங்கள் ஒரு நிமிஷம். இதைக் கேளுங்கள். என் மேல் கோபம் வேண்டாம்.
இன்னும் சில நாட்கள் தான் நமக்கு இருக்கிறது. இருப்பதை எல்லாம் எவருக்கு சேர்த்து வைக்கிறீர்கள்?. உங்களுக்கு பிடித்ததை இப்போதே பெற்று அனுபவியுங்கள். நன்றாக திருப்தியாக செலவழியுங்கள். போகும்போது அலெக்சாண்டர் காட்டிய மாதிரி வெறுங் கையோடு தான் போகப்போகிறோம். எதற்கு கஞ்சத்தனம்? ஏழை எளியோர்க்கு தான தர்மம் செய்யுங்கள் .
நம்மை யார் தூற்றினாலும் போற்றினாலும் மண்ணில் புதைத்தபின் தீயில் எரித்தபின் சாம்பலான நமக்கு காதில் விழப்போவதில்லை. அப்புறம் எந்த வகையிலும் நாம் சேர்த்த பணத்தை அனுபவிக்கப் போவ தில்லை. ஆகவே தான் இப்போதே.
பிள்ளை குட்டியெல்லாம் வளர்த்து, படிக்க வைத்து, வேலைக் கனுப்பி, கல்யாணம் பண்ணி அனுப்பியாயிற்று. இனி பறவைகள் தானே பறக்கும். நம் துணை தேவையில்லை. தேடாது. உங்களாலான பரிசுகள், பக்ஷணங் கள் ஆசையோடு கொடுங்கள். அது போதும். மற்றதெல்லாம் உங்கள் செலவுக்கு உதவட்டும். அவர்களை தொந்தரவு செய்யாமல் வாழவதே பெரிய பாக்யம்.
பணத்துக்காக உடல் நலத்தை பாழ் பண்ணிக் கொள்ளாதீர்கள். அளவுக்கு மீறி உடலை வருத்தி உழைக்க தேவையே இல்லை. உடல் பாதிக்கப்பட்டால் பணம் உதவப் போவதில்லை. வியாதியோடு பணமும் நம்மை புறக்கணிக்கும்.
டால்ஸ்டாய் கதையில் சூரியஉதயத்திலிருந்து அஸ்தமனம் வரை ஓடி முடித்த ஐவான் அத்தனை நிலமும் அவனுக்கு வரும் என்று வேக வேகமாக ஓடி கடைசியில் களைத்து விழுந்து இறந்து ஆறடி மண்ணே அவன் அடைந்தது. டால்ஸ்டாய் எழுதியது வெறும் கதைக்காக அல்ல. நாம் புரிந்து கொள்வதற்கான எச்சரிக்கை.
ஏதோ சிக்கனமாக ஒரு வேளை உட்கார்ந்து சாப்பிட`, தங்க, தலைக்கு மேல் நிழல் இருந்தால் போதும் . ஆரோக்யமான உடல் வேண்டுமானால் நிம்மதியான, கவலையற்ற, ஆசைகள் இல்லாத மனம் அவசியம். தேவைக்கு மேல் பணம் வேண்டாம். ஒவ்வொரு குடும்பத்திலும் வித விதமான சிக்கல்கள் உண்டு. ஒருவரோடு ஒருவரை ஒப்பிட வேண்டாம். அவரவர் குடும்ப சூழ்நிலைகள், வசதிகள், வெவ்வேறு. அவர்கள் சந்தோஷமாக இருந்தால், எல்லோரிடமும் நன்றாக நேசமாக பழகினால், ஆரோக்கியமாக இருந்தால் அவர்களை போல் நாமும் ஆகவேண்டும் என்று வேண்டுமானால் போட்டி போடலாம்.
இந்த உலகில் ஒவ்வொரு கணமும் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதற்கேற்றாற்போல் நம்மை மாற்றிக் கொள்ள பழகிக் கொள்ளவேண்டும். இழந்ததை நினைத்து வருந்துவது இருக்கும் உடல்நிலையை இன்னும் பாதிக்குமே தவிர ஒரு உபயோகமும் இல்லை. நமது சந்தோஷம், திருப்தி எல்லாம் நாமே உருவாக்கிக் கொள்வது தான். நாலு பேரோடு நன்றாக பழகி பேசி நல்லதையே நினைத்தால் உடலில் நோய் வராது. நன்றாக பொழுதும் போகும். துக்கத்தோடு, சோகத்தோடு, திருப்தியோடு கழிந்த ஒரு நாள் நஷ்டமான நாள். சந்தோஷத்தோடு, மகிழ்ச்சியோடு கழிந்த நாள் ஒரு லாபகரமான நாள் அல்லவா.
இயற்கையை அனுபவிக்க ரசிக்க தெரிந்து கொள்ளுங்கள். விடியற்காலை பறவைகளின் குரல்கள் , பூத்துக் குலுங்கும் செடி கொடிகள், மரங்கள், சூரிய ஒளியின் கதகதப்பு. காற்றில் தலைவிரித்து அசைந்து ஆடும் மரங்கள், பறவைகள் வாயில்லாத மிருகங்களின் அன்பான பார்வை, வயிற்றை நிரப்ப ஏதோ கிடைத்த உணவு, குளிக்க, குடிக்க சுத்தமான குளிர்ந்த நீர். காணும் யாவிலும் கிருஷ்ணன் தோற்றம், நினைவு, அவன் குழலோசை மனதில் கேட்பது இதெல்லாம் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் சந்தோஷமாக வைக்க க்கூடியவை. நான் இதெல்லாம் ரசித்து அனுபவித்து செயல்படுத்துபவன் என்ற உரிமையோடு எழுதினேன். யாரோ எழுதியதை காப்பி அடித்து எழுத அவசியமில்லையே.
No comments:
Post a Comment