'இடையன் எறிந்த மரம்' J K SIVAN
தமிழ் தாத்தாவுக்கும் எனக்கும் ரொம்ப தூரம். உறவில் கூட. நான் பிறப்பதற்கு ரெண்டு வருஷம் முன்பே அவர் 1937ல் திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தில் வருஷந்தோறும் நடைபெறும் ஸ்ரீ ஆதி குமரகுருபர ஸ்வாமிகள் தின வைபவத்துக்கு சென்றபோது ஒரு சம்பவம். இன்று படித்தேன்.
ஒருநாள் திருப்பனந்தாள் மடத்தில் மாடுகளைப் பார்த்துக்கொள்ளும் , பராமரிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு இடையரோடு உ.வே. சா. பேசினார். இடையர் அனுபவசாலி. மாடுகளைப் பற்றிய அபூர்வ விஷயங்கள் தெரிந்தவர்.
''சாமி, எனக்கு இந்த மடத்தில் ஒரு குறைவு மில்லை. மாடுங்களை பார்த்துக்கறேன். சந்தோசமாக இருக்கிறேன். ''
பேச்சுவாக்கில் எத்தனை வகை மாடுகள், முரட்டு, கொண்டி மாடுகளை எப்படி மடக்கிப் பிடிப்பது, தேவையான கயிறு கொம்பு வகையறா, கயிற்றில் சுருக்கு போடும் விதங்கள், மாட்டை பார்த்து போடவேண்டிய சத்தம் எல்லாமே மூச்சு விடாமல் விவரித்தார். தோளில் போட்டிருந்த
கயிற்றில் சில சுருக்கு விதங்களை சட்டென்று போட்டு காட்டினார். நல்லவேளை உவேசா கழுத்தில் போட்டு இழுக்கவில்லை.
தமிழ்த்தாத்தாவுக்கு இதெல்லாம் புதுசு, ஆச்சர்யமான விஷயங்கள். அவர் எங்கே
மாடுகளோடு பழகுபவர், வீட்டில் பசுவே வைத்துக்கொள்ளாதவர். இலக்கியத்தில் பசுக்களை, கோனாரை, இடையர்களை நன்றாக தெரியும். இடையர் வகுப்பில் பேசும் சில பழமொழிகளை கூறினார் அந்த வயதானவர்.
"எங்கள் ஜாதியிலே வாழ்த்துச் சொல்லும் போது, 'நல்லெருமை நாகு, (நாகு என்றால் பெண் எருமை. நாகம்மாள், நாகலக்ஷ்மிகள் என்னை கோபிக்க கூடாது) . நற்பசு சேங்கன்று, ஆடு கிடாய், அடியாள் பெண்பெற' என்று சொல்வோம். எருமை கிடாரிக் கன்றையும், பசு காளைக்கன்றையும், ஆடு கிடாய்க் குட்டியையும், மனைவி பெண் குழந்தையையும் பெற வேண்டுமென்று பெண்களை வாழ்த்து வார்கள்.
ஆட்டிடையர்கள் வேறு விதத்தில் அனுபவசாலிகள். பையன்கள் ஆடுகளை மேய்ப்பது துரத்துவது எப்படி என்று நடித்துக் காட்டினார்.
"ஆடுமாடுகளை நாங்கள் காட்டுப் புறங்களுக்கு ஓட்டிக்கொண்டு போவோம். அங்கே மரங்களின் கிளைகளை எங்கள் வாளால் முழுதும் மரத்திலிருந்து வெட்டாமல் ஒடித்து வெட்டிச் சாய்ப்போம். து கிளை முதுவதும் துண்டித்து விழாமல் முறிந்து தொங்கும். ஆடுகள் அதில் முன்னங்காலை வைத்துக்கொண்டு தழை களைத் தின்னும். அந்தக் கிளை அடியோடு அறாமலும், மற்றக் கிளைகளைப்போல மரத்தோடு முழுவதும் சேராமலும் இருக்கும்"
'இடையர்கள் ஆடு மாடுகளுக்கு உணவு அளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள்' என இடையர் சொன்னபோது உ.வே. சா. வுக்கு ப் பழந்தமிழ் நூல்களிலுள்ள செய்யுட்கள் ஞாபகத்திற்கு வந்தன. ஒரு காட்சி மனதில் தோன்றியது.
நம் மை நன்றாக அறிந்து பழகினவர் ஒருவர் நம்மிடம் கடனாக பணம் கேட்கிறார். கட்டாயம் தருவோம் என எதிர்பார்க்கிறார்;. நட்பை உத்தே சித்து, நாம் அவருக்கு உதவ முயற்சிப்பதாக தலையாட்டு கிறோம். ஆனால், அவர் கேட்கும் அளவு பணம் நம்மிடம் இல்லை என்று தெரியும். தாக்ஷண்யம் அவர் மனம் கோணக்கூடாதே என்று வாக்குக் கொடுத்து விட்டோம்; அவருக்கு ஒரு நம்பிக்கையை உண்டாகி விட்டோம். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் தத்தளிக்கிறோம். "முடியாது" என்று கடைசியில் சொல்வது நியாயமா?
இந்த மாதிரியான தர்ம சங்கட நிலையை புலவர் விளக்குகிறார் தெரியுமா/ 'இடையன் எறிந்த மரம் போல' என்கிறார். உபகாரத்தை மறுப்பதற்கும் இல்லை; செய்வதற்கும் இல்லை. இடையர் மரத்தை முழுதும் வெட்டவுமில்லை, வெட்டாமலும் இல்லை. பதினெண்கீழ்கணக்கு நூலில் பழமொழி என்பதிலுள்ள ஒரு செய்யுள் என்ன சொல்கிறது தெரியுமா:
*"அடையப் பயின்றாசொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின்-படைபெற்
றடைய அமாத்தகட் பைந்தொடி அகஃதால்
இடைய னெரிந்த மரம்."
-- வேண்டியதை கொடுக்க வழியில்லாமல் திரிசங்கு சொர்க்கமாக, இல்லை என்றும் சொல்லாமல், கொடுக்கவும் முடியாமல் உள்ள நிலையை இடையர் அரைகுறையாக வெட்டிய மரக் கிளை போல்'' என்கிறார்.
''முழுசாகவே கிளையை வெட்டினால் என்ன?'' எதற்கு பாதி வெட்டியும் வெட்டாமலும் ஒடிக்க வேண்டும்? என்று இடையூறை உ.வே. சா கேட்காமலா இருப்பார் ?
"அப்படி வெட்டினால் அந்த கிளை அப்பால் உபயோகமில்லாமற் போய்விடும். நாங்கள் வெட்டும் கிளையோ, மரத்தோடு ஒட்டிக்கொண் டிருப்பதால் மறுபடியும் தழைக்கும்."
அவர் மனதில் சீவக சிந்தாமணியில் ஒரு அடி நினைவுக்கு வந்தது:
" இடைமகன் கொன்றவின்னா மரத்தினேன்"(1914) அந்த காட்சி இதோ:''சீவகன் தன்னுடைய தாயைப் பார்த்துத் தன் நிலையை, "நான் என் தந்தை மரணமடையப் பின் பிறந்தேன்; அன்றியும் நீ துன்பத்தில் தங்கவும் நட்புடையவர்கள் மனம் வருந்தவும் இடைமகன் கொன்ற இன்னா மரம் போல இருந்தேன்" என்னும் சொற்களால் விளக்குகிறான். நச்சினார்க்கினி யர் அந்த உவமையை விரித்து, 'உயிருடன் இருந் தேனாய்ப் பகையை வென்றேனுமல்லேன், உயிரை நீத்தேனுமல்லே னென்று கருதி மரத்தினேனென் றான்' என்று விசேஷவுரை எழுதுகின்றார். அவ் வுரை இடையன் கொன்ற மரத்தின் தன்மையை நன்கு விளக்குகிறது.
இப்படி இடையர்கள் செய்வதைத்தான் . இலக் கியங்களில் இடையர்களைப்பற்றி வருணிக்கும் இடங்களில், 'ஒடியெறிதல்' என வரும். 'ஒடிய எறிதல்' என்பதே அவ்வாறு விகாரப்பட்டு வந்தது. இடையர்கள் ஒடிய எறிவார்களே அன்றி அற்று விழும்படியாக எறியார் என்பதை அறிவுறுத்தியது.
''அவ்வளவு ஜாக்கிரதையாக வெட்டுவது கஷ்டமல்லவா? - உ. வே. சா.
"பழமொழியா? என்ன அது?"
"'இடையன் வெட்டு அறாவெட்டு' '' மரத்தை விட்டு கிளை அறுந்து விழாமல் வெட்டும் வெட்டு. அது எங்கள் கைப்பழக்கம் பற்றி சொல்கிறது. இந்த பழமொழி யாருக்கு தெரியும். எவ்வளவு சுலபமா கவும் சுருக்கமாகவும் இடையரது கைத்திறமை யையும், மற்றவர்கள் வெட்டும் வெட்டிற்கும் இடையர் வெட்டிற்கும் உள்ள வித்தியாசம் வேற்றுமையையும் காட்டுகிறது.
ஆழ்வார்களும் இடையர் மரம் வெட்டும் அழகு பற்றி சொல்லாமல் விடவில்லை. பெரிய திருமொழியில் ஒரு பாசுரம்.
*"படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாலி மணாளா
இடைய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற னருளே"
(பெரிய திருமொழி)
ஆழ்வார் திருவாலி யில் நீலோத்பல மலரணிந்த பெருமாள் திருவருளைப் பெறவில்லையே என்ற ஏக்கத்தால் மனம் வாடியும், அவன் அருள் பெறுவோமென்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக்கொண்டும் நிற்கும், இருவித நிலையை ''இடையன் எறிந்த மரத்தை' ப்போல என்று உவமையாக்கி மேலே கண்ட பாசுரத்தில் பாடுகிறார்.
No comments:
Post a Comment