திருப்பதி வேங்கடவன் ஆலயம் ஒரு அதிசய களஞ்சியம். தெய்வீகம், செல்வம் இரண்டிலும் அபரிமிதமாக கொழிக்கும் ஸ்தலம். ஏழு மலைகள் ஒன்று சேர்ந்தது. சேஷாத்திரி, நீலாத்ரி, கருடாத்ரி, அஞ்சனாத்ரி, ரிஷபாத்ரி, நாராயணாத்ரி, வெங்கடாத்ரி என்று அவற்றுக்கு பெயர்.
திருப்பதி திருமலை நாராயணன் தனது வைகுண்டத்துக்கு அடுத்ததாக பூமியில் தேடிக்கொண்ட இடம். இந்த மலைகள் அமைந்திருக்கின்ற விதமே படுத்துக்கொண்டிருக்கும் நாராயணனின் முகத்தை காட்டுகிறது. படம் இணைத்துள்ளேன். பாருங்கள்.
சிலா தோரணம் எனும் பாறைகளின் தோரணவாயில் இயற்கையாக அமைந்துள்ளது.
ஆலய நுழைவாயிலில் ஒரு கடப்பாரை மாதிரி ஆயுதம் சுவற்றில் காட்சி பொருளாக இருக்கிறதே பார்த்ததுண்டா? அது தான் அனந்தாழ்வான் எனும் பக்தன் பெருமாளுக்கு நந்தவனம் அமைக்க மண் தோண்டி உபயோகித்த ஆயுதம்.
சிறுவனாக இருந்த வேங்கடேசனை முகவாய் கட்டையில் தாக்கியதால் காயம், எரிச்சல், ரத்தம் வழிவது அடங்க குளிர்ச்சியாக சந்தனத்தை பாலாஜியின் முகவாயில் இன்றும் அப்புகிறார்கள்.
வெங்கடாசலபதி சிலையாக நின்றாலும் அவரது தலைமுடி உண்மையானதாம் . மிருதுவாக பட்டு மாதிரி இருக்கிறதாம். சடை பிடிக்கவில்லையாம். ஒரு தடவை ஒரு ஆடு மேய்ப்பவன் மண்டையில் அடித்தபோது தலையில் ஒரு சில்லு பெயர்ந்து முடியோடு விழுந்துவிட்டது. பிறகு அந்த இடத்தில் முடியே இல்லாமல் வழுக்கையாக இருந்தது. ஒரு கந்தர்வி, நீளாதேவி என்பவள் மேலே பறந்து செல்லும்போது வெங்கடேசனின் அழகை ரசிக்கிறாள். அவள் கவனம் அவன் தலையில் சென்றது.
''அடாடா எவ்வளவு அழகான முகம் கொண்டவன், இவனுக்கு போய் இப்படி ஒரு வழுக்கையா? உடனே தனது தலைமுடியை வெட்டி அவன் தலையில் அப்பி வழுக்கையை நிரப்பினாள். அவளது அழகிய முடி அவன் தலையில் கூடி, அவன் அழகுக்கு அழகூட்டியது. முதல் முதலாக தலையில் முடி பயிர் செய்து (HAIR PLANTATAION ) கொண்டவர் பாலாஜி தான்.
''ஏய் நீளாதேவி, எனக்காக உன் அழகிய கூந்தலை சிதைத்துக் கொண்டாயே. இதோ பார், இன்றுமுதல் என்னை காண வருகின்ற பக்தர்கள் தங்கள் முடியை உனக்காக இங்கே கொடுப்பார்கள்'' என்கிறார். அன்று முதல் திருப்பதி மொட்டை வழக்கத்துக்கு வந்தது. உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? முடி காணிக்கை மூலம் வருஷம் 250-300 கோடி ரூபாய் வருமானம் பெருமாளுக்கு.
திருப்பதி பாலாஜி சிலைக்கு தினமும் பச்சை கற்பூரம் தடவுகிறார்களே. அதை வழக்கமாக கருங்கல் சிலையில் தடவினால் வெடிப்பு விடும். ஆனால் வெங்கடேச பெருமாள் சிலைக்கு அதனால் எந்த தொந்தரவும் இல்லை.
ஆரம்ப காலத்தில், ஆயிரம் வருஷங்களுக்கு முன்னர், பாலாஜிக்கு எதிரே களிமண் அகல் விளக்கு தான் எரிந்து கொண்டிருந்தது. இன்றும் அகல் விளக்கு தீபம் முதலில் ஏற்றின பிறகே மற்ற ஆராதனைகள், வழிபாடுகள்.
அன்றாடம் திருமலை பாலாஜி வெங்கடேஸ்வரனுக்கு புஷ்பங்கள், பால், நெய் , தயார், வில்வ, வாழை இலைகள், வெண்ணை ஆகியவை 22 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஒரு ரகசிய கிராமத்திலிருந்து தான் வருகிறது. அந்த ஊர்க் காரர்களை தவிர வேறு யாரும் அந்த சேவையில் பங்கேற்க முடியாது.
நமக்கு உடல் சூடு 98.4 F (FAHRENHEIT டிகிரி என்று தானே தெரியும். தெர்மா மீட்டர் சொல்கிறதி அது தான் நார்மல் என்று. பாலாஜிக்கு நார்மல் உடல் உஷ்ண நிலை எவ்வளவு தெரியுமா? எப்போதும் 110 டிகிரி F. இந்த சூட்டில் நாம் வெந்து சாம்பலாகிவிடுவோம். இத்தனைக்கும் அவர் நிற்கிற இடம் 3000 அடி உயரத்தில். சில்லென்று குளிர்ச்சியாக இருக்கும் இடத்திலேயே இத்தனை சூடா? விடிகாலையில் 4.30 மணிக்கு சில்லென்று நீரில், பாலில், திரவியங்களோடு அபிஷேகம் வேறே. அப்படியும் வியர்க்கிறது அவருக் கு. பட்டு வஸ்த்ரத்தால் துடைத்து விடுகிறார்கள். வியாழக்கிழமைகளில் ஆபரணங்களை கழற்றி அபிஷேகம் செய்யும் முன்பு தொட்டால் உடம்பில் கதகதப்பு. கொடுத்து வைத்த பட்டாச்சார்யர்கள் சொல்வது இது. நாம் எந்த ஜென்மத்தில் அவரைத் தொடுவது?
திருமலை ஆலய மலைகளின் நுழைவு அமைப்பு தோரணம் மாதிரி என்று மேலே சொன்னேனே. ஒரு அதிசயம் இது. தோரண வாயில் உயரம் தான் மேலே ஆலய கோபுர உயரமும். இது அதிசயம் இல்லையா?
கருடாத்ரி மலையில் இன்னொரு அதிசயம் காத்திருக்கிறது. இயற்கையாக ஒரு பாறையின் முகப்பு கழுகு முகம் போல காணப்படுகிறது. கருடன் வெங்கடேஸ்வரனான நாராயணனின் வாஹனம் கருடன் அல்லவா?
ஹிந்துக்களுக்கும் அவர்கள் ஆலயங்கள், விக்ரஹங்களுக்கும் எவ்வளவு கொடுமைகள் நடந்திருக்கிறது இது வரை? 1800ல் பன்னிரண்டு வருஷ காலம் திருப்பதி கோவில் மூடப்பட்டு கிடந்தது. கோவிலில் அக்கிரமம் செய்தவர்கள் என்று 12 பேரை ஒரு ராஜா கொன்று அவர்கள் சடலங்களை கோவில் சுவர்களில் தொங்கவிட்டான். கோவில் மூடி இருந்த காலத்தில் விமானத்தில் இருக்கும் வேங்கடேஸ்வரர் தான் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
வேங்கடேஸ்வரனின் பின் புறம் எப்போதும் ஏன் ஈரமாகவே இருக்கிறது? பலமுறை துடைத்து பார்த்தும் ஈரம் காய்வதில்லை. ஸ்வாமியின் பின் பக்கம் காது வைத்து கேட்டால் ஓ வென்று அலை சப்தம் கேட்கிறதாம்? என்ன சமுத்திரம்? ஒருவேளை பாற்கடலோ?
கர்ப கிரகத்தில் நடுவில் வேங்கடேஸ்வரன் நிற்பது போல் தோன்றினாலும் அவர் கர்பகிரஹத்தில் நடுவில் நிற்கவில்லை. வடக்கு மூலையில் தான் அங்கே நிற்கிறார். கர்பகிரஹத்தின் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இது தெரியுமாம்.
திருப்பதி லட்டு செய்யும் முறை அரசாங்க ஏட்டில் பதிவு செய்யப்பட்டது. நிறைய டூப்ளிகேட் லட்டு தயாரிப்பாளர்கள் திருப்பதி லட்டு என்று வேறு எதையெல்லாமோ செய்து பக்தர்களை ஏய்க்கி றார்களே ளே அதை தடுக்க இந்த வழி. ஒரு நாளைக்கு ரெண்டு லக்ஷம் லட்டுக்கு மேல் தேவஸ்தான லட்டு விநியோகம் ஆகிறதே. ஒவ்வொரு லட்டுவும் 100 கிராம் எடை. உலகில் எங்கே இது சாத்தியம்?
அடேயப்பா, ஆண்டுக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் லட்டு விற்பனை வருமானம் வேறு யாருக்கு கிடைக்கும். வேங்கடேசன் அபூர்வ, அதிசய கடவுள் ஆச்சே.
திருப்பதி பாலாஜிக்கு அர்ச்சிக்கப்பட்ட மலர்கள் அவருக்கு பின் புறம் தூக்கி எறியப்படுகிறது. அங்கு ஒரு நீர் வீழ்ச்சி இருக்கிறது. அதில் இந்த பூக்கள் விழுந்து விடுகிறது. அர்ச்சகர்கள் யாரும் அதை பார்க்கக் கூடாது. நீரில் மிதந்து அவை திருப்பதிக்கு 20 கி.மீ. தூரத்தில் வெற்பேடு எனும் கிராமத்தில் சேர்கிறது.
பாலாஜியின் மார்பில் லட்சுமி தேவி உருவம் உள்ளது. வியாழன் அன்று எல்லா ஆபரணங்களையும் களைந்து நிஜ ரூப தர்சனம் நடைபெறும். அப்போது அவர் மேல் வெண்மையாக ஒரு கலவையை பூசுவார்கள். அது காய்ந்துவிடும். அதை எடுத்து பார்த் தால் அதில் லட்சுமி தேவியின் உருவம் பதிந்திருக்கும். அதை தேவஸ்தானம் விற்பனை செயது விடுகிறது.
தெரிந்தது கொஞ்சம். தெரியாதது இன்னும் எவ்வளவோ? ரகசியங்கள் அதிசயங்கள் போதித்தவர் ஸ்ரீ வேங்கடேச பெருமாள்..
No comments:
Post a Comment