Thursday, February 13, 2020

RAMANUJA




வைணவ மஹான்கள்  J K SIVAN
ஸ்ரீ  ராமாநுஜர்  
                                                                     

 


 வாக்கு மீறினால் தண்டனை என்ன தெரியுமா?

ஆயிரம்   வருஷங்களுக்கு   முன்பு அப்போதிருந்த   தமிழ்  உலகமே  வியந்தது. ராமனுஜரின் அபூர்வ சக்தியும் புகழும்  எங்கும் பரவிய து.  இப்போது போல்  வேகமாக பத்திரிகைகள், வீடியோ, டிவி,  வாட்ஸாப்ப்   முகநூல்  ப்ளாக்  blog  மூலமாக  அல்லவே  அல்ல.  அங்கங்கே  செல்லும் அவரை  சந்தித்த பிரயாணிகள்  மூலம்,  ஸ்ரீ ரங்கத்தில் இருந்த யமுனாச்சார்யாரின் சிஷ்யர்கள்  அவரை அங்கே வருகை தர வேண்டினார்கள்.

''அப்பா,  வரதராஜா, உன்னை விட்டு  நீ ஸ்ரீ ரங்கநாதனாக  இருக்கும் ஸ்ரீ ரங்கம்  போவதற்கு  நான் உன்  உத்தரவுக்கு  காத்திருக்கிறேன். நான் செல்லலாமா?. நீ அனுமதிப்பாயா?'

 காஞ்சி வரதராஜன் முன் நின்று ராமானுஜர்  அனுமதி கேட்கிறார்.  தீப ஒளியில் மலர் மாலைகள்  அணிந்து, வரதராஜனும் அவரும் மட்டுமே அங்கே.   கர்ப்பகிரஹத்துக்கு வெளியே  ராமானுஜர் தனது கேள்விக்கு பதிலுக்காக காத்திருக்கிறார். 

''அப்படியே செய்'' என்று வரதராஜன் அருளினான் .  

ராமானுஜர் காஞ்சியை விட்டு திருவரங்கம் ஏகினார்.  கடமை அங்கே அழைத்ததே. ஸ்ரீ ரங்கம் அடைந்த மறுகணம் முதல் வேத வேதாந்த, ஆன்மீக சாஸ்திரங்கள் சொல்வதை எல்லாம் ஒன்றுவிடாமல் அலசினார்.  மகா பூரணரின் அனுக்ரஹம் இருந்தது. அவர்  யமுனாச் சாரியாரின்  பிரதம  சிஷ்யர் அல்லவா? மகா பூர்ணரின் உதவியோடு,  உபதேசத்தோடு, சாஸ்திர ஞானத்தில் தேர்ந்தார்.  நியாச தத்வம், கீதார்த்தசங்க்ரஹம் , சித்தி த்ரயம், பிரம்ம சூத்ரம், பாஞ்ச ராத்ரம், அனைத்தும் அத்துபடி ஆயிற்று.
''ராமானுஜா, நீ  கோஷ்டி பூரணரை  சந்திக்கவேண்டும். சென்று  அவரிடம்  ஸ்ரீ வைஷ்ணவ மந்திர உபதேசம் பெற்றுவா. என்று   அவருக்குள் ரங்கநாதன்  உத்தரவிட்டான். '  

''கோஷ்டி பூரணர்  எனும் திருக்கோட்டியூர்  நம்பிகள் ஏனோ அவ்வளவு உயர்ந்த மந்த்ரத்தை ஒரு புது முகத்திற்கு உபதேசிக்க தயங்கினார்.  பதினெட்டு முறை அவரை யாசித்தும் பயனில்லை. கண்கள் பனிக்க, அவரது கருணைக்கு   ராமானுஜர் வேண்டி கடைசியில்,

''இதோபார்  ராமானுஜா, எனக்கு நீ ஒரு சத்யம்  பண்ணவேண்டும் - நான் உனக்கு உபதேசிக் கும் இந்த  பரம ரகசியம் வெளியே எவர்  காதுக்கும் எட்டக்கூடாது.   வெளியே  பரவக்கூடாது.   அவ்வாறு செய்ய மாட்டேன் என்று  நீ சத்யம் செய்தால் அந்த  மந்த்ரோப தேசம்  செய்கிறேன்.. இந்த மந்த்ரம் சர்வ சக்தி வாய்ந்தது. இதை உச்சரிப்பவன் மோக்ஷம் அடைவான்' என்றார் கோஷ்டி பூர்ணர்.   கைகளை கூப்பி,  தலை வணங்கி  தண்டனிட்டு  அதற்கு  கட்டுப்பட்டு ராமானுஜர்  திருக்கோட்டியூர் நம்பிகளிடம்  உபதேசம் பெற்றார்.

திருக்கோஷ்டியூரை  விட்டு ராமாநுஜர் வெளியேறு முன்பே, அவரை ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்தது. ''சுவாமி  உங்களுக்கு  கோஷ்டி பூர்ணர்  ஏதோ மோக்ஷம் அடையும் மந்திரம் உபதேசித்தாராமே, எங்களுக்கும் அதை தாங்கள் உபதேசித்தருள வேண்டும் ''     என்று அவர்கள் வேண்ட   ராமானுஜரின்  பரந்த  தாராளமான, கருணை பொங்கும்   இதயம்  இளகியது. மனம்  இணங்கியது.   


''நீங்கள்  நேராக யார் யாருக்கு மோக்ஷம்  அடையும் வழி தெரியவேண்டுமா  அவர்கள்   அனைவரையும்  அழைத்துக் கொண்டு   திருக்கோஷ்டியூர்  ஸ்ரீ சௌமிய நாராயணன் ஆலயத்துக்கு  அருகே  வாருங்கள்'' என்று  அழைப்பு விடுகிறார்.  எதிர்பார்த்ததை விட ரொம்ப  பெரிய  கூட்டம். ஊரில் அனைவருமே கூடி விட்டார்கள்.  விடுவிடுவென்று கோபுரம் மேலே ஏறினார்  ராமானுஜர். சுற்று முற்றும் பார்த்தார்.   அநேக தலைகள்  ஆவலாக அவர் சொல்லப்போவதை கேட்க  காத்திருந்தனர்.  மோக்ஷம் செல்லச்  சுலப வழி  ஒருவர்  இலவச மாக  சொல்லப்போகிறார்  என்றால்  கூட்டமா  கூடாது?   உரத்த குரலில்  அனைவருக்கும் கேட்கும்படியாகமோக்ஷத்தை  அடைவதற்கு  எனக்கு என்  குரு நாதர்   திருக்கோஷ்டி நம்பிகள்   பரம ரகசியமாக  உபதேசித்த  அஷ்டாக்ஷர  மந்த்ரமான ''ஓம்  நமோ நாராயணாய: ''  என்னும்  மந்திரத்தை  இங்கு கூடியிருக்கும்  உங்கள் அனைவருக்கும் உபதேசிக்கிறேன் என்று   ராமானுஜர் உரைத்தார்.  உபதேசித்தார். எல்லோரையும் அதை திரும்ப த் திரும்ப சொல்லிக்கொண்டே இருங்கள் என்று அறிவுறுத்தினார். சொன்னார்களே.    சத்தம் விண்ணைப் பிளந்தது. 

இங்கு நடந்த  விநோதத்தை  யாரோ ஓடிச் சென்று உடனே   கோஷ்டி பூரணர் காதில் விழ  கடுங்கோபம்  உண்டாயிற்று அவருக்கு.

''அப்படியா  செய்தான்  ராமானுஜன்.  என் வார்த்தையை மீறி நடந்த  அவனை    எங்கிருந் தாலும்  உடனே  இங்கே  அழைத்து வாருங்கள்'' என்று கட்டளையிட்டார்.   ராமானுஜர்  கேள்விப்பட்டதும்  குருநாதரை தேடி  ஓடிவந்தார்.
  
கடுங்கோபமாக  கண்கள் சிவக்க  இடுப்பில் கைவைத்துக்கொண்டு வாசல்  திண்ணையின் ஒரு  தூனைப் பிடித்துக்கொண்டு  நின்ற  ஆச்சாரியார்   ராமானுஜரை    வீட்டில் உள்ளே  விடவில்லை.  வாசலிலேயே வெளியே நிறுத்தி னார்.   அவரைக் கண்டதும்  தரையில் மண்ணில்  அப்படியே விழுந்து  வணங்கினார் ராமானுஜர்.  

 ' ராமானுஜா,  'நான் கேள்விப்பட்டது  உண்மை யா.   நான்  என்ன சொல்லி உனக்கு  மந்த்ரோப தேசம் செய்தேன். அதற்குள்ளாகவா  மறந்து விட்டாய்?''

 ''குருநாதா,   தாங்கள்  வாக்கு ஒரு அக்ஷரமும்   அடியேன் மறக்கமாட்டேன். உங்கள் உபதேசங் களை  பூரணமாக ஏற்றுக்கொண்டேன்''

''உளறாதே  ராமானுஜர், பொய்  பேசாதே.  நான்  உனக்கு உபதேசிக்கும் மந்திரம்  பரம ரகசியம், பவித்ரமானது என்று சொன்னேனா இல்லையா?  எதற்காக   யார் என்றே  தெரியாத  ஒரு கூட்டத்திற்கே அதை நீ உபதேசித்தாய் ?  நீ செய்த அபசாரத்திற்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று நீ அறிவாயா?  கொடிய நரகத்தில் அல்லவா நீ தள்ளப் படுவாய்  என்று சொன்னேனா இல்லையா ?'''படபடவென்று   வெடித்தார் நம்பிகள். 

''ஆமாம்,  குருதேவா, உங்கள் வார்த்தையை உதாசீனம் பண்ணி மீறினால்  அந்த  கொடிய    பாபச்செயலுக்கு தண்டனையாக   நான்  நரகம்  செல்வேன்  என்று  எச்சரித்தீர்கள் .'' 

 அமைதியாக  மரியாதையாக பதிலளித்தார் ராமானுஜர். 

''  என்ன துணிச்சல்  உனக்கு?  பின் ஏன்,  எதற்காக,  அவ்வாறு செய்தாய்  சொல்? உனக்கு மதி மயங்கி விட்டதா, நினைவு தப்பியதா? தெரிந்து செய்தாயா, தெரியாமல் செய்தாயா? ''

  குரலில் கோபம் இன்னும் தணிய வில்லை   குருவுக்கு. ஆத்திரத்தில்  கைகள் தலை  நடுங்கி யது .  ஸ்வாசம்  இறைத்தது.
   
''குருநாதா, தாங்கள்  உரைத்தபடி  எவர்  அந்த உன்னத  உயர்ந்த பரம ரகசிய, சக்தி வாய்ந்த மந்த்ரத்தை உச்சரித்தாலும் மோக்ஷம் அடை வார்கள் என்றீர்கள். மந்த்ர உபதேச கட்டளை யை மீறினால்  நான் நரகம் செல்வேன் என்று திட்டவட்டமாக அருளினீர்கள். ''

''இன்னும்  நீ  பதில் சொல்லவில்லை.  பின்  எதற்காக  தெரிந்தும் அவ்வாறு செய்தாய்?''   உறுமினார் நம்பிகள். 

 மெதுவாக, தீர்மானமாக  தெளிவாக,  அச்சம், சந்தேகம் எதுவுமில்லாமல் ஒரே சீரான பணி வோடு கூடிய குரலில் கைகளை கட்டியவாறு , ராமானுஜர்  என்ன பதில் சொன்னார் ?

''பிரபு, என்  குருநாதா,  அநேகர் என்னிடம் பக்தியோடு, மோக்ஷ மார்க்கம் நாங்களும் பெற  எங்களுக்கும் நீங்கள் பெற்றதை உபதேசியுங் கள் என்று கேட்கும்போது  எனக்குள்  எண்ணற்ற மக்கள்  அவ்வாறு மோக்ஷம் அடைய ஆவலாக  விழையும்போது  அவர்கள் தங்கள் அருளால் தெய்வீக மந்திரத்தால்,  உலக வாழ்வின் துன்பங்கள் அகன்று மோக்ஷம் பெறட்டுமே, என்று  ஏதோ ஒரு  உந்துதல் தோன்றியது.  அப்படி அவர்களுக்கு இதை உபதேசிப்பதால்  தங்கள் ஆணையை மீரா வேண்டியிருக்குமே.  அதனால்  நான் செய்த   பெரிய பாபம்  நான்  செய்வதால்  செய்த  பாபத்திற்கு  நான்  நரகம் செல்ல நேரிடும்.   என்று   உணர்ந்தேன்.   ஆனாலும் என் மனம்  இடம் கொடுக்க  வில்லை .   நரகத்திலிருந்து  தப்ப நான் விரும்ப வில்லை .   எத்தனையோ பேர்  நான் செய்த காரியத்தால்  மோக்ஷம் அடையும்போது  அவர்களுக்காக  நான் ஒருவன்  நரகம் செல்வதில்  தவறில்லை என்று மனம் சொல்லியது.   குருநாதா. இது தான்  உண்மை.  என் நிலைமை.   என்னை நீங்கள்  உங்கள் மனதில் தோண்றியபடி   தண்டியுங்கள். அதை    ஆசார்யன் அனுக்ரஹமாக  பெறுகி றேன்.  தயவு செய்து அந்த ஒன்றுமே தவறு செய்யாத மக்களை மந்திரம் பெற்று மோக்ஷம் செல்வதற்கு  விரும்பியவர்களை  வீணாக   தண்டிக்கவேண்டாம். சபிக்க வேண்டாம்  அவர்கள்  குருநாதா தாங்கள் உபதேசித்த  மந்திர மகிமையால் மோக்ஷம் செல்லட்டும். உங்கள் வாக்குப்படி  நான் நரகம் செல்ல தயாராகிவிட்டேன்''

எண்  சாண் கிடையாக  ராமானுஜர்  திருக்கோட்டி யூர் நம்பிகள் திருவடிகளில்  விழுந்து வணங்கினார். 

ஒரு க்ஷண காலம்  ராமானுஜரின்  ஸ்ரத்தை, தியாகம், உயர்ந்த நோக்கம்  எல்லாமே  கோஷ்டி பூரணரை உலுக்கியது. எப்படிப்பட்ட ஸ்ரேஷ்டன் சிஷ்யன் இந்த ராமானுஜன்  என்று வியந்தார்.  இதயம் இளகியது.  இறைவன்  திருநாமத்தை,உன்னத சக்தி வாய்ந்த அஷ்டாக்ஷரத்தை  உச்சரித்து அனைவரும் பயன்பெற வேண்டும் என்று நினைப்பதே எவ்வளவு  பரந்த   நோக்கம்.   .உயர்ந்த எண்ணம்.
' தான் உபதேசிக்க இட்ட கட்டளை  என்ன ?   அதை  மீறினால் அதற்கான தண்டனை என்ன என்று   தெரிந்தும்,  புரிந்தும்,  அந்த மந்திர சக்தியை அனைவரும் பெற  விழையும் ராமனுஜரின் தெய்வீக எண்ணம் என்ன ?  என்   மனநிலை ,ராமானுஜனின்  மன நிலை   இரண்டும்  இரு துருவங்களாக   இருக்கிறதே.'       திருக்கோஷ்டி நம்பிகள்  யோசித்தார். 
''ஆஹா  ஸ்ரீ ராமானுஜன் ஒரு அவதார புருஷன், ஸ்ரீ வைஷ்ணவத்தை மக்கள்  மனதில் சேர்க்கும் வியக்கத் தக்க சக்தி வாய்ந்த பரம புருஷன். சிறந்த விஷ்ணு பக்தன். இவனுக்கா தண்டனை ? இவன் நரகம் செல்ல வேண்டியவனா? அல்லது  நானா ?''

தனது சக்தி தன்னை விட்டு விலகியது போல்  தோன்றியது கோஷ்டி பூரணருக்கு, தான் ஒன்றுமே இல்லை, உணர்வற்ற ஏதோ ஒரு  மரக் கட்டை போல் தோன்றியது.   அப்படியே  ஸ்ரீ ராமானுஜரை   ஆலிங்கனம் செய்து கொண் டார்.   கண்களில் ஆனந்த கண்ணீர்  பெருகியது. ரங்கநாதா  ரங்கநாதா சௌமிய நாராயணா என்று  உதடுகள் என்று அவரை அறியாமல்  கூவின.  

 ''குழந்தாய், ராமானுஜா, என்னை குருநாதா என்று அழைக்காதேயப்பா, நீ தான் எனக்கே குருநாதன், என்னை மன்னித்தேன் என்று ஒருவார்த்தை சொல் தெய்வமே.  என்னை உன் சிஷ்யனாக இக்கணமே  ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே  நான் செய்த தவறுக்கு பிராயச் சித்தமாகும் '' என்றார்  திருக்கோஷ் டியூர் நம்பிகை.  கண்களில் காவிரி.

உலகெங்கும் ராமானுஜர் பெருமை மேலும் பரவியது.  மேலே சொன்ன சம்பவம்  அனேகரி டம் ஒரு விழிப்புணர்வை தந்தது. ஸ்ரீ லக்ஷ்மண னுடைய நேர் அவதாரம்  ராமானுஜன். பெயருக் கு தகுந்த  பிறவி  என்று போற்றினார்கள்.  எண்ணற்ற சீடர்கள் அணுகினார்கள். வைணவ கூட்டம் பெருகியது.  நிறைய பண்டிதர்கள் ஞானஸ்தர்கள் சேர்ந்தார்கள், அவர்களை அங்கங்கே அனுப்பி ஸ்ரீ வைஷ்ணவ வாதங்கள் புரிய வைத்து  ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை நிலையாக  நிறுவினார்.  விசிஷ்டாத்வைதம் காட்டுத்தீ   போல் எங்கும் விரைவாக பரவியது. பலருக்கும் அந்த கோட்பாடு ஏற்புடையதா யிற்று.

இதுபோல்  ஸ்ரீ ராமானுஜர்  வாழ்வில் தான் எத்தனை  அற்புத சம்பவங்கள். முடிந்த போதெல்லாம்  நினைவு கூர்வோம். 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...