ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகள் J K SIVAN
திரை நீக்கி தரிசனம் தா
மதுரைக்கு தூங்கா நகரம் என்று பெயர். அங்கு தூங்காமல் உழைத்துக் கொண்டே இருப்பவர்கள் ஜாஸ்தி. மீனாட்சி இமைகொட்டாமல் இரவும் பகலும் தாய் மீன் போல ரட்சிக்கும் அன்னை. நம் வீடுகளில் கூட குழந்தைகளைக் காக்கும் தாய் தூங்கமாட்டாள். அவர்களது நலனுக்காக அவள் கண்ணயறமாட்டாள். அதேபோல் நம்மை காவல் காப்பவனுக்கும் தூக்கம் கிடையாது. நாமெல்லாம் ராத்திரியில் நிம்மதியாக ஏழெட்டு மணி நேரம் உறங்குகிறோம். ஆனால், சர்வலோகத்தையும் காத்தருளும் திருமலை வெங்கடாசலபதிக்கு தினமும் எத்தனை மணி நேரம் ஓய்வு தெரியுமா? வெறும் ஒண்ணரை மணி நேரம்தான்!
நள்ளிரவு ஒண்ணரை மணிக்கு (இரண்டு மணிகூட ஆகிவிடுவதுண்டாம்). நள்ளிரவு இரண்டு மணிக்கு கூட ஓட்டமாக ஓடிப் போய் பெருமாளைத் தரிசித்தவர்கள் உண்டு. ‘ஏகாந்த சேவை’ முடிந்த கையோடு ஸ்ரீனிவாசன் சந்நிதியில் திரையிட்டு விடுவார்கள். அதன்பின் அதிகாலை – அதாவது ஒண்ணரை மணி நேரம் கழித்து ‘சுப்ரபாத சேவை’க்காகத் திருப்பள்ளி எழுச்சி பாடி, துயில் கலைப்பார்கள். .
திருவையாறு தியாகப்ரம்மம் ஒரு சமயம் நடந்துபோய் திருப்பதி திருமலை தரிசனத்துக்குப் போயிருக்கிறார். கஷ்டப்பட்டு நடந்து மலையேறி இவர் சன்னிதியை அடையும்போது நள்ளிரவு. அதுவரை பெருமாளின் தரிசனம் கிடைத்துக் கொண்டிருந்தது. இவர் சன்னிதிக்கு முன் போய் நின்று கண்ணீர் மல்க, அந்த பெருமாளை பிரார்த்திக்கத் தொடங்கும்போது, அங்கிருந்த அர்ச்சகர்கள் தியாகராஜ ஸ்வாமிகள் யார் என்பது தெரியாமல், இனி தரிசனம் கிடையகாது. ஏகாந்த சேவை முடிந்தது. எல்லோரும் புறப்படுங்கள்” என்று கூறிச் சட்டென்று திரையைப் போட்டுவிட்டார்கள்.
தியாகராஜரின் சீடர்கள், எங்களின் குருநாதர் யார் என்று உங்களுக்குத் தெரியாதா?” என்றெல்லாம் ஆலய அர்ச்சகர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினர்.
அபச்சாரம். இப்படியெல்லாம் ஆண்டவன் சந்நிதியில் பேசக்கூடாது. அமைதியாக இருங்கள். நாம் மனதார வேங்கடவனை வேண்டுவோம்.அவன் அருள் கிட்டுமானால் நமக்கு தரிசனம் தருவான். இங்கேயே அமர்ந்து காத்திருப்போம் வாருங்கள் .'' என்று சிஷ்யர்களை சமாதானப்படுத்தினார் தியாகய்யர்.
விழுந்துவிட்டது திரை. மலை மேல் ஏறி வந்து ஆவலோடு ஸ்ரீனிவாசனை தரிசிக்க வந்தோமே. இயலவில்லையே. என்ற ஆதங்கம். ஞானி அல்லவா? .மனது சிந்தனையில் ஆழ்கிறது . தியாகராஜரின் சிந்தனை, செயல், பேச்சு,எல்லாமே கீர்த்தனைகள் தானே. அற்புதமாக ஒரு கீர்த்தனை உருவாகி அமரத்துவம் பெற்றுவிட்டது.
தியாகராஜ ஸ்வாமிகளின் மன நெகிழ்வு, இறைவனை இறைஞ்சும் வார்த்தைகளாக உருக்கொள்கிறது. நாதம் நாடி வருகிறது.. பாடுகிறார் பரம்பொருளை நினைத்தேங்கி, மனமுருக வேண்டி..
தெர தீயக ராதா – நா லோனி
திருப்பதி வேங்கடரமணா – மத்சரமுனு
தெர தீயக ராதா ..
பரம புருஷ தர்மாதி மோக்ஷமுல
பார தோலு சுன்னதி – நா லோனி
தெர தீயக ராதா ..
(உன்னைக் காணாமல் என்னை தவிக்க விடும் இந்த திரையை கொஞ்சம் விலக்க மாட்டாயா-எந்தன் திருப்பதி வேங்கடரமணா.. தீய மனத் திரையை எடுக்க மாட்டாயா ? திரை விலக்கமாட்டாயா..எனக்காக கருணை காட்டி திரையை நீக்க மாட்டாயா.
பரம புருஷ தர்மமான மோக்ஷ த்தை யாம் பெறமுடியாமல் குறுக்கே நின்று விலக்குகின்ற, தடுக்கின்ற இந்த திரையை விலக்க மாட்டாயா. .எனக்காக கருணை காட்டி திரையை நீக்க மாட்டாயா?
'' வெறும் சாதாரண துணித் திரையா எம்பெருமானே என்னிடமிருந்து உன்னை மறைத்திருக்கிறது? அது என்ன திரை என் ராமா? நீதானே திரைக்கு பின்னால் நிற்பவன்? குழப்பும் எண்ணங்களை கொண்ட மனதல்லவா உனக்கும் எனக்கும் இடையில் உள்ள திரை. மனதைச் சலனமில்லாமல் அலைபாயாமல் நிலையாக வைக்காமல் உன்னை தரிசனம் கொடு என்று நான் யாசகம் செய்தால் நீ எப்படிக் கொடுப்பாய்? உன் தரிசனம் பெற கொஞ்சமாவது எனக்கு யோக்யதாம்சம் வேண்டாமா ஸ்ரீனிவாசா ? ''கண்களில் நீர் ஆறாகப் பெருக தியாகராஜ ஸ்வாமிகள் கதறுகிறார். அற்புதமான கீர்த்தனை
ஸ்ரீனிவாசன் கல்நெஞ்சனா? ராமன் தனது சிறந்த பக்தனை காண ஓடி வரமாட்டானா? திரை தானாகவே அவிழ்ந்து எரிந்து கீழே விழுகிறது.
கண்முன்னே ஸ்ரீனிவாசன் புன்னகைத்து நிற்கிறான். திரை தானாகவே விலகி எரிந்து விழுந்ததை கண்கூடாக பார்த்த அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.
தியாகராஜ ஸ்வாமிகளின் மகிழ்ச்சியை வார்த்தையால் எழுத என்னால் இயலுமா? . ’ஆஹா..வேங்கடரமணா..! கோவிந்தா, பரமாத்மா, நீயே என் ராமன். நீயே பரந்தாமன். நான் என்ன புண்யம் செய்தேனோ உன்னை தரிசிக்க!
No comments:
Post a Comment