இன்றைக்கு கிடைத்த அதிர்ஷ்டம் J K SIVAN
எனது இனிய நண்பர் ஆத்ரேய ராகவ சுந்தரராமன் இந்து சமய மன்றம் நற்பணிகளில் அதிக ஈடுபாடு கொண்டவர். மஹா பெரியவா பக்தர். காஞ்சி மட சேவகர். அவரோடு சில ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பெருமை எனக்கு உண்டு. ஆர்வத்தோடு பணிபுரியும் இந்த அன்பர் அஷ்டஸஹஸ்ர வகுப்பினர் (எண்ணாயிரவர்) அளிக்கும் பிஷாவந்தனத்துக்கு ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கிறார். எண்ணாயிரவர் வகுப்பிலிருந்து குறைந்தது எண்ணாயிரம் நபர்களையாவது பங்கேற்க செய்ய ஆவல். அது பற்றிய முழு விவரங்களை விரைவில் தருகிறேன்.
அண்மையில் நடைபெற உள்ள எனது சதாபிஷேக நிகழ்வுக்கு காஞ்சி மடத்துக்கு சென்று காஞ்சி காமகோடி சங்கர மட ஜகதகுரு ஸ்ரீ சங்கர விஜயேந்திரரை தரிசித்து அவர் ஆசிபெற வேண்டும் என்ற என் எண்ணத்தை தெரிவித்தேன்.
''எதற்கு அவ்வளவு தூரம் காஞ்சி செல்லவேண்டும். காஞ்சி பெரியவா இப்போது சென்னை ஆழ்வார்பேட்டை , வீனஸ் காலனியில் சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டு இங்கேயே இருக்கிறாரே வாருங்கள் நாம் இருவரும் நாளை காலை செல்லலாம்'' என்றார். கரும்பு தின்ன கூலியா? பெரியவா தரிசனத்துக்கு உடனே தயாரானேன்.
இன்று காலை 71/2 மணிக்கே ஆழ்வார்பேட்டை சென்றேன். எனக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு பேர் நின்றுகொண்டிருந்தார்கள். எங்கும் மடிசார், பஞ்சகச்சம், குழந்தைகள் ருத்ராக்ஷம் அணிந்தும், விபூதி நிறைந்த நெற்றியுமாக காட்சியளித்தார்கள். பெரியவா தரிசனம் சீக்கிரமே கிடைத்தது.
பெரியவா அருகில் சென்றதும் நமஸ்கரித்து நின்றேன். சுந்தரராமன் என் ஆன்மீக ஈடுபாடுகளை பற்றி சொல்லும்போதே தெரியும் என்றவாறு தலை அசைத்து புன்னகை பூத்த பெரியவாளிடம் என்னுடைய சதாபிஷேக பத்திரிகை சமர்ப்பித்தேன். அதை பிரித்து பார்த்து படித்து விட்டு நான் எடுத்துக் கொண்டு சென்ற மகா பெரியவா பற்றிய ரெண்டு புத்தகங்கள் '' ''பேசும் தெய்வம்'' பாகம் 1 & 2ஐ அவரிடம் பெருமையோடு சமர்பித்தேன்.
புத்தக முகப்பு அட்டையில் இருந்த அபய ஹஸ்த மஹா பெரியவா படத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டு புத்தகங்களை தனது மடியில் சற்று நேரம் வைத்துக் கொண்டிருந்து விட்டு அருகில் இருந்தவரிடம் தனது அறையில் கொண்டு வைக்க சொன்னார். என்னை சற்று நேரம் இருக்க சொல்லி அணுக்க தொண்டர் ஒருவரை அழைத்து என்னவோ சொன்னார்.
அந்த அணுக்க தொண்டர் அவர் கட்டளையை ஏந்தி, உள்ளே சென்று கணநேரத்தில், வேஷ்டி புடவை, ருத்ராக்ஷ மாலை, காமாக்ஷி உருவம் பதித்த ரெண்டு வெள்ளிக்காசுகள், காமாக்ஷி அம்மன் குங்குமம், மந்தராக்ஷ தை அனைத்தையும் பழங்களோடு பிரசாதமாக பெரியவாவிடம் அளிக்க அவர் ஆசிர்வதித்து அவர் கையில் இருந்து அவற்றைப் பெற கொடுத்து வைத்த மஹாராஜனாக நான் அவரை நமஸ்கரித்து திரும்பினேன்.
No comments:
Post a Comment