ஐந்தாம் வேதம் J K SIVAN
கூடா நட்பு
பீஷ்மர் நீளமாக யுதிஷ்டிரனுக்கு ராஜ்ய மாள்வதில் உள்ள பிரச்னைகளை எடுத்துச் சொல்வது காதில் நுழாததன் காரணம் நாம் எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றாலும் ஆளும் பிரச்சனையை மந்திரிகளிடம் விட்டுவிட்டோம். அவர்கள் தங்களை நன்றாகப் ''பார்த்துக் கொண்டு'' நேரமிருந்தால் நம்மையும் '' ஒரு கை '' பார்த்துவிட மாட்டார்களா?
இந்த சம்பாஷணையில் நடு நடுவே பீஷ்மர் கதை ஏதாவது சொன்னால் சுவாரஸ்யமாக இருந்தால் நாமும் கேட்போம் என்று நாம் நினைக்கும்போது பீஷ்மர் ஒரு குட்டிக்கதை சொல்கிறார்:
''ஜனமேஜயா , பீஷ்ம பிதாமகர், யுதிஷ்டிரனுக்கு ஒரு எலி பூனை கதையை சொல்கிறார்'' என்று உரைக்கிறார் வைசம்பாயன ரிஷி. அதன் தத்துவம் என்னவென்றால் நட்பு என்பது ஜன்ம பகைவர்களுக்கு இடையே இருப்பது இயலாத காரியம் என்பதை புரிய வைக்க . சுமுகமாக ஒருவருக்கொருவர் உதவுவதும் பழகுவதும் வேறு .சிறந்த அத்தியந்த நம்பகமான நெருங்கிய நட்பு வேறு. இவ்வாறே தான் மதத்திலும் எதிர்மறையாக கொள்கைகள் கோட்பாடுகள் கொண்டவர்கள் இணைந் திருக்க முடியாது. இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அவரவர் தார்மீக சம்பிர தாயங்களில் ஈடுபடுவதை எதிர்க்காமல் இருப்பது. ஒருவர் தமது கொள்கை கோட்பாடே உயர்ந்தது மற்றவர்களது தாழ்ந்தது என்று இகழாமல் இருப்பதே பரஸ்பர நட்புக்கு ஆதாரம். இதை உணர்த்த தான் உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்:
''யுதிஷ்டிரா, ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் பாலிதன் என்ற எலி வளையில் வாழ்ந்தது.. மரத்தில் எண்ணற்ற பறவைகள், ஊர்வன, போன்ற ஜந்துக்கள் உயிர்களின் குடும்பங்கள் வாழ்ந்தன. எதிரிகள் ஒருவரையொருவர் உண்டு வாழும் வகையினரும் இருந்தாலும் எப்படியோ நிம்மதியாக வாழ்ந்து வந்தனர். அந்த மரத்தின் ஒரு கிளையில் லோமசன் என்ற பூனை குட்டிகளோடு தங்கி வாழ்ந்தது.
ஒருநாள் அங்கே வந்த ஒரு வேடன் நிறைய பறவைகள் விலங்குகள் அங்கே இருப்பதை கண்டு கீழே வலை விரித்தான். பறவைகளோ விலங்குகளோ அகப்படும். கொன்று தின்னவோ, விற்கவோ முடியுமே. மாமிசத் துண்டுகளை வலையில் தூவினான்.
லோமசன் என்ற பூனை வேடன் விரித்த வலையில் மாமிசத்துண்டுக்கு ஆசைப்பட்டு நடக்க, அதன் கை கால்கள் வலையில் மாட்டிக் கொண்டது. வேடன் வந்தால் பூனையைக் கொன்றுவிடுவான். இது சர்வ நிச்சயம். பறவைகளும் மிருகங்களும் வருந்தின. எப்படி உதவுவது. பாலிதன் துணிந்து உதவ முன் வந்தது.
''லோமசா, நான் எப்படியாவது வலையை பற்களினால் கடித்து உன்னை விடுக்கிறேன். ஆனால் உன்னால் என் உயிர் போய்விடுமே. உன்னுயிரைக் காப்பாற்ற போக உன்னாலேயே என்னுயிர் போவது புத்திசாலித்தன மில்லையே''. என்றது பாலிதன் எனும் எலி.
'' நண்பா. என் உயிர் காப்பாற்றிய நீ என் உயிர்த் துணைவன். உன்னை கொல்ல மாட்டேன் இது சத்தியம்'' என்றது லோமச பூனை.
மேலே ஒரு ஆந்தை, கழுகு ஆகியவை பார்த்துக் கொண்டிருந்தன. ''நண்பா நான் வெளியே வந்தால் ஆந்தையோ, கழுகோ, அதோ ஒரு கீரிப் பிள்ளை வேறு இருக்கிறதே. ஏதாவது ஒன்று என்னை கொத்தி, தூக்கிக் கொண்டு போய்விடுமே. எப்படி வெளியே வருவது உனக்கு உதவுவது ? என்றான் பாலித எலி.
''நான் குரல் கொடுத்தால் அவை அருகில் வராது. நீ வா. என் உடலை ஒட்டி வந்து விடு. அவை என் அருகில் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றது லோமசன்''
''ஆபத்துக்கு தோஷமில்லை, உன்னை நம்பி உன் அருகே வந்து உன்னை காப்பாற்றுகிறேன்'' என்ற பாலிதன் மெதுவாக வெளியே வந்து பூனையின் பக்கமாக நகர்ந்து அதன் வயிற்றின் அடியில் பதுங்கி நகர்ந்து கொண்டே போய் அடியில் வலையை அடைந்தது.
சொன்ன வார்த்தையை காப்பாற்றி பூனையும் எலியை தனது வயிற்றுக்கடியில் ஊர்ந்து நகர்ந்து கால் கைகளை வலையிலிருந்து விடுவிக்க இடம் கொடுத்தது. பாலிதன் நிதானமாக கடித்து வலையை துண்டித்து பூனையின் கை கால்களை விடுவிக்க முயற்சித்தது..
இந்த ஆச்சரியத்தை ஹரிதன் என்கிற கீரிப்பிள்ளையும், சந்திரகன் என்கிற ஆந்தையும் பார்த்துக் கொண்டு இருந்தன. பாலிதன் தனது உயிரை பணயம் வைத்து எதிரி பூனையின் உயிரை காப்பாற்றுவது என்பது ஒரு தியாகம் அல்லவா?
''ஏன் மெதுவாக நிதானமாக வலையை கடிக்கிறாய். வேகமாக கடியேன்? என்று லோமசன் கேட்க, பாலிதன் ''நண்பா அததற்கு நேரம் இருக்கிறது. இப்போது நான் உன்னை விடுவித்தால் நீ என்னை கொல்லாமல் விடமாட்டாய். நீ ஏற்கனவே பசியில் வாடிக்கொண்டிருப்பவன். என்னை விடுவாயா? பசியால் வாடும்போது கண்ணுக்கு எதிரே உள்ள ஆகாரத்தை யார் விடுவார்கள்?
அதோ அந்த வேடன் வருகிறான். அவன் உன்னை பார்த்து சந்தோஷமாக உன்னை கொல்ல வரும் நேரத்தில் உன்னை விடுவித்தால், அந்த ஆபத்தான நேரத்தில் வேடனிடமிருந்து உன் உயிர் தப்ப நீ மரக்கிளைக்கு தாவி ஓடுவாய். நான் என் வளைக்குள் ஓடி பிழைப்பேன் அல்லவா? அப்போது உன் முழு கவனமும் எண்ணமும் நீ உயிர் தப்புவதில் தான் இருக்கும். என்னை கொல்வதில் இருக்காதே! அதனால் தான் அவன் அருகே வரும் வரை நேரம் எடுத்துக் கொள் கிறேன். இதனால் நானும் தப்புவேன் நீயும் தப்புவாய். அதற்கு முன் உன்னை நம்பி உதவுவது அறிவீனம்.'' என்று சமயோசிதமாக பதில் சொன்னது பாலித எலி.
''என்னை எப்படியாவது காப்பாற்றிவிடு நண்பா'' என்றது லோமசன். விஷப்பாம்பை வைத்துக் கொண்டு பிழைப்பவன் அதன் விஷத்தில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொண்டு தான் அதை வைத்து பிழைப்பான். உன் விஷயத்தில் பயத்தோடு நட்பு என்பது நடவாத காரியம்.
பரிகன் என்கிற வேடன் அங்கே வருவதை இருவரும் பார்த்தார்கள். தூரத்தில் தன வலையில் ஒரு பெரிய பூனை அகப்பட்டது கண்டு மகிழ்ந்து மெதுவாக வந்தான் அவன். பூனை பயத்தில் நடுங்கியது. பாலிதன் வேகமாக வலையை கடித்து துண்டாக்கி கொண்டிருந்தது.
அருகில் பரிகன் வந்தபோது பூனை வலையிலிருந்து எகிறி குதித்து மரக்கிளைக்கு தாவி விட்டதை ஏமாற்றத்தோடு பார்த்தான் . அதற்குள் பாலிதன் தனது வளைக்குள் பாய்ந்து ஓடி ஒளிந்து கொண்டது.
எந்த விலங்கும் பறவையும் பிடிபடாததால் பரிகன் வலையை எடுத்து சுருட்டிக் கொண்டு அங்கிருந்து வேறு மரத்திற்கு சென்றான். பிறகு லோமசன் எலியின் பொந்துக்குள் எட்டிப் பார்த்து, நண்பா வெளியே வா உனக்கு என் குடும்பமே நன்றி சொல்ல காத்திருக்கிறது. என் உயிர் காத்தவன் நீ அல்லவா?'' என்று கண்களில் நன்றிக் கண்ணீரோடு அழைத்தது.
''நண்பன் யார் எதிரி யார் என்று சரியாக கணித்த பிறகே நட்பு பொருந்தும். என்றுமே பூனையும் எலியும் நட்பு கொள்ள முடியாதப்பா. சந்தர்ப்பங்கள் தான் நட்பையும் விரோதத் தையும் வளர்ப்பது. உன் ஆபத்தில் உதவினேன் அது நட்பல்ல, பிற உயிர் மேல் உள்ள அபிமானம். அக்கறை . அவ்வளவு தான். நட்போ விரோதமோ என்றும் சாஸ்வதம் அல்ல. பொருந்தாத, கூடாத நட்பு வெறும் கனவு. சுயநலம் பொது நல மாகாதே.! உன் சுய நலத்தால் தானே வலையில் இருந்த மாமிசம் ஆபத்தானது என்றும் கருதாமல் பேராசையில் சிக்கி மாட்டிக் கொண்டாய். எதை நம்பி உன் மேல் நான் நம்பிக்கை வைத்து உன்னோடு பழக முடியும்? ஏதோ ஒரு காரண காரியத்தால் ஏற்படுவது உண்மை நட்பல்ல. இயற்கை யாகவே நான் உனது வழக்கமான பிடித்த ஆகாரம். நமது உறவு ஒரு யுத்தத்தில் சமாதானம் போன்றது. சாஸ்வதமல்ல. சந்தர்ப்ப வசமானது.
பசி வந்தால் பத்தும் பறந்து போகும். என் உயிரும் உடலும் உன் வயிற்றில் போகும். இது தான் நட்பா?
ஒரு பொது எதிரி வந்த போது ஒரு வலிமையானவனும், பலஹீனமானவனும் சேர்ந்து அந்த மூன்றாம் மனித எதிரியை எதிர்த்தோம். அவன் சென்ற பிறகு நாம் எப்படி சரி சமானமானவர்கள் ஆவோம். நம்முள் பலகாலமாக இருக்கும் பகை அழிந்தா போகும்? என் குலமே உன் குலத்தைக் கண்டு அஞ்சி நடுங்கி தப்புவதே முறையானது. அறிவு பூர்வமானது. நட்பு என்ற பேச்சுக்கே நமக்குள் இடமில்லை.என்றது பாலிதன் என்ற எலி'' என்று கதையை முடித்தார் பீஷ்மர்..
''யுதிஷ்டிரா இதை எதற்காக சொன்னேன் தெரியுமா. உனது உறவு மற்ற அரசர்களோடு, அவர்கள் பலத்துக்கு, உனது நலத்துக்கு தக்கவாறு அமையவேண்டும். உன் நம்பிக்கை உன்னை சேர்ந்தவர்களிடம் எப்படி சரியாக கணிப்புடன் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்தவே தான்.'' என்கிறார் பீஷ்மர்.
மஹாபாரதத்தில் எண்ணற்ற உப கதைகள் உள்ளன. தேர்ந்தெடுத்து அவற்றை வழங்க நேரம் அதிகம் பிடிக்கிறது. இருந்தும் அந்த முயற்சியில் விக்ரமாதித்தன் போல் நானும் தளரவில்லை.
No comments:
Post a Comment