ஐந்தாம் வேதம் J K SIVAN
பீஷ்மரின் அறிவுரை தொடர்கிறது...
மஹா பாரதம் என்பது பரீக்ஷித் என்கிற அர்ஜுனனின் பேரன், அபிமன்யுவின் புத்ரன், மறைந்தபிறகு, அவன் மகன் ஜனமேஜயனுக்கு வைசம்பாயன ரிஷி சொல்வது போல் அமைந்துள்ளது. பாரதம் நீண்ட காவியம். அதற்கும் ஆயிரக்கணக்கான குட்டிக்கதைகளில் உள்ளன. ஸ்ரீமத் பகவத் கீதை உள்ளது,ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் உள்ளது, யக்ஷ ப்ரஸ்னம் உள்ளது. அநேக வேதாந்த தத்துவங்கள் உள்ளன.
மிகப்பொறுமையாக இவ்வளவு காலம் என்னோடு மகாபாரத பயணம் வந்த நண்பர்களே, இனி கொஞ்ச காலம் நாம் சேர்ந்து பயணிக்க நேரும். முதலில் பீஷ்மர் பூவுலகை விட்டு மேலுலகு செல்லுமுன் அவர் யுதிஷ்டிரனுக்கு கிருஷ்ணருடைய கட்டளைப்படி, உபதேசம் செய்வதை தர்மனோடு சேர்ந்து நாமும் கேட்டுக் கொண்டிருக் கிறோம் .
''ஜனமேஜயா, மேலும் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு குருக்ஷேத்திர யுத்த பூமியில் சொல்லியவை பற்றி கூறுகிறேன் கேள்.
உதத்யா என்கிற ரிஷி மாந்தாத்ரி என்கிற அரசனுக்கு ராஜரீகம், நிர்வாகம், சமயோசிதம், ஊகம், மனவலிமை ஆகியவற்றோடு எப்படி நாடாள்வது என்று முந்தைய காலத்தில் சொல்லிக் கொடுத்ததை அப்படியே பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு கற்றுக் கொடுக்கிறார். அவனும் ஆர்வமாக அதை அறிந்து கொள்கிறான்.
பீஷ்மர் மேலும் வசுமனஸ் என்கிற அரசனுக்கு வாமதேவ ரிஷி எப்படி நீதியும் நேர்மையும் கொண்டு நாடாள வேண்டும் என்று சொன்னதையும் தெரிவிக்கிறார்.
பீஷ்மரிடமிருந்து யுதிஷ்டிரன் படைகளை எப்படி வியூகம் அமைக்கவேண்டும், எந்த வியூகம் வெற்றியை எப்படி தரும், எதிரிகளின் வலிமை, திறமை, பலத்துக்கு தக்கவாறு, அதிக சேதம் ஏற்படாமல் எந்த வியூகத்தால் வெற்றி கிட்டும் என்று விவரமாக தெரிந்து கொள்கிறான். போரில் கடைபிடிக்க வேண்டிய தர்மம், யாரையெல்லாம் தாக்கவோ ,கொல்ல வோ கூடாது என்றும் அறிகிறான். சண்டையைக் காட்டிலும் சுமுகமாக அண்டை நாட்டு அரசர்களோடு நட்புறவில் இருப்பது எவ்வளவு சிறந்தது என்று பீஷ்மர் எடுத்துரைக்கிறார். சமாதானம் தரும் வெற்றி சண்டையிட்டு பெறுவதை விட உயர்ந்தது, நிம்மதியை, அமைதியைத் தர வல்லது என்கிறார். ரகசிய ஒற்றர்கள் மூலம் எதிரிகளின் ரகசியங்களை, திட்டங்களை அறிந்து தற்காப்பாக செயல் புரிய அறிகிறான். பழி வாங்குவதைவிட மன்னித்தலால் கிடைக்கும் நன்மை பற்றி சொல்கிறார்.
எவரிடமும் கோபமின்றி, அவர்கள் தவறிழைத்தாலும் அதை பொருட்படுத்தாது நன்மையே செய்பவன் துன்பம் அடையமாட்டான். சாத்வீக உணவை மட்டுமே மிதமாக ருசியற்று இறைவன் பிரசாதமாக ஏற்பவன் உயர்ந்த ஞானம் அடைய வழி யுண்டு என்பதை உணர்த்துகிறார்.
''யுதிஷ்டிரா இதோ இங்கே சிவந்த கண்களோடு , மஞ்சள் நிற ஆடையோடு, இனித்த முகத்துடன், அன்போடு எல்லோரும் பழகும் கிருஷ்ணன் இருக்கிறானே, அவன் தான் நாராயணன். இதை மறவாதே. உன்னையும் அர்ஜுனனையும் ரக்ஷிப்பவனான கிருஷ்ணன் தான் அந்த பரம்பொருள்.'' என்கிறார் பீஷ்மர்.
''தாத்தா, எனக்கு எண்ணற்ற நீதி போதனைகளை எளிதாக சிறு கதைகள் மூலம் விளக்கி சொன்னீர்கள். மிகவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இது போல் தான் விதுரனும் எனக்கு அறிவுரைகள் கூறுவார். தங்கள் அறிவுரைகள் படி நான் ஆட்சி புரிவேன்'' என்றான் யுதிஷ்டிரன்.
''தர்மா, அரசன் மட்டும் நல்லவனாக இருந்தால் போதாது, குடி படைகள், மந்திரிகள், சேனாபதிகள், ஆலோசகர்கள் அனைவருமே சத்யம் தவறாதவர்களாக, மனச்சாட்சியின் படி நடப்பவர்களாக, நேர்மை தவறாதவர்களாக எல்லோரிடமும் அன்பாக பாரபட்சமின்றி இருந்தால் அந்த நாடு சுபிக்ஷமாக இருக்கும். தலைவன் மட்டும் நேர்மையுடனும், நியாயத்துடனும் இருந்தால் போதவே போதாது. பிறர் நலன் பேணி ஒவ்வொருவரும் பணி புரிந்தால் தான் எல்லோருமே நலனோடு வாழ முடியும்.'' என்கிறார் பீஷ்மர்.
''யுதிஷ்டிரா, உன்னோடு இருந்து உன்னை ஆதரிப்பவர்கள் துரோகிகளாக மாறலாம். மீண்டும் கெஞ்சினாலும் அவர்களை அணுகவே விடாதே. ஒரு குட்டிக்கதை சொல்கிறேன் கேள்.
ஒரு முனிவர் ஒரு நாய்க்குட்டியை வளர்த்து, அதை ஒரு புலி தின்ன வந்தபோது அது பயந்து ரிஷியிடம் ஓடிவர அதை பாதுகாத்து ஒரு புலியாக மாற்றி, அந்த புலி ஒருநாள் பெரிய காட்டு யானையை பார்த்து அஞ்சி அவரிடம் மீண்டு அடைக்கலமாக, அதையே ஒரு பெரிய காட்டுயானையாக மாற்றினார். காட்டுயானை ஒரு சிங்கத்தை கண்டு மோதி சிங்கம் அதை கொல்ல வரும்போது மீண்டும் ரிஷியிடம் ஓடிவர, தனது காட்டுயானையை ஒரு சிங்கமாக மாற்றினார். அந்த சிங்கம் மற்ற சிங்கங்களோடு மோதி தோற்றுப்போய் உயிருக்கு அஞ்சி ரிஷியிடம் வர அதை சரபமாக (சரபேஸ்வரர் என்பது சிங்கமும் இல்லை, புலியும் இல்லை, மனிதனும் இல்லாத சக்தி வாய்ந்த ஒரு மிருகம். நரசிம்மனை அடக்க சிவன் எடுத்த உருவம்). அந்த சரபம் ஒருநாள் அந்த ரிஷியையே கொல்ல வந்தபோது அதை பழையபடி நாய்க்குட்டியாக மாற்றிவிட்டார். அப்போது அந்த நாய்க்குட்டி கெஞ்சியது ''ரிஷியே என் தப்பை மன்னித்து என்னை மீண்டும் சக்திவாய்ந்தவனாகச் செய்யுங்கள்'' என்று.
''போதும் உன் சகவாசம்'' என்று அதற்கு கருணைகாட்டாமல் ரிஷி நாய்க்குட்டியை விரட்டி விட்டார்.'. இந்த கதையை ஒரு படிப்பினையாகக் கொள்'' என்கிறார் பீஷ்மர்.
' தர்மா, இந்த உலகில் நல்ல இதயங்களைக் கொண்டவர்கள் செல்வத்தை நேர்மையாக நாடினால் அவர்கள் பெறுவது செல்வம் மட்டுமல்ல, நேர்மையான வழியில் செல்வதால் உண்டாகும் பயன், நற்குணம், நல்லிதயத்தால் அவர்களும் மற்றோரும் பெரும் இன்பம். இந்த மூன்றும் இணை பிரியாதவை. இதற்கு தக்க நேரம், காரணம், அதால் விளையும் செயல் மூன்றும் இன்றியமையாதவை. ஆதாரமாக இருப்பது திட சித்தம்.
இன்னொரு விஷயமும் கேள். நாட்டை அரசாள, யுதிஷ்டிரா, இன்னொரு தகுதியும் வேண்டும். ராஜா என்பவன் வருமுன் காப்போனாக, சமய சந்தர்ப்பத்தை சரியாக அனுமானித்து புத்திசாலித்தனமாக நடவடிக்கை எடுக்கவும் தெரிந்திருக்கவேண்டும். இன்னொரு குட்டிக்கதையும் சொல்கிறேன் கேள்.......
No comments:
Post a Comment