ஐந்தாம் வேதம் J K SIVAN
பீஷ்மர் அறிவுரைகள்
பீஷ்மர் கிருஷ்ணனை வணங்கிவிட்டு பேசுகிறார்:
'யுதிஷ்டிரா, மனிதனின் கடமைகளை பற்றி சொல்கிறேன், மற்றும் ராஜரீகமாக அரசன் செய்யவேண்டியவை பற்றி சொல்கிறேன். வேறு என்ன கேட்கிறாயோ அதற்கும் பதில் சொல்கிறேன். பாரபட்சமற்ற நேர்மையான நீதி பரிபாலனம் குடிமக்களால் விரும்பப்படும். சத்தியம் நிறைந்த குணம் தன்னடக்கம் நடுநிலைமை அரசனுக்கு அவசியம்.
தன்னிடமுள்ள குறை நிறைகளை மந்திரிகள் மூலம் அறிந்து செயல்படுதல். எதிரிகளின் குறை நிறைகள் அறிவது அரசனுக்கு இன்றியமையாதது. பிராமணர், பெண்டிர், ஆநிரைகளை பாதுகாக்க வேண்டும். நாடு சுபிட்சமாக இருக்க பிரயாசை படவேண்டும். பயம் அறியாத தைரியசாலியாக இருக்கவேண்டும். குடிமக்கள் மன்னனை எளிதில் அணுக வழி வகுக்க வேண்டும். சேனையை அடிக்கடி சரி பார்த்து எப்போதும் தயார்நிலையில் படைகளை வைத்திருக்கவேண்டும். குற்றங்கள் நேராமல் காக்க வேண்டும். நடந்தால் தக்க தண்டனை அளித்து குற்றவாளிகள் திருந்தவோ, குற்றங்கள் மீண்டும் நடக்காதபடியோ வழி வகுக்க வேண்டும். தயை நிறைந்தவனாகவும் இருக்கவேண்டும், கண்டிப்பாகவும் இருக்கவேண்டும்.''
இதுபோல் நிறைய பீஷ்மர் ராஜரீக கடமைகள் என்னவென்று விலாவாரியாக போதித்தார். யுதிஷ்டிரன் ஆர்வமுடன் அவற்றை அறிந்து பீஷமரை சுற்றி வலம் வந்து வணங்கி மீண்டும் மறுநாள் வருவதாக விடை பெற்று அஸ்தினாபுரம் திரும்பினான்.
மறுநாள் பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சொல்வது:
''யுதிஷ்டிரா, க்ரித யுகத்தில் ஆரம்ப காலத்தில் அரசனோ அரசாங்கமோ இல்லை. ஒவ்வொருவரும் தம்மைத் தாமே பாதுகாத்து கொண்டு வாழ்ந்தனர். தவறுகள் திருத்தப் படவில்லை. திருத்தவும் யாரும் இல்லை. சுயநலம் வளர்ந்தது. பிறர் பொருளை அபகரித்தல் அதிகரித்தது. பலமிக்கவன் சக்தியற்றவனை அழித்தான். வேதம் மறைந்தது. காலக்கிரமத்தில் மாறுதல் நிகழ்ந்தது. மக்கள் கூடி வாழ்ந்தார்கள். விவசாயம் கற்றார்கள். பண்டம் மாற்றுதல் வசதியை அளித்தது. செல்வம் சேர ஆரம்பித்தது. பாதுகாப்புக்கு ஆயுதங்கள் வந்தடைந்தது. கூட்டம் தலைவனை தேடியது. அரசன் உருவெடுத்தான். நாடு சேனை, பலம் அரசனை மற்றவர் மேல் படையெடுக்க வைத்தது. வியாபாரம் விஸ்தரித்து சுபிக்ஷம் உண்டானது. நண்பர்கள் எதிரிகள் வலுத்தனர். கலைகள் உண்டாயின. சாஸ்திரங்கள் பரவின. ரிஷிகளின் வாக்கியங்கள் அலசப்பட்டன. புதிய வ்யாக்யானங்கள் உருவாயின. தெய்வ பக்தி பெருகியது. க்ஷேத்ரங்கள் அறியப்பட்டு நாடெங்கும் மக்கள் பிரயாணம் செய்தனர். யானை குதிரைகள் மாடுகள் பிரயாண கருவியாகிய சக்ரவண்டிகளில் பூட்டப்பட்டு உதவின. காலங்கள் அளவெடுக்கப் பட்டன.''
இன்னும் மேலே மேலே பீஷ்மர் எப்படி மக்களின் என்ன வளர்ச்சி ஏற்பட்டது என்பதை யுதிஷ்டிரனுக்கு எடுத்து சொன்னார்.
மஹாபாரதத்தில் மனிதகுல வளர்ச்சி பரிணாமம் துல்லியமாக வியாசரால் விளக்கப்பட்டிருக்கிறது. நமக்கு டார்வின் சொன்னது வேதவாக்காக போய்விட்டது.
''பீஷ்ம பிதாமகரே, நான்கு வர்ண மக்களின் கடமை என்ன என்பதை விளக்குங்கள். முக்கியமாக அரசன் கடமை பற்றி விவரமாக சொல்லுங்கள்'' என்றான் யுதிஷ்டிரன்.
'' பிராமணர்கள் தன்னடக்கம் கொள்ள வேண்டும். வேதங்களை கசடறக் கற்றுணரவேண்டும். பிறருக்கு வழி காட்ட வேண்டும். சாத்வீக குணம், பொறுமை அவசியம். யாக யஞங்களில் ஈடுபட வேண்டும். பிறர்க்கு கற்பிக்க வேண்டும். க்ஷத்திரியன் யாசகம் பெறக்கூடாது. அவனே யாக யஞங்கள் புரிய உதவ வேண்டும். வேதங்களை கற்கவேண்டும். கற்பிக்கக் கூடாது. துஷ்டர்களை அழிப்பதிலும் யுத்தத்திலும் சக்தியை செலவழிக்கவேண்டும். வெற்றியோ வீரமரணமோ இரண்டில் ஒன்று தான் அவன் முடிவு.
வைசியன் தான தர்மம் செய்ய வேண்டும். பொருள் ஈட்டலாம். ஆனால் நேர்மையாக, நியாயமாக. யாக யஞங் களுக்கு பொருளுதவி செய்யவேண்டும். நான்காம் வர்ணத்தை சார்ந்தவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர் களாக இருத்தல் வேண்டும். மற்றவர் களுக்கு சேவை செய்வதே மிகச் சிறந்த ஒரு தொண்டு. தொழில் ரீதியாக ஏற்படுத்திக் கொண்ட வகுப்புகள் தவிர மனிதர்களில் ஒருவரை ஒருவர் வித்யாஸப் படுத்த அல்ல. ஒன்று இல்லாமல் மற்றொன்று இயங்க இயலாது, வழியில்லை என்ற ஒற்றுமையான ஏற்பாடாக இதை அறியவேண்டும் தவிர மனிதர்களுள் வேறுபாடு உண்டாக்கப்பட்ட தாக கொள்வது துரியோதனன் பார்வை. பார்ப்பவர்கள் யாருமே தீயவர்களாக, கெட்டவர்களாக, நம்பக மில்லாத வர்களாகி, சுயநலமிகளாக பார்க்கும் துரியோதனர்களை லக்ஷியம் செய்யவேண்டாம்.
No comments:
Post a Comment