Saturday, September 7, 2019

AINDHAM VEDHAM



ஐந்தாம் வேதம் J K SIVAN

இறந்த பின் தெரிந்த உறவு!

ஜனமேஜயா கிருஷ்ணன் நிதானமாக உணர்ச்சி வசப்படாமல் காந்தாரியிடம் ''.....விருஷ்ணி குலத்தை என்னைஅன்றி எவரும் அழிக்க முடியாது. எனக்கு தெரியும். நானே அதை முடிக்க மனதில் எண்ணியிருந்தேன். உங்கள் சாபத்தின் மூலம் என் வேலையை எளிதாக்கி உதவி விட்டீர்கள். யாதவர்கள் ஒவ்வொருவராக இனி வீழ்வார்கள். என்ன நடக்கப்போகிறது இனி என்பதை நான் நன்றாக அறிந்தவன் தான். எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கி விட்டது.''.... என்று சொன்னதும் அருகில் இருந்து இதைக் கேட்டவர்கள் சிலையானார்கள்.

கிருஷ்ணனின் வார்த்தைகள் பாண்டவர்களுக்கு பேரதிர்ச்சியாக துன்புறுத்தியது. இனி நமது எதிர்காலம்?? என்ற பெரிய கேள்விக்குறி அவர்களை வாட்டியது.
காந்தாரியை நோக்கி கிருஷ்ணன் '' அம்மா, எழுந்திருங்கள், துயரத்திலிருந்து விடுபடுங்கள். உங்கள் தவறுகளாலேயே இந்த பேரிழப்பு நேர்ந்தது. உங்கள் மகன் துரியோதனன் ஒருவனே கொடியவனாக அனைத்துக்கும் காரணமாக இருந்தபோது மற்றவரை நொந்து என்ன பயன்? உங்கள் மகன்களை அழிவுப் பாதைக்கு கூட்டிச் சென்றவர்களே நீங்கள் தான். மாண்டவர் மீண்டதாக சரித்திரம் இல்லை. இனி நேரப்போவதையும் எவரும் தடுக்க வழியில்லை.'' என்றார் கிருஷ்ணன்.
யுதிஷ்டிரன் கௌரவர்களின் வம்ச ப்ரோஹித உபாத்யாயன் சுதர்மனை கூப்பிட்டு, நீயும், விதுரரும், சஞ்சயனும், தௌம்யருமாக சேர்ந்து, வ்ருஷ்ணிகுல யுயுத்சுவோடு கலந்து, அவரவர் குல வழக்கப் படி ஈமக்ரியைகளை உடனே துவங்கி இறந்தவர்கள் ஆத்மா சாந்தியடைய ஏற்பாடு செய்.'' என்றான்.

சந்தனக்கட்டைகள், ஏராளமாக நெய் , வாசனை திரவியங்கள், பட்டாடைகள்,மலர்கள் மாலைகள், குவிந்தன. பெரிய யாகம் போல் தகனம் அனைத்து மன்னர்களின் உடல்களுக்கும் குல ஆச்சாரப்படி எஞ்சிய உற்றார் உறவினர்களின் அந்திம மரியாதைகளோடு நிறைவேறியது. வானம் வரை தீ மூண்டது. உறவினர்கள் கங்கைக்கு ஸ்நானம் செய்ய புறப்பட்டனர். கங்கைக்கரையில் மீதி ஈமக்கிரியைகள் தொடர்ந்தன. அங்கு தான் குந்தி பாண்டவர்களை அழைத்து, ''யுதிஷ்டிரா, எவனை அர்ஜுனன் கொன்றானோ, எவனை கௌரவ சேனை பெரிதும் நம்பியதோ, எந்த மாவீரனை உங்கள் எவராலும் அழிக்க கடினமாக இருந்ததோ, எவன் சூரியன் மைந்தனோ, அந்த கர்ணன் தான் என்மூத்த மகன், உங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரன். எனவே நீங்கள் அவனுக்கு செய்யவேண்டிய கடன்களை செய்யவேண்டிய நேரம் இது'' என்றாள். அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி பாண்டவர்களை தாக்கியது. அவர்கள் மயக்கமடைந்தார்கள், வருந்தினார்கள். ''தாயே, நீயா எங்களை துன்புறுத்திய, அவமானப் படுத்திய எங்கள் முதல் எதிரி கர்ணனுக்கும் தாய். இது எவ்வாறு?.
கர்ணனது வீரம் எங்களை திகைக்க வைத்தது. எப்படியம்மா, எங்களிடமிருந்து இந்த ரகசியத்தை மறைத்து வைத்தாய் இத்தனை காலம்? என்ன மனோதிடம் உனக்கு? உடன் பிறந்த அண்ணனையேவா கொன்றோம், எதிர்த்தோம்? . அபிமன்யுவின் மறைவை விட, எங்கள் குழந்தைகளின் மரணத்தைவிட கர்ணனின் மறைவு எங்களை இப்போது பெரும் சோகத்தில் ஆழ்த்த வைத்து விட்டாயே தாயே.

ஐயோ இதை முன்பே சொல்லியிருந்தா யானால் இத்தனை உயிர்கள் மாண்டு இருக்காதே. சந்தோஷமாக எல்லாவற் றையும் விட்டுக் கொடுத்திருப்போமே !'' என்று அதிர்ந்தான் யுதிஷ்டிரன். ஓவென்று கதறினான். சிரத்தையாக கர்ணனுக்கு, மூத்த சகோதரனுக்கு, செய்ய வேண்டிய ஈமக்கிரியைகளை செய்து முடித்தான். இறந்தபின் தெரிந்த உறவு அவனை நெக்குருகச் செய்தது. இப்படித்தான் வியாசரின் மகா பாரதத்தில் கர்ணனுக்கும் பாண்டவர்களுக்குமான உறவு குந்தியால் வெளிப்பட்டதாக வருகிறது. மற்றபடி நாம் பார்ப்பது படிப்பது, கேட்பது எல்லாம் ஒருவேளை நமக்கு சுவாரஸ்யத்தை ஊட்ட யாராவது இடையிலே செருகிய கைங்கர்யமோ? அதற்குள் நாம் செல்லவேண்டிய அளவு நமது மூக்கு நீளமில்லை. கண்களில் நீரோடு கங்கை நீரிலிருந்து வெளியே எழுந்தான் யுதிஷ்டிரன் வியாசர் எழுதிய மஹா பாரதத்தில் இந்த கட்டத்தோடு ஸ்த்ரீ பர்வம் நிறைவு பெருகிறதே

மேலே பயணிப்போம்.
THOSE INTERESTED IN HAVING AINDHAM VEDHAM TWO VOLUMES AS SUBSIDISED DONOR COPIES MAY CONTACT 9840279080

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...