Sunday, September 29, 2019

KAALAMEGAM

தமிழ் புலவர்கள்     J K  SIVAN 
காளமேகம்.

                                                        இரட்டை அர்த்தம். 

நான் சொல்லும் அர்த்தம் தமிழ் சினிமாவில், டிவியில்  பேசப்படும் ரெட்டை அர்த்தம் கொண்ட கெட்ட வார்த்தை அல்ல.

நான்  காரைக்கால் ஒரு கப்பல் விஷயமாக சென்றிருந்த போது அங்கே சில நாட்கள் தங்க ஒரு இடம் தேடியபோது அருகே  T.R. பட்டினத்தில் தங்க வசதியான வீடு கிடைக்கும் என்றதால் அங்கே சுற்றினேன்.  அப்போது.    TR பட்டினம் என்றால் என்ன என்று தெருவில் கடைகளில் காணப்பட்ட விலாசங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். திருமலை ராயன் பட்டினம்.  அட  இது எங்கோ கேட்ட பெயராக இருக்கிறதே என்று மூளையை கசக்கிக் கொண்டபோது காளமேகம் சிரித்தான். ''என் ஊரு ஐயா''

காளமேகம் என்ற  தமிழ் புலவனின்  தனித் தன்மை அவனை மற்றவர்களிடமிருந்து  பிரித்து  உயர்த்துகிறது.   ஸரஸ்வதி அருளால் திடீரென்று  கல்வி அறிவில்லாத  ஆடு மாடு மேய்க்கும் ஒருவன் ஓரிரவில் சிறந்த கவிஞன் ஆகிறான். 

அவன் இயற்பெயர் வரதன்.  ஒரு வைஷ்ணவன். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலய மடப்பள்ளி சமையல் காரன்.  அருகே  திருவானைக்கா கோவிலில் நாட்டியக்காரி மோகனாங்கியோ  சிவ பக்தை . அவள் மேல் காதல் கொண்டு அவளால்  சைவனாகிறான்.  ஒரு மாலை நேரம், அவளை  சந்திக்க  திருவானைக்கா ஆலயமண்டபத்தில் காத்திருந்தவன் அப்படியே தூங்க,  மண்டபத்தின் இன்னொரு பக்கம் வெகுநாளாக சரஸ்வதியை வேண்டி தவமிருந்த ஒரு பிராமணனுக்கு   அன்றிரவு  ஸரஸ்வதி  ப்ரத்யக்ஷமாகி பிராம்மணன் வாயில் தனது எச்சில் தாம்பூலம் அளிக்கவருகிறாள். எச்சில் வேண்டாம் என்று  அவன் மறுக்க, ஸரஸ்வதி  வாயைப்பிளந்து கொண்டு நன்றாகத்  தூங்கிக் கொண்டிருந்த வரதனை எழுப்பி  அவன் வாயில் தாம்பூலம் தருகிறாள்.  கனவில் தன் காதலி தான் வாயில் தாம்பூலம் அளிக்கிறாள் என்று அரைத்தூக்கத்தில் வரதன் சந்தோஷமாக அதை வாய் நிறைய  பெற்றுக் கொள்கிறான். கலைமகள் அருளினால் காதலிக்கு காத்திருந்த வரதன்  கால மெல்லாம் நம்மை மகிழ்விக்கும் கவி காளமேகமானான். மற்றவை புத்தகங்கள், படங்களில் அறிந்து கொள்க. 

காளமேகம் சிலேடை எனும் இரு பொருள் தரும் கவிகள் இயற்றுவதில் மன்னன். மாடலுக்கு (மாதிரிக்கு) ஒரு சில இங்கே பார்ப்போமா? இது முதலாவது.சந்திரனுக்கும் மலைக்கும்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து

 சந்திரன் தான்  நிலா.  நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி நகர்கிறது.  அதேபோல் மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு பிளவாக  அடுக்குகளோடு காணப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நமது கண்ணுக்கு  அண்ணாந்து பார்க்கும்படியாக  மேலே  உயரமாக  மலை  தோன்றுகிறது.

இன்னொரு சிலேடை . இதில் ஒரே பாடல்  இரு பொருள் தந்து ஒரு அர்த்தம்  நாயையும்  இன்னொரு அர்த்தம் தேங்காயையும்  குறிக்கிறது பாருங்கள்ல்.

ஓடு மிருக்கும்அதன் உள்வாய் வெளுத்திருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .

 நாய்  ஓடும். ஒரு இடத்தில் இருக்கும். தேங்காய்க்கு ஓடு இருக்கும். நாய் வாய் திறந்து நாக்கை தொங்க விட்டுக்கொண்டு இருக்கும். திறந்த வாய் உள்ளே சிவப்பாக வெள்ளை பற்கள் தெரிய  தேங்காய் உடைத்தால் உள்ளே வெள்ளையாக இருக்கும். தென்னை  குலை தள்ளும்.  நாய் குலைத்து தள்ளும். ஓயாது.  தோழி  திருமலை ராயன் ஊரில் நாய் தேங்காயான அதிசயத்தை பார் என்று அற்புதமாக பாடுகிறார் காளமேக புலவர். 

 தலையில் எவரிடமிருந்தாவது ஒட்டிக்கொண்ட  பேன்  அரித்து உயிரை  வாங்கும் அனுபவம் உண்டா? எனக்கு சின்ன வயதில் உண்டு.  அந்த பேனும்  மீனும்  ஒன்றே தான் என்று சத்தியம் செய்வீர்களா? செயகிறார்  காளமேகம் இந்த பாடலில். பாடல் ரெண்டு அர்த்தம் தரும் சிலேடை கவிதை ..

மன்னீரிலே பிறக்கும்  மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.

மீன்  நிலையாக இருக்கும் நீரில் பிறக்கிறது. நீரின் அலையில் தானும் ஆடி அசையும். குதித்து நீச்சலிடும். செங்குத்தாக தாவி தண்ணீரில் அமிழும். திரும்பவும் இதே விளையாட்டு.

பேன்  தலையில் சேர்ந்து கொண்ட நிலையான  ஈரில்  பிறக்கிறது. அளவில் பெருகி தலையிலே மேயும்.   தலையை இழைய வாரி, இதற்கென்றே  பிளாஸ்டிக் மரத்தில் பேன்  சீப்பு, ஈர்க்கொல்லி என்று பல் பல்லாக ஒரு சீப்பு உண்டு.  அதால் குத்தி கொள்ளப்படும். சோலை மலர்களில் தேன்  ததும்பும், திருமலைராயன் ஊரில்  பேனும்  மீனும் சரி தானய்யா.

நேரமிருந்தபோது இன்னும் நிறைய தெரிந்துகொள்ளலாம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...