''காலா. வா, உன்னைக் காலால் உதைக்கிறேன்'' J.K. SIVAN
நானும் ஒரு தமிழன் தான். ஆரம்ப கல்வியே கூரைக்கட்டூ , மண் தரை பள்ளிக்கூடத்தில் தான். தெரிந்த பேசும் எழுதும் தமிழ் வேறு, நான் புத்தகத்தில் கற்ற தமிழ் வேறு. மெட்ராஸ் பாஷை தமிழ் கம்பனுக்கோ, வள்ளுவனுக்கோ, இளங்கோவுக்கோ தெரியாது. நிறைய பேரால் என்னைப்போல அதனால் தான் அவர்களை அணுக முடியவில்லை. நல்ல விஷயங்கள் தெரியாமலேயே வாழ்க்கை பெரும்பாலும் முற்றுப்புள்ளி வரை வந்து விட்டது.
பாரதி தமிழ் அவ்வளவு கடினம் இல்லை. எளியது. அவன் எண்ணம் தெளிவாக புரிகிறது. என்னை கவர்ந்தது. இன்று செப்டம்பர் 11 அவன் இறுதி நாள் பற்றி நினைக்கும்போது என் கண் ஈரமாகிறது.
ஒவ்வொரு வருஷமும் செப்டம்பர் 11 பாரதியின் நினைவும் வரும் காலண்டர் நாட்காட்டியை கிழித்ததும் சிறு காகித துண்டாக மறந்து, மறைந்து போகும் என்பது என் மனதில் இல்லை.
செப்டம்பர் 11 1921 மஹா கவியின் கடைசி நாள். அன்றைய சம்பவத்தை நினைத்தால் நெஞ்சு கனக்கும். குற்ற உணர்வு நெஞ்சைப் பிழியும் சோகம் கண்ணீராக வரும்.
''ஆஹா, என்ன ஒரு அற்புத மஹா கவி, அமர கவி, தேசீய கவி, அவனை வறுமையில் வாழவிட்டு மதிக்காத நாம் தமிழர்களா? இறந்தபின் அவன் அருமை தெரிந்து அதனால் அவனுக்கென்ன? ஒரு வேளை சந்தோஷமாக அவன் குடும்பம் சாப்பிட அனுமதித்தோமா? செல்லம்மாவோடு வறுமையையும் சேர்த்தல்லவோ அவன் மணந்தான். 39 வருஷமே வாழ்ந்த சிறிது காலத்தில் அவன் சாதித்தது முன்னூறு வருஷமானாலும் எவனாலும் முடியாதது.
திருவல்லிக்கேணியில் அவனை அறியாதவர்கள், மதிக்காதவர்கள் நிறைய பேர் இருந்தார் களோ? இன்று உலகமே அறிகிறதே அவன் வாழ்ந்த வீடு என்ற அந்த திருவல்லிக்கேணி வீட்டை. நான் சென்று அமைதியாக அமர்ந்து தியானிப்பேனே. அந்த வீட்டின் சுவர்களில் எத்தனை பாரதி திருவுருவங்கள். எத்தனை எழுத்துக்கள். தமிழிலும், சமஸ்க்ரிதத்திலும், ஆங்கிலத்திலும் நிபுணன் அந்த காவியநாயகன். சரஸ்வதிக்கு பிடித்த அவனை ஏன் லக்ஷ்மிக்கு பிடிக்கவில்லை?
வாய் திறவாமல் அவனை வளைய வந்த ஒன்பது கஜ ஒல்லி பெண்மணி செல்லம்மா. பாரதி மனைவி என்ற புகழால் தமிழ் நெஞ்சங்களின் மனதில் செல்லம்மாவின் பெயர் என்றும் கவிதையாக நிலைத்து விட்டதே. அவளுக்கு நீ கொடுத்த அந்தஸ்து ஆபரணம் இது தானா பாரதி? நீ ஒருவேளை தங்கம் மட்டும் கொடுத்திருந்தால் அது மறைந்திருக்கும். அனால் தங்கம்மா என்ற பெண்ணை கொடுத்து உன் பாரதி வம்சம் வளர்ந்துவிட்டது.
பிராமண சமூகமே அவனை அவமதித்த காரணம் அவன் ''காக்கை குருவி எங்கள் ஜாதி'' என்றதாலா? நீங்கள் இல்லாவிட்டால் எனக்கென்ன ''கடலும் மலையும் எங்கள் கூட்டம்'' என்றதாலா? அவன் ராஜாவாகவே வாழ்ந்தான், மைசூர் மஹாராஜாவுக்கு மட்டுமா முண்டாசு? அவனுக்கும் தான் அற்புதமாக இருந்து எத்தனை படத்தில் முறுக்கு மீசையோடு பார்க்கிறேன்.
முண்டாசு கவிஞன் என்று பெயர் பெற்றவன் பாரதி. இலை முன்னால் சாப்பிடும் விதம் ஒரு ராஜா மாதிரி கம்பீரமாக இருந்து என்ன பயன். இலையில் அவனுக்கு மாதம் பத்து நாள் மட்டும் தான் ஏதாவது காய்கறி வாங்க வசதி அவனுக்கு . மற்றநாள் வெறும் ரசமும் சுட்டப்பளம் தான் அந்த அமர கவிக்கு சாப்பிட முடிந்தது. ''தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தையே அழித்துவிடுவேன்'' என்ற அந்த பொது நல தியாகிக்கு அவ்வளவு தான்.
பாரதிக்கு மனதில் தான் உறுதி. உடல் தளர்ந்தவர். பாதி நாள் வெள்ளையன் அரசாங்கத்தின் பிடியிலிருந்து தப்பவே நேரம் சரியாக இருந்தது. சிறை வாசம்.
1921 ஜூலை மாதம் பார்த்தசாரதி கோவில் யானைக்கு ஏன் பாரதியை பிடிக்கவில்லை? வாழைப்பழம் தேங்காய் கொடுத்த பாரதியை, ''போ உனக்கே உணவில்லை எனக்கு ஏன் கொண்டு வந்தாய்''? என்று அன்பாக தள்ளி விட்டதோ? அதுவே ஆபத்தாகி விட்டதா? கஜேந்தரன் பலம் எங்கே கவிஞன் உடலின் சக்தி எங்கே? அந்த அதிர்ச்சி, எலும்பு முறிவு, தொடர்ந்து காய்ச்சல், வயிற்று போக்கு... தக்க மருத்துவ வசதிக்கு வழி இல்லை. அதோடு ஜீவனத்துக்கு உழைப்பு வேறு. ரெண்டு மூன்று மாதம் வாட்டி எடுத்தது.
பாரதி வாழைப்பழம் தேங்காய் எடுத்துக் கொண்டு பார்த்தசாரதி கோவில் யானையை நெருங்கியபோது அருகில் யாரோ ''யானை கிட்டே போகாதேங்கோ '' என எச்சரித்தும் பாரதி கேட்கவில்லை. யானை அமைதியாகவே இருந்தது. ஆனால் துதிக்கையால் தேங்காய் பழத்தைப் பற்றாமல் பாரதியின் இடுப்புக்கு மேலே சுற்றி தன் நான்கு கால்களுக்கும் நடுவே அவரை தூக்கி வீசி கண்ணிமைக்கும் நேரத்தில் குவளைக்
கண்ணன் என்ற பாரதியின் சிநேகிதன் ஒரு புண்ணிய ஆத்மா தன் உயிரையும் பொருட்படுத்தாது யானையின் கால்களுக்கு நடுவே புகுந்து குனிந்து பாரதியை அகற்றி தன் தோளில் போட்டுக் கொண்டார். வெளியே தப்பினார்கள்.
யானை நினைத்திருந்தால் தன் கால்களுக்கு நடுவே இருக்கும் இருவரையும் அக்கணமே நசுக்கி சட்னி செய்திருக்க முடியும். கஜேந்திரன் தான் தாக்கியது சாதாரணன் இல்லை கிருஷ்ணனின் பக்தன் என்று உணர்ந்தானோ என்னவோ. அதற்குப்பிறகு அவரையும் குவளைக் கண்ணனை யும் தாக்க வில்லை. யானையிடம் எந்த சலனமும் இல்லை
கீழே பாரதி விழுந்த போது முண்டாசு இருந்ததால் பின்புற மண்டை தப்பியது ஆனால் கட்டாந் தரையில் முகம் மூக்கு தோள்பட்டை முழங்கை மற்றும் முழங்கால்களில் பலத்த ரத்தக் காயத்தோடு பாரதி மயங்கினார்
காயம்பட்ட கவிஞனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் நண்பர் சீனுவாசாச்சாரியார் கொண்டு போய்ச் சேர்த்தார். பகைவனுக்கும் அருளச்சொன்ன பாரதி தன்னைப் பழுதாக்கிய யானையைப் பழித்தாரா? இல்லவே இல்லை. கொஞ்சம் நினைவு வந்ததும் '' ஹா ஹா '' என்று வழக்கமான அட்டகாசமான சிரிப்பு.
''யானை முகவரி தெரியாமல் என்னிடம் மோதி விட்டது.என்ன இருந்தாலும் என்னிடம் இரக்கம் அதிகம் தான் இல்லையென்றால் என்னை உயிரோடு விட்டிருக்குமா ?''
உடல் காயம் மாறத்தொடங்கியது. அன்றாட உணவுக்கு உத்யோகம் அவசியமாகியது. உடலுக்கு ஒய்வு போதவில்லை. எழுத்துப் பசி சுதேச மித்திரன் ஆபீஸூக்கு ஐந்தாறு மாதங்கள் சிரமத்தோடு செல்ல வைத்தது. காயம் ஆறினாலும் யானை தந்த அதிர்ச்சி சில அவசர வியாதிகளை கிளப்பி விட்டது. சீதபேதி பாரதியின் உடலைச் சிதைக்கத் தொடங்கியது. மீண்டும் ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில்..
செப்டம்பர் 11 1921. அதிகாலை இரண்டு மணி. மஹா கவி பாரதியாரின் உடலைவிட்டு உயிர் பிரிய முடிவெடுத்து விட்டது. ''போதும் பாரதி நான் உன்னோடு இந்த உலகத்தில், இந்த நன்றிகெட்ட சமூகத்தில் இருந்தது'' என்று அதற்கு மேலும் அவரோடு இருக்க உயிருக்குப் பிடிக்க வில்லை. வெளியேறத் துடித்து பாரதியின் உடலை உதைத்துக் கொண்டிருக்கிறது. வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. சில நிமிடங்களில் துடிப்பு அடங்கியது.
39 வருஷ உடல் - உயிர் தாம்பத்யம் முடிவு பெற்றது. எழுத்துக்கு உயிர் அளித்த அந்த கவிஞனின் உடல் உயிரை இழந்தாலும் தனது அற்புத தமிழை உலகுக்கு விட்டு சென்றது. ஒரு எரிமலை குளிர்ந்து போனது. இனி எங்கே பொங்கும்? அக்னிக் குஞ்சொன்று வெந்து தணிந்தது. அந்த ஞானக்கடல் உப்புக்கடல் அருகே வாழ்ந்து கரைந்து மறைந்து போனது.
குவளைக்கண்ணன், லட்சுமண ஐயர், ஹரிஹர சர்மா, சுரேந்திரநாத் ஆர்யா பரசு நெல்லையப்பர் -- இந்த ஐவரின் தோள்களும் அந்த ஞான சூரியனின் சடலத்தைச் சுமந்து கிருஷ்ணாம் பேட்டை மயானம் நோக்கி நடந்தன. இன்று பாரதி என்றால் அகில உலகமும் போற்றும் அந்த கலைஞன், கவிஞனின் இறுதி ஊர்வலத்தில் அவன் பூத உடலைத் தூக்கிய நால்வரையும் சேர்த்து மொத்தமே பத்தோ பதினொன்றோ ஆசாமிகள் தான். அவர் உடலில் மொய்த்த ஈக்கள் கூட எண்ணிக்கையில் அதிகமாகவே இருந்தது. இது தான் நமது சமுதாயம் ஒரு மாபெரும் தமிழ் கவிஞனுக்கு நாம் அளித்த கடைசி மரியாதை.
கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டில் சுரேந்திரநாத் ஆர்யா மஹாகவி பாரதியின் பெருமையை சொல்லி முடித்ததும் ஹரிஹர சர்மா சிதைக்குத் தீ மூட்டுகிறார்.
No comments:
Post a Comment