Friday, September 13, 2019

FAITH

தன்னம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும்         J  K  SIVAN 

காற்று வாக்கில்  எங்கிருந்தோ கிடைத்து என்றோ படித்த ஒரு சம்பவத்தை பின்புலமாக கொண்டு   இதை சொல்வதற்கு முன்  நாம் முதலில்   ஸ்ரீ பெரும்புதுார் அருகில் உள்ள   சீதாலட்சுமி பாட்டி வீட்டிற்கு செல்ல வேண்டியிருக்கிறது.

சீதாலஷ்மிபாட்டி 90 வயதில் ஒரு முடிவு எடுக்கிறாள்.  மகள் வேலைக்கு சென்றபிறகு, வீட்டில் இருந்த பேத்தியை அழைத்து  தன் மனநிலையை பக்குவமாக புரிய வைக்கிறார். புரிந்து கொண்ட பேத்தி, 'சரி' என்று பாசமாய் தலையாட்ட, கட்டியிருந்த புடவையுடன் கிளம்பினார் பாட்டி. 

கண்ணீர் மல்க பாட்டி  பஸ் விசாரித்து ஏறி இறங்கியது மயிலாப்பூரில் . அங்கே ஒரு முதியோர் இல்லத்தை  அடைந்த பாட்டி 

''ராணிம்மா... எனக்கு யாருமே இல்லை. என்னை இங்கே வைச்சுக்க மாட்டேன்னு அனுப்பிடாதீய்ங்க'' என்றபோது   நிர்வாகி அம்மாவின் கண்களிலும்  ஆறு.   கையைப் பிடித்துக்கொண்டு கெஞ்சிய பாட்டி யை அணைத்து  அன்றுமுதல் பாட்டி அங்கே அடைக்கலம். 

பன்னிரண்டு வருஷங்கள் கழித்து ஒருநாள் ''உங்களுக்கு 102 வயதாமே'' என்று ஆச்சர்யப் பட்டவரிடம் 

  ''அய்யோ... அது எப்பவோ கார்த்திகை 6ம் தேதியே முடிஞ்சு போச்சே!'' என்று  பொக்கை வாய் குழந்தையாக  தன் பிறந்தநாளை நினைவுகூருகிறார் பாட்டி. 

வீட்டில் பிரச்னையால் முதியோர்கள்  வீட்டை விட்டு வெளியேறுகி றார்கள் என்பதை விட வீட்டாரால் வெளியேற்றப்படுகிறார்கள் என்பது தான் அதிகம்.   தானாக வெளியேறு பவர்களுக்கு  தன்னம்பிக்கை மூலதனம்.  90 வயது பாட்டி விஷயத்தில் அவள்  நிலை:

''நான்  பொண்ணு வீட்டிலேருந்து தான் வந்தேன். பிரச்னை எல்லாம் ஒண்ணும் இல்ல. வீட்டிலே  ரெண்டு குழந்தைங்க; புருஷனும், பொண்டாட்டியும் சம்பாதிக்கிறது நாலு பேருக்குமே கைக்கும் வாய்க்குமா இருக்கும்போது  நான் வேற எதுக்கு சுமை.  அதனாலே வெளியில வந்துட்டேன். இப்பகூட, அவங்க என்னை கூப்பிட்டுட்டுதான் இருக்கறாங்க! நான்தான் போகலை!''  பேரன்  பேத்தியை பார்க்கணும்னு ஆசை தான்.
 மாசத்துக்கு ஒருதடவை, அவங்க என்னை வந்து பார்ப்பாங்க!  திரும்ப போகும்போது  எனக்கு  மனசு தளர்ந்து போய் இளகும். வெளியே காட்டிக்காம  பொறுத்துக்குவேன்! போறப்போ, 200 - 300 ரூபா கைச்செலவுக்கு கொடுத்துட்டு போவாங்க!

நான்  ஏன் அதை வாங்கிக்கறேன்னா,  எனக்கு இங்கே பணமே வேண்டாம். எந்த  குறையும் இல்லை.    இந்த இடத்துக்கு பக்கத்திலே அங்கே பாருங்க, ஒரு சின்ன  விநாயகர் கோவில் தெரியுதில்ல? அங்கே  விளக்கேத்த, பூஜைக்குன்னு  செலவுக்கு கொஞ்சம், கொஞ்சமா அந்த பணத்தை கொடுத்துடுவேன். அந்த பிள்ளையாரப்பன் தான்  என் மக குடும்பத்தையும், நாம எல்லாரையும்  நல்லா வைச்சுக்கும்!  கொடுத்தா வாங்கிக்குவேன். 

முதியோர்கள் கல்வி அறிவில்லாத பாட்டியை முன்னுதாரணமாக கொள்ளவேண்டும். கண் பார்வை மங்கல், காது பாதிக்குமேல் கேட்காது. உரக்க பேசினால் பதில் பொக்கைவாய் வழியாக சொல்லும்  தாத்தா  பாட்டிகளில் சிலர் ரொம்ப கெட்டி.  செய்திகள் எல்லாம் தெரிந்து
கொண்டு  நாட்டு நடப்பில் அப் டு டேட்  (uptodate ) ஆக இருப்பவர்கள் பலே  பாட்டி  தாத்தாக்கள்.   பசி, திஹார் ஜெயில் பெயில் எல்லாம்   கூட  எப்படியோ தெரிந்திருக்கிறது.

''வாழ்ற காலம் பூரா  எல்லாத்தையும் நல்லா தெரிஞ்சிக்கணும். அப்பதான் வாழ்றதுக்கு ஒரு அர்த்தம் இருக்கும்!''     என்றாள் மேலே சொன்ன பாட்டி. 

'' என்னாலே முன்னைப்போல, உடம்பால் உதவ சக்தி இல்லை. சரி பண ஒத்தாசை பண்ணுவோம் என்கிறதுக்கும் வழி இல்லையே. நகை நட்டு ஒண்ணும்  கிடையாது. இருந்ததெல்லாம் எப்பவோ  என்னை விட்டு போயிடுச்சி. என்னாலே முடிஞ்சது எல்லோரையும் ''மகராசியா இரு, மவராசனா இருப்பா'' சொல்றது மட்டும் தான். 

இது போன்ற பழங்கால பாட்டிகள் பத்து வயசுக்குள் கல்யாணம் ஆனவர்கள். பலபேரின்  கணவன்கள் முழு வாழ்க்கை வாழாமல்  பாதியில் பாட்டியை நிர்கதியாக விட்டுவிட்டு  பறந்து போனவர்கள். சமூகத்தில் ஒரு அபசகுனமாக உடல் உதவி செய்து  வாரிசு இல்லாததால்  அட்ரஸ் இல்லாமல் மறைந்த
வர்களை நினைத்து மனசு நோகாவிட்டால் உடனே இருதய நோய் மருத்துவரை போய் பாருங்கள்.  சில பாட்டிகளுக்கு வாரிசுகள் உண்டு, கூடைபந்தாக அங்கும் இங்கும் அலைந்து திசை மாறியவர்கள் சிலர். எவராலும் வேண்டப்படாதா திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.

பாட்டிகளின் வாயை பிடுங்கினால்  பழைய நினைவு வார்த்தையாக வரும்:

''எங்க அப்பா அம்மா நல்லாத்தான் வளர்த்தாங்க.  நாள் தவறாம  தலை நிறைய பூ தொடுத்து வைச்சு சந்தோஷமா தான் திண்ணை பள்ளிக்கூடம் போவோம்.  வீட்டுக்கு வந்து தெருவிலே ஓடி ஆடி விளையாடுவோம்.  இருட்டானா  கைகால் முகம் கழுவி பொட்டு வச்சு,  விளக்கேத்தி சாமி கும்பிடுவோம்.  வீட்டிலே  பொருளாதார, குடும்ப  பிரச்னை  குழந்தைகளை நெருங்காது.  அப்பா அம்மா சண்டை பார்த்ததேயில்லை. அப்பா என்ன சொன்னாலும் அம்மா கேட்பாங்க. கூட்டு குடும்பம்.   தோட்டத்து காய், கீரை, அம்மிலே அரைச்சு,  ஆட்டுக்கல்லுலே அரைச்ச மாவு தோசை, இட்டலி தோசை தவிர  பழையது, கஞ்சி தவிர வேறே தெரியாது.    ஊரிலே கல்யாணம்னா  தெருவை வளைச்சு பந்தல் போட்டு நாலு நாள், ஆறுநாள் கூட எல்லோரு
க்கும் தினம் சாப்பாடு.கோவில்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும்பங்கு கொண்ட காலம். தெய்வ நம்பிக்கை தன்னம்பிக்கைக்கு ஊக்கம் கொடுக்குமே .  

நம் முந்தைய தலைமுறையில் எல்லோருமே எனக்கு தெரிஞ்சு சந்தோஷமாக,  வாழ்ந்தாங்க. ரொம்ப நாள் ஆரோக்கியமா இருந்து தான் போனாங்க. கழகம், கட்சி, கொடி , கூட்டம் எல்லாம் அப்போது பிறக்கவில்லை. தேச பக்தி தெய்வபக்தியோடு இணைந்திருந்தது.''
என்று  கைக்குத்தல் அரிசி, வீட்டு சாப்பாடு, நீண்ட நடை, வீட்டில் பெரியோரிடம் பக்தி, கோவில் செல்வது  கடவுளை வணங்கு
வது,  குளம் ஏரி  எல்லாம் இழந்து விட்டு , ஹோட்டல் உணவு,  டிவி பார்த்துக்கொண்டே   வீட்டிற்கு  மோட்டார் சைசில் டெலிவரி ஆகும்  சிற்றுண்டி,  நொறுக்கு தீனி சாப்பிட ஆரம்பித்தோமோ,  அப்போ பிடிச்சது சனியன்.  கண்ட ஓவர் சூட்டு overheated  எண்ணெய்,   அசுகாதார  தப்பு உணவை  அதிக காசு கொடுத்து தேடிக் கொண்டுவிட்டோமோ  அப்போதே வாழ்க்கையின்  நீளத்தையும் குறைத்துக் கொண்டோம். சிக்கனமாக   சேர்த்த பணம்  தாராளமாக வைத்தியனை அடைகிறது.  காசையும் உறவையும் இழந்து   விரைவில் மேலே அனுப்பப்படுவது  வழக்கமாகி விட்டது..
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.  அனாயாச மரணம் எல்லா  முதியோர் களாலும் வேண்டப்படுகிறது.  அதை அடைய வேண்டுமானால்  கொஞ்சம் முன்கூட்டியே  வாழ்வை செப்பனிட்டு தயார் செய்து  கொள்ள வேண்டும்.  உடல், உள்ள ரீதியாக பிறரை நேசித்து உதவி செய்தால் இறைவன் அன்பும் ஆசியும் நமது உழைப்புக்கு போனஸ். சரியா? கேட்டதும்  கொடுப்பவனே  கிருஷ்ணா கிருஷ்ணா.....



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...