'' கனவிதுதான் நிஜமிது தான்.....''' J.K. SIVAN
இந்தியர்கள் கனவு காண்பவர்கள் என்று யாரோ ஒரு வெள்ளைக்காரன் சொன்னதாக கேள்வி. ஏன் அவனுக்கு கனவு வராதா?ஒரு விஷயம் வேண்டுமானால் உடனே ஒப்புக்கொள்ளலாம். இந்தியர்கள் மற்றவர்களை விட அதிகமாகவே பகல் கனவு காண்பவர்கள் என்று நம்பலாம். மனக்கோட்டை மன்னார்சாமி என்ற பெயரே நம்மில் பலருக்கு உண்டே. உழைக்காமல் ஊதியம் பெற எண்ணம், எளிதில் பணக்காரனாக, ஒன்றுமே தெரியாமல் நாட்டுக்கு தலைவனாக இந்த பகல் கனவெல்லாம் நமது தேசத்தில் எங்கோ சிலருக்கு சாத்தியமாகிறது என்றால் அதற்கு காரணம் அவர்களது பரம்பரையில் எவரோ சம்பாதித்த புகழ், பணம், பதவி, பேர், பெருமை, சொத்து ஆகியவை. மொத்தத்தில் நம் எல்லோருக்கும் உழைத்தாலன்றி ஊதியம் கிடையாது.
''எனக்கு கனவே வராது சார். படுத்தால் கட்டை மாதிரி தூங்கிவிடுவேன்'' என்று சொன்னால் அதை நம்பவேண்டாம். எங்கோ எப்போதோ நடந்த சம்பவங்கள் மீண்டும் நடப்பது போல் கனவுகள் வரும். மன அழுத்தம் கனவாக வெளிப்படுவதும் உண்டு. எதை நினைவு இருக்கும்போது மறைக்கிறோமோ அது கனவில் தலை தூக்கும்.
நிறைய கனவுகள் நினைவில் மறைபவை. மறந்து போகின்றவை. கனவு எப்படியும் ஒண்ணரைமணி நேரத்திலிருந்து 3மணிநேரம் வரை ஒரு மனிதனுக்கு தோன்றுமாம். ஒரே அடியாக இல்லை. விட்டு விட்டு. வேறே வேறே சினிமா. வீடியோ. மன விருப்பம் வெறுப்பு கலந்த சம்பவங்கள் தான் மீண்டும் மீண்டும் கனவில் வருபவை.
நமது வாழ்வில் கால் நூற்றாண்டாவது தூக்கத்தில் சென்றுவிடும் எனும்போது அதில் மொத்த கனவுகளின் நேரம் 6 வருஷம் நிச்சயம். ஒவ்வொரு சராசரி மனிதனும் வருஷத்துக்கு 1460 கனவுகளாவது அனுபவித்திருப்பான் என்று ஆராய்ச்சி செய்திருக்கிறார்களாம். ஒரு நாள் இரவில் நாலு கனவாவது வாடிக்கையாக வருமாம்.
விடிகாலை வரும் கனவுகள் நீளமானவை. சராசரியாக, ஒன்றரை மணிக்கு ஒருதரம் ஒரு கனவு.ரொம்ப பெரிய கனவு சினிமா முக்கால் மணி நேரம் கூட ஓடுமாம். கனவு நமக்கு மட்டும் காசு வாங்காமல் காட்டப்படும் தனி ப்ரத்தியேக சினிமா. ஆனால் நாம் காணும் கனவில் 90 சதவீதம் மறந்து போய்விடுகிறோம். விடிந்தால் ஞாபகம் இருப்பதில்லை.
தூக்கம் கலைந்து ஐந்து நிமிஷத்திற்குள் 90 சதவீத கனவு மறந்து போகும். கனவில் எப்போதும் தெரிந்த முகங்கள் மட்டுமே வரும். அவர்களில் சிலரை யார் என்று சட்டென்று அடையாளம் கண்டு கொள்வது கூட கஷ்டம். எங்கோ எப்போதோ சந்தித்தவர்களும் உண்டு. நான் தான் சொன்னேனே நடந்த சம்பவங்களின் தொடர்ச்சி தான் கனவு.
கண் பார்வை இழந்தோருக்கும் கனவு வரும். கனவில் பார்ப்பார்கள். பிறவிக்குருடர்கள் கனவில் உருவம் தெரியாது . ஆனால் தொடுவது, வாசனை, கேட்பது, பேசுவது போன்ற நிகழ்வுகள் தான் அதிகம்.
எல்லோர் கனவும் கலர் கலராக இருக்கும் என்று சொல்ல முடியாது. நூற்றுக்கு பத்து பேருக்கு கருப்பு வெள்ளை காட்சிகள் கனவில் வரும். பழங்காலத்தில் கனவில் கருப்பு வெள்ளைதான். அப்போதெல்லாம் கலர் போட்டோ, வீடியோ, சினிமா எல்லாம் இல்லையே. . இப்போதெல்லாம் கலர் கலர் கனவு காட்சிகள் தான்.
குறைந்த பக்ஷம் நாலிலிருந்து ஏழு வரை ஒரு இரவில் கனவுகளை காண முடியுமாம். நமக்கு தான் கண்டதெல்லாம் மறந்து போகிறதே எதைப்பற்றி சொல்ல? ஒவ்வொரு ராத்திரியும் நாம் ஒன்று அல்லது ரெண்டு மணி நேரத்துக்கு கனவு காண்கிறோம். எப்போ, எப்படி, யாரை, எங்கே, எதை பற்றி என்பது நமது உள் மனதுக்கு மட்டுமே தெரியும்.
குழந்தைகளின் கனவில் தான் அதிகம் பறவைகள் பிராணிகள் வரும். அதிகமாக குழந்தைகள் கனவில் வருபவை நாய்கள், குதிரை, பூனை, பாம்பு கரடி, சிங்கம் மற்றும் கதையில் கேட்கும் ராக்ஷஸர்கள், பத்து தலை, ஐந்து கால், மூன்று கண் என்று கற்பனையில் தோன்றும் உருவங்கள்..பயந்து அலறும். சிரிக்கும்..
மிருகங்களுக்கும் கனவு வருமாம். இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது என் செல்ல நாய் ஒரு டாபர்மேன் வகை. என் பக்கத்தில் தான் படுக்கும். தூக்கத்தில் அதன் கால்கள் எதையோ துரத்தி ஓடுவது போல் அசையும், குறைப்பது போல் மெல்லிதாக சத்தம் போதும். என்ன கனவோ ? என்னிடம் சொன்னதில்லை? சொன்னாலும் எனக்கு புரிந்ததில்லை. விக்ரமாதித்தன் போல் எனக்கு பறவை, மிருகங்கள் பாஷை தெரியாதே.
கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிக கனவுகள் ஞாபகத்தில் இருக்கும் என்பார்கள் கர்ப்பிணிகள் உடலில் தோன்றும் ஹார்மோன் உற்பத்தி இதற்கு காரணம் என்று ஆராய்ச்சி.
கனவுகளில் தோன்றும் நிகழ்வுகள் ஏதோ புரிபடாத ஒரு குறிப்பை தான் காட்டும். அதை நினைத்து பார்த்தால் அர்த்தம் புரியாது. ரொம்ப யோசிக்கவேண்டும். பின்னால் நடப்பதை அதோடு தொடர்பு படுத்தி ''அப்பவே எனக்கு கனவில் சூசகமாக, சூக்ஷ்மமாக வந்தது என்று சொல்லிக்கொள்ளலாம்.
முக்கியமாக ஒன்று சொல்கிறேன். கனவுகளில் அதிகம் நெகடிவ் உணர்ச்சிகள் தான் காண்கிறது. ஆக்சிடென்ட், ஆபத்து, திருடு, கொள்ளை, கொலை, ஏமாற்றப்பட்டது, துரத்துவது, ஓடி ஒளிந்துகொள்வது போன்ற நெகடிவ் காட்சிகள்... இவைகளால் கவலை, அதிர்ச்சி, எதிர்பார்ப்பு தான் அதிகமான உணர்ச்சி.
கனவின் போது கை கால், உடல் அசைவுகளை நிறுத்தும் ஒரு சக்தி மூளையில் செயல்படுகிறது. இதை ஆங்கிலத்தில் பாடி பாராலிஸிஸ் BODY PARALYSIS என்பார்கள். . கனவு கலைந்து கண் விழித்ததும் எல்லாம் மறுபடியும் வேலை செய்ய ஆரம்பித்து விடும்.
நினைவில் இயங்கும்போது நடக்கும் சில அதிர்வுகள் கண்ணால் படம்பிடிக்கப்பட்டு மனதில் இடம் பிடிக்கிறது. தூக்கத்தில் ஒரு கச்சேரியில் கேட்டுக்கொண்டிருப்பதோ, சினிமா டிராமா, டிவி காட்சி பார்ப்பதுபோலவோ வருவது நாம் ஏற்கனவே கண்டு நினைவில் இருந்தவை. ஒருவன் கனவு மற்றொருவன் கனவில் வராது. அது வேறே சினிமா.
நடக்கப்போகிறதெல்லாம் கனவில் முன்னாலே தோன்றினதாக சொல்வது 18 லிருந்து 38 சதவிகிதம் உண்மை. வரப்போவது, முன்பே கனவில் தெரியலாம். நேரில் புதிதாக பார்ப்பவர், பார்த்த இடம், ஏற்கனவே கனவில் வந்ததாக இருக்கலாம். இந்த சதவிகிதம் 60-75 ஆக கூட அதிகரித்தால் ஆச்சர்யம் இல்லை.
எங்கப்பாவின் கனவில் அடிக்கடி தஞ்சாவூர் வீட்டில் திருடன் வருவான். ஒருமுறை கூட அவன் பிடிபட்டதில்லை . பேச்சு வராமல் தூக்கத்தில் ''திருடன் திருடன் பிடி பிடி ' ' என்று சொல்லமுடியாமல் திழ் ழன் திழ் ழன் பிழி பிழி என உளறுவது, உடல் சிலிர்ப்பது வியர்ப்பது எல்லாம் கனவின் உக்கிரம். உண்மையாக நடப்பதாக காட்டுவது. என் நண்பன் அடிக்கடி போலீஸ்காரனிடம் பிடி படுவதாக கனவு வருகிறது என்று சொல்வான். ஒரு சாஸ்திரிகள் கனவில் அடிக்கடி ப்ரம்ம ராக்ஷசன் வந்து கழுத்தை நெறிப்பான் என்று சொல்லி இருக்கிறார். பாவம் நிம்மதியில்லாதவர்கள். இந்த அவஸ்தைக்கு காரணம். கனவு அப்படியே தத்ரூபமாக நடப்பது போல் காட்சிகளை தருவது தான்.
பெண்களை விட ஆண்களுக்கு தான் கனவில் கோபம், பயம், அடிதடி, ஓட்டம், ஏமாற்றம், எல்லாம். பெண்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் கனவில் நண்பர்கள், உறவினர், கோவில், பண்டிகை, வீட்டு விசேஷங்கள் புது நகை புடவைகள் தான் வரும் போல் இருக்கிறது. அதேபோல் ஆண்கள் கனவில் ஆண்கள் தான் அதிகம் கதாநாயகர்கள். பெண்கள் கனவில் ஆண்கள் பெண்கள் கலந்து கட்டியாக வருவார்கள். இன்னொரு ரகசியம் சொல்லட்டுமா? குறட்டையும் கனவும் சேர்ந்து வருவது இல்லை.
எங்கோ படித்தேன். மேற்கு ஆஃப்ரிக்கா அஷாந்தி இன மக்கள் மத்தியில் ஒரு பழக்கமோ வழக்கமோ தெரியவில்லை.
ஒருவன் கனவில் அடுத்தவன் மனைவியோடு சேர்ந்திருப்பதாக கனவு வந்தால் மறுநாள் அது நினைவில் இருந்தால், அல்லது அடிக்கடி வந்தால், அந்த மனைவியின் புருஷன் கனவில் அவளை சேர்ந்தவனை நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற வைக்கலாம். ரொம்ப ஜாக்கிரதை. அந்த ஊருக்கு போகவே கூடாது. நிரபராதியாக ஜெயிலுக்கு போக நேரிடும். நிச்சயம் அந்த ஊரில் அநேகர் தண்டனை பெற்றவர்களாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றுகிறது.
No comments:
Post a Comment