Wednesday, September 18, 2019

MATHRU PANCHAKAM


மாத்ரு பஞ்சகம்                J K  SIVAN 
ஆதி சங்கரர் 

       
                         அம்மா,   என்   அம்மா!!!

அம்மாவை நினைக்க  தனியாக ஒரு நாள் தேடுவது துரதிஷ்டம் மட்டுமில்லை.  துர்பாக்கியம் என்று சொல்லலாம். அதுவும் இப்போதுமஹாளய பக்ஷம்  எனும்  முன்னோர்க்கு  செய்யும் கடன் என பிரத்யேகமாக  ஒரு 15 நாட்கள் சிரத்தையாக  பித்ருபக்ஷத்தின் போது பெற்றோர்களை வேண்டி போற்றி நினைக்கவேண்டாமா?அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று தலைநிமிர்ந்து பெருமையோடு வாழ முடிந்திருக்குமா? 


நமக்கு மட்டுமல்ல  ஆதி சங்கரர் போன்ற முற்றும் துறந்த சந்நியாசிக்கு கூட பெற்ற  தாய்ப்பாசம் இருந்தது.  அவளுக்கு கொடுத்த வாக்குறுதி நினைவில் இருந்தது. நிறைவேற்றினார். எப்படி? எல்லோருடைய எதிர்ப்பும் பெற்றுக்கொண்டு. 

 அவர் எழுதிய மாத்ரு பஞ்சகம் என்ற  ஐந்தே ஐந்து ஸ்லோகங்கள் ஐந்து யுகங்களிலும் அழியாத ஒன்று என்று இதைப் படித்தால் புரியும். இதை பலமுறை நண்பர்கள்  விருப்பத்திற்கிணங்க மீண்டும் மீண்டும்  எழுதி இருக்கிறேன். இப்போதும் அப்படியே.\
+++

கேரளத்தில்  காலடி கிராமத்தில் ஒரு சிறிய  பழைய வீட்டில் ஒரு தாயும் மகனும் மட்டுமே வசிக்கிறார்கள். ஆச்சாரமான நம்பூதிரி குடும்பம். சிவகுரு காலமாகிவிட்டார்  இருப்பதை வைத்துக்கொண்டு  சிவனருளால்  
ஏழ்மையோடு நடக்கும் குடும்பம்.   விதவைத்தாயும், எழுவயது பையனும் பேசுவது நம் காதில் விழுகிறதே . என்ன பேசுகிறார்கள்?

''அம்மா   எனக்கு  சன்யாசம் பெற்றுக்கொள்ள ரொம்ப  விருப்பமாக  இருக்கிறதே''

 என்  கண்ணே,  இருப்பது  நீ  ஒருவனே.  உன்  தகப்பனாரும்  என்னை விட்டுச் சென்று விட்டார்.  பல  வருஷம் தவமிருந்து  வடக்கு நாதன்  அருளால்  நீ  பிறந்தாய்.  கண்ணை  இமை காப்பது போல் உன்னை  வளர்த்தது நீயும்  என்னை விட்டுபிரிந்து  போவதற்காகவா?  இதற்கா  பெற்றேன்.   நீ  சந்நியாசியாவது  நான்  உன்னை உயிருடன் இழப்பதற்கல்லவோ சமமாகும்?

'' என் அருமை அம்மா, நீ  தாய்  என்பதோ  நான்  ஒரு நேரத்தில்  உன்  மகன்  என்பதோ  பிரிபடும்  உறவோ? உடலால்  பிரிந்தாலும் உள்ளத்தால் நாம்  இதயத்தில் ஒன்றாகவே தானே இருப்போம். உன் மனத்தில் இருக்கும்  அந்த  இறைவன்  தான் என் மனத்திலும்  இருப்பவன்  அல்லவா?  நான் எங்கிருந்தாலும் நீ தான் என் மனதில் முழுவதுமாக இருப்பாய்''.

எப்படியோ மகன் தாயின் அனுமதியை பெற்று விட்டு ஒரு நிபந்தனையுடன்  சன்னியாசியானான் 7 வயது  மகன் சங்கரன்..

 நீ  என்  மரணத் தருவாயில்  என் அருகில்  இருக்க வேண்டும். உன் கையால் தான்  எனக்கு  தகனம்.  செய்வாயா? சரி என்றால்  நீ  செல்''

''அப்படியே  ஆகட்டும் அம்மா''.

வருஷங்கள் உருண்டது.  அந்த சந்நியாசி  ஸ்ரிங்கேரியில்  இருக்கும்போது  அன்னையின்  அந்திம காலம் வந்ததை உணர்ந்தார்.  திரிகாலமும் உணரும்  ஞானி  அல்லவா அவர் தாய்க்கு  7வயதில் கொடுத்த வாக்கு  நினைவுக்கு வந்தது.

இறைவன் அருள் மிக்க  அந்த  ஞானி அடுத்த கணமே  அன்னையிருந்த ஊரில் இருந்தார்.   காலடி என்கிற அந்த ஊரில் தாயின்  காலடியில்  வணங்கி அருகே  அமர்ந்தார். அவளை மடியில் இருத்திக்கொண்டார். அன்னையின் கண்கள் மட்டுமே  பேசின. கொஞ்சம் கொஞ்சமாக  உடல் ஒவ்வொன்றாக  சக்தியை இழந்து கொண்டு  வந்தது. கடைசியாக  நினைவும்  தப்பியது.   சிறிது நிமிஷங்கள் கசிந்தது. மரணம்  அவளை  முழுவதுமாக  ஆட்கொண்டது. தாய் வெறும்  உடலானதை உணர்ந்த  அந்த துறவி,  அவளுக்கு  அந்திம கடன்களை  ஆசாரத்தோடு சாஸ்த்ரோக்தமாக செய்தார். எப்படி? ஏச்சுக்கும் பேச்சுக்கும்  இடையே?  துறவிக்கு குடும்பம் ஏதடா?  எதற்கு இப்போது அம்மா அப்பா உறவு?  எள்ளி நகையாடினர் அறியாதோர்.

துறவியின் மனத்திலிருந்து, எண்ணக் குவியல்களிலிருந்து வெடித்து  அப்போது  வாய்  வழியே  கடல்  மடையென  ஐந்து  ஸ்லோகங்கள் வெளியேறியது.  இது  அந்த ஞானியின்  மற்ற  காவியங்களிலிருந்து  சற்று   வேறுபட்ட  ஒன்று.  இதில் நன்றி  உணர்ச்சி பொங்கும்.  தாய்ப்பாசமும்  நன்றிக்கடனும்  தேங்கி  நிற்கும்.  அதுவே  இன்றும் என்றும்  அழியாத  காவியமாக இருப்பதைப் பார்ப்போமா? .

 தாயைக் கடவுளாகவே  போற்றுவது நாம்  அறிந்த விஷயம்.  கடவுளையும்  தாயாகவே  நெருங்குவதும்  தெரிந்ததே. உலகியலில்  ஒரு  தாய்க்கு  மகனாகப்  பணி  புரியவில்லையே  என்ற  ஏக்கம்  எத்தனை மகன்களுக்கு தோன்றுகிறது?.    முக்கியமாக அவள் இருக்கும்போது அவளை மறந்தவனின் மனச்சாட்சியின்  உறுத்தல் படிக்கும்போது  நமக்கும்  உள்ளே உறுத்துகிறதே. நெருடுகிறதே.

 Aasthaam  tavaddeyam prasoothi samaye durvara soola vyadha,
Nairuchyam thanu soshanam malamayee sayya cha samvatsaree,
Ekasyapi na garbha bara bharana klesasya yasya kshmo dhathum,
Nishkruthi  munnathopi thanaya tasya janyai nama.

ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:

 என்  அம்மா! என்  தலை  உன்னிலிருந்து வெளிப்படும் போது  என்னமாக  பல்லைக் கடித்துக்கொண்டு  தாங்க முடியாத  பிரசவ  வலியைப் பொறுத்துக்கொண்டு என்னை உலகில்  வெளியே  தள்ளினாய் , வருஷக் கணக்காய் உன்  அருகே  படுத்து  உன்  ஆடையை, படுக்கையை  தாராளமாக  நனைத்தேனே.  ஒரு  வார்த்தை கோவித்ததில்லையே . மாறாக  சிரித்து  என்னை  அணைத்தாய்.

என்னால்  உன்  உடல்  இளைத்தது, சக்தி இழந்தது. பல இடங்களில் வலி கண்டது.  ஒரு  பத்து மாச  காலம் என்னமாய்  நான்  உன்னை படாத பாடு படுத்தினேன். இதற்கு என்ன கைம்மாறு   செய்வேன்.உலகம் என்னை புகழ்வதால் அது ஈடாகுமா?

Gurukulamupasruthya swapnakaale thu drushtwa,
Yathi samuchitha  vesham  praarudho maam twamuchai
Gurukulamadha  sarva prarudathe samaksham
Sapadhi  charanayosthe mathurasthu pranaama.
                                         
குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II

 என்  அம்ம்மா!!   திடீரென்று   ஒருநாள்  நான்  காவி உடுத்திக்கொண்டதாக கனவு கண்டாய்.  அது  எவ்வாறு உன்னை உலுக்கியது. கண்ணீர்  கங்கையாய்  பெருக  என்  குருகுல வாச ஆசான் வீட்டுக்கு  ஓடிவந்தாய்.என்னைத் தேடினாய்,  என்  ஆடையைக் கவனித்தாய். என்னைக் கட்டிக்கொண்டாய் .உச்சி முதல்  பாதம் வரை தடவிக்கொடுத்தது  நினைவுக்கு வருகிறதே. என்னோடு படிக்கும் மற்ற பையன்களும் என்  ஆசானும் கூட உன்னோடு   அழுதது இப்போது நடந்தது போல்  இருக்கிறதே.   நான்  என்ன செய்யமுடியும்.  பேசாமல் உன் காலில் விழுகிறேன். மனப்பூர்வமாக  வணங்குகிறேன்.

 Ambethi Thathethi Shivethi tasmin,
Prasoothikale yadavocha uchai,
Krishnethi Govinda hare Mukunde tyaho,
Janye rachito ayamanjali.

.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II

ஒ !  என்  அம்ம்மா !   உனக்கு  வலியெடுத்த போது  நீ  என்ன  கத்தினாய் ஞாபகமிருக்கிறதா?  ''  அப்பா,  அம்மா ! தேவா  சிவா,  தெய்வமே  கிருஷ்ணா,  தேவ தேவா,  கோவிந்தா,  ஸ்ரீ  ஹரி,  பகவானே,  முகுந்தா ''  நான்  என்ன செய்யப்போகிறேன் தெரியுமா இப்போது இதற்கு  ஈடாக?  என்  அன்புள்ள  அம்மா,  பணிவோடு உன் காலில் விழப்போகிறேன்.


Na dattam mathasthe marana samaye  thoyamapi vaa,
Swadhaa vaa no dheyaa maranadivase sraadha vidhina
Na japtho mathasthe marana samaye  tharaka manu,
Akale samprapthe  mayi kuru dhayaam matharathulaam.
ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II

என்  தாயே,  உனக்கு  நான்  என்னவெல்லாம்  செய்யவில்லை  தெரியுமா?   தவித்த  வாய்க்குத் தண்ணீர் கூட தரவில்லை. உன் கடைசி  யாத்திரைக்கு  உபகாரமாக ஒரு   விரலைக்கூட அசைக்க வில்லை. கடமை  என்று ஒன்று இருந்ததா  எனக்கு?  போனதெல்லாம் போகட்டும்  உனக்கு நினைவு அழியுமுன்னே  அந்த  அந்திம நேரத்தில் உன்  காதில்'' ஒ ராமா,  ஸ்ரீ  ராமா --  ஏதாவது  ஒரு  வார்த்தையாவது  சொல்ல  நான்  இருந்தேனா? ஈடற்ற, இணை கூறமுடியாத  தாயே, இரக்கமற்ற  என் மேல்  கொஞ்சூண்டு இர க்கம் வை. என்தவற்றையெல்லாம்  மறந்து  மன்னித்து விடு.  ஏதோ  கடைசி   கடைசியாகவாவது உயிர் பிரியும் சற்று நேரத்திற்கு முன்பாவது வந்தேனே. முடிந்ததை செய்தேனே. அதற்காகவாவது கருணை காட்டு..

Mukthaa Manisthvam, Nayanam mamethi,
Rajethi jeevethi chiram sthutha thwam,
Ithyuktha vathya vaachi mathaa,
Dadamyaham thandulamesh shulkam.

முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II

அம்மா,  நீ  நீடூழி  வாழ்க.  '' என்  முத்தே,  என்  நவ நிதியே, என் கண்ணின் கருமணியே, என் ராஜா குட்டி,  என்உயிரின் உயிரே,'' என்றெல்லாம்  இட்டுக்கட்டி  நீயாக  ராகம் போட்டு  என்னை  தூக்கி கொஞ்சி  பாடுவாயே,  நான் என்ன  செய்கிறேன் இப்போது அதற்கு நன்றிக்கடனாக  தெரிகிறது.  அன்பின் ஈரத்தோடு,  பாசத்தின் பனித்துளியோடு,  கருணையின் குளிர்ச்சியோடு நீ  பாடிய அந்த  வாய்க்கு  ஈரமில்லாமல்  வறண்ட  உலர்ந்த  அரிசியைத்தான் கொஞ்சம்  வாய்க்கரிசியாக  போடுகிறேன்.

அந்த  ஞானி, முற்றும்  துறந்த  துறவி, உலகம் போற்றும் அரிய அத்வைத முனி, ஆதி சங்கரர்.  இந்த  ஐந்து ஸ்லோகமும்  அவர்  தாய்   ஆர்யாம்பவுக்குகொடுத்த  வாக்கினைக் காப்பாற்ற  காலடியில்  வந்து  அவளது அந்திம கிரியைகளை செய்யும்போது  பாடிய ''   மாத்ரு பஞ்சக  ஸ்லோகங்கள்''
\
டிக்கும்  அன்பர்களே  தாய் தந்தையைப்  பேண  தவறாதீர்கள். வயாதான காலத்தில் முக்கியமாக அவர்களை  நம் குழந்தை போல் கண்ணும் கருத்துமாக கவனித்து மகிழ்விக்கவேண்டும்.  பாசத்துக்கு  ஏங்கும்  ஜீவன்கள்.  காலம் கடந்து  சங்கரர் போல்  துடிக்க வேண்டாமே. அவர் சன்யாசி அதனால்  ஒப்புக்கொள்ளலாம். நமக்கு  மன்னிப்பே கிடையாது.

 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...