ஐந்தாம் வேதம் J K SIVAN
காந்தாரியின் சாபம்
''ஜனமேஜயா, குருக்ஷேத்திர ரண களத்தில் எல்லா பெண்களும் தத்தம் கணவன், தந்தை, மகன், சகோதரன், உறவினன் ஆகியோர் உடல்களைத் தேடி, தலையில்லாதது, உடல் இல்லாதது, கை கால் இல்லாதது ஆகியவற்றை எல்லாம் ஒன்று சேர்த்து அடையாளம் கண்டு அழுதனர். வணங்கினர். காந்தாரி துரியோதனன் உடலைக் கட்டிக்கொண்டு அழுதாள்.
''கிருஷ்ணா, கடைசிநாள் அன்று ''அம்மா எனக்கு வெற்றிபெற வாழ்த்துங்கள் என்றான் அப்பா. நான் அப்போது என்னை அறியாமலேயே என்ன சொன்னேன் தெரியுமா?''' என்று தொடர்ந்தாள் காந்தாரி அழுதுகொண்டே.
''நிச்சயமாக மகனே, எங்கு தர்மம் இருக்கிறதோ அங்கு வெற்றி'' என்றேன். எவருமே நினைக்கமுடியாத செல்வத்தில், சுக போகத்தில் புரண்டவன் இப்போது நரிகள் நாய்கள் தனது உடலைத் தின்னும் நிலையில் தரையில் எங்கோ கிடக்கிறான். இது தான் வாழ்க்கை. ராஜபோகத்தில் திளைத்த என் நூறு மகன்களும் கண் மூடி கண் திறக்கும் நேரத்தில் பீமனால் கொல்லப்பட்டு அவர்களது மனைவிகள் கணவர்களை இழந்து, மக்களை இழந்து அனாதையாக அலைகிறார்களே, பார்த்தாயா? எல்லாம் என் மகன் பெரியோர் வார்த்தைகளை செவி மடுத்து கேட்காததால் வந்த வினை''.
அதோ, அங்கே, திரௌபதியும் தனது தந்தை, சகோதரர்கள், பிள்ளைகள் எல்லோரையும் இழந்து போரில் வெற்றியால் எனக்கு நஷ்டமே தவிர என்ன லாபம்?' என்று அழுகிறாள். என் சகோதரன் சகுனி கொடியவன். தீய எண்ணங்களாலேயே உருவானவன். அவனை நம்பாதே, அவன் சொல் கேட்காதே என்றேனே என் சொல்லை ஒருநாளாவது என் மகன் கேட்டானா? கேட்கவில்லையே..அதன் விளைவு???
''பாவம், அந்த பெண்ணைப் பார். உத்தரை.--- சகல ஐஸ்வர்யங்களும் கொண்ட ராஜகுமாரி. சிறிய வயது. இன்னொரு அர்ஜுனனனாக வீரம் கொண்ட கணவனை இழந்து, தந்தை சகோதரர்களை இழந்து வயிற்றில் தகப்பனைக் காணாத சிசுவை சுமந்துகொண்டு......ஓ தெய்வமே, நரகம் இது தானோ? சிங்கங்கள், புலிகள், யானைகள் எல்லாம் மாய்ந்தன, வீழ்ந்து விட்டன. . நரிகளே , நாய்களே, ஓநாய்களே , கழுகுகளே, உங்கள் காட்டில் மழை. நீங்கள் ஏகபோகமாக உண்டு மகிழுங்கள்''.
''ஆஹா எவ்வளவு மகோன்னதமான மனிதர், கங்கா புத்திரர் பீஷ்மர்! அதோ மூன்று உயர அம்புகளை தலையணையாக வைத்துக்கொண்டு அம்புகளால் ஆன படுக்கையில் கிடக்கிறார். உத்தமனான அவர் தன்னுடைய முடிவு யாரால் என்று யுதிஷ்டிரனிடம் நேர்மையாக சொன்னதால் தானே பாண்டவர்கள் அவரை வெல்ல முடிந்தது. உலகத்தில் எவராலும் வெல்ல முடியாதவர் அல்லவா?''
காந்தாரி எல்லா பிணங்களையும் பார்வையிட்டு ஒவ்வொருவரைப் பற்றியும், அவர்கள் வீரம், கம்பீரம், தான தர்ம, பராக்ரமம், நெருங்கிய உறவு, பண்பு எல்லாவற்றையும் க்ரிஷ்ணனோடு பரிமாறிக் கொள்கிறாள்.
அழுது ஓய்ந்த காந்தாரி, கடைசியில் கிருஷ்ணன் அருகில் வருகிறாள். நீண்ட உஷ்ணமான பெருமூச்சு நெருப்பு போல் அவளிடமிருந்து புறப்படுகிறது.
''கிருஷ்ணா, நீ ஒருவனே எல்லாம் உணர்ந்தவன். நீ முயற்சித்திருந்தால் எப்படியாவது இத்தனை உயிர்கள் பலியானதை தடுத்திருக்கலாம். வம்சங்கள் அழியாமல் காத்திருக்கலாம். பல வம்சங்கள் அழிய நீயே காரணமாகிவிட்டாயே கிருஷ்ணா!! இது நியாயமா?என்று காந்தாரி முறையிடுகிறாள்.
கிருஷ்ணா, பாண்டவர்களில் அநேகரும் , த்ரிதராஷ்ட்ர வம்சத்தில் எல்லோரும் இந்த யுத்தத்தில் அழிந்து விட்டார்கள். உன் சொல்லுக்கு மதிப்பு, மரியாதை இருந்தும், நீ சர்வ சக்தி வாய்ந்தவனாக இருந்தும் இந்த வம்சங்களை எல்லாம் அழியாமல் காக்க தவறிவிட்டாய்.
நேரம் வந்து விட்டது. என் மனதின் அடிவாரத்தில் எழும் என் எண்ணத்தை வார்த்தைகளால் கொட்டுகிறேன் .
என் கணவனுக்கு கடமைகளை தவறாமல் செய்த பதிவிரதையாக நான் பெற்ற சக்தியின் பயனாக இதோ உன்னை சபிக்கிறேன்.
'' இன்றிலிருந்து முப்பத்தியாறு வருஷங்களில் கிருஷ்ணா, உன் குலமும் முழுமையாக அழியும், அதற்கு நீயே காரணமாக இருப்பாய். உன் நண்பர்கள், உறவினர்கள், மக்கள் அனைவருமே பூண்டோடு அழிவார்கள். வனத்தில் எதிர்பாராத வகையில் நீ மறைவாய். உன் குல மாதர்களும் இன்று எப்படி எங்கள் குல பெண்கள் கதறுகிறார்களோ அவ்வாறே அப்போது துயரத்தில் மூழ்குவார்கள்''.
கோபத்தோடு சாபமிட்ட காந்தாரி பெருமூச்சு விட்டாள்.
"வைசம்பாயனரே, என்ன இது, பேரிடியாக இருக்கிறதே. அப்படியா காந்தாரி சபித்தாள் கிருஷ்ணனை. அதிர்ச்சியாக இருக்கிறதே எனக்கு. கிருஷ்ணன் என்ன சொன்னார் அதற்கு ? சீக்கிரம் சொல்லுங்கள்'' என்று பதறினான் ஜனமேஜயன்.
''ஜனமேஜயா, கிருஷ்ணன் அமைதியாக சிரித்துக்கொண்டே காந்தாரியிடம், ''அம்மா, உங்கள் மன நிலை புரிகிறது. எங்கள் விருஷ்ணி குலத்தை என்னைஅன்றி எவரும் அழிக்க முடியாது. எனக்கு தெரியும். நானே அதை முடிக்க மனதில் எண்ணியிருந்தேன். உங்கள் சாபத்தின் மூலம் என் வேலையை எளிதாக்கி உதவி விட்டீர்கள். யாதவர்கள் ஒவ்வொருவராக இனி வீழ்வார்கள். என்ன நடக்கப்போகிறது இனி என்பதை நான் நன்றாக அறிந்தவன் தான். எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கி விட்டது.''
கிருஷ்ணனின் முகத்தில் விரக்தி ரேகை ஓடியது. .
No comments:
Post a Comment