Thursday, September 12, 2019

AINDHAM VEDHAM


ஐந்தாம் வேதம்  J K  SIVAN 


                     உத்தராயணம் நெருங்குகிறது.பாண்டவர்கள் தங்களுக்குள்  பேசிக்கொண்டிருந்த நேரத்தில் ஏன் கிருஷ்ணன் அந்த சம்பாஷணையை பங்கேற்கவில்லை என்று அர்ஜுனன் கவனித்தான். அவன் கவனிப்பதை யுதிஷ்டிரனும் பார்த்துவிட்டான்.   எதற்கு கிருஷ்ணன் கவனம் எங்கோ செல்கிறது? கிருஷ்ணன் தியானத்தில் ஆழ்ந்துவிட்டது தெரிகிறது. 

''கிருஷ்ணா, மூவுலகும் போற்றும் பரமாத்மா, தங்கள் த்யானம் எதற்கு இப்போது என்று தெரிந்து கொள்ளலாமா?'' என்று கேட்கிறான் யுதிஷ்டிரன்.

''யுதிஷ்டிரா,  நான் இப்போது இங்கில்லை. என் மனம் குருக்ஷேத்ரத்தில் யுத்தகளத்தில் இருக்கிறது.  மஹா புருஷர் பீஷ்மர் என் சிந்தனையாக பிரார்த்தனை செயது கொண்டு இருக்கிறார். அந்த மஹா வீரர், வைராக்கிய  புனித தீபம் அம்புப் படுக்கையிலிருந்து மலை ஏறப் போகிறது. என் மனம், எண்ணம் யாவும் அவரிடம் சென்று விட்டது. 

இருபத்து மூன்றுநாள் யுத்தம் செய்த பிறகும் பிருகு வம்ச, ஜமதக்னி புத்ரன், மகா புருஷன் பரசுராமனால் வெல்லமுடியாத பீஷ்மன் என்னை நினைக்க அந்த கங்கா புத்ரன் வசம் என் மனம் சென்று விட்டது. நீதி, நியாயம், நேர்மை, பக்தி, வைராக்கியம், நிறைந்த அந்த புண்ய புருஷனிடம் சென்று நீ உனக்கு தேவையான வற்றை அறிந்து கொள்ள நேரம் வந்து விட்டது. அவர் வைகுண்டம் செல்லும் காலம் நெருங்கிவிட்டது. சர்வ ஞானியான பீஷ்மர் பூலோகத்தை விட்டு மறைந்தால் நிலவற்ற இருளாக பூமி இருந்துவிடும். உடனே நீ அவரிடம் செல்''  என்கிறார் கிருஷ்ணன்..

''கிருஷ்ணா, மாதவா, நீ சொல்வதில் லவலேசமும் எனக்கு சந்தேகம் இல்லை. பீஷ்மர் பெருமையை நான் அறிவேன். நீயே எங்களை அவரிடம் வழி நடத்திச் செல்ல வேண்டுகிறேன். சூரியன் உத்தராயணம்நோக்கி  நகர ஆரம்பித்தவுடன் பீஷ்மர் மறைந்து விடுவார். அதற்காகவே காத்திருக்கிறார். உன்னைக் கண்டால் மிகவும் மகிழ்வார். வா உடனே செல்வோம்'' என்றான் யுதிஷ்டிரன்.

''சாத்யகி தேரைப் பூட்டு'' என்றார்  கிருஷ்ணன்.  சாத்யகி ஓடினான். ''தாருகா, உடனே கிருஷ்ணன் தேரை மாளிகை வாசலுக்கு கொண்டுவா'' என்று உத்தரவிட. கருடன் தேர்க்கொடியில் பறக்க, ஸைவ்யன், சுக்ரீவன் என்ற இரு வெண் குதிரைகள் மற்ற இரு குதிரைகளோடு தயாராக வாயில் நின்றன. தாருகன் கை கட்டி கிருஷ்ணனை வரவேற்றான்.

குருக்ஷேத்ர யுத்த பூமியில், வியாசர், தேவஸ்தானர், தௌம்யர், அஸ்மாகசுமந்து, ஜைமினி, நாரதர், மற்றும் எண்ணற்றோர் சூழ்ந்து நிற்க, பீஷ்மர் அம்பு படுக்கையில் கண் மூடி கிருஷ்ண த்யானத்தில் இருந்தார். உதடுகள் கிருஷ்ணனின் நாமத்தை விஷ்ணு ஜிஷ்ணு என்று சொல்லிக் கொண்டிருந்தன.கரங்கள் குவிந்திருந்தன.

 ''கிருஷ்ணா, உன் நாமங்களை நான் சொல்வது உனக்கு பிடிக்கிறதா? நின்னையே சரணடைந்தேன்.  சர்வ லோகநாயகா. சர்வ ஜீவ பரிபாலனா ,தேவ கணார்ச்சிதா, நாராயணா. எவராலும் அறிய முடியாதவனே , மணிகளின் ஊடே செல்லும் சூத்ரக் கயிறாக சகல ஜீவராசிகளையும் இணைத்து காப்பவனே, சர்வ வேத சாரங்களையும் கடந்து நிற்பவனே,  ஒப்புமை இல்லாதவனே, பக்த வத்சலா, கோவிந்தா, புராண புருஷா, அண்ட சராசரங்களையும் தன்னுள் அடக்கியவனே, ஜனன மரணத்துக்கு அப்பாற்பட்டவனே, இன்னும் என்னென்ன சொல்வது ? 

கிருஷ்ணா உனக்கு நமஸ்காரம். பவ சாகர தாரகன், சத்தியமே, இதயம் என்னும் க்ஷேத்ரத்தில் வாசம் செய்யும் க்ஷேத்ரஞனே, பிரளய அழிவில் ஆலிலை பாலகனாக வந்து காத்தவனே, பதினாறு கலைகளும் நிறைந்த பூர்ணாவதாரனே, துஷ்ட நிக்கிரஹ சிஷ்ட பரிபாலனனே, விஸ்வரூபனே, அணுவுக்குள் அணுவே, ஜடா மகுட த்ரிநேத்ர சிவனும் நீயே, பிரமனும் நீயே, உனக்கு பாம்பணையும் உண்டு, பாம்பாபரணமும் உண்டே. எண்ணற்ற நமஸ்காரங்கள் உனக்கு. ஹ்ரிஷிகேசா, ஒரு தரம் தலை குனிந்து உன்னை வணங்கினால் பத்து அஸ்வமேத யாகம் செய்த பலனாயிற்றே, கிருஷ்ணா உன்னை வணங்கியவனுக்கு மறு பிறவியேது?
இரவில் உன்னை நினைத்து படுத்தவன் விழித்து எழுந்தபோது அவன் உடலே நீ தானே. ஹரி என்ற சொல்லே பய நாசினி ஆயிற்றே.. விஷ்ணுவே, என் பாபங்களை போக்கி அருள்வாயாக. சர்வமும் நாராயண மயம் என உணர்ந்தேன்.''

இவ்வாறு பீஷ்மர் பிரார்த்தித்து கொண்டிருக்கும்போது கிருஷ்ணன் அவருக்கு முக்காலமும் கடந்த ஞானத்தை அருள்கிறான். பீஷ்மர் அமைதியாகிறார். இது தான் கிருஷ்ணன் த்யானத்தில் ஆழ்ந்ததன்  காரணம்.

சாத்யகி யுதிஷ்டிரன் மற்றோர் புடைசூழ கிருஷ்ணன் யுத்தகளம் நோக்கி வேகமாக தேரில் குருக்ஷேத்ரம் செல்கிறார் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...